ஜான் போல, என்னைப் போல ஒரு சாதாரணமான மனிதர்களுக்கு இது மாதிரியான ஒரு பழம்பெரும் மாளிகையைக் கோடைக்காலத்திற்காக வாடகைக்கு எடுப்பது என்பது எல்லாம் அவ்வளவு சுலபமான காரியமில்லை. எப்போதாவது இப்படி அதிசயங்கள் நடப்பதுண்டு.
ஒரு காலனிய ஆட்சிக் காலத்து மாளிகை, பாராம்பரிய கட்டிடம், காதலர்களின் கனவு வசந்த மாளிகை, என் மொழியில் சொன்னால் இப்படிப்பட்ட ஒரு பேய் மாளிகை வாய்க்க எங்களுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இன்னும்கூட நான் ரொம்பப் பெருமையாகச் சொல்வேன், இது ஒரு மாதிரி அபூர்வமான இடம். ஆனால் ஏன் இவ்வளவு மலிவாக வாடகைக்குக் கிடைக்கிறது? ஏன் அதிக நாட்களாக யாரும் இங்கே குடியிருக்கவில்லை?
ஜான் என்னைப் பார்த்துச் சிரித்தார். திருமணப்பந்தத்தில் இந்த எதிர்ப்பார்ப்பு இயல்புதானே?
ஜான் ஒரு யதார்த்தவாதி. அமானுஷ்யங்களில் நம்பிக்கையற்றவர். கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களைக் கண்டு கோபம் கொள்பவர். கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களில் அவருக்கு நம்பிக்கையில்லை.
ஜான் ஒரு மருத்துவராக இருப்பதாலேயே நான் வேகமாக குணமடையாமல் இருக்கலாம். (இதை நான் ஜீவனுள்ள எதனிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது) அதனால்தான் உயிரற்ற இந்தக் காகிதத்திடம் இதைச் சொல்கிறேன். இதைச் சொல்வதால் என் மனம் நிம்மதியடைகிறது. நான் நோயாளி என்பதை அவர் நம்பாத பட்சத்தில் வேறு என்ன செய்ய இயலும்?
ஓர் உயர்தர மருத்துவர், போதாக்குறைக்கு என் கணவர் வேறு, எங்கள் உறவினர்களிடமும், நண்பர்களிடமும், ‘எனக்கு ஒன்றுமில்லை, இது ஒரு சாராதண நரம்புத்தளர்ச்சியினால் ஏற்படும் சிறிய அளவிலான ஹிஸ்டெரிக்கல் கண்டிஷன்தான்’ எனச் சொல்லும் போது நான் என்னதான் செய்ய முடியும்? என் சகோதரனும் மருத்துவன்தான். அவனும் இதையேத்தான் சொல்கிறான்.
என்னது அது? பாஸ்பேட்டா, பாஸ்பைட்டா? ஏதோ ஒன்று… அதையும் சில டானிக்குகளையும் எடுத்துக்கொள்வதாலும், சிறிய உடற்பயிற்சிகள் செய்வதாலும், பயணங்கள் செய்வதாலும் என்னால் குணமடைந்துவிட முடியும் என்று சொல்லும் அவர்கள் ஏனோ, நான் என்னுடைய வேலையைச் செய்ய மட்டும் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் முடிவில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை.
இதற்கு மாற்றாக சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் நான் என் வேலையை மேற்கொள்ளும் போதுதான் நான் சரியாக முடியும் என எனக்குத் தோன்றுகிறது.
சிலசமயம் அவர்களுக்குத் தெரியாமல் எழுதி இருக்கிறேன். ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் ஒளித்துவைத்து எழுதும் போது அவர்கள் பார்த்துவிட்டால் என்னாகுமோ என்கிற எண்ணமே பெரும் மன உளைச்சலாகி என்னை எழுத விடாமல் சோர்வடையச் செய்கிறது.
எனக்கு எண்ணமோ இப்படித் தனிமையில் இல்லாமல் சமூகத்தோடு கலந்து பழகி, என் விருப்பத்திற்கு நான் நிறைய எழுதும் போதுதான் என் நிலைமை நல்லபடி மாறும் எனத் தோன்றுகிறது. ஆனால் ஜானோ, ‘நீ உன் நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பார்’ எனச் சொல்லும் போது எனக்கு அது வருத்தமளிக்கிறது. அதனால் நான் அதைப் பற்றிப் பேசுவதைவிட்டு இப்போது இந்த வீட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டேன்.
அழகான வீடு. கிராமத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில், முக்கியச் சாலையிலிருந்து மிக உள்ளே இருக்கிறது. புற்புதர்களுக்கிடையில் அமைக்கப்பட்டிருக்கும் பாதைகளும், பெரும் சுவர்களுக்கிடையில் பூட்டப்பட்டிருக்கும் கதவுகளும், தோட்டக்காரர்களுக்கென அமைந்திருக்கும் சிறுகுடில்களும் எனக்கு ஆங்கிலேயர்களின் மாளிகைகளை ஞாபகப்படுத்துகின்றன.
