கொலம்பியா, வெனிசுலாவின் எல்லையில் உள்ள லா குவாஜிரா தீபகற்பத்தின் பாலைவனத்தில் வசிக்கும் ஒரு பழங்குடி லத்தீன் அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் ‘வேயு இன மக்கள்’. ஐந்து அல்லது ஆறு வீடுகளைக் கொண்ட ‘ரஞ்செரியஸ்’ எனப்படும் சிறிய குடியிருப்புகளில் வாழ்கின்றனர் இந்தச் சமூகத்தினர். இந்த ரஞ்சேரியாக்களுக்குள், வேயு மக்கள் தலைமுறை தலைமுறையாகக் தாய்வழி சமூகமாக ஒழுங்கமைக்கப்பட்டு, குழந்தைகள் தங்கள் தாயின் கடைசி பெயரைக் கொண்டு, பெண்கள் குடும்பத்தின் மையமாக மட்டுமல்லாமல் கலாச்சாரத் தலைவர்களாகவும் விளங்குகிறார்கள்.

பெண் குலத்தின் மூலம்தான் வேயு சமூகம் கட்டமைக்கப்படுகிறது, தாய்வழி பிணைப்பு உறவுகளை உருவாக்குகிறது. சமூகத்தின் கலாச்சார நல்லிணக்கத்தை வளர்ப்பது வேயு பெண்களின் முக்கியமான கடமையாக இருக்கிறது .

வாழ்க்கைச் சுழற்சியின் இறுதி சடங்குகளிலும், இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யத் தயார்படுத்தும் போதும், அதன்பிறகு அடக்கம் செய்த உடலின் எச்சங்களைத் தோண்டியெடுத்து, மீண்டும் புதைக்கும் பணியிலும் பெண்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.

ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவள் பிறந்ததைச் சமூகத்தில் கொண்டாட பெரிய விருந்து நடத்தப்படுகிறது. குழந்தை பிறப்பது கடவுளின் ஆசீர்வாதம் என்று வேயு மக்கள் நம்புகிறார்கள்.

‘வுயுன்குவேரா’ என்பது வேயு பெண் குழந்தை விளையாடடும் முதல் பொம்மை. இந்தப் பொம்மைகள் ஆமை அல்லது பல்லியின் தலை வடிவில் கூடிய பச்சைக் களிமண்ணால் செய்யப்பட்டவை.

வேயு பெண்களின் குழந்தைப் பருவம் மிகவும் குறிகிய காலத்திற்கே. பருவம் அடைந்த அந்தத் தருணத்திலேயே அவள் ஒரு வருட காலத்திற்கு அவள் அறையிலே தனிமைப் படுத்தப்படுகிறாள். ‘வுயுன்குவேரா’ பொம்மை அவளிடம் இருந்து பறிக்கப்படுகிறது. அவளைப் பார்க்க யாருக்கும் அனுமதியில்லை.அவளுடைய ஒரே தொடர்பு அவள் தாயும் அவளுடைய பாட்டியுடன் மட்டுமே. ஒரு குழந்தையை குடும்ப குத்துவிளக்காக மாற்றும் முழு மூச்சில் அவளது தாயும் பாட்டியும் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு வருடப் பயிற்சிக்குப் பின் அந்தப் பெண் பக்குவமடைந்துவிட்டதாக முத்திரையிடப்பட்டு, அவளுக்குச் சிவப்பு நிறப் பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டு, ஒரு நல்ல வரனுக்கு ஆடு, மாடுகளுடன் சேர்த்து வழியனுப்புகிறார்கள்.

மணமான பெண்கள் பாரம்பரியமாக வீட்டைப் பராமரிக்கிறார்கள். ஆண்கள் மீன்பிடித் தொழிலையும் கால்நடைகளையும் பராமரிக்கிறார்கள். அன்றாட வேலைகளைத் தவிர, வேயு சமூகத்தின் உண்மையான அழகு பெண்களின் கைவினைப் பொருள்கள்.

ஒவ்வொரு வேயு தாயும் தன் மகளுக்கு நெசவு பின்னும் கலையைக் கற்றுக்கொடுக்கிறார். தங்களின் பாரம்பரியத்தை உயிரோட்டமாகவும் துடிப்பாகவும் வைத்திருக்கிறார்கள் . வேயு பெண்களைப் பொறுத்தவரை நெசவு என்பது ஞானம், புத்திசாலித்தனம், படைப்பாற்றலின் சின்னம். இளம் வேயு பெண்கள் வயதுக்கு வரும்போது, அவர்கள் ‘மொச்சிலாஸ்’ பைகளை உருவாக்கக் கற்றுக்கொள்கிறார்கள். ‘மொச்சிலாஸ்’ பையில் இருக்கும் ஒவ்வொரு வடிவமைப்பும் தனித்துவமானது. பையின் வண்ணங்கள், வடிவங்கள் மூலம் ஒரு கதையைச் சொல்கிறார்கள்.

பெண் நெசவாளர்கள் தங்களது கதைசொல்லலில் கவனமாகவும் துல்லியமாகவும் இருக்கிறார்கள். பெண்கள் தங்கள் பைகளை நெசவு செய்யும்போது முழு நாட்களும் வேலை செய்கிறார்கள். மேலும் ஒரு பையை முடிக்க ஒரு மாதம் வரை ஆகலாம். நெசவு தொழில் வேயு மக்களுக்கு நிதி உதவிக்கான ஒரு வழிமுறையாக மாறியுள்ளது.

வடிவியல் உருவங்கள் வேயு குறியீட்டின் ஒரு பகுதி. அவர்கள் உருவாக்கும் துணிகள், மட்பாண்டங்களில் காணக்கூடிய ஒரு புலப்படும் பண்பு. வேயு மக்கள் எதையும் வீணாக்க மாட்டார்கள்.

பழ ஓடுகளை மறுசுழற்சி செய்து சமையலறையில் பயன்படுத்தப்படும் கோப்பைகள், கரண்டிகள், விளையாட்டுப் பொருள்களை உருவாக்குகிறார்கள்.

இந்தக் கட்டுரை வேயு பெண்களின் ஒட்டுமொத்த கதையைச் சொல்லும் ஒரு ‘மொச்சிலாஸ்’ பையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்!

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து.