கேள்வி
குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கிறார்கள்? என்ன செய்யலாம்?
பதில்
அதிகமாக செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அது மட்டுமல்ல, அன்பும், அக்கறையுமின்றி ஒரு பாதுகாப்பு உணர்வு (Sense of Security) கிடைக்க பெறாமல் வளர்ந்த குழந்தைகளும் தன்னிச்சையாக இருப்பார்கள். யார் சொல்வதையும் கேட்டு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள மாட்டார்கள்.
குழந்தைகள் வளரும் போது பிடிவாதமாக தனக்கு வேண்டிய திண்பண்டம், பொம்மை போன்றவற்றை பெற அடம்பிடிப்பது இயல்பான பழக்கம்தான். குழந்தை வளர வளர இந்த வகை பிடிவாத குணம் குறையும். வளர்ந்து வரும் குழந்தை தனக்கு பிடித்ததை கேட்டு அடம் பிடித்து அழுவது இயற்கை தான். ஆனால் அதுவே எல்லை மீறும் போது பெற்றோர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஒரு வயதிற்கு பிறகு குழந்தையிடம் பிடிவாத குணம் தோன்ற ஆரம்பிக்கும். 18 -24 மாதங்களில் அதிகரித்து தானாகவே ஒழுக்கமான நடவடிக்கைகள் கூடியவரை ஏற்பட்டு விடும். இந்தப் பருவத்தில் பெற்றோர் குழந்தையைக் கவனமாக கையாள வேண்டும். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை அடிக்கத் தொடங்கினால், குழந்தை தனக்கு பிடிக்கவில்லையானால் அடிக்கலாம் என்று புரிந்துகொள்ளும்.
பிடிவாத குணம் முளையிலே கிள்ளிவிட வேண்டிய நச்சுமரம்! இதை வளர விட்டால் குழந்தையும் எதிர்காலம் வீணாகும்.

ஓரளவு வளர்ந்த பிறகும் குழந்தை அதிகமாக அடிக்கடி பிடிவாதம் பிடிப்பதற்கு பல காரணங்கள் உண்டு:
– நோய்கள்
– உயிரியல் ரீதியானவை
– சமூக ரீதியானவை
– சுற்றுச்சூழல் ரீதியானவை
1. நோய்க் காரணங்கள்
சில மனநல பிரச்சனைகளால் குழந்தைகளும், வளர் இளம் பருவத்தினரும் அதிகமாக அடம் பிடிக்கின்றனர்.
- கவனக்குறைவு மற்றும் அதிக இயக்கம் என்ற குறைபாடு(ADHD)
- ஆட்டிசம் (Autism)
- மன வளர்ச்சி குன்றியவர்கள
- மனத் தொய்வு (Depression)
- மனப் பதட்டம் (Anxiety)
2. உயிரியல் காரணங்கள்
* மரபு ரீதியானவை: பெற்றோர், அவர்களின் பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் யாராவது அதிகமாக பிடிவாத குணம் கொண்டவர்களாக, அடம் பிடிப்பவர்களாக இருந்தால் குழந்தையும் அதே இயல்பை மரபு வழியாகக் கொண்டிருக்கும்.
* கருவில் சிசுவிற்கு நச்சுப் பொருள்களின் தாக்கம்.
* கருவுற்ற தாய்க்கு புகைபிடித்தல், மது அருந்துதல், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் இருந்தால், அவை பிறக்கும் குழந்தையின் நடத்தைகளை பாதிக்கும்.
3. சுற்றுச்சூழல் காரணங்கள்
காற்று மாசு மற்றும் நீர் மாசு குழந்தைகளுக்கு நடத்தை பாதிப்புகளை ஏற்படுத்தும்.
4. ஊட்டச்சத்துக்கள் குறைபாடு
குழந்தைக்கு இரும்பு சத்து, தயமின்(வைட்டமின் B1), டிரிப்டோபேன், அமினோ அமிலம் போன்ற நுண்ணூட்ட சத்துக்களின் குறைபாடுகள் இருந்தால், குழந்தை அடம் பிடிக்கும்.