மிகவும் அருமையான ஒரு தோட்டம். பெரிதாக நன்கு செழித்து வளர்ந்திருக்கும் செடிகளுக்கிடையில் நன்கு வடிவமைக்கப்பட்ட பாதைகளும், திராட்சைக்கொடிகளால் மூடப்பட்ட வளைவுகளும் அதன் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளுமாக நான் இப்படி ஒரு தோட்டத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை!
கண்ணாடியால் செய்த க்ரீன் ஹவுஸ் மட்டும் சற்றே சேதமடைந்திருக்கிறது.
கண்டிப்பாகச் சொத்துரிமைக்காக வாரிசுகளுக்கிடையில் ஏற்பட்ட சட்டப்பிரச்னையால்தான் இது இத்தனை காலம் சீந்துவாரின்றி இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
இந்த உண்மை என் அமானுஷ்ய எண்ணங்களைப் பற்றிய சிந்தனையை உடைப்பதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது. ஆனால் எனக்கு இங்கு என்னவோ வித்தியாசமாக இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
ஒரு நாள் அந்திமயங்கும் நேரத்தில் ஜானிடமும் இதுபற்றி எனக்குத் தோன்றுவதைத் தெரிவித்த போது, ‘அது வெறும் காற்றசைவு தான்’ என்று சொல்லி ஜன்னலை மூடிவிட்டார்.
ஜான் மீது சில நேரம் எனக்கு அர்த்தமற்ற கோபம் உண்டாகிறது. நான் அதிகம் உணர்ச்சிவசப்படும் ஆளில்லை, நரம்புத்தளர்ச்சிப் பிரச்னைதான் அதற்குக் காரணமெனத் தோன்றுகிறது.
ஆனால் நான் இதுபோல் யோசிப்பது என் சுயக்கட்டுப்பாட்டை உடைத்துவிடும் என்று ஜான் சொல்வதால் அவர் முன் அதனை மனவலியுடன் கட்டுப்படுத்திக்கொள்ளும் போது அது எனக்குச் சோர்வைத் தருகிறது.
‘எனக்கு நம் அறையைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. சுற்றி ரோஜாச் செடிகள் அமைந்திருக்கும் பழங்காலத்துப் பாணியில் அழகிய திரைச்சீலைகளுடன் இருக்கும் கீழ்தளத்தில் உள்ள வராண்டாவை ஒட்டிய அறை வேண்டும்’ என்றேன். ஜான் அதனைக் காதுகொடுத்துக் கேட்கக்கூட இல்லை.
‘இரண்டு படுக்கைகள் போடும் அளவிற்குப் அது பெரிய அறை இல்லை. ஜன்னலும் ஒன்றுதான் இருக்கிறது. பக்கத்தில் இருக்கலாமென்றால் பக்கத்திலும் அறைகள் இல்லை. எனவே அந்த அறை வேண்டாம்’ என்கிறார் ஜான்.
ஜான் என்னை அன்பாகவும் கனிவாகவும் கவனித்துக்கொள்கிறார்தான். ஆனால் எப்போதும் அவர் சொல்படிதான் நான் நடக்க வேண்டும் என்கிறார்.
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நான் என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என அவரிடம் ஓர் அட்டவணை இருக்கிறது. அவர் என்னை அத்தனை பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளும்போது அவர் வார்த்தைகளை நான் மதிக்காமல் போனால் நான் நன்றிகெட்டவளாகிவிடுவேன்.
‘நாம் இங்கே வந்ததே முழுக்க முழுக்க உனக்காகத்தான். நல்ல காற்றோட்டமான அறையில் நீ ஓய்வெடுக்க வேண்டுமென்றுதான். உடற்பயிற்சி உன் சக்தியைப் பொறுத்தது. உன் உணவு உன் பசியைப் பொறுத்தது. ஆனால் நல்ல காற்றை நீ எப்போதும் சுவாசிக்க வேண்டும். அதனால்தான் இந்த அறையைத் தேர்ந்தெடுத்தேன்’ என்கிறார்.
சுற்றிலும் ஜன்னல்களுடன் அதிக காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்த பெரிய அறை அது. இது முன்பு குழந்தைகளுக்கான அறையாகவும் விளையாட்டுக்கூடமாகவும் இருந்திருக்கலாம். உடற்பயிற்சிக்களமாகக்கூட இருந்திருக்கலாம். குழந்தைகளுக்காக அந்த ஜன்னல்களில் கம்பிகள் போட்டிருக்கலாம். சுவர்களில் வளையங்களும் இருக்கின்றன.
அந்த அறையின் வண்ணமும் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் காகிதத்தையும் (வால் பேப்பர்) பார்த்தால், அது ஆண்பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
அந்தக் காகிதத்தில் நிறைய கிறுக்கல்களும் என் கட்டிலின் தலைப்பகுதியைச் சுற்றியுள்ள காகிதத்தில் நிறைய கிழிசல்களும் இருக்கின்றன. என் அறையின் மறுபக்கத்தில் கீழ்ப்பகுதியிலும் நிறைய கிழிசல்கள் உள்ளன. இது போன்றதொரு மோசமான சுவர் காகிதத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை.
