“ம்மா அம்மா… எழுந்திருங்க, ஏன் தூக்கத்தில உளறிக்கிட்டு இருக்கீங்க?”
“நோ நோ… இது தமிழ் மன்னர் கட்டியதுதான்!”
“பின்ன என்ன நீங்களா கட்டினீங்க? எழுந்திருங்க…”
மகள் பூஷிதா உலுக்கிய உலுக்கலில் கண் திறந்து பார்த்தேன். எங்கே கோவில்? அரக்கப்பரக்க சுற்றுமுற்றும் பார்த்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த மகள் பூஷிதா கண்களில் கேலியுடன் சிரித்துக்கொண்டிருந்தாள்.
“கவலைப் படாதீங்க, கோவில் இருக்க வேண்டிய இடத்துல பத்திரமா இருக்கு. அதுதான் உங்க ஆசைப்படி கம்போடியா போயிட்டு இருக்கோமே? ஏன் இப்படி தூக்கத்துலகூட புலம்பிட்டு இருக்கீங்க?”
“நான் எங்க புலம்பினேன்? கண்ணை மூடி யோசிச்சிக்கிட்டிருந்தேன்.” கொஞ்சமாய் அசடுவழிந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்னால் அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் பிரதிநிதியாக கம்போடியாவின் சியம் ரீப் நகரில் நடைபெறும் சர்வதேசக் கல்விக் கருத்தரங்கில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்தே மனம் பித்துப்பிடித்துப் போயிருந்தது. கம்போடியா பித்து; அங்கோர்வாட் பித்து!
ஒரு மனிதனின் கற்பனை ஆகப்பெரும் கலைவடிவமாய், உலகின் பிரமாண்டமாய் வியாபித்து நிற்பதைக் காணவேண்டுமென்ற பித்து. கண் மூடினால் கலைநயமிக்க கட்டிடங்கள் கனவுகளாய் உலா வர, கால எந்திரத்தில் பின்னோக்கிப் போய், அந்த பிரம்மாண்டத்துக்குள் நான் உலவிக்கொண்டிருக்கிறேன். கனவு கலைந்து யதார்த்த உலகுக்கு வரும்போதெல்லாம், இத்தனை காலம் கற்பனையாயிருந்த இந்தப் பயணம் இன்று சாத்தியமாகப் போகிறதா என்ற சந்தேகத்துடன் அடிக்கடி கிள்ளிப்பார்த்து கையெல்லாம் சிவந்து(!) போகிறது. அதனால் பிள்ளைகளிடமிருந்து இதுபோன்ற பல்பு வாங்கல்கள் இரண்டு மாதமாய் அவ்வப்போது நடக்கிறது.
கனவுதேசத்துக்கான பயணம் என்பதால், கருத்தரங்குச் சுற்றுலாவை குடும்பச் சுற்றுலாவாக உருமாற்றம் செய்திருந்தேன். அத்தோடு நான் எங்கு கூப்பிட்டாலும் பெட்டிகட்டத் தயாராக இருக்கும் (சுற்றுலா) தோழியருடன் கூட்டணியை உறுதிசெய்து, பத்துபேராகக் கிளம்பியிருந்தோம். நான், மகன் அக்ஷய், மகள் பூஷிதா, மல்லிகா அக்கா, லட்சுமி அக்கா, ஆனந்தி, சரிதா, அனந்து, குட்டிப்பையன் வேதாந்த் என எங்கள் குழு பல்வேறுபட்ட வயது உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் எல்லோரின் அடிமனதிலும் இருக்கும் பயணக்காதல்தான் எங்களை எப்போதும் ஒன்று சேர்க்கிறது.