5.சமூக காரணங்கள்
– வறுமை, வேலையின்மை, குடும்பங்களை உதாசீனப்படுத்துதல்
– குழந்தையை உதாசீனப்படுத்துவது, தாக்குவது போன்றவை(Child Abuse)
6.குடும்ப சூழ்நிலை காரணங்கள்
– இரு பெற்றோரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்து, குழந்தையை கவனிக்க அவர்களுக்கு நேரமே இல்லாமல் போனால்
– ஒரு பெற்றோர் மட்டும் இருப்பது பிடிவாதத்தை அதிகரிக்கலாம்
– குழந்தைகளை அதிகமாக திட்டி, அடித்து வளர்க்கும் பெற்றோர்
– குழந்தைகளிடம் எல்லாவற்றுக்கும் பணியும் பெற்றோர்
– உடன் பிறந்தவர்களை போட்டியாக விரோதமாக நினைப்பது (Sibling Rivalry)
– குழந்தையுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிடாத நிலை.
இவற்றில் மாற்றக்கூடிய காரணங்கள் இருந்தால் மாற்றலாம். இயற்கையான விலை குறைந்த ஊட்டச்சத்துக்களை தரலாம். தேவையானால் மருத்துவரை அணுகலாம்.

திடீரென்று அதிகப் பிடிவாதத்திற்கான சில காரணங்கள்
- அடுத்த குழந்தை பிறப்பு
- வீட்டில் ஒரு புதிய நபர் வந்து வாழ ஆரம்பிப்பது
- வீட்டில் ஏதாவது துயர சம்பவம்
- வீட்டை மாற்றுவது
- வீட்டு உதவியாளர்களை மாற்றுவது
- பள்ளியை மாற்றுவது
- நண்பர்களைப் பிரிவது
குழந்தைகள் பிடிவாதத்தை எப்படி எல்லாம் வெளிப்படுத்தலாம்?
- பெரிய குரல் எடுத்து அழுவது
- சமாதானம் ஆகாமல் ரொம்ப நேரம் அழுவது
- பொருள்களை விட்டெறிவது, துணிமணிகளை விட்டெறிவது, துணிகளை கிழிப்பது
- பேசத் தெரிந்தால் திட்டுவது, பெரிய குரலில் தகாத வார்த்தைகள் சொல்வது
- பக்கத்தில் இருப்பவர்களை அல்லது ஓடி வந்து பெற்றோரை அடிப்பது, கடிப்பது, கிள்ளுவது
- பொருட்களால் அடிப்பது, கீறி விடுவது
- இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு அழுவது, கத்துவது (உ-ம்) தரையில் – பாத்ரூமில்
- கடைகளில், தெருக்களில் விற்கும் பொருட்களைக் கேட்டு அங்கேயே பெரிதாக அழுவது, திட்டுவது, கீழே விழுந்து புரண்டு அழுவது
- யாரையும் கிட்டே நெருங்க விடாமல் தடுப்பது
- வீட்டில் உள்ள அல்லது பெரிய குழந்தையின் புத்தகங்களை, பேப்பரை, கிழிப்பது அவற்றில் கிறுக்குவது
இதெல்லாம் நிறைய பெற்றோர்கள் சிரமத்துடன் அனுபவித்து இருப்பார்கள்.
எப்படி சமாளிப்பது?
சில செய்திகளை மனதில் நிச்சயப்படுத்திக் கொண்டு செயலில் இறங்க வேண்டும்.
- எல்லா அடத்துக்கும் நாம் பணியவும் கூடாது. அதே சமயம் மொத்தமாக மறுப்பும் தெரிவிக்கக் கூடாது. குழந்தையை திசை திருப்புவது எளிது.
- ஒரு புதிய பொருளை பார்த்தால், குழந்தை பழைய பொருளை, தான் பிடிவாதம் பிடித்த பொருளை மிக எளிதில் மறந்துவிடும்.
- ஆர்ப்பாட்டமும் அலப்பறையும் தாங்கவில்லை என்று அல்லது கடைகளில் அவமானமாகிவிடும் என்று நினைத்து கேட்பதை வாங்கி கொடுத்தால் அது அவனுக்கு வெற்றி. மீண்டும் மீண்டும் இதே பிடிவாதம் தொடரும்.
- மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நம் கோபத்தை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- குழந்தை கத்தி அழும் போது, நாமும் பெரிய குரலில் திட்டுவதோ அறிவுரை தருவதோ கூடாது.
- சமயோசிதமாக பேசி அந்த சூழ்நிலையில் இருந்து குழந்தையை வெளியே கொண்டு வர வேண்டும்.