அந்தச் சுவர் காகிதம் பரவலாகப் பரந்து விரிந்த, ஆடம்பரமான வடிவமைப்புகளில் ஒன்று. கலைக்கான எல்லா விதிகளையும் மீறிய ஒன்று. அதைக் கண்களால் தொடர்ந்து பார்த்தால் குழப்பம் தரும் அளவுக்கு மந்தமாகவும், அதே நேரத்தில் எப்போதும் எரிச்சலூட்டும் படியும் இருந்ததோடு அதைப் பற்றி ஆராய வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. அந்தத் தளர்ந்த, உறுதியற்ற வளைவுகளைச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்தால், அவை திடீரென்று மறைந்து போய்விடுகின்றன. விதவிதமான கோணங்களில் பாய்ந்து, இதுவரை கேள்விப்படாத முரண்பாடுகளில் தங்களையே சிதைத்து விடுகின்றன.
அந்த நிறம் வெறுப்பூட்டுவதாகவும், கிட்டத்தட்ட அருவருப்பைத் தருவது போலவும் உள்ளது. சூரிய ஒளி பட்டு பட்டு, புகைப்படிந்ததைப் போல மக்கலான மஞ்சள் நிறத்தில் விசித்திரமாக இருந்தது அந்தச் சுவர் காகிதத்தின் நிறம்.
சில இடங்களில் அது மந்தமானதாக இருந்தாலும் சில இடங்களில் கண்கூசும் ஆரஞ்சு நிறமாகவும் தெரிகிறது. மற்ற சில இடங்களில் அது நலிந்த ஒரு பாசி நிறத்தில் அதாவது ஒரு கந்தக நிறத்தின் சாயலிலும் இருந்தது.
குழந்தைகள் அதை வெறுத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த அறையிலேயே வாழவேண்டி இருந்தால் நானும் இந்த அறையை முற்றிலுமாக வெறுத்துவிடுவேன்.
ஜான் வருகிறார். இதை நான் எடுத்து வைக்க வேண்டும். நான் எழுதுவதைப் பார்த்தால் அவர் கோபப்படுவார்.
நாங்கள் இங்கே இரண்டு வாரங்களாக இருக்கிறோம். ஆனால் வந்த முதல் நாளைத் தவிர இதுவரை எழுத வேண்டும் என்று தோன்றவே இல்லை.
இந்த அருவருப்பான அறையில் நான் இப்போது ஜன்னலுக்கருகில் அமர்ந்திருக்கிறேன். நான் விரும்பியதை எழுத இப்போது எந்த தடையுமில்லை. ஆனால் எனக்குள்ளே இருக்கும் என் பலவீனம்தான் எனக்குத் தடையாக இருக்கிறது.
ஜான் எந்நேரமும் வெளியே புறப்பட்டுப் போய்விடுகிறார். அவரின் நோயாளிகளுக்கு மிகவும் மோசமான நிலை என்றால் இரவு நேரத்தில்கூட வெளியே தங்கிவிடுகிறார். நல்ல வேளை என் நிலைமை அவ்வளவு மோசம் அடையவில்லை.
ஆனாலும் அந்த நரம்புத்தளர்ச்சி என்னைப் பாடாய்படுத்துகிறது. ஜானுக்குத் தெரியாது நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று. அப்படியே தெரிந்தாலும், நான் இவ்வளவு வருந்த வேண்டிய அவசியமேயில்லை என்பார். அந்தத் திருப்தி அவருக்குப் போதும்.
இந்த நரம்புத்தளர்ச்சியினால் என்னால் இயல்பான காரியங்களைக்கூடச் செய்ய முடியவில்லை.
நான் ஜானை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அவருக்குச் சிறந்த அரவணைப்பைத் தரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழ். நான் அவருக்குப் பாரமாகிவிட்டேன்.
உடை மாற்றுவது, என் வேலைகளை நானே பார்த்துக்கொள்வது, விருந்தினரை வரவேற்பது போன்ற சிறுசிறு வேலைகளைக்கூட என்னால் செய்ய இயலவில்லை என்பதைச் சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள்.
என்னுடைய அதிர்ஷ்டம் என் அருமையான குழந்தையை மேரி நன்றாகப் பார்த்துக்கொள்கிறாள் என்பதுதான். ஆனாலும் என் குழந்தையுடன் நான் இருக்க முடியவில்லை என்பது என்னை மேலும் தளர்த்துகிறது.
ஜான் இப்படி எதற்கும் எப்போதும் பதற்றப்படுவதில்லை. அந்தச் சுவர் காகிதத்தைப் பற்றி நான் சொன்னதற்குக்கூட அவர் சிரிக்கத்தான் செய்தார்.
முதலில் அந்த அறையின் சுவர் காகிதத்தை மாற்றத்தான் நினைத்தார். ஆனால் ‘அதை மாற்றினால்தான் குணமாவேன் என நான் நம்புவது தவறு’ என்றும் ‘நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் அதிகம் கற்பனைகளுக்கு இடம் கொடுப்பதைவிட மோசமானது எதுவும் இல்லை’ என்றும் கூறி அவர் அதை மாற்றவில்லை.
