‘பெண்ணியம்’ என்கிற சொல்லை ஒரு கெட்ட வார்த்தை என்று நினைப்பவர்கள் பலர். பெண்ணியம் பேசுபவர்கள் பெண்களுக்காக மட்டுமே பேசுகிறார்கள், ஆண்களை ஒடுக்க நினைக்கிறார்கள், ஆண்களுக்கு எதிரானது பெண்ணியம் என்பது போன்ற எண்ணங்கள் பரவலாகவே இருந்து வருகிறது. “நான் பெண்ணியவாதி இல்லை” என்று பேசக்கூடிய பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் சொல்லக்கூடிய காரணங்கள், பெண்ணியம் என்பது ஆணுக்கு எதிரானதாக இருக்கிறது; பால் சம நிலைக்கு எதிரானதாக இருக்கிறது என்பதுதான். ஆனால், உண்மையில் பெண்ணியம் வெறும் பெண்களுக்கானதா? ஆண்களை எதிர்க்கக் கூடியதா? பெண்ணியம் எதை எதிர்த்துப் பேசுகிறது? பெண்ணியம் ஆணாதிக்கத்தை எதிர்த்துப் பேசுகிறது. ஓர் ஆண் இதைத்தான் செய்ய வேண்டும் என்றும் ஒரு பெண் இதைத்தான் செய்ய வேண்டும் என்றும் பால் ரீதியாகப் பொறுப்புகளும் வேலைகளும் பங்கு பிரிக்கப்படுவதைப் பற்றியும் ஒவ்வொரு பாலுக்குமான வகுக்கப்பட்ட இலக்கணங்கள் பற்றியும், அவை சற்றும் நெகிழ்வுத் தன்மையில்லாமல் இருப்பதைப் பற்றியும் தொடர்ந்து பெண்ணியம் பேசிக்கொண்டே இருக்கிறது. இன்றைய ஆண் கற்காலத்து ஆணிடம் இருந்து பல்வேறு வகையில் வேறுபட்டிருக்கிறான், அவனுக்கான தேவைகள் இன்றைய சமூக அமைப்பைப் பொறுத்து பல்வேறு இடங்களில் மாறி இருக்கின்றன. ஆனால், இன்னும் வேட்டைக்குச் சென்ற காலத்தைப் போலவே ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் கொண்டு தருபவனாக, பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடியவனாகத் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறான். ஒரு குடும்பத்தின் தேவைக்கேற்ப ஓர் ஆண் சில காலம் பணியில் இல்லாமல் இருக்க இந்தச் சமூகம் அனுமதிப்பதில்லை. ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்று தொடர்ந்து பணத்திற்காக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பல நேரத்தில் மூச்சு விடுவதற்குக்கூட நேரம் இல்லாமல் தன் குடும்பத்திற்கு வேறு யாருடைய துணையும் இல்லாமல் தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆண்கள் தள்ளப்படுகிறார்கள்.

ஆண்கள் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகப் பெரும்பாலான நேரத்தில் இருக்கிறார்கள். ஆனால், ஒரு பெண்ணை காரணமாக வைத்து ஆண் ஒடுக்கப்படுவது தொடர்ந்து நடந்துகொண்டே வருகிறது. ஒரு பெண் குழந்தை வீட்டில் பிறந்துவிட்டால் அந்தப் பெண்ணுடைய தந்தை அல்லது அண்ணன் அந்தப் பெண்ணின் திருமணத்திற்காகப் பணம் சேர்த்தபடியே இருக்க வேண்டும்; அந்தப் பெண்ணுக்குச் சீதனம், வரதட்சணை என்ற பெயரில் பணத்தைக் கொட்டிக் கொடுக்க வேண்டும்; அதற்காகத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். வெளிநாடுகளில் சிறு பணிகளில் தன் குடும்பத்தைப் பிரிந்து பல நாட்கள் தானும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ஆண்கள் அனைவரும் இந்த ஆணாதிக்க சமூகம் வரையறுத்திருக்கும் வரதட்சணை பிரச்னை சிக்கிக்கொண்ட பலியாடுகளே. பெண்ணியம் வரதட்சணையை எதிர்த்துப் பேசுகின்ற வேளையில் அது பாதிக்கப்படும் பெண்களுக்காக மட்டுமல்லாமல், வரதட்சணை கொடுக்கும் பெண்ணின் அப்பா அல்லது அண்ணன் ஆகிய ஆண்களின் நலனுக்காகவும் சேர்த்துப் போராடுகிறது.