சில உதாரணங்கள்
குழந்தைகள் கேட்பதையெல்லாம் செய்வதைப் பெற்றோர்கள் நிறுத்தவேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் நாம் என்ன கேட்டாலும் கிடைக்கும் என்று குழந்தைகள் நினைத்துக்கொள்வார்கள், அதையே நம்பத் தொடங்கிவிடுவார்கள். வளர்ந்தபின்னரும் இதே எண்ணம் தொடரும். கேட்டதையெல்லாம் நாம் தரலாம், ஆனால் சமூகம் தராது, இல்லையா? இவ்வளவு ஏன், குழந்தையின் வகுப்பில் இருக்கும் பிற மாணவ மாணவியர்கூட அவனது/அவளது எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நடந்துகொள்ள மாட்டார்கள். இது குழந்தைக்குப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.
கடையில் அல்லது வீதியில் அழும் குழந்தை ஒரு விலை உயர்ந்த தேவையில்லாத பொம்மைக்காக அடம் பிடிக்கிறது என்றால், விலை குறைந்த ஆனால் குழந்தைக்கு உபயோகமான அழகான பொருளை வாங்கித் தரலாம்.
பள்ளிக்கூடப் பை கேட்டு அழும் குழந்தைக்கு அழகான அவனுக்கு பிடித்த விலங்குகள் படம் போட்ட வரையும் புத்தகம் வாங்கி தரலாம். அதற்கு அவனிடம் நைச்சியமாக பேச வேண்டும். சிறிது நேரம் முயன்றும் முடியவில்லை என்றால் அவனிடம் சமாதானம் பேசவோ, கெஞ்சவோ, கொஞ்சவோ கூடாது. நாமும் அழ ஆரம்பிக்கக் கூடாது. ‘சரி நீ மெதுவாக வா! நாங்க கிளம்பிகிறோம்’ என்று மெதுவாக வெளியேற ஆரம்பிக்க வேண்டும். எதுவும் நடக்காது என்ற உணர்வுடன், துணை இல்லை என்ற பயத்தில் எழுந்து பின்னால் வரும். இது சிறிது நேரம் ஒதுக்கி வைத்தல் (Time Out) அல்லது தனியாக வைத்தல் முறைதான். ஆனால் இதை கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
சாக்லேட் எடுத்து தரச் சொல்லி கிச்சனில் அலறும் குழந்தையை, ‘வாசலில் புது குருவி வந்து இருக்கு பார்’ என்று கூறி வெளியே வந்து காட்டினால், அந்தப் புது ஆசையில் (New Found Interest) பேய் அலறலும் நின்று விடும்.
ஒன்றுக்கு மாற்றாக மற்றொன்று என்பதை லஞ்சம் போல் மாற்றி விடக் கூடாது. குடும்பத்தினர் அனைவரும் ஒரே மாதிரி செயல்பட வேண்டும். அப்பா சாக்லேட் தர மாட்டேன் என்று சொல்ல, குழந்தை அலற, பாட்டி எடுத்து கொடுத்து விட்டால் அது தவறு. குழந்தையின் நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகள், எல்லைகள் வகுத்துக் கொள்ள வேண்டும். எல்லோரும் அதையே பின்பற்ற வேண்டும். சாப்பிடும் நேரம் தொலைக்காட்சி, தொலைபேசி கிடையாது என்றால் எல்லோருக்கும் அப்படியே. குழந்தை கேட்கும் சிலவற்றுக்கு மாற்றாக சிலவற்றை கூறலாம். இன்று சரியான நேரத்தில் வீட்டுப்பாடங்களை முடித்தால் அருகில் இருக்கும் பூங்காவில் சறுக்கி விளையாடலாம். ஒவ்வொரு நல்ல நடத்தைக்கும் ஒரு டோக்கன் அல்லது ஸ்டார் தருவது, பத்து டோக்கன் சேர்ந்தவுடன் அவனுக்கு பிடித்த உபயோகமான பரிசை தரலாம். 20 டோக்கன் சேர்ந்த உடன் அதிகச் செலவில்லாத ஒரு அரைநாள் சுற்றுலா செல்லலாம்.
ஒரு சில அணுகுமுறைகள் மட்டும் உதாரணமாக கொடுத்து இருக்கிறேன். அந்தந்த பெற்றோருக்கும் குழந்தைக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரிக்கு தகுந்தபடி நீங்கள் திட்டங்களை தீட்டிக் கொள்ளலாம்.