‘சுவர் காகிதத்தை மாற்றியதும், அந்தக் கனமான படுக்கை, அடுத்தது, கம்பி ஜன்னல்கள், பிறகு படிக்கட்டின் மேலுள்ள கதவு இப்படி நீ தொடர்ந்து ஏதாவது குறைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பாய், என்றார்.
“இந்த இடம் உனக்கு நல்லாவே இருக்கு, ஆனால் மூன்று மாதங்கள் தங்கப்போகும் வாடகை வீட்டை முழுவதும் புதுப்பிக்க நான் தயாராக இல்லை” என்றார்.
“அப்படியானால் கீழே உள்ள அழகான அறைகளில் ஒன்றுக்குச் செல்வோம்” என்றேன்.
அவர் என்னைத் தழுவி, “என் வாத்துக்குட்டி!” என்று செல்லமாக அழைத்து, ‘நீ விரும்பினால் கீழ்தளத்திற்கே சென்று விடுவோம். கட்டாயம் உனக்கு விருப்பமென்றால் அந்த அறைக்கு வெள்ளைக்கூட அடிப்போம்’ என்றார்.
ஆனால் படுக்கை மற்றும் ஜன்னல்கள் பற்றி அவர் சொல்வது சரிதான்.
எல்லாரும் விரும்பக் கூடிய அளவு இது காற்றோட்டமும் வசதியும் உள்ள ஒரு பெரிய அறை. என் சின்ன ஆசைக்காக அவரைத் தொந்தரவு செய்வதுதான் நான் செய்யக்கூடிய பெரிய முட்டாள்தனமாக இருக்கும்.
அந்த அருவருப்பான சுவர் காகிதத்தைத் தவிர, இந்தப் பெரிய அறையை இப்போதெல்லாம் நான் கொஞ்சம் விரும்பத் தொடங்கியிருக்கிறேன்.
ஒரு ஜன்னல் வழியாக நான் தோட்டத்தைக் காண்கிறேன். சுற்றிலும் மரஞ்செடிகளால் நிழல் தரும் வகையில் அமைந்த மரக்குடில்கள், பழமையான வகையில் செதுக்கப்பட்ட புதர்கள், நிறைந்த மலர்ச்செடிகள், வளைந்த மரக்கிளைகளைக் காண்கிறேன்.
மற்றொரு ஜன்னல் வழியாக, அழகிய வளைகுடாவையும், இந்த மாளிகையினருக்குச் சொந்தமான ஒரு சிறிய தனியார் துறை அலுவலகத்தையும் காண்கிறேன். வீட்டிலிருந்து அங்குச் செல்ல ஓர் அழகிய நிழல் பாதை இருக்கிறது.
அந்தப் பாதைகளிலும் மரக்குடில்களிலும் யாரோ நடப்பது போல நான் எப்போதும் கற்பனை செய்கிறேன். ஆனால் ஜான் என்னைக் ‘கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதே’ என்று எச்சரித்துள்ளார்.
‘என்னுடைய கற்பனா சக்தியும் கதைகள் உருவாக்கும் பழக்கமும் என்னுடைய நரம்புத் தளர்ச்சியினால் மேலும் தீவிரமான கற்பனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அது நல்லதல்ல. அதை என் மனவலிமையாலும் நல்ல அறிவாலும் நான் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று கூறுகிறார். அதனால் நான் முயற்சிக்கிறேன்.
ஓரளவு எழுதும் அளவுக்காவது நான் கொஞ்சம் தேறியிருந்தால், மனஅழுத்தம் குறைந்து சற்று மனநிம்மதி கிடைத்திருக்கும் என்று சில சமயங்களில் தோன்றுகிறது.
ஆனால் எழுத முயன்றாலே மிகவும் சோர்ந்துபோகிறேன். என் எழுத்துப் பணிக்கு ஆலோசனையும் துணையுமில்லாமல் இருப்பது மிகவும் மனச்சோர்வை கொடுக்கிறது.
நான் நன்றாக ஆன பிறகு, ஜான் சொல்வது போல, ஹென்றி மாமாவையும் ஜூலியாவையும் நீண்ட காலம் வரவழைப்போம்.
ஆனால் இப்போது அப்படிப்பட்ட உற்சாகமானவர்களை அருகில் வைத்துக்கொள்வது என் தலையணைக்குள் பட்டாசுகளை வைத்துக்கொள்வதற்குச் சமம் என்று அவர் கூறுகிறார். நான் விரைவில் நலம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் அதைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லதுதான்.
இந்தச் சுவர் காகிதம் தன் தீய தாக்கத்தைத் தானே அறிந்திருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது.
அதில் மீண்டும் மீண்டும் தோன்றும் ஒரு பகுதி இருக்கிறது, அதன் வடிவம் உடைந்த கழுத்தைப் போலச் சாய்ந்து கிடக்கிறது. இரண்டு உருண்டையான கண்கள் தலைகீழாக என்னை நோக்கி இமைக்காமல் உற்றுப் பார்க்கின்றன.