குழந்தைகள் விளையாடும் பருவத்தில், ஒரு பெண் குழந்தை விளையாட வேண்டிய விளையாட்டுகள் என்றும் ஓர் ஆண் குழந்தை விளையாட வேண்டிய விளையாட்டுகள் என்றும் பிரித்து வைப்பது பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஆபத்தானது அல்ல. எடுத்துக்காட்டாக சமையல் செய்யும் சொப்பு சாமான் போன்ற பொம்மைகளை வைத்து, பெண் குழந்தைகளைத் தொடர்ந்து விளையாட வைப்பதனால் தனக்கான இடம் சமையலறை என்று ஒரு பெண் சிந்திக்க நிர்பந்திக்கப்படுகிறார். அதனால் அது கூடாது என்கிறோம். ஆனால், ஓர் ஆண் சமையலறை பொருட்களோடு விளையாடக் கூடாது, ஒரு கார் பொம்மையோடோ அல்லது துப்பாக்கியோடோதான் விளையாட வேண்டும் என்று சொல்லப்படுவதன் மூலம், தனக்குப் பிடித்திருக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவதுதிலிருந்து தடுக்கப்படுகிறான். ஓர் ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மன புழுக்கத்திற்கு ஆளாக்கப்படுகிறான். உண்மையில் சமையல் செய்யப் பிடிக்கிற எத்தனையோ ஆண்கள் இருக்கிறார்கள், கார் ஓட்டுவதற்கும் விமானம் ஓட்டுவதற்கும் பெண்களை ஊக்கப்படுத்துகிற பெண்ணியம், பிங்க் கலரில் சொப்பு சாமான் வைத்து விளையாட ஆண் குழந்தைகளையும் ஊக்கப்படுத்துகிறது. தனக்குப் பிடித்த விளையாட்டுகளை, செயல்பாடுகளைச் செய்து வளரும் ஆண் குழந்தைகள் புழுக்கமின்றி மகிழ்ச்சியோடு வளர்கிறார்கள்.

“நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?” என்ற கேள்வி புழக்கத்தில் இருப்பதிலிருந்து இந்தச் சமூகம் ஆண்மை என்று எதை வரையறுத்து வைத்திருக்கிறது என்று நாம் சிந்தித்து அறிய முடியும். எந்த நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் எந்த இழப்பின் போதும் அழாமல் இருப்பது ஆண்மை! உடைந்து போகாமல் இருப்பது ஆண்மை! ஓர் ஆண் கோபத்தையும் மகிழ்ச்சியையும் தவிர மற்ற உணர்வுகளையும் வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது என்கிற தடைகள், ஆண்களின் மன அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு பொதுவெளியில் ஆண் அழுதால் அதற்காக அவன் அசிங்கப்படுத்தப்படுகிறான். மனிதனின் உணர்வுகளை வெளிக்கொட்டிவிட அழுகை போன்ற சிறந்த கருவி பலருக்கும் பல நேரத்தில் வாய்ப்பதில்லை. அப்படி இருக்கும் கண்ணீரைக்கூடத் தன் பால் அடையாளத்தால் ஒருவர் சிந்தக் கூடாது என்று நிர்பந்திப்பது ஆணாதிக்கத்தின் உச்சம். ஆணுக்கு அழ, அன்பு செய்ய, உதவி கேட்க வழி செய்கிறது பெண்ணியம்.

ஓர் ஆணை சமூகம் நிர்பந்திக்கும் இன்னோர் இடம் வாகனங்கள் ஓட்டுதல். ஆணுக்கு இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் கண்டிப்பாக ஓட்டத் தெரிய வேண்டும் என்று ஒரு பொதுபுத்தி நிலவுவதால் கற்றுக்கொள்ள விருப்பமில்லாத ஆண்களும் வாகனம் ஓட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வாகனம் ஓட்டுதல் ஒரு வாழ்க்கைத் திறன், ஆனாலும் அது ஆண்மையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாகனம் வேகமாக ஓட்டுவதையும் திறமையாக ஓட்டுவதையும் ஆண்மையோடு தொடர்புபடுத்தி இருப்பதால்தான் சாலையில் வாகனம் ஓட்டி வரும் சகப் பெண் தன்னைத் தாண்டிப் போகிறபோது பல ஆண்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்களைத் துரத்திச் சென்று, அவர்களைவிட வேகமாக முந்திக்கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியம் அவர்கள் மனதில் ஏற்படுகிறது. விபத்தில் போய் முடிகிறது. இதைப் பெண்கள் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிற பெண்ணியம் எதிர்க்கிறது.

பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானதல்ல; பெண்ணியமும் சமத்துவமும் வேறு வேறு இல்லை, பெண்ணியம் என்பது பால் சமத்துவத்தற்கான வழி என்பதை ஆண்களும் பெண்களும் உணர வேண்டும்.

படைப்பாளர்:

கயல்விழி கார்த்திகேயன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த கயல்விழி, சென்னையில் பெருநிறுவனம் ஒன்றில் மேலாண்மை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர்.