“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா… மோதி மிதித்துவிடு பாப்பா… அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா…” என்று அவர்கள் அனாட்டமி மிஸ் துர்கா சொன்னதைக் கேட்ட போது அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஓர் இனம்புரியாத உணர்ச்சி பொங்கியது. இதை ஏன் தன் குழந்தைப் பருவத்தில் யாரும் தன்னிடம் சொல்லாமல் போனார்கள் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.
“இது குழந்தைகளுக்காக மட்டும் பாரதியார் சொல்லல. எல்லாப் பெண்களுக்கும் சேத்துதான் சொன்னாரு” என்ற போது அனாட்டமிக்கும் பாரதியாருக்கும் என்ன சம்பந்தம் என்று மாணவிகளுக்குத் தோன்றினாலும் யாரும் அதைக் கேட்கவில்லை. காரணம் துர்கா மிஸ். அவர் வகுப்பு எடுக்கும் விதம்.
ஆசிரியர் போல் இல்லாமல், சக தோழியிடம் பேசுவதைப் போல் இருக்கும் அவரின் வகுப்புகளை , ‘பி.எஸ்.சி நர்சிங்ன்னா கஷ்டம்’ என்று கேள்விப்பட்டே படிக்க வந்தவர்களுக்கு அதை எளிதாகப் புரியும் விதத்தில் எடுக்கும் ஆசிரியரை எப்படிப் பிடிக்காமல் போகும்?
“ஈவி, மிஸ் எந்தானு பறையுன்னது?” என்று கிசுகிசுப்பாகக் கேட்ட தன் தோழி பின்சியிடம், பின்னர் சொல்வதாக ஈவ்லின் சொன்னதைக் கேட்டு அமைதியானாள்.
அவர்கள் பரஸ்பரம் மற்றவர் மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கி நான்கு வருடமாகிவிட்டது. விடுமுறை நாட்களில் சிலமுறை அவள் வீட்டுக்குக்கூட வந்து தங்கியிருக்கிறாள். அடிக்கடி இங்கு வர முடியாத அவள் பெற்றோர் ஒரு வருடத்துக்குப் பின் இங்கு வந்தபோது ஈவ்லினின் அம்மாவையே லோக்கல் கார்டியனாகக் கல்லூரியில் எழுதிக் கொடுத்துச் செல்லுமளவுக்கு இருவரும் நல்ல தோழிகளாகியிருந்தனர்.
ஆசிரியர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமாக இருவரும் முன்னால் திரும்ப, அவர்கள் இருவரும் பேசியதைக் கவனித்தவர், “எந்தா பின்சி?”
என்று கேட்டார். தமிழ்நாடு கேரளா பார்டரில் உள்ள மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவராதலால் அவருக்குத் தமிழ், மலையாளம் இரண்டும் தெரிந்திருந்தது.
தனக்கு அவர் சொன்னது புரியவில்லை என்று அவள் பதிலளிக்கவும் அவர் சொன்னதையே மீண்டும் ஒரு முறை மலையாளத்திலும், பின் ஒருமுறை ஆங்கிலத்திலும் விளக்கினார்.
துர்கா மிஸ்ஸை எல்லோருக்கும் பிடிக்க இதுவும் ஒரு காரணம். ஏதோ வந்தோம், பாடம் எடுத்தோம், சென்றோம் என்று இல்லாமல் எல்லோருக்கும் புரியும் விதத்தில் நடந்த வேண்டும் என்பதில் கண்ணாக இருப்பவள். அது பாடமாக இருந்தாலும் சரி, பாரதியார் கவிதையாக இருந்தாலும் சரி. அதே நேரத்தில் பெண்களாகச் சமூகத்தில் நாளை அவர்கள் சந்திக்கப் வேண்டியவற்றிற்கும் அவர்களைத் தயார்படுத்துவதும் தன் கடமை என்று நினைத்துக் கொண்டாள்.
தங்கியிருப்பதும் மாணவிகளுக்கான விடுதியில் என்பதால் தமிழ் மீடியம் மலையாள மீடியத்தில் படித்த மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் இருக்கும் பாடத்திட்டத்தைப் படிக்க ஏதேனும் கஷ்டம் இருந்தால் தாராளமாகத் தன்னிடம் வந்து எந்நேரத்திலும் கேட்கலாம் என்று சொல்லியிருந்தாள்.
பல நேரம் பாடங்களைத் தாண்டி அவர்கள் வீட்டிலோ வெளியிலோ சந்திக்கும் பிரச்னைகளையும் பகிர்ந்து கொண்டாலும் அதற்கு மிஸ் தேவையான ஆறுதலோ வழிகாட்டுதலோ தருவார் என்கிற நம்பிக்கை அநேக மாணவிகளுக்கும் இருந்தது.
“நீங்க வீட்டுல இதுவரைக்கும் பாத்த பாதுகாப்பான உலகம் வேற, இனிமே நீங்க தனியா வெளிய போய்ப் பாக்கப் போற உலகம் வேற. நீங்க வேல பாக்குற இடம், பாக்கப் போற பேசன்ட்ஸ், வாழ்க்கைல கடந்து போற மனிதர்கள் எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது.
அதுக்காக நல்லவங்களே இருக்க மாட்டாங்கன்னு சொல்லல, ஆனா எதுக்கும் தயாரா இருக்கணும். ஒரு பொண்ணு முட்டி, மோதி தன் கூட்டை விட்டு வெளியே வர்றப்போ அவள திருப்பி அந்தக் கூட்டுக்குள்ள அடச்சி சிறகுகள வெட்டவே நிறைய கைகள் காத்துக்கிட்டு இருக்கும்” என்று அவர் சொன்ன போது அவளையும் மீறி இரு கிழட்டுக் கைகள் தனக்கு இழைத்த அநியாயம் கண்முன் வந்து சென்றது.
“ஆனா அந்தக் கைகள் உங்களையும் உங்க எதிர்காலத்தையும் கட்டுப்படுத்த அனுமதிக்கிறதும் அனுமதிக்காததும் உங்க கிட்ட மட்டும்தான் இருக்கு. இந்தச் சமூகம் தப்பு செஞ்சவன விட்டுட்டு அதுக்குப் பலியானவங்களை அவமானப் படுத்துறதுக்குத்தான் கங்கனம் கட்டிக்கிட்டு நிக்கும். ஆனால் அதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. அதே நேரம் உங்களுக்குப் பாதுகாப்பு தர எப்பவும் யாராவது உங்க கூடவே இருக்கவும் முடியாது. உங்கள நீங்களேதான் பாதுகாக்கணும்.”
அந்த வகுப்பு முடிந்ததை அறிவிக்கும் மணி ஒலித்தது. வகுப்பை விட்டு மெல்ல வெளியேறினாள்.
தானே எத்தனை முறை எத்தனை சூழல்களை கடந்து வந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் தனக்கு மனம் விட்டுப் பேசத் தோழிகள் இருந்தனர், எந்தச் சூழ்நிலையிலும் ஆதரவாக அரவணைத்துக் கொள்ளும் பெற்றோர் இருந்தனர். ஆனால் அதுபோல இங்கிருக்கும் பல மாணவிகளுக்கு யாரும் இருந்தனரா என்று சொல்ல முடியாது, அவர்கள் மனம்விட்டு யாரிடமும் பகிர்ந்து கொண்டனரா என்பதும் நிச்சயம் இல்லை .
கிரவுண்டில் மாலை ஜாகிங் முடித்துவிட்டு அறைக்குத் திரும்பியவளுக்கு ஒரே ஆச்சரியம். அங்கு தனக்கு முன் வந்து காத்திருந்தவள் ஈவ்லின். படிப்பில் சுட்டி ஆனால் மிகவும் அமைதியான குணம். அவள் தோழி பின்சிக்கு நேர் எதிர்.
அறைக்குள் அவளோடு நுழைந்தவள் அவள் கேள்வி கேட்கக்கூட இடம் தராமல் மூச்சு விடாமல் தனக்குத் நிகழ்ந்ததைச் சொல்லி முடித்தபோது மழை பெய்து ஓய்ந்ததைப் போல் இருந்தது. இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாததைத் தன்னை நம்பிக் கொட்டித் தீர்க்கிறாள் என்பது புரிந்தது.
தனக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்குத் தன்னைத் தானே குறை கூறிக்கொண்டதையும், பயத்தில் காலம் கழித்ததையும் அதனால் ஆண்கள் என்றாலே பயம் என்றும் எங்கே ஊரிலே படித்தால் மீண்டும் அந்தக் கயவனின் அசிங்கமான பார்வைகளைக் கடக்க நேரும் என்பதிற்காகவே, தினமும் போய் வரும் தூரத்தில் இருக்கும் திருச்செந்தூரிலிருந்துகூட ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதாகவும்.
அந்த மனிதர் கரோனா வந்து படுத்த படுக்கையாக இருந்த சமயம் ஆஸ்பத்திரியில் சேர்த்து பார்த்துக் கொள்ள அவர் பிள்ளைகள் வந்து மும்பை அழைத்துச் சென்ற அன்று தான் பல வருடங்கள் கழித்து நிம்மதியாக உறங்கியதாகவும் சொல்லி முடித்த போது இருவர் கண்களும் குளமாகியிருந்தன.
ஒரு நீண்ட அமைதிக்குப் பின், அவள் இத்தனையையும் தனியாகக் கடந்து இந்த நிலைக்கு வந்திருக்கும் துணிவை மனதாரப் பாராட்டினார்.
அவளுக்கு எந்த நேரத்திலும் எந்த உதவி வேண்டுமென்றாலும் தாராளமாகக் கேட்கலாம் என்றும். மனம் விட்டுப் பேசினால் தீராத பிரச்னை எதுவும் இல்லை என்றும் அறிவுரை கூறினார். குறைந்தபட்சம் அது தன் வார்த்தைகளாக வெளிவரும் போது ஏற்படும் ஆறுதலைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் சொன்னாள். இன்னும் ஏதேதோ பேசி அவளுக்குத் தைரியமும் ஆறுதலும் சொல்லியவள், தன்னிடம் இருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை அவளுக்கு அளித்துவிட்டு,
“இது ஒரு காலத்துல எனக்குத் தைரியம் தந்துச்சு. உனக்கும் தரும்னு நம்புறேன்” என்றார்.
ஒரு புன்னகையை பதிலளித்து விட்டு, தன் அறை நோக்கிச் சென்றவள் இத்தனை வருடங்களாக உணராத ஒரு வித லேசான உணர்வை அனுபவித்தாள். தன்னை அழுத்திக் கொண்டிருந்த பெரும்பாரத்தை இறக்கி வைத்துவிட்டு வந்ததாகத் தோன்றியது. .
ஆனால் அதற்குள் அவள் துர்கா மிஸ் அறைக்குப் போனது அரசல் புரசலாக எல்லா மாணவிகளிடமும் பரவியது. அவள் அறைக் கதவைத் திறந்த கொண்டு உள்ளே சென்ற போது அங்கிருந்த சக மாணவிகள் அனைவரையும் கண்டு ஒரு நொடி ஸ்தம்பித்தாள். அவர்கள் அனைவரின் பார்வையும் அவள் மேல் ஈட்டி போல் தைத்தது.
பல வருடங்களாகத் தான் செய்யாத தவறுக்கு பயந்து காலத்தைக் கடத்தியவள், இனியும் எதற்கும் பயப்படக் கூடாது என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டாள். ஆனால் அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் அவள் உறுதியை அடியோடு குலைத்தன.
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.