தமிழ் சினிமாவின் தொடக்கக் காலம் தொட்டே பருமனானவர்களைக் (குறிப்பாகப் பெண்களை) கேலிக்குரிய விதத்தில்தான் சித்தரித்திருக்கிறார்கள். பாலையா சீ.கே. சரஸ்வதியைக் கேலி செய்வதில் தொடங்கி, என்.எஸ்.கிருஷ்ணா, தங்கவேலு முதல் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு வரையிலும் இது தொடர்கிறது.  

உதாரணமாக, ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படத்தின் ’ஊர்வசி’ எனும் பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், குண்டாக இருக்கும் பெண்ணிடம் ’ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல ஃபார்மஸி’ எனப் பாடுவார் ஒல்லியாக இருக்கும் பிரபுதேவா. இதே படத்தில் ’காதலிக்கும் பெண்ணின்’ என்கிற பாடலில் ’காதலுக்கு அன்னப்பட்சி தேவையில்லையே, காக்கைகூடத் தூது போகுமே’ எனும் வரியில் அருகில் கறுப்பாக இருக்கும் வடிவேலுவை விரல் நீட்டிக் காண்பிப்பார் பிரபுதேவா.

இப்படியாக, அவர்கள் நடக்கும் போது பின்னால் யானையின் சத்தத்தை ஒலிக்க விடுவது. அவர்களை எருமை, பன்றி, யானை போன்ற பருமனான விலங்குகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது. காட்சிகளை அமைப்பது, மலை போலக் குவிந்திருக்கும் உணவைச் சாப்பிடுவது போன்ற திரைப்பட காட்சிகள் வழியே, அவர்களைச் சகமனிதர்களின் வாழ்விலிருந்து அறுபட்ட ஏலியன்களைப்போல காண்பிக்கப் படுகிறார்கள்.

‘மதனகோபால்’ என்கிற கதாபாத்திரத்தில் கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய ’சின்னவீடு’ திரைப்படத்தில், தனக்கு வர வேண்டிய மணப்பெண்ணை அத்தினி, சித்தினி, பத்தினி என வகைப்படுத்தி நடிகைகளின் ஒளிப்படங்களைக் கத்தரித்து உடல் வடிவமைப்பில் எப்படி இருக்க வேண்டும் என்று மனதில் கோட்டைக் கட்டி வைத்திருப்பார். ஆனால், அவருடன் திருமணம் நிச்சயமாகும் நாயகி ‘பாக்யலட்சுமி’ (கல்பனா) மதனைவிட அதிகம் படித்திருந்தும், நல்ல வசதியான குடும்பப் பின்னணியில் இருந்தும், சரியாகப் படித்தே முடிக்காத பாக்யராஜுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். அவருக்கு நல்ல வேலையையும்கூடப் பெண் வீட்டார் பார்த்து வைப்பார்கள். அதற்கேற்றாற் போல மதனும் பாக்யலட்சுமியிடமும், அவர்கள் குடும்பத்தாரிடமும் ஏதோ அவர்தான் மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தது போல ஓரவஞ்சனையாக நடந்து கொள்வார். காராணம் நாயகி பாக்யலட்சுமி உடல்பருமனாக இருப்பார்.

மதன் எதிர்பார்த்ததற்கு மாறாக பாக்யலட்சுமி உடல் பருமனாக இருப்பதால், ஒரு குண்டான பெண்ணின் கணவராகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்ப மாட்டார். அதன் விளைவாக வெளியில் செல்லும்போதுகூட விலக்கி வைத்தே கூட்டிச் செல்வது, திரையரங்க இருக்கையில் அருகில் உட்கார யோசிப்பது எனச் சொந்தக் கணவனால் மனதளவில் நசுக்கப்படுவார் கல்பனா. ஆனால், உடல் ஒரு பொருட்டல்ல என்பதை அவர் புரிந்துகொள்ள ஒல்லியான ஒரு பெண்ணிடம் ஏமாந்து போக வேண்டிய சூழல் வருகிறது.

