நமது தமிழ் வரலாறு பரந்து பட்டதாகவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தினைக் கொண்டதாகவும் விளங்குகிறது. இத்தகைய நீண்ட நெடியதொரு நாகரிகத்தில் கோயில்கள் எங்ஙனம் உள்நுழைந்தன? ஆதியில் மனிதர் இயற்கையை மட்டுமே முதலில் தொழுதனர். இருட்டைக் கண்டு அச்சமடைந்த ஆதிகுடியினர் வெளிச்சம் தரும் சூரியனை வணங்கினர். பின்னர் நெருப்பைக் கண்டுபிடித்து அதை வணங்கினர். வேளாண்மைத் தொழில் கண்டறிந்த பின்னர் மழை, காற்று, ஆகாயம், பூமி, நெருப்பு என்று இயற்கையை ஐம்பூதங்களாகப் பிரித்து வணங்கினர்.

நாகரிகம் முன்னேறத் தொடங்கிய காலகட்டத்தில் நாடுகள் பிரித்து, போர்கள் செய்யத் தொடங்கினர். அதில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எழுப்பி பூசை செய்து வழிபட்டனர். வடக்கிருந்து மாண்டவர்களுக்கும் நீதிநெறி வழுவாத நெறியாளர்களுக்கும் நடுகல் எழுப்பி பூசைகள் நடைபெற்றன. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியம் என்னும் நூலில் நடுகல் வழிபாடு குறித்துச் சிறப்பித்துள்ளார் ஆசிரியர் தொல்காப்பியர். அடுத்து சாதிப் பிரிவுகள் தோன்றின. அதன் பின் கோயில்கள் என்று சிறிய அளவில் இருந்த வழிபாடு பல்லவர்கள் வருகைக்குப் பின் கற்றளிகள், குடைவரைக் கோயில்கள் என்று வடிவமெடுத்தன.

ஆண்டவன் சன்னிதி நுழைந்து பூசை செய்பவர்கள் உயர் குடியினராகச் சித்தரிக்கப்பட்டார்கள். பிற சாதியினர் ஆலயத்துக்குள் நுழைவதும் கருவறைக்குள் நுழைவதும் அந்த உயர் வகுப்பினராகச் சொல்லிக் கொண்டவர்களால் தடை செய்யப்பட்டன. இதற்கு எதிராகப் போராட்டங்கள் எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தன. இன்னும் நிகழ்கின்றன.

கோயில்கள் கோயில்களாக இருந்தவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் இருந்தது. எப்போது அதற்கென்று தனிப்பட்ட முறையில் சொத்துகளும் நிலங்களும் அளிக்கப்பட்டனவோ அப்போதிருந்தே உயர் சாதி என்று கருதப்பட்டவர்கள் கோயில்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். “நில உடைமையின் விளைபொருள்களில் ஒன்றான சாதி இறுக்கங்களும் தீண்டாமையும் 10 ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் வளர்ந்துவிட்டதை, சோழர் காலக் கல்வெட்டுகள் நமக்குக் காட்டுகின்றன” என்று தன் நூலில் குறிப்பிடுகின்றார், பேராசிரியர் தொ. பரமசிவன்.

பல்லவர் காலத்தில் தொடங்கி, சோழர் காலத்தில் செழித்து, நாயக்கர் காலத்தில் மிகவும் உச்சகட்டத்தை அடைந்தது சாதி வேறுபாடுகள் மற்றும் தீண்டாமைக் கொடுமைகள். கோயிலுக்குள் நுழையும் உரிமை, யார் யார் எந்தெந்த இடம் வரை புழங்கலாம் என்பதெல்லாம் வரையறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து முதலில் 1870ஆம் ஆண்டு முதல் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தினர். அதன்பின் முறையே  1872,1890,1897 ஆம் ஆண்டுகளிலும் போராட்டங்கள் நடத்தினர். 1939 ஆம் ஆண்டு கோயில் நுழைவுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கோயிலில் தாழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்டோரும் வேறு சில ஜாதியினரும் நுழைவது குற்றமாக இருந்த காலகட்டத்தில், அப்படி நுழைந்தோரையும் நுழையத் தூண்டியோரையும் அரசு பாதுகாக்கும் என்பதுதான் 1939ஆம் வருட Madras Temple Entry Authorization and Indemnity Act. அதைப் பலரும் எதிர்த்ததால் மீண்டும் 1947இல்தான் எல்லா ஜாதியினரும் கோயிலுக்குள் நுழைவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. The Tamil Nadu Temple Entry Authorization Act என்பது இந்தச் சட்டத்தின் பெயர். 