அது என்னை அவ்வாறு தொடர்ந்து உற்றுப் பார்ப்பது போல் எனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. அந்தக் கண்கள் மேலே, கீழே, பக்கவாட்டாக என எல்லாத்திசைகளிலும் ஊர்ந்து செல்கின்றன. அந்த அர்த்தமற்ற, இமைக்காத கண்கள் எங்கும் இருக்கின்றன. ஓர் இடத்தில் இரண்டு காகிதங்களும் ஒத்துப்போகாததால் அந்தக் கண்கள் ஒன்று கோட்டின் மேலே மற்றொன்று கீழே எனச் செல்கின்றன.
உயிரற்ற பொருளில் இவ்வளவு வெளிப்பாட்டை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. அவற்றுக்கு எவ்வளவு வெளிப்பாடு உண்டு என்பதை நாமெல்லாம் அறிவோம். நான் சிறுமியாக இருந்தபோது, விழித்தபடியே படுத்திருந்து, வெறும் சுவர்களிலும் சாதாரணப் பொருட்களிலும், பொம்மைகளிலும் பல குழந்தைகள் கண்டறிய முடியாத அளவுக்கு, மகிழ்ச்சியையும் பயத்தையும் கண்டிருக்கிறேன்.
எங்கள் பெரிய பழைய அலமாரியின் கைப்பிடிகள் எவ்வளவு அன்பாகக் கண் சிமிட்டியதென எனக்கு நினைவிருக்கிறது. வீட்டில் இருந்த ஒரு நாற்காலி எப்போதும் வலுவான ஓரு நண்பனைப் போல எனக்குத் தோன்றி இருக்கிறது. மற்ற பொருட்கள் எனக்குப் பயங்கரமான பயத்தை உருவாக்கும் போது, அந்த நாற்காலியில் பாய்ந்து அமர்ந்தால் நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்திருக்கிறேன்.
இந்த அறையில் உள்ள பொருட்கள் ஒன்றோடு மற்றொன்று பொருந்தாமல் இருப்பதைத் தவிர வேறு பெரிய குறை இல்லை. நாங்கள் அவற்றை எல்லாம் கீழே இருந்து கொண்டு வர வேண்டியிருந்தது. இது முன்பு குழந்தைகள் விளையாடும் அறையாகப் பயன்படுத்தப்பட்டபோது, நர்சரி பொருட்களை வெளியே எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குக் காரணம் இருக்கிறது. குழந்தைகள் இங்கே செய்த அட்டூழியங்களை நான் இதுவரை பார்த்ததில்லை.
நான் முன்பு சொன்னதுபோல், சுவர்க் காகிதம் சில இடங்களில் கிழிக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு சகோதரனைப் போல ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது. அதைக் கிழித்தவர்கள் வெறுப்பும் பொறுமையும் கொண்டிருந்திருக்க வேண்டும்.
தரை முழுவதும் ஆங்காங்கே உடைந்து, பிளந்து கிடக்கிறது. சுவற்றுப் பிளாஸ்டர் சில இடங்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அறையில் நாங்கள் கண்ட ஒரே பெரிய கனமான படுக்கையைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை என்று தோன்றுகிறது.
ஆனால் எனக்கு அந்தச் சுவர்க் காகிதத்தைத் தவிர மற்றப் பொருட்களைப் பற்றிப் பெரிதாகக் கவலை இல்லை.
இப்போது ஜானின் சகோதரி வருகிறாள். அவள் மிகவும் நல்ல பெண், என்னைக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறாள். அவள் நான் எழுதிக்கொண்டிருப்பதைக் கண்டறியக் கூடாது.
வீட்டைக் கவனமாகப் பார்த்துகொள்வதற்கென்றே படைக்கப்பட்ட ஒரு ஜீவனைப் போல அத்தனை நேர்த்தியாக வீட்டைப் பார்த்துக்கொள்கிறாள். அதைத்தவிர வேறு விஷயங்களில் அவளுக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லை. நான் நோய்வாய்ப்படுவதற்குக் காரணம் எழுதுவதுதான் என்று அவள் உண்மையாகவே நம்புகிறாள் என்று தோன்றுகிறது.
அதனால் அவள் வெளியே போனால்தான் என்னால் எழுத முடியும். இந்த ஜன்னல் அருகில் உட்கார்ந்து எழுதினால் அவள் தூரத்தில் இருந்து வரும்போதே பார்த்துவிடலாம்.
ஒரு ஜன்னல் சாலையைப் பார்த்தபடி இருக்கிறது. அது ஓர் அழகான நிழலான வளைந்த சாலை. இன்னொரு ஜன்னல் கிராமத்தை நோக்கி இருக்கிறது. அந்தக் கிராமம் மிகவும் அழகானது. பெரிய இலுப்பை மரங்களும் மென்மையான பசும்புல் மேடுகளும் அங்கே நிறைந்திருக்கின்றன.
இந்தச் சுவர்க் காகிதத்தில் அந்தக் கண்கள் அல்லாமல் வேறொரு நிறத்தில் ஒரு துணை வடிவம் இருக்கிறது. அது மிகவும் எரிச்சலூட்டுகிறது, ஏனெனில் அது சில குறிப்பிட்ட வெளிச்சத்தில் மட்டுமே தெரிகிறது, அதுகூடச் சரியாகத் தெரிவதில்லை.
