நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும். அது போலச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுப் பழுதாகும் வரை அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை. சிறுநீரகம் என்றால் ரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்களை வடிகட்டிச் சுத்தப்படுத்தும் ஓர் உறுப்பு. அது ரத்தத்திலிருந்து அதிகப்படியான நீரையும், கழிவுப் பொருட்களையும் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. உடலிலிருந்து சிறுநீர் வெளியேறவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்கிற அளவில் மட்டுமே நம்மில் பெரும்பாலோர் தெரிந்து வைத்துள்ளோம். 

ஆனால் சிறுநீரகம் நம் உடலில் ஆற்றும் பல்வேறு பணிகள் குறித்தோ, உயிர்வாழ அது எவ்வளவு அவசியமானது என்றோ, அது பாதிப்படையாமல் நல்ல முறையில் இயங்க நாம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றோ தெரிந்து கொள்ள அக்கறை சிறிதுமின்றி இருந்து விடுகிறோம். நம் அறியாமை கூடப் பல சமயங்களில் சிறுநீரகச் செயலிழப்புக்குக் காரணமாகி விடுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்படும் ஆரம்பக் கட்டத்தில் அதன் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. அது முற்றிலும் செயலிழந்து அறிகுறி நமக்குத் தெரியவரும் போது காலம் கடந்துவிடுகிறது.

நம் உடலில் இரு சிறுநீரகங்கள் உள்ளன என எல்லோருக்கும் தெரியும். நாம் உயிர் வாழ ஒன்று இருந்தாலே போதும். சிறுநீரகம் ஆற்றும் பணிகள் கொஞ்ச நஞ்சமல்ல; எனவே தான் ஒன்று போனாலும், உயிரைக் காக்க இன்னொன்று இருக்கட்டும் என்று இயற்கை இரு சிறுநீரகங்களை நமக்குத் தானமாக அளித்துள்ளது.

வயிற்றின் பின்புறம் முதுகுத்தண்டின் இருபுறமும் அமைந்துள்ள சிறுநீரகங்கள் 4.5 அங்குல நீளமுடையவை. கைமுட்டி அளவுடன் அவரை விதை போன்ற வடிவிலுள்ள சிறுநீரகத்தின் மிக முக்கியப் பணி, ரத்தத்தை வடிகட்டுவதுதான். ஒரு நாளில் சுமார் 180 லிட்டர் திரவத்தை வடிகட்டித் தேவையற்ற நச்சுப் பொருட்களை நீக்கி, உயிர் வாழ்வதற்குத் தேவையான நீரையும்  தாதுக்களையும் பாதுகாத்து வைக்கும் அற்புதப் பணியை இது செய்கிறது.  ரத்தம் சிறுநீரகங்களின் வழியாகச் சென்று, கழிவுகளை நீக்கிக் கொண்டு சுத்தமாகி மீண்டும் உடலுக்குள் செல்கிறது.

நெப்ரான் (Nephron) என்பது சிறுநீரகத்தின் உயிரணு இயந்திரம். ஒவ்வொரு சிறுநீரகத்திலும் நெப்ரான் என்று சொல்லப்படும் நுண்ணிய ரத்தக் குழாய்களின் முடிச்சுகள், பத்து லட்சம் உள்ளன. ஒவ்வொன்றும் மிக நுண்ணிய வடிகட்டியாகச் செயல்பட்டு ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது.

ஒவ்வொரு நெப்ரானிலும் குளோமெருலஸ் (Glomerulus), டியூப்யூல் (Tubule) என்கிற இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. குளோமெருலஸ் என்பது ரத்தத்தை முதலில் வடிகட்டும் நுண்ணிய ரத்தக் குழாய்களின் முடிச்சு.

டியூப்யூல் என்பது வடிகட்டப்பட்ட திரவத்தில் இருந்து உடலுக்குத் தேவையான நீர், உப்பு, சர்க்கரை போன்றவற்றை மீண்டும் உறிஞ்சும் நீண்ட குழாய் அமைப்பு.