‘கிளம்பியது கிளம்பியாச்சு, அப்படியே பக்கத்திலிருக்கும் வியட்நாமையும் எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லலாம்’ எனத் திட்டமிட்டு வியட்நாமுக்குள் முதலில் நுழைந்தோம். அந்த அழகிய தேசத்தின் இயற்கை அழகில் கிறங்கி, யுத்த வரலாற்றால் மனம் கனத்து, (ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் எனது முந்தைய நூலான ‘போர்களின் தேசத்தில் – ஒரு ஊர்சுற்றியின் வியட்நாம் பயணக்குறிப்புகள்’ படிச்சிட்டு வந்திடுங்க!)
கலவையான மனநிலையுடன் கம்போடியா நோக்கிக் சென்றுகொண்டிருந்தோம். வியட்நாமிலிருந்து பேருந்து வழியாகவே கம்போடியாவுக்குள் நுழைவதாகத் திட்டமிட்டு, வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து கம்போடியாவின் தலை நகரம் புனோம் பென் (Phnom Penh) வரை செல்லும் பேருந்தில் முன்பதிவு செய்திருந்தோம்.
இந்தியக்காசுக்கு 2,700 ரூபாய். கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும் விமானக் கட்டணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து திருப்தியடைந்து கொண்டோம். சாலை வழியாக நாடு விட்டு நாடு கடக்கும் பயணம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஏற்கனவே ரக்சோல் வழியாக இந்திய நேபாள எல்லைப் பயணமும், மலேசியா – சிங்கப்பூர் பேருந்துப் பயணமும் இனிமையான அனுபவங்களாக அமைந்திருந்ததால், இங்கும் சாலை வழிப் பயணத்தைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.
ஹோ சி மின்னிலிருந்து காலை 8 மணிக்குக் கிளம்பிய Giant lbis – 5699 என்ற சொகுசுப் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். சும்மா சொல்லக்கூடாது, பெயருக்கேற்றபடி, விமானத்தின் பிசினெஸ் க்ளாஸ் இருக்கைபோல, பேருந்து சொகுசாகவே இருந்தது. பேருந்திலேயே காலை உணவு வழங்கப்பட்டது. இலவச இணையவசதி வேறு இருப்பதாக அறிந்ததும், அலைபேசிகள் கைகளுக்கு வேலை கொடுக்கத் தொடங்கின. இயற்கைக் காட்சிகளுக்காகவே பேருந்துப் பயணத்தைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், ஏறிய சில நிமிடங்களில் அனைவரும் நித்திரைக்குள் ஐக்கியமாகிப் போனோம் (முதல்நாள் இரவு ஒரு நிமிடம்கூட கண்ணசராமல் விடியவிடிய நேர்த்திக்கடன்போல ஹோ சி மின்னை சுற்றிக்கொண்டிருந்ததன் விளைவு!)
அந்த சமயத்தில்தான் இப்படி தூக்கத்திலேயே பினாத்தியிருக்கிறேன். நடுவில் மதிய உணவை முடித்துக்கொண்டு, இயற்கை அழகை ரசித்தபடியே ஏழு மணி நேர நெடும் பயணத்துக்குப் பிறகு கம்போடிய எல்லையான புனோம் பென் (Phnom Penh) என்ற நகரின் எல்லைக்கு முன்பாகவே இருக்கும் Cua khau Quoc Te Moc Bai என்று பெயரிடப்பட்டிருந்த அந்த அலுவலகத்தின் வாசலில் விசா சம்பிரதாயங்களுக்காக இறக்கிவிடப்பட்டோம். கெமர் மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த அலுவலகத்தின் பெயரை அறிந்து கொள்ளும் முயற்சியில் அக்ஷயும் பூஷிதாவும் கூகுளிடம் போராடிக்கொண்டிருந்தார்கள். கடைசியில் தோற்றுப்போய் “இது விசா ஆபிஸ்னு தான் எழுதியிருக்கும்மா”, என யூகமாய் அடித்து விட்டார்கள்.
