சாமானிய மக்கள் எல்லாராலும் விரும்பப்படும் ஓர் எளிமையான சக்தி வாய்ந்த புத்தகம். துப்பட்டா மழை பொழிந்து கீதா தோழரை மாணவிகள் வரவேற்றதே இந்தப் புத்தகத்தின் சக்தியைப் பறைசாற்றுகிறது.
கை, கால் முகம் ஆகிய உறுப்புகளைப் போல பெண்களின் மார்பும் ஓர் உறுப்பு, ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு வேலையும் உபயோகமும் இருப்பது போல மார்பகங்களும் ஒரு வேலைக்குப் படைக்கப்பட்டிருகிறது. அதைக் குறித்துப் பெண்கள் வெட்கப்படாமல் பெருமிதம் கொள்வதற்கு ஒரு விழிப்புணர்வாக முதல் அத்தியாயம் உள்ளது. பெரியார் இயம்புவதைப் போலவே ஆசிரியர் பெண்களின் கருப்பையின் மீதான உரிமையை நிலைநாட்டக் கோரியுள்ளார். சேலை பெண்களுக்கு அழகுதான் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பேண்ட் சர்ட் அல்லது சுடிதார் பெண்களுக்கு வசதியான உடை என்பதாலேயே, எளிய மாற்று உடைகளை உழைக்கும் தோழமைகளுக்கும் பரிந்துரைக்கிறார் ஆசிரியர். உழைப்பவர்க்கு மட்டும் இன்றி கீதா தோழர் சொல்வதைப் போல வேகமாகவும் நடக்கவும் ஓடவும் உறுதுணையாக இருக்கும் உடைகள் பெண்களின் செய்து தன்னம்பிக்கையைக் கூட்டுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஹவுஸ் வைஃப் தாங்க என்று கூறிக் கொள்ளும் இல்லதரிசிகளின் நிலைமையைச் சரியாக விவரிகிறார்.
ஒருவர் சுயபரிவுடன் இருந்தால்தான் சக்தியோடு இயங்க முடியும் என்கிற கோணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. சுயபரிவு இன்மைதான் பெண்களைச் சுய பச்சாதாபத்தில் தள்ளி சக்தி இல்லாதவர்களாக மாற்றுகிறது. கற்பு என்னும் ஒற்றைச் சொல்லைக் கொண்டே பெண்களின் புத்தி மழுக்கடிக்கப்பட்டு, உணர்வுகள் தூண்டப்பட்டு, அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று சாடுகிறார் ஆசிரியர். பெண்களின் சம்பாத்தியம், தனித்து வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது இவையெல்லாம் பெண்களின் உரிமை என்கிறார்.
தாய்மை மட்டுமே பெண்ணின் அடையாளம் இல்லை, பெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஆயிரம் வழிகளை நாடலாம். ஆனால், அவள் எப்பொழுதும் சூழ்நிலைக் கைதியாகவே இருக்கிறாள் என்று விழிப்புணர்ந்து அதற்கான செயல்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார் தோழர் கீதா.
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிகாட்டி உள்ளது இந்தப் புத்தகம். பெண்கள் தாங்களே வாகனங்களை இயக்குவதின் வாயிலாகத் தங்கள் பணிகளைத் தாங்களாகவே சுலபமாகச் செயல்படுத்திக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.
இந்தப் புத்தகம் பெண் விடுதலைக்கான எளிதான செயல்திறன் உத்திகளை முன் வைத்துள்ளது. மேலும் புத்தகத்தின் நடை மிக யதார்த்தமாக உள்ளது என்பதால், எல்லாருடைய மனதிலும் சிம்மாசனம் இட்டு உட்காரும் என்பதில் சந்தேகமே இல்லை.
படைப்பாளர்:
எஸ். பானுலஷ்மி, பி.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்.சி. சைகோதெரபி & கவுன்சிலிங் படித்தவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சென்னையில் சிறிது காலம் சைகோதெரபிஸ்டாகவும் கவுன்சிலிங் கொடுப்பவராகவும் செயல்பட்டிருக்கிறார்.