சுருட்டி வைக்கப்பட்ட இந்த நெப்ரான் முடிச்சை நீட்டினால், அது நீண்ட குழாய் போல, 50-60 கிலோ மீட்டர் நீளம் இருக்கும்! இவ்வளவு நுண்ணிய அமைப்புகள் ஒரே உறுப்புக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் வடிவமைப்பு இயற்கையின் அற்புதம்! பெரும்பாலான சிறுநீரக நோய்கள் இந்த நெப்ரான்களைத்தான் தாக்குகின்றன. இவை பாதிக்கப்பட்டால், சிறுநீரகத்தால் வடிகட்ட இயலாது.

சிறுநீரகச் செயலிழப்பிற்கான முக்கியக் காரணங்கள்:

•        நீரிழிவு (Diabetes) – உலகளவில் சிறுநீரகச் செயலிழப்பிற்கான முதன்மை காரணம்.

•        உயர் ரத்த அழுத்தம் (Hypertension) – ரத்தக் குழாய்களைச் சேதப்படுத்திச் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.

•        நீண்டகால வலி நிவாரண மாத்திரைகள் (Pain killers) அதிகம் உட்கொள்வது – குறிப்பாக NSAIDs (Nonsteroidal Anti-inflammatory Drugs) வகை மருந்துகள்.

•        சிறுநீரகத் தொற்றுகள் அல்லது சிறுநீரகக் கற்கள்.

•        திடீர் நீரிழப்பு (Severe dehydration).

•        இதய நோய்கள்,

•        ஆட்டோஇம்யூன் (Autoimmune diseases) நோய்கள் ஆகியவை முக்கியக் காரணங்கள்.

நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் உடலின் ஆரோக்கியமான செல்களைத் தவறுதலாக எதிரி என்று நினைத்துத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்துவதே ஆட்டோஇம்யூன் நோய். அதாவது நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நம் உடலையே எதிரியாக நினைத்துத் தாக்குதல் நடத்தும். என் கணவருக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட ஒரு ஆட்டோஇம்யூன் நோயே காரணமாக அமைந்தது.  

•        மேலும் மரபியல் காரணங்கள் (Genes) மூலம் பாதிக்கப்படுதல், கடுமையான காயங்கள், தவறான முறையில் மாத்திரை மருந்துகளை உட்கொள்ளுதல், அதிக உடல் எடை, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பல காரணங்களால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.

நம் தமிழ்நாட்டில் நன்கு படித்தவர்கள்கூட மருத்துவர் பரிந்துரையின்றிக் கண்ட கண்ட நாட்டு மருந்துகளையும், மூலிகை மருந்துகளையும் உட்கொள்வதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். என் கணவருக்குத் துணையாக நான் மருத்துவமனையில் இருந்த காலங்களில் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்தவுடனே பெரும்பாலோரிடம் மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி இது தான்.

“மருத்துவர் பரிந்துரையின்றி நாட்டு மருந்து/மூலிகை மருந்து ஏதும் உட்கொண்டீர்களா?” என்பதுதான்.

எனவே இணையத்தில் பல்வேறு யூடியூப் காணொளிகளில் ’இந்த மருந்துக்குப் பக்கவிளைவு இல்லை’ என்று மருத்துவ அறிவியல் ஆதாரமின்றிச் சொல்லப்படும் விபரங்களை நம்பி, நாட்டு மருந்துகளையும் மூலிகை மருந்துகளையும் உட்கொள்வது சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். இந்த விஷயத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரை மருந்துகளில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்களைப் பிரித்துத் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் வேலையைச் சிறுநீரகமே செய்கிறது. அந்த மருந்துகளின் பக்கவிளைவுகளால் சிறுநீரகம் சேதமடைந்தாலும், ஆரம்பத்தில் அதன் அறிகுறி எதுவும் வெளியே தெரியாது என்பதுதான் சோகம். எனவே ’பக்கவிளைவு இல்லை’ என்று வெறுமனே சொல்லப்படும் கூற்றை நம்பாமல் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே எந்த மருந்தையும் உட்கொள்வது மிகவும் அவசியம்.

கடந்த நூற்றாண்டுடன் ஒப்பிடும்போது, இந்நூற்றாண்டில் நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகச் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் (சுமார் 15–20% வரை) அதிகரித்துள்ளது.

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.