குழந்தையை அவனது கண்ணோட்டத்தில் கையாள வேண்டும். அடம்பிடித்தால் அவன் எதிரி இல்லை. குழந்தைக்கு எந்தவிதமான தண்டனையும் தரக்கூடாது, அடிப்பது, கிள்ளுவது, தலையில் குட்டுவது, கண்களை உருட்டி கோபத்தை காட்டுவது, ரூமில் வைத்து பூட்டுவது, நான் பேச மாட்டேன் என்று மிரட்டுவது போன்றவை கூடாது. இது குழந்தையை மனதளவில் பாதிக்கும்.
சொல்லிக்கொடுத்த ஒழுக்கத்தை ஒவ்வொரு முறை சரியாக செய்யும் போது அது சிறு செயலாக இருந்தாலும் (உ-ம் தரையில் கிடக்கும் விளையாட்டுப் பொருட்களை ஒழுங்குபடுத்துவது) மனதார பாராட்ட வேண்டும். கைகளைத் தட்டி, குழந்தையை அணைத்து, தலையைத் தடவி நமது அருகாமையில் உணர்த்த வேண்டும்.
ஒரு ஒழுக்கத்தை சரியாக கடைபிடிக்காவிட்டால் என்னென்ன பின் விளைவுகள் என்று புரிய வைக்க வேண்டும். (உ-ம்) சிதறிக் கிடக்கும் கலர் பென்சில்களில் முக்கியமான பச்சை, சிவப்பு போன்றவற்றை காணவில்லையானால், ‘நீ எப்படி உனக்கு பிடித்த பூ வரைய முடியும்?’ என்று சொல்லி புரிய வைக்க வேண்டும்.
ஒழுங்கு நடைமுறையை ஒரே விதத்தில் அறிவுறுத்த வேண்டும். ஒரு நாள் சாப்பிடும் போது செல்போன் கூடாது என்பது மறுநாள் செல் வைத்திருந்தால் அதை கவனிக்காமல் விட்டு விடுவது என்று மாறி மாறி செய்யக்கூடாது.
சின்ன பிடிவாதங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம். அடம் பிடிக்கும் குழந்தையின் எனர்ஜியையும், மனதையும் வேறு ஒரு உடல் சார்ந்த (நடனம், படம் வரைதல் போன்றவை) அல்லது உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் செயலில் ஈடுபடுத்தலாம்.
அடம் பிடிக்கும் குழந்தையுடன் நாம் மல்லு கட்டக் கூடாது. இது பவர் போட்டியல்ல.
இதை ஒரு 10c என்று சுருக்கமாகக் கூறிவிடுகிறேன். ஒவ்வொரு ‘C’ க்கும் நீங்கள் விரிவான விளக்கத்தையும், செயல்திட்டங்களையும் யோசியுங்கள். ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது!

அடம் பிடிக்கும் குழந்தையை சமாளிக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவ
- Calm – மிகவும் அமைதியாக நிதானமாக நடந்து கொள்வது
- Consistency– ஒரே விதமான, திடமான அணுகுமுறை
- Clear Boundaries – குழந்தையின் நடவடிக்கைகளுக்கு ஒரு எல்லை வகுத்துக் கொள்வது
- Choices – மாற்றி யோசி!! (உதாரணம்: சாக்லேட்டுக்கு பதில் ஆப்பிள்)
- Consequences – ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை புரிய வைத்தல்
- Consider – ஏன் அடம் பிடிக்கிறான் என்று அவனது கண்ணோட்டத்தில் பார்ப்பது.
- Compassion – குழந்தையை பரிவுடன் அணுகுங்கள். (உ-ம்) ஓடாதே என்று அதட்டுவதை விட மெதுவா போடா கண்ணா என்று சொல்வது.
- Counselling – நிறைய பேசுங்கள், பேச விடுங்கள்
- Comfort – அவனுக்கு அரவணைப்பாக இருந்து கொண்டு புரிய வையுங்கள்
- Celebrate – கொண்டாடுங்கள், நல்ல நடத்தையை உடனடியாக பாராட்டுங்கள்.
பெற்றோர்களும் அடம்பிடிக்காமல், வீட்டில் உள்ளவர்களும் அடம்பிடிக்காமல், கோபப்படாமல் இருந்து, குழந்தைக்கு நல்ல முன் உதாரணமாக இருக்கலாமல்லவா!
படைப்பாளர்

மரு. நா. கங்கா
நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.