வியட்நாமும் கம்போடியாவும் ஆறு இடங்களில் சர்வதேச எல்லைக் கடப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. நாங்கள் கடந்த மோக்பாய் – பாவெட் (Moc Bai – Bavet) எல்லையானது ஹோசி மின் நகரம் மற்றும் புனோம் பென் இடையேயான முக்கிய பேருந்து வழித்தடத்தில் உள்ளது. ஆறு எல்லைகளில் இதுவே மிகவும் பிரபலமான மற்றும் எளிதான எல்லைக் கடக்கும் சர்வதேச சோதனைச்சாவடி என்கிறார்கள். இந்த மோக்பாய் – பாவெட் எல்லை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்குமாம். அதன்பிறகு நாம் வந்தால் இரவு முழுவதும் காத்துக்கிடக்க வேண்டியதுதான்.
அனைவருமே இ-விசா எடுத்திருந்தாலும், வியட்நாமில் விசாவால் நடந்த குளறுபடிகள் போல் (அது ஒரு திக் திக் திகில் கதை..!) இங்கு எந்த ரூபத்தில் வருமோ என்ற யோசனையுடன் பத்துபேரும் வரிசையில். கம்போடியா விசா சரிபார்ப்பு பற்றி யூ டியூபர்களின் புண்ணியத்தால் சில தகிடுதித்தங்களை ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால், அதையே பின்பற்றினோம். விசா சரிபார்க்கும்போது, ஒவ்வொருவருக்கும் 500 அமெரிக்க டாலர் பணம் காப்புப்பணமாகக் (செக்யூரிட்டி அமவுண்ட்) காட்ட வேண்டுமாம். அது சரி…குடும்பமாய் வருபவர்கள் எல்லாம் எவ்வளவு பணம்தான் கொண்டு வருவது? அத்தனை பணம் இல்லாதவர்கள் எப்படி எல்லையைக் கடப்பது?
அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அப்படிப் பணம் கொண்டுவர இயலாத சுற்றுலாப் பயணிகளை வைத்து ஒரு புதுத்தொழிலைக் கண்டுபிடித்து விட்டார்கள் புத்திசாலி கம்போடியர்கள். அந்தப் பணத்தை நமக்குக் கொடுப்பதற்கு இடைத் தரகர்கள் இருக்கிறார்கள். எதற்காக அப்படிக் கொடுக்கிறார்கள்? அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? உங்களைப்போலவே எங்களுக்கும் வியப்புதான். அதாவது குடியேற்ற சோதனைச் சாவடிக்குள் (Immigration counter) நுழைவதற்குமுன் அந்த இடைத்தரகர்கள் நம்மிடம் 500 டாலரை கொடுத்துவிட, செக்கிங் முடிந்து நாம் வெளியேறும் வழியில் அவர்களின் மற்றொரு ஆள்மூலம் அந்தப் பணத்தைத் திரும்ப வாங்கிக்கொள்கிறார்கள். அந்த 500 டாலருக்கான பத்து நிமிட வாடகையாக 10 டாலர் அவர்களுக்குக் கமிஷன் கொடுக்க வேண்டும்!
நம்மூர் டோல்கேட் போன்ற இடத்திலேயே விசா குறித்த சோதனைகள் முடிந்துவிட, மால் போல் இருந்த அந்த அழகிய கட்டிடத்திற்குள் சும்மா(!) சுற்றிப்பார்க்கலாம் என்றுதான் நுழைந்தோம். அங்கிருந்த வரியில்லாக் (டியூட்டி ஃப்ரீ) கடைகளில் ஒரு சுற்று சுற்றி விட்டு, மலிவாகக் கிடைத்த சில பல பொருள்களை வாங்கிக்கொண்டு, வயிற்றுக்கும் சிறிது நிரப்பிக்கொண்டு, மீண்டும் அதே பேருந்தில் ஏறிக்கொள்ள, புனோம்பென் ஊருக்குள் நுழைந்தோம்.
