தலைப்பைப் படித்ததும் ஒரு சிறு குறுகுறுப்பு மனதுக்குள் எழுந்திருக்கும். அந்த உணர்வை அடிப்படையாக வைத்து சில கேள்விகள் கேட்கப் போகிறேன். என் வாழ்வில் நான் சந்தித்த ஒரு பெண்ணிற்கு ஏழு முறை கருச்சிதைவு நடந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் வயது 26 இருக்கும். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அவள் உளவியல் ரீதியாக எவ்வளவு அனுபவித்திருப்பாள்? இதற்குக் காரணம் என்ன? ஏன் இத்தனை முறை இது நடந்திருக்கிறது? இதுபோன்ற கேள்விகளை அசைபோட்டபடி சில முக்கியமான நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களைப் பற்றிப் பார்ப்போம்.
முதலில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள். ஒரு மனிதனின் உடலில் பாலினம் சார்ந்த செல்கள் அதாவது ஆணுக்கு விந்தணு, பெண்ணுக்குக் கருமுட்டை இவற்றைத் தவிர மீதி எல்லா செல்களிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். இந்தப் பாலினம் சார்ந்த செல்களில் 23 குரோமோசோம்கள் மட்டும்தான் இருக்கும். 46 குரோமோசோம்களிலிருந்து 23 குரோமோசோம்களாகக் குறையும் இந்த நிகழ்வை ஒடுக்கற்பிரிவு (meiosis) என்று அழைப்பர். இது பாலினம் சார்ந்த செல்களில் (gonad cells) மட்டும்தான் நடக்கும்.
ஆணின் விந்தணுவும் பெண்ணின் கரு முட்டையும் சேர்ந்து ஒரு கருவை உருவாக்கும் போது அது ஒரு செல் உயிரினமாகத்தான் தன் பயணத்தைத் தொடங்கும். இந்தச் சேர்க்கையின் போது ஆணின் விந்தணுவிலிருக்கும் 23 குரோமோசோம்களும் பெண்ணின் கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும் இணைந்து 46 குரோமோசோம்கள் கொண்ட ஒரு கருவை உருவாக்குகிறது. இப்படி உருவாகும் போது சில நேரம் ஆணுக்கோ பெண்ணுக்கோ ஒடுக்கற்பிரிவின் போது நடக்கும் மரபணு தவறுகளால் உருவாகும் கருவில் 46 குரோமோசோம்களுக்குப் பதிலாக 69 குரோமோசோம்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக ஓர் ஆணின் விந்தணுவில் 23 குரோமோசோம்களுக்குப் பதிலாக 46 குரோமோசோம்கள் இருந்தால் அந்த 46 குரோமோசோம்களோடு பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் 23 குரோமோசோம்கள் இணையும்போது 69 குரோமோசோம்கள் கொண்ட கரு உருவாகும். இந்தக் கருவிற்குப் பிழைக்கும் ஆற்றல் கிடையாது. அதனால் இப்படி ஒரு கரு உருவாகும் போது இயற்கையாகவே கருச்சிதைவு ஏற்படும். இதுவும் ஒருவகையில் சார்லஸ் டார்வினின் ’இயற்கைத் தேர்வு’ மற்றும் ’பொருந்தி வாழ்வதே பிழைக்கும்’ ஆகிய கோட்பாடுகளோடு தொடர்புடையதே.
குரோமோசோம்களின் தொகுப்பு எண்ணிக்கை என்பது மனிதனைப் பொருத்தவரையில் 23 என்று எடுத்துக் கொள்வோம். இது மாதிரியான மொத்த குரோமோசோம்களின் தொகுப்பு எண்ணிக்கை இரட்டிப்பதற்கு (23+23 = 46) பதிலாக மும்மடங்காகவோ (23+46 = 69) அல்லது அதற்கும் மேலாகவோ போனால் அது ஆங்கிலத்தில் ploidy என்றழைக்கப்படும். இது நடந்தால் கருச்சிதைவு ஏற்படும். ஒருவேளை ஆண், பெண் இருவருக்குமே ஒடுக்கற்பிரிவில் பிழையிருந்து 23 குரோமோசோம்களுக்குப் பதிலாக 46 குரோமோசோம்கள் வீதம் சேர்ந்தால் உருவாகும் கருவிற்கு மொத்தம் 92 குரோமோசோம்கள் இருக்கும். இதுவும் பிழைக்கும் ஆற்றலற்ற கரு என்பதால் தானாகவே கருப்பையிலிருந்து வெளியேறிவிடும்.
ஒரு கரு உருவாவது என்பது ஒரு சிலை வடிப்பதைப் போன்றது. ஒரு செல்லில் இருந்து இரு செல்களாக மாறி அது நான்காகப் பெருகி, பல லட்சம் செல்கள் கொண்ட ஒரு மனித உயிராக உருவாவதற்குப் பத்து மாதங்கள் ஆகும். இந்தப் பத்து மாதக் காலத்தில் முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை. உயிர் இயங்குவதற்குத் தேவையான சில முக்கிய உறுப்புகளாகக் கருதப்படும் இதயம், மூளை போன்றவை முதல் மூன்று மாதங்களுக்குள்தான் உருவாகும். உடலில் முதுகு பகுதியில்தான் தண்டுவடம் இருக்க வேண்டும், இதயம் இடதுபுறம்தான் இருக்க வேண்டும் போன்ற அத்தனை தகவல்களும் அந்த 46 குரோமோசோம்களில் இருக்கும் மரபணுக்களில்தான் இருக்கின்றன. சில நேரம் இந்த முக்கிய உறுப்புகள் உருவாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டாலும் கருச்சிதைவிற்கு வாய்ப்பிருக்கிறது.
இது போக ஃபோலேட் (folate) என்று சொல்லக்கூடிய ஒருவகை வைட்டமின் (B9) குறைபாட்டாலும் கருச்சிதைவு ஏற்படும். உடலில் குறிப்பிட்ட அளவு ஃபோலேட் இருப்பது கருவின் உறுப்புகள் உருவாவதையும், வளர்ச்சியையும் சீராக்குகிறது. இதனால் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சி பிரச்னைகள் வராமல் தடுக்கும். ஆனால், இந்த ஃபோலேட் குறிப்பிட்ட அளவைவிட குறைவாக இருந்தால் கருவின் வளர்ச்சியில் பல பிரச்சினைகள் ஏற்படும். சில நேரம் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். ஃபோலேட் குறைவாக இருப்பதால் அம்மாவிற்கு ஏற்படும் ரத்தசோகைதான் கருவின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதில் ஒருவகை மரபணுக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய hereditary folate malabsorption என்னும் குறைபாடு. நான் சந்தித்த பெண்ணிற்கு அப்படியொரு மரபணுக் குறைபாடுதான் இருந்தது. இதைக் குணப்படுத்துவதற்கு மருத்துவப் பரிந்துரைகளும் மரபணு ஆலோசனைகளும் தேவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்தக் குறைபாட்டை எளிதில் கடந்து வர முடியும்.
பொதுவாகவே குழந்தைக்குத் திட்டமிடும் பெண்கள் ஃபோலிக் அமிலம் (folic acid) மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மகப்பேறு காலத்தில் ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்க உதவும். மேலும் முதல் மூன்று மாதங்களில் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.
சரி, இதுவரை இயற்கையாக நடக்கும் கருச்சிதைவுகளையும், அதன் விளைவுகளையும் பற்றிப் பேசினோம். இப்போது தனிமனித முடிவுகளால் ஏற்படும் கருக்கலைப்பைப் பற்றிப் பார்ப்போம். எப்படிக் கருச்சிதைவுக்குப் பல காரணங்கள் இருந்தனவோ அதே மாதிரி கருக்கலைப்புக்கும் பல காரணங்கள் உண்டு. அதில் வளரும் கருவிலிருக்கும் மரபணுக் குறைபாடுகளின் விளைவாக ஏற்படும் கருக்கலைப்பு பற்றிப் பேசுவது அவசியம். மருத்துவக் கருக்கலைப்பு சட்டம், 1971 (Medical termination of pregnancy act) கீழ் 20 வாரங்களுக்குள் இருக்கும் கருவைக் கலைப்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு. 20 வாரங்களுக்கு மேலான கருவைக் கலைப்பது சட்டப்படி குற்றம். அதுவும் அந்தக் குழந்தையின் பெற்றோர் குறிப்பாக, தாயின் அனுமதியோடு நடைபெற வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்டு முறையாகத் தேர்ச்சி பெற்ற மகப்பேறு மருத்துவர் மட்டுமே இதை நிகழ்த்த வேண்டும். பெண் மைனராக இருக்கும்பட்சத்தில் பாதுகாவலரின் (guardian) அனுமதியோடு மட்டுமே கருக்கலைப்பு செய்ய வேண்டும். அதுவும் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தற்காலிகமாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ மையங்களிலோ மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும். கருக்கலைப்பு செய்வதன் மூலம் தாயின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரும் நிலையில் கருக்கலைப்பு செய்யக் கூடாது. கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏதேனும் மரபணு குறைபாடு இருந்து, அந்தக் குழந்தை உடல் அல்லது மன வளர்ச்சியில் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தாலோ கருக்கலைப்பு செய்ய அனுமதி உண்டு. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குள். இம்மாதிரியான முடிவுகளில் மரபணு ஆலோசகரின் தலையீடு நேரடியாகவோ மறைமுகமாகவோ இருத்தல் கூடாது. இதை முழுக்க முழுக்க அந்தக் குழந்தையின் பெற்றோர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை மரபணுக் குறைபாடு காரணமாக நடைபெற்ற கருக்கலைப்புக்குப் பிறகு மீண்டும் அந்தத் தம்பதி குழந்தைக்குத் திட்டமிடும்பட்சத்தில் மரபணு ஆலோசகரை அணுகுவது மிக முக்கியம்.
தன் உடல் மற்றும் குழந்தை சார்ந்த அத்தனை முடிவுகளையும் பெண்தான் எடுக்க வேண்டும். அதில் நிகழ்த்தப்படும் அத்தனை அத்துமீறல்களும் தண்டனைக்குரியதே. அதற்குச் சட்டங்களும் பெண்ணுக்குச் சாதகமாக இயற்றப்பட்டுள்ளன.
(தொடரும்)
படைப்பாளர்:
வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.