உடல் பருமனுக்கு முதன்மைக் காரணமாக உடல் இயக்கமின்மை, துரித உணவுகளை அதிகமாக உட்கொள்வது, உடற்பயிற்சி செய்ய முற்படாதது, அதிகப்படியான மது அருந்துதல், சர்க்கரை மிகுந்த பானங்கள் அருந்துதல் ஆகியவற்றின் மூலம் உடலில் கொழுப்பு படியத் தொடங்கி உடல் எடை கூடுவதாக மருத்துவம் சொல்கிறது.

ஆனால், மேல்குறிப்பிட்ட எந்தப் பழக்கங்களும் இல்லாமல், அதிகம் சாப்பிடாமல் குண்டாக இருக்கும் நண்பர்களை நிச்சயம் உங்கள் பள்ளி, கல்லூரி காலம் கொண்டிருக்கும். இதனால்தான் குண்டாக இருப்பதை வெறுக்கும் எண்ணம், பள்ளிக்கூட மாணவியரிடம் காணப்படுகிறது. குண்டாக இருக்கும் மாணவியர், சக மாணவர்களின் கேலி கிண்டல்களுக்குப் பயந்துகொண்டே பெரும்பாலும் பள்ளிக்கூடம் வருவதைத் தவிர்க்க விரும்புவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சில பெற்றோர் குண்டாக இருக்கும் பெண் குழந்தைக்குத் தேவையான அளவு உணவைக் கொடுக்காமல், குறைவாகக் கொடுப்பார்கள். ஆனால், எங்கே அதிகம் சாப்பிட்டால் இன்னும் குண்டாகி விடுவோமோ என நினைத்து அதையும் சரியாகச் சாப்பிடாமல், பாதிச் சாப்பாட்டை என் தட்டில் கொட்டிய பள்ளித் தோழியை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

இது ஒருபுறமென்றால், “என்னதான் சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறேன். உடல் பெருக்க மாட்டேன்கிறது” எனச் சிலர் குறைபட்டுக்கொள்வார்கள். காரணம், ‘ஒல்லிக்குச்சி’ என்கிற பட்டப்பெயருக்குப் பயந்துதான். ”இந்தப் பொண்ணு ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கு? வீட்ல சாப்பாடே போடுறதில்லயா?” எனக் கேலியும் கிண்டலுமாக நாமுமே ஒரு காலத்தில் பேசியிருப்போம்.

“நல்லி எலும்பு என்று நினைத்து நாய் தூக்கிக்கொண்டு போய்விடப் போகிறது” என்று விவேக் பேசும் காமெடி உள்பட மனோபாலா உள்ளிட்ட ஒல்லியான பலரை நகைச்சுவைக் காட்சிகளில் தமிழ் சினிமா பயன்படுத்தியதுண்டு.

மருத்துவரீதியாகப் பார்த்தால், அதிகம் சாப்பிடாமல் இருப்பவர்கள் குண்டாக இருப்பதற்கும், அதிகம் சாப்பிடுபவர்கள் ஒல்லியாக இருப்பதற்கும் நிறையவே வாய்ப்புள்ளது. சிலருக்குப் பெற்றோரின் மரபணு (டி.என்.ஏ) சார்ந்த உடலமைப்பும், சிலருக்கு வியாதிகளுமேகூடத் தலைமுறை கடந்து தொடரும். (உதாரணம்: சர்க்கரை குறைபாடு) இதனால்தான் அப்பாவைப்போலவே உடல் பருமனுடன் இருக்கும் மகன்களை நாம் பார்க்க முடிகிறது. அது போலத்தான் பெண்களும்.

அதையும் தாண்டி சிலருக்கு depression என்று சொல்லக்கூடிய மன அழுத்தத்தின் மூலமும் உடல் எடை கூட வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிவியல் சொல்கிறது. சிலருக்குக் கொஞ்சம் உடல் கூடினால்கூட அதைப் பார்த்துக் கவலை கொள்வதன் மூலம், இன்னமும் உடல் எடை கூடிவிடுவதற்கு வாய்ப்பாகி விடுகிறது.

குறிப்பாக இரவு அதிக நேரம் கண் விழித்து வேலை செய்பவர்களுக்கு உடலின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் பெரிய பிரச்னைகளைப் பின்னாளில் கொண்டுவரும் என்பதை எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். தைராய்டு நோய் காரணமாகவும் ஹார்மோன் அளவுகளில் சீரற்ற நிலை தோன்றுவதாலும் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

என்னதான் காரணங்கள் பல அடுக்கினாலும், குண்டான பெண்கள் திருமணச் சந்தையில் என்றைக்குமே புறக்கணிப்படுகிறார்கள்.