ஆனால் அது பளிச்சென்ற இடங்களிலும், சூரிய ஒளி சரியாக விழும் இடங்களிலும் அந்த வித்தியாசமான வெளிப்புற வடிவத்தின் பின்னால் ஒளிந்து திரியும் ஒரு விசித்திரமான, எரிச்சலூட்டும், உருவமற்ற ஓர் உருவத்தை என்னால் பார்க்க முடிகிறது.
ஆ… ஜானின் சகோதரி படிகளில் ஏறுகிறாள்.
சரி, ஜூலை நான்காம் தேதி விழா முடிந்துவிட்டது. எல்லோரும் போய்விட்டார்கள். நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்.
உறவுகளைச் சந்தித்தால் எனக்கு நன்றாக இருக்கும் என்று ஜான் நினைத்தார். அதனால் என் அம்மாவையும் நெல்லியையும் குழந்தைகளையும் ஒரு வாரம் இங்கே வரச் செய்தோம்.
நிச்சயமாக நான் ஒரு வேலையும் செய்யவில்லை. அப்போது எல்லாவற்றையும் ஜென்னிதான் பார்த்துக்கொண்டாள். ஆனால் அதுவும் என்னைச் சோர்வடையச் செய்தது.
நான் விரைவாகக் குணமடையவில்லை என்றால், இந்த வருடம் இலையுதிர் காலத்தில் என்னை வெயர் மிட்செல் அவர்களிடம் அனுப்பிவிடுவேன் என்று ஜான் சொல்கிறார்.
ஆனால் நான் அங்கே போக விரும்பவில்லை. என் ஒரு தோழி ஒருமுறை அவரிடம் சிகிச்சைப் பெற்றிருந்தாள். அவர் ஜான், அப்புறம் என் அண்ணனைப் போலவே அதிகம் சொல்வதென்றால் அவர்களைவிட இன்னும் கடுமையானவர் என்று அவள் சொன்னாள். அத்துடன், அத்தனை தூரம் பயணம் செய்வதும் பெரிய சிரமம்.
இப்போதைக்கு எனக்கு எதையும் செய்யப் பிடிக்கவில்லை. மிகவும் எரிச்சலுடையவளாகவும் எதற்கெடுத்தாலும் புலம்புகிறவளாகவும் நான் மாறிவிட்டேன். எப்போது பார்த்தாலும் காரண காரியமில்லாமல் அழுகிறேன். பெரும்பாலும் அழுதுகொண்டே இருக்கிறேன்.
ஆனால் ஜான் இருக்கும்போதோ அல்லது வேறு யாராவது இருக்கும்போதோ நான் அழுவதில்லை. நான் தனியாக இருக்கும்போது மட்டும்தான் அழுகிறேன். ஆனால் இப்போது நான் அதிக நேரம் தனியாகவே இருக்கிறேன்.
ஜான் பல நேரங்களில் மோசமான நிலையிலுள்ள நோயாளிகளைப் பார்க்க நகரத்திற்குச் சென்று விடுகிறார்.
ஜென்னி நல்லவள். நான் விரும்பும் போது என்னைத் தனியாக விட்டுவிடுகிறாள். அதனால் சில நேரம் நான் தோட்டத்தில் சிறிது நடக்கிறேன், அல்லது அந்த அழகான பாதையில் கீழத்தளத்திற்குச் சென்று வருகிறேன். ரோஜாக்கள் இருக்கும் முன்புற வராந்தாவில் உட்காருகிறேன், அதுக்கும் மேல என்ன செய்வதெனப் புரியாமல் இந்த அறையில் நிறைய நேரம் படுத்துக் கொண்டிருப்பேன்.

அந்தச் சுவர்க் காகிதத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் இருந்தாலும், இந்த அறையை நான் மெதுவாக மிகவும் விரும்பத் தொடங்கியிருக்கிறேன். அதற்கு அந்தக் காகிதம்தான் காரணமாக இருக்கலாம். என் மனதில் அந்தக் காகிதத்தைப் பற்றிய யோசனையே எந்நேரமும் ஓடுகிறது.
இங்கே இந்தப் பெரிய அசையாத படுக்கையில் நான் படுத்துக் கிடக்கிறேன். தரையில் ஆணிவைத்து அடித்தது மாதிரி தோன்றுகிறது. படுத்துக்கொண்டே அசையாமல் அந்த வடிவத்தை மணி கணக்கில் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். ஓர் உடற்பயிற்சியைப் போல இதை நிதமும் செய்கிறேன்.
ஒவ்வொரு முறையும் கீழே இருக்கும் அந்த மூலையில் இன்னும் எவராலும் தொடப்படாத அந்த இடத்தில் இருந்து தொடங்கி, அந்த அர்த்தமில்லாத வடிவத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆயிரம் முறையாவது முடிவு செய்து, அதைத் தொடர்ந்து கவனித்திருப்பேன்.
எனக்கு வடிவமைப்பின் (பேட்டர்ன்) கொள்கைகள் பற்றி கொஞ்சம் தெரியும். ஆனால் இந்தக் காகிதம் மீள்வடிவம், சமச்சீர் அல்லது நான் கேள்விப்பட்ட வேறு எந்த விதி அடிப்படையிலும் அமைக்கப்படவில்லை என்று எனக்குத் தெரியும்.
