நீர்மேல் கோவிலும் அதன் பூங்காவும் ஒருசேர மிதந்து கொண்டிருக்கும் அழகுக் காட்சியே ‘சீமா மலகா’ (Seema Malakaya Temple). புகழ்பெற்ற கங்காராமய்யா ஆலயத்தின் அருகிலிருக்கும் இந்த இடம், ‘மிதக்கும் கோவில்’ என்றே அழைக்கப் படுகிறது.

பரந்து விரிந்த ‘பெய்ரா’ ஏரியின் நடுவே, மலர்ந்த தாமரையென வீற்றிருக்கிறது இக்கோவில். இயற்கையின் மடியில் மக்கள் அமர்ந்து இளைப்பாறவும், தியானித்து ஆன்ம அமைதி எய்தவும் ஏற்றதொரு புகலிடமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  கங்காராமய்யா ஆலயத்தின் நுழைவுச்சீட்டே இதற்கும் பொருந்துவதால், இதனை அதன் ஒரு நீட்சியாகவே நாம் கருதலாம்.

சமய நல்லிணக்கத்தின் சான்று!

இந்த ‘பெய்ரா ஏரி’, ஒருகாலத்தில் போர்த்துக்கீசியர்களால் வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நீர்நிலையாகும். இந்த ஏரியில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கோவில் எழுப்பப்பட்டது. காலப்போக்கில், சிதிலமடைந்து மூழ்கும் நிலையை எட்டிய இவ்வாலயம், 1976ஆம் ஆண்டில் புனரமைக்கப் பட்டது. இப்புனரமைப்பின் பின்னணியில் ஒரு வரலாறு ஒளிந்திருக்கிறது.

‘அமீர் எஸ். மூசாஜி’ என்ற இஸ்லாமியரின் நினைவாக, அவருடைய பெற்றோர் வழங்கிய நன்கொடையினைக் கொண்டே இப் பௌத்த ஆலயம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. சமய நல்லிணக்கம் காலங்களைக் கடந்தும் வாழ்கின்றது என்பதற்கு, ஏரியின் கம்பீரமாய் நிற்கும் இந்த சீமா மலகா ஆலயம் ஒரு சான்றாகும்.

உள்ளே நுழையும்போதே மழை மின்னாமல் முழங்காமல் கொட்டத் தொடங்கியது. வாசலில் ஒரு சிறு கூரை போட்ட அறையில் அலுவலர் ஒருவர் இருக்கிறார். கையில்லாத ஆடைகள், முட்டிக்கு மேல் உடுத்தும் ஆடைகள் அணிந்தவர்களுக்கு ஆடை கொடுக்கிறார். பணம் வாங்கியதுபோன்று தெரியவில்லை. 

நீலக் கூரையும் நிழலாடும் வடிவங்களும்

அங்கிருந்து பார்க்கையில், ஏரியின் மிதக்கும் மரப்பலகைகளின்மீது இக்கோவில் அமர்ந்திருப்பதுபோன்று தோன்றுகிறது. அதன் மேற்கூரை ஓடுகள், வானின் நீலத்தை அப்படியே வாரியிறைத்ததுபோல நீல நிறத்தில் உள்ளன. கோவிலின் இருபுறமும், இரு சிறு கோவில்கள் உள்ளன. 

புத்தபாதமும் பொன்னிறப் பொலிவும்

அமைதி தவழும் அந்த ஆலயத்தின் சுவர்களைச் சுற்றிலும் பதிக்கப்பட்டிருக்கும் தங்க நிறக் குமிழ்கள், அவ்விடத்திற்கே பேரொளியையும் பேரழகையும் வாரி வழங்குகின்றன. நுழைவாயிலின் அருகே, வெண் பளிங்குத் தரையில் செதுக்கப்பட்டிருக்கும் புத்தரின் புத்தபாதம் மனம் கவர்கிறது.

பொன்னிறப் புத்தர்களும் கருணையின் தேவதையும்

கோவிலைச் சுற்றிலும் தங்க நிற புத்தர்கள் வரிசைகட்டி அமர்ந்திருக்கிறார்கள். கால வெள்ளத்தால் சில சிலைகளின் பொன்னிறம் மங்கிப் பொலிவிழந்து தோன்றினாலும், ஒட்டுமொத்தமாய்க் காணும்போது அந்தச் சிறு குறையும் பேரழகில் மறைந்து போகிறது. இடப்புறத்தே வீற்றிருக்கும் விகாரமோ, வழக்கமான பௌத்த ஆலயங்களின் தூய்மையைப் பறைசாற்றும் வண்ணம், வெண்பனிப்பாறைபோலப் பால் வெண்மையாய்க் காட்சியளிக்கிறது. எத்திசை நோக்கினும், புத்தர் பல்வேறு முத்திரைகளுடன் சில இடங்களில் அமர்ந்த நிலையிலும், சில இடங்களில் நின்ற கோலத்திலும் நம் கண்ணைக் குளிர வைக்கிறார்.

சிலைகளின் பின்னணியில், அலையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் ஏரியின் நீர்ப்பரப்பு, வானத்து மேகக் கூட்டங்களைத் தன் மடியில் சுமந்து நிற்கிறது. அந்த ஏரிக்கு அப்பால், வானை முட்டி நிற்கும் நவீன மாடமாளிகைகளும் அடுக்குமாடிப் பேரணிகளும் பழமையின் அமைதிக்கும் புதுமையின் வளர்ச்சிக்கும் இடையிலானப் பாலங்களாக மிளிர்கின்றன.

இவ்விடத்தில், பிரம்மன் சிலையும் இருக்கிறது. ‘குவான்யின்’ (Guanyin) எனப்படும் கருணையின் பேரரசியாம் பெண் தெய்வத்தின் திருவுருவமும் இருக்கிறது. சிலையும் அங்கே வீற்றிருக்கின்றது. இக்கருணைத் தேவதையின் சிலை, கிழக்கு ஆசியப் பௌத்த வழிபாட்டுநெறியின் ஆழமான தாக்கத்தைக் காட்டுகின்றது.

அங்கே இருக்கும் போதி மரமோ, மாமன்னன் அசோகரின் அருமைப் புதல்வி சங்கமித்தை அலைகடல் தாண்டி ஏந்தி வந்த மரத்தின் அழியாத கிளை வழித் தோன்றலாகும். ஒட்டுமொத்த இலங்கைத் தீவிலும் தழைத்தோங்கி நிற்கும் அரச மரங்களின் வரலாறும், இந்த ஒற்றைக் கிளையிலிருந்தே தொடங்குகிறது.

அன்னப் பறவையின் வடிவில் அசைந்தாடும் படகுகளில் ஏறி சுற்றிப்பார்க்க மழை ஒத்துழைக்கவில்லை. ஆயினும், ஆலயத்தில் நின்று அந்த ஏரியின் எழிலைக் காண்பதே உள்ளம் ஓர் இனிய அனுபவமாக மாறுகிறது. ஏரியின் பரப்பில், மிதவைகளின் மீது இருக்கும் சில தோட்டங்கள் நம்மை நோக்கி அலைகளில் மிதந்து வருகின்றன; சிலவோ நம்மை விட்டு மெல்ல விடைபெற்று விலகிச்செல்கின்றன. பின்னணியில் கம்பீரமாய் நிமிரும் மாடமாளிகைகளும் கோபுரங்களும் நம் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. சுருங்கக் கூறின், இது காலம் கடந்து உள்ளத்தில் வாழக்கூடிய ஒரு மாபெரும் பயண அனுபவமாகும்.

தொடரும்

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.