கிட்டத்தட்ட, இதே கதைக்களத்தில் இதன் பின்னால் இரண்டு திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. ஒன்று, தமிழில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ’சதி லீலாவதி’, இரண்டாவது இந்தி மொழியில் 2015ஆம் ஆண்டு வெளியான ‘தும் லகா கே ஹைஷா’. கிட்டத்தட்ட இரண்டு படங்களும் ஒரு வகையில் ‘சின்ன வீடு’ திரைப்படத்தின் சாயலில்தான் இருக்கின்றன. இந்திப் படத்தில் மட்டும் கொஞ்சம் மாற்றாக, அரசு வேலைக்குத் தேர்வாகாத பிரேமுக்கு (ஆயுஷ்மான் குரானா) தன்னைவிட அதிகம் படித்த சந்தியாவை (பூமி பட்னேக்கர்) திருமணம் செய்து வைக்கிறார்கள்.

ஆனால், சதிலீலாவதியில் திருமணத்திற்குப் பிறகிலிருந்து தொடங்குகிறது கதை. உடல் பருமனாக இருக்கும் லீலாவைவிட (கல்பனா) ஒல்லியாக இருக்கும் ப்ரியாவை (ஹீரா) விரும்புகிறார் அருண் (ரமேஷ் அரவிந்த்). இத்தனைக்கும், லீலா கதாபாத்திரத்தில் நடித்ததும் ‘சின்ன வீடு’ திரைப்படத்தில் நடித்த அதே கல்பனாதான்.

தமிழ் சினிமாவில் மோசமான வழக்கம் ஒன்று இருக்கிறது. எது வெற்றியடைகிறதோ எல்லோரும் அதன் பின்னாலேயே ஆட்டு மந்தை போல ஓடுவார்கள். உதாரணத்திற்கு, ‘பருத்தி வீரன்’ படத்தின் வெற்றிக்குப் பின்னால் சுப்ரமணியபுரம், நாடோடிகள் என்கிற இரு படங்களின் மாபெரும் வெற்றியும் இணைந்துகொள்ள, அடுத்த சில ஆண்டுகள் வெளியான எல்லாத் திரைப்பட போஸ்டர்களிலும் ரவுடித்தனம் செய்து தறிகெட்டுத்திரியும் நாயகனும், அவரைத் திருத்தும் அப்பாவி கதாநாயகியும் நிறைந்திருந்தார்கள். உதாரணமாக, மதுரை சம்பவம், கோரிப்பாளையம், மதயானைக்கூட்டம்… இன்னும் பல. “நீங்க ரொம்ப கோவமா பேசுறீங்களே. மதுரையா?” என யாரேனும் நிச்சயம் ஒரு முறையாவது உங்களிடம் கேட்டிருப்பார்கள்.

அது போல, ஒருவர் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துவிட்டால், உடனே அவர்களுக்கு அடுத்து வரும் அத்தனை பட வாய்ப்புகளும் மருத்துவர் கதாபாத்திரத்திற்கே வரும். பல திரைப்படங்களில் காவல் துறை அதிகாரிகளாக ஒரே நடிகர் நடிப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

ரஜினியின் ‘தில்லு முல்லு’ திரைப்படத்தில் வரும் ’குண்டு கல்யாணம்’ என்கிற ஒரு நடிகருக்கு, அவர் குண்டாக இருப்பதால் பல திரைப்படங்களில், உடல் பருமனைக் காரணம் காட்டி நகைச்சுவைக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

கறுப்பான பெண்களைத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் கதாபாத்திரங்களுக்காகவும், உடல் பருமனான பெண்களைத் தொடர்ந்து நகைச்சுவைக்காகவும், முற்போக்காகச் செயல்படும் சிலரைத் தொடர்ந்து இடதுசாரி கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பது என இன்றளவும் தொடர்கிறது.

அந்த வகையில், ‘சின்ன வீடு’ கல்பனாவை ‘சதி லீலாவதி’ திரைப்படத்தில் நடிக்க வைத்ததில், ‘மாஸ்டர்’ என்று சொல்லக்கூடிய இயக்குநர் பாலுமகேந்திராவும் அந்த வழியைப் பின்பற்றியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

”அவளுக்கென்ன ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கறா. தின்னுட்டுத் தின்னுட்டுத் தூங்குறா. அப்புறம் குண்டாகாம என்ன செய்யும்?” என அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் தனது மகளைப் பார்த்துப் பெண்களின் தாய்மார்கள் புலம்புவதை நீங்கள் பார்த்திருக்கலாம். எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்கள்தாம் குண்டாக இருப்பதாகவும், ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படாது எனவும் புரிந்துகொள்ளப்படுகிறது.

ஆனால், ‘சின்ன வீடு’ திரைப்படத்தில் வரும் கல்பனா, வீட்டிலிருக்கும் அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்துகொண்டுதான் இருப்பார். பார்ப்பதற்கு நமக்கே பாவமாக இருக்கும். கல்பனா குண்டான பெண் என்பதால் அவர் மீது ஆதிக்கம் செலுத்துவார் ஒல்லியான மாமியார் (கோவை சரளா). பெரும்பாலான குடும்பங்களில் உடல் பருமனாக இருப்பவர்களிடம் அதைக் காரணமாகச் சொல்லி, மறைமுகமாகப் பல மடங்கு வேலை வாங்குவதும் தொடர்கிறது.

அதே சமயம், அதிகம் உண்பவர்கள் குண்டாக இருப்பார்கள் என்கிற சித்தாந்தமும் இங்கு நிலவுகிறது. உதாரணமாக, ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் புரோட்டா சாப்பிடும் போட்டியின் அறிவிப்பைத் தனது கபடி நண்பர்களுடன் பார்க்கும் சுப்ரமணி (சூரி) தானும் பங்கேற்கக் கேட்பார். அவர்கள் குழுவில் பருமனாக இருக்கும் ‘ஐயப்பன்’ என்பவரைச் சுட்டிக்காட்டி “இவனைத் தவிர்த்து, யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்” என்று சொல்வார் அந்த புரோட்டா மாஸ்டர். ஆனால், போட்டியில் கலந்துகொள்ளும் ஒல்லியாயான சூரி தான் அதிகமான புரோட்டாவைச் சாப்பிடுவார். அதிலிருந்து ‘புரோட்டா சூரி’யாக மாறினார். இப்போது மீண்டும் ‘சூரி’யாகி விட்டார்.

அந்த வகையில் மொத்தமாக உணவுப் பழக்கவழக்கங்களால் மட்டுமே நடைபெறுவதில்லை. மருத்துவம் சொல்லும் காரணங்கள் வேறு.  

(தொடரும்)

படைப்பாளர்:

ஜி.ஏ. கௌதம்

காட்சி தகவல் தொடர்பு துறையில் (Visual Communication) தனது முதுகலைப் படிப்பை நிறைவு செய்தவர். மரகத நாணயம் உட்பட பல திரைப்படங்களில் உதவி படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர்.  அதைத் தொடர்ந்து திரைப்படங்களில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார். 

இவர் படத்தொகுப்பு செய்த ’ஸ்வீட் பிரியாணி’ கோவா, கேரளா, மும்பை உட்பட இந்தியாவில் உள்ள முக்கியமான குறும்பட விழாக்களில் வென்றதுடன் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சினிமா தவிர்த்து எழுத்து, ஒளிப்படம், ஓவியத்திலும் ஆர்வமுள்ளவர். 

இவரது சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆனந்த விகடன், குங்குமம், உயிர்மை, நீலம், அயல் சினிமா, வையம், உதிரிகள், காக்கைச் சிறகினிலே, நிழல், செம்மலர், சொல்வனம், நுட்பம், வாசகசாலை, பொற்றாமறை, கிழக்கு டுடே, ஆவநாழி, புக் டே போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.