செப்டெம்பர் 2015ஆம் ஆண்டு, இந்திய அரசின் ‘ஏர் இந்தியா’ விமான சேவை நிறுவனம் 125 விமானப் பணிப்பெண்களையும், உடன் பணியாற்றும் சிலரையும் அதிக உடல்பருமன் காரணமாக அப்பணிகளிலிருந்து நீக்கப்போவதாக அறிவித்தது. உடல் எடையைக் குறைத்துக்கொள்ளுமாறு 600 பணியாளர்களை ஏற்கெனவே எச்சரித்தும், அவர்களில் 125 பேர் கேட்கப்பட்ட அளவுக்கு எடையைக் குறைக்கவில்லை என ‘பிசினஸ் டுடே’ இதழில் அதிகாரியொருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

காரணம் கேட்டால், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளாத விமானப் பணியாளர்களால் அவசர நிலைமைகளின்போது வேகமாக இயங்க முடியாமல் போகலாம் எனக் கணிக்கிறார்களாம்.

ஒரு பெண்ணை அவள் உடல் சார்ந்து விமர்சிப்பதோ, திருமணத்தில் நிராகரிப்பதோ தவறு என்பதை மட்டும் புரிந்துகொள்ள வேண்டிய புரிதலை உண்டாக்க வேண்டியுள்ளது.  ஏனெனில், சிறுவயதிலிருந்தே உடல் பருமனாக இருப்பவர்களைக் கேலியும் கிண்டலும் செய்வதைப் பார்த்து வளரும் ஒரு தலைமுறையும் வளர்ந்த பிற்பாடு அதையேதான் தொடரும்.

எனவே அடுத்த தலைமுறைக்கு இனி வரப்போகும் உடல் சார்ந்த பிரச்னைகளை எடுத்துரைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லையேல் Fling, cuffing, Situationship, Delaytionship, காதல், திருமணம் போன்ற உறவுகளில் நிச்சயம் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதைவிட, குண்டாக இருப்பது அசிங்கம் என்கிற மனநிலை மக்களிடத்தில் இருக்கும் வரைதான் அதைச் சார்ந்த வணிகமும் மருத்துவமும் சுழலும். தற்போது வரை, உடல் எடை குறைப்பதற்கு மட்டும் மருந்துகள், அறுவை சிகிச்சை, உடற்பயிற்சிக்கூடங்கள், சொற்ப நாட்களில் உடல் எடையைக் குறைக்க தன்னிடம் சிகிச்சை முறை இருப்பதாகச் சொல்லும் போலி மருத்துவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் புரளும் ஒரு பெரும் வணிகம் இதைச் சார்ந்து மட்டுமே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாம் விழித்துக்கொள்ளும் வரை இவர்கள் கல்லாவில் பணம் குவிந்துகொண்டேதான் இருக்கும்.

உடல் எடை கூடுவது என்பது ஒரே இரவில் நிகழாத போது, மாயாஜாலம் போல ஒரே நாளில் உடல் எடையைக் குறைப்பது மட்டும் எப்படிச் சாத்தியமாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரஜினி சொல்வது போல, “உடனடியாக எதுவும் கிடைக்காது. அப்படிக் கிடைத்தால் அது நிலைக்காது.”

ஒல்லியாக இருக்கிறோமா, குண்டாக இருக்கிறோமா என்பதைவிட நாம் நல்ல உடல்நலத்துடனும், நல்ல மனநலத்துடனும் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதுதான் அனைத்திற்கும் முதன்மையானது.  ஏதோ ஒரு பெயரில் தொடர்ந்து உங்களை எடை போட்டுக்கொண்டே இருக்கும் இந்த சமூகத்திற்கு நீங்கள் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.

படைப்பாளர்:

ஜி.ஏ. கௌதம்

காட்சி தகவல் தொடர்பு துறையில் (Visual Communication) தனது முதுகலைப் படிப்பை நிறைவு செய்தவர். மரகத நாணயம் உட்பட பல திரைப்படங்களில் உதவி படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர்.  அதைத் தொடர்ந்து திரைப்படங்களில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார். 

இவர் படத்தொகுப்பு செய்த ’ஸ்வீட் பிரியாணி’ கோவா, கேரளா, மும்பை உட்பட இந்தியாவில் உள்ள முக்கியமான குறும்பட விழாக்களில் வென்றதுடன் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சினிமா தவிர்த்து எழுத்து, ஒளிப்படம், ஓவியத்திலும் ஆர்வமுள்ளவர். 

இவரது சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆனந்த விகடன், குங்குமம், உயிர்மை, நீலம், அயல் சினிமா, வையம், உதிரிகள், காக்கைச் சிறகினிலே, நிழல், செம்மலர், சொல்வனம், நுட்பம், வாசகசாலை, பொற்றாமறை, கிழக்கு டுடே, ஆவநாழி, புக் டே போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.