சியம் ரீப்பில்தான் நான் கலந்து கொள்ள வேண்டிய கருத்தரங்கு என்பதால், அங்கேயே தங்குவதற்காக அறை பதிவு செய்திருந்தோம். ஹோசி மின்னிலிருந்து சியம் ரீப் வரை டிக்கெட் எடுக்க முனைந்தபோது, ‘அது தேவையில்லை, எப்படியும் புனோம்பென்னில் வண்டி மாற வேண்டும், புனோம்பென்னிலிருந்து நூற்றுக்கணக்கான லோக்கல் வண்டிகள் இருக்கும், டிக்கெட்டும் மலிவு’ என்று எங்களை ஆற்றுப்படுத்தியிருந்தார் வியட்நாம்வாழ் நம்மஊர் உறவுக்கார நண்பர். சொகுசுப்பேருந்தின் நடத்துநர் வேறு அவர் பங்குக்கு, ‘பேருந்து நிலையம் போகவேண்டாம், இங்கேயே பேருந்து வரும்’ எனக்கூறி பேருந்து நிறுத்தம் போல இருந்த, புனோம்பென் மார்க்கெட் என்று சொல்லப்பட்ட ஒரு இடத்தில் எங்களை (அம்போவென) இறக்கி விட்டுப் போய்விட்டார்.
ஆளுக்கு நான்கு பெட்டிகளுடன், பேருந்து நிறுத்தம் என்றுகூட சொல்ல முடியாத அளவுக்கு பாழடைந்து போய்க் கிடந்த அந்த இடத்தில் அய்யோ பாவமாய் நின்றிருந்தோம். ஆங்காங்கே ஒரு சில கூரை வேய்ந்த கடைகள், பெரிதாய் ஆள் நடமாட்டம் இல்லாமல் அந்த பிற்பகல் நேரத்திலேயே வெறிச்சோடிப்போய் கிடந்தது. பேருந்தைக் கண்ணிலேயே பார்க்க முடியவில்லை. ஹோ சி மின்னின் வானளாவிய கட்டிடங்களும் பரபரப்பான இரவு வாழ்வும் நினைவுக்கு வர, அனைவருக்கும் கண்ணில் கண்ணீர் வராத குறை. இருந்த ஒரு சில கடைகளில் பேருந்து குறித்து கேட்டபோது “வரும் வரும்..,” என்று சொன்னார்கள். “அடுத்த பேருந்து எத்தனை மணிக்கு?” என்று கேட்டால், ‘அது எங்களுக்குத் தேவையில்லாத விஷயம்’ என்பதுபோல தோளைக் குலுக்கினார்கள். பணப் பரிமாற்றம் செய்யும் கடைகள் மட்டும் அடுத்த தெருவில் இருப்பதாகத் தெரிந்துகொண்டு அனைவரையும் பெட்டிகளைப் பாதுகாக்க உட்கார வைத்து விட்டு, நான், சரிதா, ஆனந்தி மூன்று பேர் மட்டும் சென்றோம்.
நம் ஊர் ஸ்வீட் கடைகள் போல பெரிய பெரிய கண்ணாடி பெட்டிகளுக்குள் கரன்சிகளை சீட்டுக்கட்டுப் போல மொத்த மொத்தமாக அடுக்கி வைத்திருந்தனர். அது உண்மையில் பணமா இல்லை பிசினெஸ் விளையாட்டில் இருக்கும் போலி பணச்சீட்டுகளா என சந்தேகம் வரும் அளவுக்கு பணம் குவிந்து கிடந்தது. பெரும்பாலான கடைகளில் பெண்களே இருந்தனர். 100 அமெரிக்க டாலர்களைக் கொடுக்க நான்கு இலட்சத்து பதினோராயிரத்து எழுநூறு கம்போடிய ரியல்களை கைநிறைய அள்ளிக்கொடுத்தார்கள். வியட்நாம் பயணத்திலேயே இலட்சங்களின் மீதான பிரமிப்பு அடங்கியிருந்ததால், ( 100 அமெரிக்க டாலருக்கு இருபத்தைந்து இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்து இருநூற்றைம்பது வியட்நாம் டாங்குகள்!) ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியாய் மீண்டும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தோம். பராக்கு பார்க்கக்கூட ஒன்றுமில்லாத அந்த இடத்தில் பராக்குப் பார்ப்பது போன்ற பாவனையுடன் கொஞ்ச நேரம் முழித்துக் கொண்டிருந்தோம். ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்ற நகைச்சுவை படத்தில் யாருமில்லாத தீவுக்குள் மாட்டிய நான்கு நண்பர்களின் நிலை ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது.
வெகு நேரக் காத்திருப்பிற்குப் பின் ஒருவழியாக ஒரு பேருந்தைக் கண்ணால் பார்த்தோம். பெட்டி படுக்கைகளுடன் மொத்தமாய் நின்றிருந்த எங்களைப் பார்த்தவுடன் வண்டியிலிருந்த பேருந்து நடத்துநர் இறங்கி வந்து எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். காய்கறிக்கடையில் பேரம் பேசியிருப்பீங்க; பாத்திரக் கடையில் பேரம் பேசியிருப்பீங்க. ஏன் நகைக்கடையில்கூட பேரம் பேசியிருப்பீங்க… ஆனால் ஒரு பஸ்ஸில் பேரம் பேசி பார்த்திருக்கீங்களா… பார்த்திருக்கீங்களா… சொன்னா நம்ப மாட்டீங்க! நாங்க பேசினோம்.
ஏனெனில் எங்களுக்கு வியட்நாமிலிருந்து அப்படித்தான் சொல்லி அனுப்பினார்கள். நாங்கள் கேட்ட பேரத்துக்கும், நாங்கள் வைத்த நிபந்தனைகளுக்கும் சரி சொன்னார் அந்த நடத்துநர் (அப்போதே சந்தேகம் வந்திருக்க வேண்டும்!) சியம் ரீப் பேருந்து நிலையத்தில் இறங்கி எங்களை அறைக்கு அழைத்துச்செல்ல டுக் டுக் (நம்ம ஊர் ஆட்டோ போல, ஆனால் அளவில் பெரியது) ஏற்பாடு செய்து கொடுப்பதாகக் கூறி, தொலைபேசியில் சியம் ரீப் டுக்டுக் ஓட்டுநருடன் பேசி, எங்களுக்கும் அவரது எண் கொடுத்து உறுதியளித்தார். உசிலம்பட்டி போக வேண்டிய பேருந்தை, திடீரெனெ வீரபாண்டித் திருவிழாவிற்கு ‘சிறப்புப் பேருந்து’ என ரூட் மாற்றி விடுவது போல எங்களுக்காகவே அந்தபேருந்து வழக்கமான ரூட்டை மாற்றி சியம் ரீப் நோக்கி இயக்கப்பட்டது. ரொம்பப் பெருமையுடன் உள்ளே சென்றோம்…
“அது பஸ் மாதிரி… ஆனா பஸ் இல்லை” என்பது உள்ளே நுழைந்ததும்தான் தெரிந்தது. பேருந்துக்குள் இருக்கைகளே இல்லை. நடுவில் நடைபாதை, இருபக்கமும் தரையோடு தரையாக கீழே அமர்ந்து கொள்ள வேண்டும். அதில் மாடி போர்ஷன் (அப்பர் பெர்த்!) வேறு. பார்க்கவே விநோதமாக இருந்தது. நாங்கள் பத்து பேர் மொத்த டிக்கட் என்பதால் பேருந்தின் கடைசிக்குப் போகச் சொன்னார்கள். எங்களுக்கு சொல்லப்பட்ட இடத்தை நோக்கி நடக்கும்போதே லாரியின் மிகப்பெரிய டயரை வண்டிக்குள் ஏற்றி, அது நகராமல் இருப்பதற்காக பேக்கேஜிங் செல்லோ டேப் (?!) போட்டு கம்பியுடன் சேர்த்து, சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
நடைபாதை முடிய பேருந்தின் கடைசியில் ஒரு அறை போல இருந்தது. இருக்கைகள் ஏதும் இல்லாமல் நம்ம வீட்டு ஹாலில் தரையில் உட்காருவதுபோல அமர்ந்து கொள்ள வேண்டும். அதற்கும் மாடி போர்ஷன் உண்டு. இரண்டுமே எங்களுக்குத்தான் என பெரியமனதுடன் சொல்லிவிட்டதால், (இதுக்குப்பேரு உங்க ஊர்ல பஸ்ஸாய்யா? நாங்க இதை கண்டெயினர்னு சொல்லுவோம்!) பெட்டிகளை வரிசையாக வைத்து விட்டு, மேலும் கீழுமாக அமர்ந்து கொண்டோம். அந்த முழுப் பேருந்தில்… சாரி கண்டெயினரில், எங்களைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. வண்டியை எடுப்பதாகவும் தெரியவில்லை. நம்ம ஊர் மினிபஸ் போல ஆட்கள் சேர்ந்தால்தான் எடுப்பார்கள்போல. பேசாமல் கீழே இறங்கி “சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம், நாகூர் நாகூர்… நாகப்…பட்னம்” என பிரபுதேவா போல நாமே ஆள்சேர்ப்போமா என்ற யோசனையைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.
ஒருவழியாகக் கிளம்பிய வண்டி, ஒவ்வொரு வீட்டின் முன்னும் நின்று சாவகாசமாய் ஆள் ஏற்றிக் கொண்டு புனோம்பென்னை விட்டு வெளியேறவே ஒன்றரை மணிநேரம் ஆகி விட்டது. சிறிது நேரத்திலேயே நொறுக்குத்தீனி, அரட்டை, சீட்டு விளையாட்டு என நாங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பினோம். சினிமா, அரசியல் என ஜாலியான புரணியில் தொடங்கிய பேச்சு, ‘காலையில் சொகுசுப்பேருந்து… மாலையில் இப்படி ஒரு கண்டெயினர் பேருந்து இதுதான் வாழ்க்கை’ என்றும், பாலினச்சமத்துவம், பெரியாரியம் என்றெல்லாம் சீரியசாகத் திசைமாற, ஒவ்வொருவராகக் கண்ணயர்ந்து விட்டோம்.
அன்றைய நாளின் அனுபவத்திலிருந்து, ‘அந்த நள்ளிரவு, எங்களுக்கு நல்லிரவாக இருக்குமா?’ என்ற சந்தேகத்துடன்தான் இறங்கினோம். இறக்கி விடப்பட்ட இடமும் இருளடர்ந்த ஒரு பேருந்து நிறுத்தம். எங்களை இறக்கிவிட்ட அடுத்த நொடி கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னலெனப் பாய்ந்து மறைந்தது அதுவரை ஊர்ந்து வந்த அந்த வாகனம். சுற்றுமுற்றும் பார்க்கிறோம். ஒரு வாகனம் கிடையாது, மனித நடமாட்டம் கிடையாது, கடைகள் கிடையாது, என்னடா இது? தூங்கா நகரத்திலிருந்து வந்த எங்களுக்கு இப்படி ஒரு சோதனை? இந்த நடு இரவில், ஊர் பேர் தெரியாத, மொழியறியாத ஊரில் யாரைக்கேட்டு எப்படி நாங்கள் பதிவு செய்திருந்த ஹோட்டலை அடைவது? மரியாதையாக விமானப் பயணத்திலேயே வந்திருக்கலாமோ என முதன் முறையாகப் பயம் வந்தது.
அந்த அச்சத்தை வெளிக்காட்டாமல் ஆளரவமற்ற, இருள் சூழ்ந்த அந்த இடத்தில் ‘பேக்கு பேக்கு’ என முழித்தபடி தூக்கக் கலக்கத்துடன் நாங்கள் பத்து பேரும், எங்களின் நாற்பது மூட்டை முடிச்சுகளும்…
தொடரும்…
படைப்பாளர்
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘கவின்மிகு கம்போடியா- தொல்நகரில் ஓர் உலா’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.