“இது சொர்க்கம் அல்ல; இது இலங்கை. இது சொர்க்கம் அல்ல; இது இலங்கை” காதுக்குள் யாரோ மீண்டும் மீண்டும் கூற, திடுக்கிட்டு விழித்தேன். கையிலிருந்த புத்தகம் நழுவி விழுந்தது. கல்கியின் பொன்னியின் செல்வனில் ‘சுழற்காற்று – அத்தியாயம் 9 – இது இலங்கை’ பக்கம் விரிந்துகிடந்தது. ‘இது சொர்க்க பூமி அல்ல ; ஆனால் சொர்க்கம் போன்ற பூமி. இந்தச் சொர்க்கத்தை நரகமாக்குவதற்கு மனித உருகொண்ட அசுரர்கள் வெகு காலமாகப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள்’ என்றாள் பூங்குழலி என்றது திறந்து கிடந்த அந்தப் பக்கம். (சமீபத்திய இலங்கைச் செய்திகள் நினைவுக்கு வர, கல்கியின் வரிகள் எவ்வளவு தீர்க்கமானவை என நினைத்துக்கொண்டேன்.) பொன்னியின் செல்வனை எத்தனையாவது முறையாகவோ வாசித்துக்கொண்டிருந்ததன் விளைவு, ‘படகிலிருந்து நாலு புறமும் சுற்றிப்பார்த்த வந்தியத்தேவனை, உருக்கிவிட்ட தங்கமாய் ஜொலித்துக்கொண்டிருந்த கடலில், வானவில்லின் ஏழு வித வண்ணங்களும், அதன் ஏழாயிரம் கலவை நிறங்களுக்கிடையேயிருந்து வசீகரித்த அந்தப் பச்சை வண்ணப் பிரதேசம், அது சொர்க்கபுரியோ எனச் சந்தேகிக்க வைக்க, வந்தியத்தேவனுடைய செவிகளில் விழுந்த பூங்குழலியின் ‘இது சொர்க்கம் அல்ல, இலங்கை’ என்ற வரிகள் சொர்க்கத்திலிருந்த…இல்லையில்லை, தூக்கத்திலிருந்த எனக்கும் கேட்டுவிட்டது போல.

முதன் முதலில் எப்போது அந்தச் சொர்க்க தேசத்தின் மீது ஈர்ப்பு வந்தது? யோசித்துப் பார்க்கிறேன். அம்மாவின் கைப்பிடித்து வரும் எல்.கே.ஜி குழந்தையைப்போல, வரலாற்றுப் புத்தகத்தின் இந்திய வரைபடத்தில், இந்தியாவுடன் பிரியாமல் ஒட்டிக்கொண்டுவரும் இலங்கை வரைபடத்தை, என்னவென்று வாத்தியாரிடம் கேட்கத் தெரியாமல், அதுவும் இந்தியா என்றே நினைத்திருக்கிறேன். ஐந்து வரை படித்த டி.இ.எல்.சி தொடக்கப் பள்ளியிலிருந்து, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு (ரொம்ப கெத்தாக) வந்தபோது, இரத்தினசாமி வாத்தியார்தான் அந்த விளையாட்டைச் சொல்லிக்கொடுத்தார். அதுவரை, புத்தகத்தில் மட்டுமே பார்த்திருந்த குட்டி இந்தியாவை, பெரிய இந்தியாவாக அவர்தான் அறிமுகப்படுத்தியிருந்தார். பெரிய இந்தியா மேப்பைச் சுவரில் தொங்கவிட்டு, அதில் குட்டிகுட்டியாக இருக்கும் ஊர்ப்பெயரை ஒரு குழு சொல்ல, வரைபடத்தில் இருக்கும் அந்த இடத்தை இன்னொரு குழு காட்ட வேண்டும். ரொம்ப ஜாலியாகப் போகும் அந்த விளையாட்டில் திடீரென யாராவது, இந்தியாவை விட்டுவிட்டுக் கீழேயிருக்கும் இலங்கையிலிருந்து அனுராதபுரம் என்ற பெயரைச் சொன்னதும், ‘க்ளுக்’ என்ற சிரிப்பு வகுப்பு முழுவதும் அலை அலையாகப் பரவும். ஏனெனில் அப்போது கவர்ச்சிக்கன்னியாக வலம்வந்த அனுராதாவின் நினைவுவந்து எல்லாருக்கும் அவ்வளவு வெட்கம். எங்கள் சிரிப்பைப் பார்த்து விட்டு, அவர் தான் அந்தத் தீவு தேசத்தை இலங்கை என அறிமுகப்படுத்தி, அதன் இயற்கை அழகை நாள்கணக்காக வர்ணிக்க, இப்படித்தான் வரலாற்றுப் பாடவேளையில், வரைபடத்தின் மூலம் அறிமுகமாகி, இரத்தினசாமி வாத்தியார் மூலம் மனதில் ஆழப்பதிந்தது இலங்கை என்ற கனவு தேசம்.

