அய்யாவழிக்குள் புகுந்திருக்கும் சனாதனிகள் நிழற்தாங்கல் என்னும் அமைப்பை அழிக்க, நிழற்தாங்கலா? இணத்தாங்கலா? இணைத்தாங்கலா? என்ற கேள்வியை கிளப்பி குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் திருநெல்வேலியின் சில கிராமங்களில் அய்யா வைகுண்டரின் வழிபாட்டுத்தலமான நிழற்தாங்கல்களை இனத்தாங்கல் என்று அழைக்கிறார்கள் என்ற தகவலும் நமக்கு கிடைக்கிறது. இது எணத்தாங்கல் என்ற சொல்லிலிருந்து மருவி உருவாகியிருக்கலாமேயன்றி இனத்தாங்கல் (‘ன’) என்ற சொல் அகிலத்திரட்டு அம்மானையில் இல்லை. இனம் என்கிற பொருள்படும்படியாக வைகுண்டர் தனது வழிபாட்டுத்தலத்துக்கு பெயரிடவில்லை.

அகிலத்திரட்டு அம்மானை ‘இணத்தாங்கல்’ (‘ண’) என்கிற சொல்லைத்தான் குறிப்பிடுகிறது.

அகிலத்திரட்டு அம்மானை கன்னியாகுமரி மாவட்டத்து வட்டார வழக்குச் சொற்களால் நிரம்பிய ஒரு அம்மானை நூல். அவ்வாறே நிழல் என்பதை கன்னியாகுமரி மாவட்டத்து மக்கள் எணல் அல்லது இணல் என்று பேசுவர். பல வயதானவர்கள் நிழலை ‘எணல்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். எனவே அகிலத்திரட்டு அம்மானையில் வருகின்ற இணத்தாங்கல் என்ற சொல்லுக்கு, நிழல் தாங்கல் (நிழற்தாங்கல்) என்பதே சரியான பொருள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிழல் கொடுக்க அய்யா வைகுண்டர் உருவாக்கிய தாங்கல் என்பதே இணத்தாங்கல் அல்லது நிழல் தாங்கல் (நிழற்தாங்கல்)  என்னும் வழிபாட்டுத் தலத்தின் பொருள்.

இணத்தாங்கல் என்பதன் சரியான உச்சரிப்பு நிழல் தாங்கல் (நிழற்தாங்கல்). இணத்தாங்கல் என்பதன் மருவிய தவறான உச்சரிப்பு இனத்தாங்கல். அவ்வளவே.

இதற்கிடையில் மயிலாடிப்புதூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழற்தாங்கலில் நிகழ்ந்த உரையாடலின்போது ‘இணைத்தாங்கல் என்பதுதான் சரி’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. மனிதர்களின் அறியாமையும், அறியாமையால் உருவாகும் சிந்தனையும் பெரும் பிரச்சினைகளில் மேலும் குழப்பங்களை உருவாக்கிவிடுகிறது.  இணைத்தாங்கல் என்பது முற்றிலும் தவறான சொல்.

இணத்தாங்கல் என்பதும் நிழல் தாங்கல் என்பதும் நிழற்தாங்கல் என்பதும் சரியான சொற்கள்.

அகிலத்திரட்டு அம்மானையில் இகனைத் திருமணங்கள் முடிந்த பிறகு வைகுண்டரும் அவருடைய சீடர்களும், அம்மைமார்களும் சாணார்* சாதியினர் வீடுகளில் விருந்து உண்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. அம்மைமார் என்பவர்கள் இகனைத் திருமணச் சடங்குகளில் ஈடுபடுத்தப்பட்ட பெண் சீடர்களாவர். விருந்து உண்ணச் சென்றபோது, வைகுண்டர் அந்தச் சாதி மக்களைப் பார்த்து, ‘உங்கள் வீடுகளில் உணவருந்தவும், என் பெயரால் நீங்கள் நாட்டியுள்ள இணத்தாங்கல்களைப் பார்க்கவும், சந்தோஷமாக இருக்கிறது’, என்று சொல்வதைப் போன்ற காட்சி அகிலத்திரட்டு அம்மானையில்  உள்ளது. அகிலத்திரட்டின் இந்த ஒரு இடத்தில் மட்டுமே இணத்தாங்கல் என்ற சொல் காணப்படுகின்றது.

பின்னும் பெருமாள் பிள்ளைகளைத் தான் பார்த்து

மன்னும் பெரிய மக்கள் மக்கள் மாதர்களே

உங்களுட உற்ற விருந்தருந்த

மங்களமாய் என்றனுக்கு மாவிருப்பமாய் இருக்கு

நான் வந்து என் பெயரால் நாட்டும் இணத்தாங்கல்களை

தான் வந்து பார்க்க சந்தோஷமாய் இருக்கு

  • அகிலத்திரட்டு அம்மானை.1*

தரவு

  1. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 340.

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய வாசித்தும் எழுதியும் வருகிறார்.