அது அகலப்பட்டை கோடுகளால் மட்டும் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது, அதைத் தாண்டி ஒன்றும் இல்லை.
ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் ஒவ்வோர் அகலப்பட்டைக் கோடுகளும் தனித்தனியாக நிற்பதுபோலத் தெரிகிறது. அந்தப் பெருத்த வளைவுகளும் அலங்காரங்களும் போதையில் தடுமாறும் கீழ்த்தரமான ரோமானிய பாணியைப்போல, தனித்தனி தூண்களாக மேலே கீழே என அலைபாய்கின்றன.
ஆனால் மற்றொரு கோணத்தில் பார்த்தால் அவை குறுக்குமறுக்காக ஒன்றோடு மற்றொன்று இணைகின்றன. அந்தப் பரந்து விரியும் வடிவங்கள் பெரிய சாய்வு அலைகளாக ஓடிக்கொண்டே இருக்கும். முழு வேகத்தில் விரைந்து செல்லும் கடல் பாசிகள் கூட்டம் போல ஒரு பயங்கரமான காட்சி.
முழு வடிவமும் கிடைமட்டமாகவும் செல்கிறது. குறைந்தபட்சம் அப்படித் தோன்றுகிறது. அந்தத் திசையில் அது எப்படிச் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் நான் சோர்ந்து போகிறேன்.
அவர்கள் ஒரு கிடைமட்ட அகலப்பட்டையை ஓர் அலங்கார வரியாகப் பயன்படுத்தியுள்ளனர். அது குழப்பத்தை மேலும் அதிகமாக்குகிறது.
அறையின் ஒரு முனையில் அது கிட்டத்தட்ட குலையாமல் இருக்கிறது. அங்கு குறுக்கே வரும் ஒளி மங்கும் போது, மாலை சூரியன் நேராக அதன்மேல் விழும்போது, ஒரு மையத்தைச் சுற்றி அந்த முடிவில்லா விநோத வடிவங்கள் உருவாகி, அதிலிருந்து சமமான கவனச்சிதறலுடன் திடீரெனப் பாய்ந்து செல்வது போல எனக்குத் தோன்றுகிறது.
அதைப் பின்தொடர்ந்து பார்ப்பதே எனக்குச் சோர்வை ஏற்படுத்துகிறது. நான் சிறிது தூங்கப் போகலாம் என்று நினைக்கிறேன்.
நான் ஏன் இதை எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. எழுத முடியும் போலவும் இல்லை.
மேலும் ஜான் இதை முட்டாள்தனம் என்று நினைப்பார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் என்ன உணர்கிறேன், என்ன நினைக்கிறேன் என்பதைக் கொஞ்சமாவது சொல்ல வேண்டும். அது ஒரு பெரிய நிம்மதி. ஆனால் இப்போது எழுதுவதற்காக எடுக்கும் முயற்சி, அந்த நிம்மதியைவிடக் கஷ்டமாக இருக்கிறது.
இப்போது நான் பெரும்பாலும் மிகவும் சோம்பலாக உணர்கிறேன், நிறைய நேரம் படுத்துக்கொண்டே இருக்கிறேன்.
ஜான் சொல்வது என்னவென்றால் நான் என் சக்தியை இழக்கக்கூடாது. அதனால் அவர் என்னை மீன் எண்ணெய், பல வகை டானிக்குகள், அதோடு இறைச்சி போன்றவற்றையும் சாப்பிட வைக்கிறார்.
அன்பான ஜான் என்னை மிகவும் நேசிக்கிறார், நான் நோயாளியாக இருப்பதை அவர் விரும்பவில்லை.
நான் ஒரு நாள் அவருடன் உண்மையாகவும், அமைதியாகவும் பேச முயற்சி செய்தேன். என் நெருங்கிய சொந்தங்களான ஹென்றி மற்றும் ஜூலியாவைப் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று அவரிடம் சொல்ல முயன்றேன்.
ஆனால் அவர், ‘அங்குச் செல்லும் அளவுக்கெல்லாம் என் உடல்நிலை தேறவில்லை எனவும் அங்குச் சென்ற பிறகு ஏதாவது நேர்ந்தால் அதைச் சமாளிக்க முடியாது’ எனவும் சொன்னார்.
அதற்குப்பிறகு என்னால் என்னுடையத் தேவையை அவரிடம் விளக்க முடியவில்லை. ஏனெனில் நான் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே அழத்தொடங்கிவிட்டேன்.
நேர்மறையாகச் சிந்திப்பதே எனக்கு இப்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இது எல்லாம் என் நரம்புத்தளர்ச்சியால்தான் என்று நினைக்கிறேன்.
அன்பான ஜான் என்னைத் தனது கைகளில் தூக்கி, மேலே உள்ள அறைக்குக் கொண்டு சென்று அங்குள்ள படுக்கையில் படுக்கவைத்தார். பின்னர் என்னருகில் உட்கார்ந்து, என் மூளை சோர்வடையும் வரை என்னிடம் ஆறுதலாகப் பேசிக்கொண்டிருந்தார்.