அதன்பின் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, 1983இல் இலங்கையில் நடந்த மிகப்பெரிய போராட்டத்தின் தொடர்ச்சியாகக் கிட்டத்தட்ட ஒரு மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட, தினமும் போராட்டம், ஊர்வலம், உருவ பொம்மை எரிப்பு, அப்போதைய இலங்கை ஜனாதிபதி குறித்த புரியாத கோஷங்கள், பரபரப்பான வானொலிச் செய்திகள் என்று அந்த விடுமுறை கழிந்தபோது, இலங்கை பற்றிமேலும் கொஞ்சம் அறிந்துகொள்ள முடிந்தது. அப்போதைய விடுமுறை மகிழ்ச்சியளித்தாலும், அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து வீட்டில், நல்ல தண்ணீர்க் கிணற்றடியில் ‘ஒண்ணுந் தெரியாத’ அம்மாக்களும் அக்காக்களும் அத்தைகளும் தெருமுனைகளில், டீக்கடைகளில் அரசியல் பேசுகிற ‘விபரந்தெரிந்த’ அண்ணன்மார்களும், பெரியப்பாக்களும் கதை கதையாய் விவரித்தபோது அழுகையாக வந்தது. வானொலிச் செய்திகளைக் கேட்டு கிராமமே ‘உச்’சுக் கொட்டியது.

இலங்கையை முழுக்க முழுக்க காதலிக்க ஆரம்பித்தது பதின்ம வயதுகளில் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்த போது தான். இலங்கை குறித்த வர்ணனைகளும் அழகும் மனதைக் கவர்ந்திழுக்க, ‘நீலக்கடலாடை போர்த்துக்கொண்டு விளங்கிய அந்த மரகதத்தீவின்’ மீது ஏனோ பைத்தியமாகிப் போனது மனம். மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால், கமலஹாசன் நடித்த, தெனாலி, இயக்குநர் பாலாவின் நந்தா படம் எடுத்து முடித்து, 16 ஆண்டுகால முயற்சிகளுக்குப்பின் வெளிவந்த செல்வமணியின் குற்றப்பத்திரிக்கை எனத் தமிழ் திரைப்படங்கள் காலந்தோறும், இலங்கையின் பாலுள்ள ஈர்ப்பை நீர்த்துவிடாமல், தக்க வைத்துக்கொண்டே இருந்தன.

பொதுவாக ஊர் சுற்றுவதில் தீராக்காதல் கொண்ட எனக்கு ஏனோ, இலங்கை வெகுகாலம் வரை கனவு தேசமாகவே இருந்தது. 2012 இல் இலங்கை செல்லும் வாய்ப்பு கடிதமாக என் கைக்கு வந்தபோது மனம் பரபரத்தது, நெகிழ்ந்தது. முதன்முதலாக அந்த மண்ணில் கால் பதித்தபோது எனக்குள் நிகழ்ந்த உணர்வுகளை சத்தியமாக அறிவியலால் விளக்க முடியாது. அதன் பிறகு தொடர்ச்சியாகப் பலமுறைசென்று வந்த அனுபவங்கள், கண்டறிந்த வாழ்வியல் முறைகள், அவர்களது பண்பாட்டு விழுமியங்கள், சார்க் ஆசிரியர் அமைப்பு மூலம் உருவான நெருங்கிய நட்புகளால், அந்தத் தேசம் குறித்து அறிந்துகொண்ட செய்திகள் என வாசித்தறிந்ததும், கேட்டறிந்ததும், பார்த்தறிந்ததுமான இலங்கை என்ற தேசம் என்னை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. ஏனெனில், ஒரு போர் தேசமாக மட்டுமே சில தசாப்தங்களாக உலக மக்களுக்கு அறிமுகமாகியுள்ள இத்தேசத்தின் தொன்மையும் வரலாறும் வியக்க வைக்கிறது. அதன் பௌதீக இயற்கை அழகு வசீகரிக்கிறது. அவர்களது அழகிய, தூய கொஞ்சுதமிழ் சிலிர்க்க வைக்கிறது. பல்வேறு இனக்குழுக்களின் தாயகமாகத் தனக்கென சொந்த கலாச்சார பாரம்பரியத்துடன் பன்முகத்தன்மை கொண்ட, பௌதீகச் சூழல் கொண்ட நிலப்பரப்புடன் இந்து சமுத்திரத்தின் நித்திலமாகத் திகழ்கிறது அந்த அழகிய தீவு தேசம்.

65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், இந்தியாவின் தென்முனைப் பகுதியில் அமைந்துள்ள இதன் சிறப்பான அமைவிடமானது பல நூற்றாண்டுகளாக வர்த்தகர்களை ஈர்த்துள்ளது. பொன்னிறமான கடற்கரைகள், பனிபடர்ந்த மலைகள், மலைக்காடுகள், பசுமையான புல்வெளிகள், வயல்வெளிகள் என மிதமிஞ்சிய இயற்கை அழகுகள் இலங்கையை ஒரு சொர்க்கபுரித் தீவாகவே உலகெங்கிலுமுள்ள சுற்றுலாவாசிகளை கவர்ந்துகொண்டிருந்தது. அதன் தொன்மையும் சிறப்பும் வரலாற்றாளர்களைக் கொண்டாட வைத்தது.

இப்படி வரலாற்றுப் பெருமைமிக்க, பௌதீக வசீகரமிக்க, பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஓர் அழகிய மாங்கனி வடிவ தேசத்தை போர், தீவிரவாதம், இனக்கலவரம் எனப் பிரச்னை கொண்ட கண்ணீர்த்துளி தேசமாக மட்டுமே உலகின் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் சமீபக்கால பதிவுகளிலிருந்து மாறுபட்ட, இலங்கையின் சிறப்புகள், தொன்மைகள், வாழ்வியல் முறை குறிப்பாகப் பெண்கள் குறித்து நானறிந்த, நான் உணர்ந்த சில துளிகளைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். நம்மில் பலரும் அறிந்த செய்திகளாக இவை இருக்கலாம். ஆனால், அதை என் மொழியில் பதிவுசெய்ய விரும்பி துவங்கியிருக்கிறேன் பயணத்தை…

(தொடர்வோம்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது.