ஒரு கதை சொல்லட்டுமா? – 3

நமக்கு வாழ்வின் மிகமுக்கிய தருணம் திருமணம்; அதிலும் பெற்றோர் அனுமதியுடன் நடக்கும் திருமணமே பெருவெற்றி என்றே நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். அதிலும், முதலிரவு அறைக்குள் நாம் யாரோடு இருக்க வேண்டும் என்பது தொட்டு எல்லாவற்றையும் பெற்றோர்தான் தீர்மானிப்பார்கள். இந்த ‘கலாச்சார’ விஷயங்களைச் செய்வதுதான், அவர்கள் வாழ்வின் லட்சியம் என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். படித்தவர்கள் முதற்கொண்டு எல்லாரும் இவ்வாறான ஏற்பாட்டுத் திருமணங்களைக் கொண்டாடுவதே குடும்ப அரசியலின் மிகப்பெரிய வெற்றி.

மரபியல் ரீதியாக இனப்பெருக்கமே நமது நோக்கம் எனும் செய்தி, நம்முள் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. சிலரைப் பொறுத்தவரை இந்த காதல், திருமணங்கள் எல்லாமே அந்தக் குறிக்கோளை அடையும் வழி. இதற்கிடையில் மனப்பாடம் செய்து படித்து, சமூகம் ஏற்படுத்தியுள்ள கட்டளையின்படி நல்ல சம்பளத்தில் வேலைக்குச் சேர்வது; திருமணம் செய்வது என்று குறிக்கோள்கள் ஓர் அட்டவணையாகவே பலருக்குள் ஊடுருவியிருக்கிறது.

ஒரு ஆணும் பெண்ணும் அவர்களுடைய வலி, மகிழ்ச்சி, கோபம், ஏக்கம், அனைத்தையும் பகிர்ந்து கொள்வதே திருமணத்தின் மூலமாக இருக்கும். ‘கேலிக்குரியவனாக/ளாக இருந்தாலும் என்னை ஏற்றுக்கொள், அன்புக்கு அருவருப்பு தெரியாது; அதனால் எவ்வளவு பலவீனங்கள் இருந்தாலும் முழுமனதோடு என்னை ஏற்று அன்பு செய்’, என்பதை திருமணத்தின் அடிப்படையாகக் கொண்டு, காதலுடன் இணை சேர ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் இங்கு திருமணத்தில் ‘மனம் விட்டு அனைத்தையும் பகிர்தல்’, என்ற அடிப்படையே சிறையாக மாறுகிறது. தாங்கள் கற்றுக் கொண்ட அனைத்து பழக்கவழக்கத்தையும் ஆலோசனையாக மாற்றி, ஆணுக்கு இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தான் இங்கே பெண்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, புதிதாக திருமணமான பெண் அவள் வீட்டில் உள்ள செய்முறைப்படி சமைத்து, சாப்பிட்டுப் பழகியிருப்பாள். அவளுடைய உணவு வழக்கத்தைக்கூட கணவன் வீட்டு முறைப்படி சமைத்து சாப்பிடப் பழக வேண்டும் என்று அவளுடைய வாழ்நாள் பழக்கத்தை ஆலோசனை என்ற பெயரில் ஒரே நாளில் மாற்ற முனைவார்கள்.

Photo by Suren Ram from Pexels

பெண்ணுக்கு அவள் உடல் பற்றிய, காமம் பற்றிய அறிவு இருக்கிறது என்றாலே, “முன் அனுபவம் இருக்கிறதோ?”, என்று கேள்வி கேட்கக்கூடிய சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம்.  

எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. உயர்ந்த பதவியில் இருக்கும் பெண் ஒருவர் அவரது வலியை வார்த்தைகளால் பகிர்ந்திருந்தார். அவரது திருமணத்திற்கு பிறகு, கணவர் அவரது அம்மாவின் அறிவுரைப்படிதான் நடக்கிறார். உறவில் ஈடுபடும்போது அவள் வலிக்கிறது என்று சொன்னாலும், ‘அதெல்லாம் பொய், நீ அவளை உனது தேவைக்கு ஏற்றாற்போல் உறவு கொள்’, என்று தன் மகனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து இருக்கிறார் அந்த மாமியார்.

அந்தப் பெண் மாதவிடாய் வலி என்று சொன்னாலும் அவர் கணவர் அதற்குக்கூட செவி சாய்க்காமல், அவரது தேவைக்கு அந்தப் பெண்ணை ‘திருமணம்’ என்ற பெயரில் நாள்தோறும் பாலியல் துன்புறுத்தல்தான் செய்திருக்கிறார். இதற்கு அவரது தாயும் துணையாக இருந்திருக்கிறார். இப்படிப் பல விஷயங்களில் அவள் பாதிப்படைய, இதற்கு மேல் சேர்ந்து வாழ வேண்டாம், விவாகரத்து வாங்கலாம் என்று அந்தப் பெண்ணின் பெற்றோர் அறிவுறுத்தினார்கள். அவரும் விவாகரத்து செய்துவிட்டார்.

 இது போல் திருமணமான இன்னொரு பெண் அவரது உணர்வுக்கு ஏற்ப கணவரிடம், ” இப்படி இருந்தால் எனக்குப் பிடிக்கும்”, என தன் பாலுறவு விருப்பத்தைச் சொல்ல, அந்தப் பெண்ணை ‘பாலியல் தொழிலாளி’ போல அவரது கணவர் நடத்துகிறார் என்று சொல்கிறார்.

பெண் தன் பாலுறவு விருப்பத்தை வெளிப்படுத்தினால், அவள் ‘நடத்தை கெட்டவள்’ என்று இந்த ஆண்களுக்கு யார் பாடம் எடுத்தார்கள் என்பதுதான் தெரியவில்லை. 

ஆணும் பெண்ணும் சேர்ந்து இணக்கமாக வாழும் உறவே திருமணம். அதில் பாலுணர்வு பற்றிப் பேச இருவருக்கும் சம உரிமை இருக்கிறது. அந்த அடிப்படை உரிமை பற்றிய புரிதல் இருவருக்கும் வேண்டும்; அந்த உணர்வை அனுசரித்தே அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை அமைந்திருக்கவேண்டும். 

உடல் அளவிலும், மனதளவிலும் தன் கனவுகளும், எதிர்பார்ப்புகளும் முழுமை அடையும் என்ற நம்பிக்கையுடன் ஆணும், பெண்ணும் ஒரு புது வாழ்க்கை வாழத் தொடங்குகிறார்கள். தன்னுடைய ரசனைகளுக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்ற வெற்றிக்களிப்புடன், ஒரு மயக்க உணர்வில் இருப்பார்கள். ஆணும், பெண்ணும் இந்த பாதுகாப்புக்கும் , உணர்வுக்கும் இடையில் ஒரு அழகான நேசத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துபவர்கள் என்றுதான் திருமணத்தைக் கொண்டாடுகிறார்கள்.  

திருமணம் ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவராலும் மகிழ்ச்சியாகவே கொண்டாப்படுகிறது. ஆனால் இன்று திருமணத்தின் அனைத்து விஷயங்களும் மாறியிருக்கின்றன. ஆண், பெண் இருவருக்கும் அதன் அடிப்படை இனப்பெருக்கம் என்பது மட்டும் தான் தெளிவாக இருக்கிறது. 

Photo by Matheus Ferrero on Unsplash

திருமண வாழ்வில் உங்களது காதலுக்கும், குறிக்கோளுக்கும், உங்கள் இணையின் தேவைக்கும், திருமணத்தின் நோக்கத்திற்கும் உரிய மரியாதையை அளியுங்கள்.

உங்கள் துணை உங்கள் காதலுக்கும், உங்கள் லட்சியத்திற்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் வாழும் வாழ்க்கை மிக எளிய வாழ்க்கை. உங்கள் வாழ்வை ரசிப்பதால் நீங்கள் உங்களை ரசிப்பீர்கள், உங்களை ரசிக்கும்போது உங்கள் துணையை ரசிப்பீர்கள், உங்கள் துணையை ரசிக்கும்போது, அவர்கள் உங்கள் குறிக்கோளுக்கு உறுதுணையாக நிற்பார்கள். 

இந்தத் தலைமுறையினர் அனைவரும் உங்களுக்கு வரும் துணையிடம் அவர்களது உணர்வுகளுக்கு தக்க பதிலை வார்த்தைகளாலும், செயல்களாலும் அளிக்க முற்படுங்கள். சொல்லுக்கு மயங்காத மனிதன் யாருமில்லை. சொல்லையும், செயலையும் கலந்து உங்கள் அன்பை வெளிப்படுத்த முயலுங்கள். பேசித் தீர்க்க முடியாத எந்த பிரச்னையும் உலகில் இல்லை.

உங்கள் வாழ்க்கையை உங்களால் மட்டுமே அழகுபடுத்த முடியும். திருமண வாழ்க்கையில் உங்கள் முடிவுகளை நீங்கள்தான் எடுக்க வேண்டும். அதில் தெளிவாக இருங்கள். உங்கள் பெற்றோர், உறவினர்கள் அனைவரும் உங்கள் திருமண வாழ்க்கையில் தலையிடுவதை தவிர்க்கப் பழகுங்கள். உங்கள் பெற்றோர் மற்றும் உறவினர் அனைவரும் அவரவர் துணையுடன் நிம்மதியாகத்தான் வாழ்கின்றனர். அவர்கள் அறிவுரை முக்கியம்; ஆனால் அவர்களுக்காக உங்கள் துணையை இழந்துவிடாதீர்கள். பெற்றோரையும் நேசித்து, துணையையும் நேசிக்கப் பழகுங்கள்.

தொடரும்… 

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

காயத்ரி மஹதி

காயத்ரி மஹதி மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர். தனிப்பட்ட முறையில் கவுன்ஸலிங் செய்து வருகிறார். உளவியல் ரீதியாக குடி நோயாளிகள் மற்றும் குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2016ம் ஆண்டு ஈஸ்டர்ன் பூமிகா நிறுவனம் இவருக்கு “சிறந்த பெண்மணி” விருது வழங்கி கவுரவித்தது. உளவியல் ரீதியாக பள்ளிகளில விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2019ம் ஆண்டு நந்தவனம் நிறுவனம் “சிறந்த பெண்மணி” விருது அளித்தது. நாளிதழ்கள், செய்தித் தாள்களில் மனநலம் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.