‘நான் அவருடைய அன்புக்குரியவள் என்றும் அவருக்கு ஆறுதல் அளிப்பவள் என்றும், அவர் மனம் முழுக்க நிறைந்திருப்பது எல்லாம் நான்தான் என்றும் எனவே அவருக்காக நான் என்னை நல்லபடியாகக் கவனித்துக் கொண்டு நலமாக இருக்க வேண்டும்’ என்று ஜான் சொன்னார்.
‘இந்த நிலைமையிலிருந்து என்னை வெளியே கொண்டு வர யாராலும் முடியாது, நான் மட்டுமே என் மனவலிமையையும் சுயக்கட்டுப்பாட்டையும் பயன்படுத்த வேண்டும் என்றும், எந்த முட்டாள்தனமான கற்பனைகளுக்கும் நான் ஆளாகி விடக்கூடாது’ என்றும் அவர் கூறுகிறார்.
ஓர் ஆறுதல் என்னவென்றால், குழந்தை நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்பதுதான். இந்தப் பயங்கரமான சுவர்க் காகிதம் உள்ள குழந்தைகள் அறையில் அது இருக்க வேண்டியதில்லை.
நாங்கள் இந்த அறையைப் பயன்படுத்தவில்லை என்றால், ஆசீர்வதிக்கப்பட்ட அந்தக் குழந்தை இங்கே இருக்க வேண்டியிருந்திருக்கும். என்ன ஓர் அதிர்ஷ்டம்! என் குழந்தை போன்ற எளிதில் பாதிக்கப்படும் சின்ன பெண் இப்படிப்பட்ட அறையில் வாழ வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.
இதற்கு முன்பு நான் இதைப் பற்றி நினைத்ததே இல்லை. ஆனால் இப்போது நினைத்தால், ஜான் என்னை இங்கே வைத்திருப்பது நல்லதுதான். ஒரு குழந்தையைவிட என்னால் இதை எளிதாக தாங்கிக்கொள்ள முடியும்.
நான் இதைப் பற்றி அவர்களிடம் இனி பேசப்போவதில்லை. நான் சுதாரித்துக்கொண்டுவிட்டேன். ஆனால் அதையெல்லாம் நான் அமைதியாகக் கவனித்துக்கொண்டே இருக்கிறேன்.
அந்தச் சுவர்க் காகிதத்தில் என்னால் மட்டுமே உணர முடியும் சில விஷயங்கள் இருக்கின்றன. மற்றவர்களுக்கு அது ஒருபோதும் தெரியாது. அந்த வெளிப்புற வடிவத்தின் அதற்குப் பின்னால் இருக்கும் மங்கலான உருவங்கள் ஒவ்வொரு நாளும் தெளிவாகிக் கொண்டே இருக்கின்றன.
அது எப்போதும் ஒரே உருவம்தான், ஆனால் பல முறை தோன்றுகிறது. அது அந்த வடிவத்தின் பின்னால் குனிந்து ஊர்ந்து செல்கிற ஒரு பெண்ணைப் போலத் தெரிகிறது.
எனக்கு அதைப் பிடிக்கவே இல்லை. நான் யோசிக்கத் தொடங்குகிறேன். ஜான் என்னை இங்கிருந்து கூட்டிச் சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என் நிலை பற்றி ஜானுடன் பேசுவது மிகவும் கஷ்டம். ஏனெனில் அவர் மிகவும் புத்திசாலி. அவர் என்னை மிகவும் நேசிக்கவும் செய்கிறார்.
ஆனால் நேற்று இரவு நான் முயற்சி செய்தேன். அது நிலவொளி இரவு. சூரியன் எப்படி அறைக்குள் ஒளிர்கிறானோ, அதுபோல நிலவும் எல்லா இடங்களிலும் ஒளிர்ந்தது.
சில நேரம் நிலவைப் பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. நிலா மிகவும் மெதுவாக நகர்ந்து, எப்போதும் ஏதோ ஒரு ஜன்னல் வழியாக உள்ளே வந்து விடுகிறது.
ஜான் தூங்கிக்கொண்டிருந்தார். அவரை எழுப்ப விரும்பவில்லை. அதனால் அமைதியாகப் படுத்தபடி அந்த அலை போன்ற சுவர்க் காகிதத்தின் மேல் விழும் நிலவொளியை பார்த்துக்கொண்டே இருந்தேன். அது என்னை அச்சப்பட வைத்தது.
அந்த மங்கலான உருவம் பின்னால் இருந்து அந்த வடிவத்தை அசைத்தது போலத் தோன்றியது. அவள் வெளியே வர முயற்சிப்பது போல…
நான் மெதுவாக எழுந்து அந்தச் சுவர்க் காகிதத்தைத் தொட்டு அது உண்மையிலேயே அசைகிறதா என்று பார்க்கச் சென்றேன். திரும்பி வந்தபோது ஜான் விழித்திருந்தார்.
(தொடரும்)
படைப்பாளர்

ஸ்ரீதேவி மோகன்
ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார். பெண் படைப்பாளிகளைச் சந்தித்து இவர் எடுத்த நேர்காணல்கள், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.