இப்படிச் சட்டங்கள் கொண்டு வந்தாலும்கூட இன்னும் அதைச் செயல்படுத்த யாரும் முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அதற்காக இன்னும் எத்தனையோ போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தச் சூழலில் சமீபத்தில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ்த் திரைப்பட அறிமுக விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய ஒரு செய்தி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திரைக்கலைஞர் ஐஸ்வர்யா ராஜேஷிடம், “மலையாளப் படத்தில் சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்கு ஆதரவாகப் பேசியிருப்பார்கள். இதைத் தமிழில் எப்படிக் கையாண்டிருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுளுக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. மேலும், என் கோயிலுக்கு இவர்கள் வரக் கூடாது, அவர்கள் வரக் கூடாது என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதேபோல, இதைச் சாப்பிடக் கூடாது, இது தீட்டு என்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை. இவையெல்லாம் நாம் உருவாக்கின சட்டங்கள்தாம். இதையேதான் இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறோம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போகக் கூடாது என்பதை மனிதர்கள்தாம் சட்டம் இயற்றி தீர்மானித்துள்ளார்கள். உலகில் உள்ள எந்த ஒரு கடவுளும் இப்படி ஒரு விஷயத்தைச் சொல்லவில்லை. கடவுளுக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். க.பெ.ரணசிங்கம் படத்தில்கூட, ‘தீட்டு என்ற பெயரில் பெண்கள் கோயிலுக்குள் வர வேண்டாம் என்று எந்தக் கடவுளுமே சொன்னதில்லை. இது நாமே உருவாக்கியவை’ என நான் ஒரு டயலாக் சொல்லியிருப்பேன். அதையே இப்போதும் சொல்கிறேன். நான் இதையெல்லாம் நம்புவதேயில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஐஸ்வர்யாவின் இந்தப் பேச்சால் இந்து மதத்துக்குப் பெரும் களங்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கொளுத்திவிடுகிறார்கள். அவரது பேச்சுக்கு கமெண்ட் என்கிற பெயரில் ஆபாசமாகப் பேசுகிறார்கள். ஒருவர் “ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை அல்லவா? என்னைப் போல மேல் சட்டை அணியாமல் உன்னால் தெருவில் நடக்க முடியுமா?” என்று கேட்டிருக்கிறார். இன்னொருவரோ, “நான் தெருவில் சிறுநீர் கழிப்பேன். பெண்களால் முடியுமா?” என்று சொல்லியிருக்கிறார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவ்வளவுதான் வித்தியாசம் இருக்கிறதா? அல்லது பெண்களை வெற்றிகொள்ள இதுதான் ஆண்களுக்கான ஒற்றை வழியா?

சபரிமலைக் கோயிலில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள், அறுபது வயதுக்கு மேற்பட்ட அதாவது மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று சொல்கின்றனர். எந்த அடிப்படையில், எப்போது இந்த வரையறை ஏற்படுத்தப்பட்டது என்று யாராவது சரியாகச் சொல்ல இயலுமா? இயலாது. ஏனென்றால் காலம் காலமாக முன்னோர்கள் சொன்னார்கள் என்று ஒரு பழக்கத்தை அப்படியே கண்மூடித்தனமாகக் கடைபிடிக்கிறார்கள். ஆனால், சபரிமலை செல்லும் ஆண்கள் எத்தனை பேர் முன்னோர் சொன்ன விரதம், வழிபாடு, கட்டுப்பாடு போன்றவற்றைத் தவறாது கடைப்பிடிக்கிறார்கள்? முதல்நாள் இரவு வரை மதுபோதையில் இருந்துவிட்டு மறுநாள் காலையில் குளித்து விட்டு மாலை அணிந்து கோயிலுக்குச் சென்று வந்து மாலையைக் கழற்றிய மறுநொடியே மதுபானக் கடை தேடிச் செல்லும் எத்தனை பேரை நாம் பார்க்கிறோம்.

பெண்களை மாதவிடாய் நாட்களில் தீட்டென்று சொல்கிறார்கள். சபரிமலை செல்பவர்கள் மட்டும் சுத்தபத்தமாக இருக்கிறார்களா? அந்தப் பம்பா நதியைக் கேட்டால் ஒரு பாடு அழுது விட்டுத்தான் செல்லும். அவ்வளவு அழுக்கும் கழிவும் குப்பையுமாக கிருமிகளின்‌ கூடாரமாகவே அந்த ஆறு மாறிவிட்டது. இல்லை மாற்றிவிட்டார்கள். இவர்கள்தாம் கூசாமல் சொல்கிறார்கள், “பெண்கள் பாதம் பட்டால் பம்பா தீட்டாகிவிடுவாள்” என்று.

அதேபோல அசைவ உணவை அதிலும் குறிப்பிட்ட உணவைச் சாப்பிடுவது சில மதங்களைச் சேர்ந்தவர்களைப் புண்படுத்துவதாக ஒரு சர்ச்சை நீண்டகாலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. யார் எதைச் சாப்பிடலாம் அல்லது கூடாதென்று யாரும் யாரையும் கட்டுப்படுத்த இயலாது. அவரவர் உணவுப் பழக்கம் அவரவருக்கு. சில கிராமத்துக் கோயில்களில் ஆடு, கோழி போன்றவற்றைப் பலியிட்டு அந்தத் தெய்வத்துக்குப் படையல் இடத்தானே செய்கிறார்கள்?. இதில் உயர்வென்ன? தாழ்வென்ன? எந்தப் படையலையும் தெய்வங்கள் வந்து அமர்ந்து சாப்பிடுவது இல்லை. தெய்வத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு மனிதர்கள்தாமே உண்கிறார்கள்?

பெண்ணின் கருவறைக்குள் பத்து மாதங்கள் கழிவுகளில்தாமே ஒரு குழந்தை வசித்து இந்தப் பூமிக்கு வருகிறது. அப்போது பெண் தீட்டென்றால் அந்தக் கழிவுகளில் ஊறிப் பிறந்த ஆணும் தீட்டுத்தானே? அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரின் நீல் பர்வதம் என்னும் மலை மீது அமைந்துள்ளது காமாக்யா ஆலயம். இந்தக் கோயிலில் இருக்கும் அம்பிகைக்கு உருவம் கிடையாது. அதற்குப் பதிலாக அங்குள்ள ஒரு பாறையில் பெண்ணுறுப்பை உருவமாகச் செய்து, வழிபட்டு வருகின்றனர். இதிலிருந்து எப்போதும் நீர் கசிந்துகொண்டே இருக்கும். அங்கு குங்குமம் கொட்டி வைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இப்படித் தூக்கியும் வைக்க வேண்டாம். சிறுமைப் படுத்தி ஏசவும் வேண்டாம். இயல்பான உடல் கழிவுகளைப் போலவே மாதவிடாயையும் ஏற்றுக்கொண்டால் போதும். முக்கியமாக ஆண்களைவிடப் பெண்கள்தாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தனக்கான இந்தச் சின்ன உரிமையைப் பெறக்கூட எத்தகைய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது! எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது! என்னதான் நாம் பெண்களுக்குச் சம உரிமை இருப்பதாகப் பேசிக்கொண்டாலும் இன்னும் சில விஷயங்களை இந்தச் சமூகத்துக்குப் புரிய வைக்க நிறையவே போராட வேண்டித்தான் இருக்கிறது.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.