குழந்தைகள் மிகவும் விசித்திரமானவர்கள், பெரியவர்களைவிட இவர்களின் சிந்திக்கும் திறன் ஒரு செயலை அணுகும் விதம் , பார்க்கும் பார்வையின் கோணம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. சிந்திக்கும் திறனைத் தூண்டும் அளவிற்கு நமது உரையாடல்கள் அமைந்தால் சிறப்பு.

பெற்றோர்களைவிட ஆசிரியரின் பொறுப்பு மிகுதி. இவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதிலும் சிந்திக்கும் திறனை வளர்ப்பதிலும் ஆசிரியரின் பங்கு இன்றியமையாதது.

பள்ளியில் ஆசிரியர் குழந்தைகளோடு உரையாடும்போதோ பாடம் கற்பிக்கும் போதோ இடையிடையே அன்றாட செய்திகளைப் பற்றிய உரையாடல்களோ அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற ஆளுமைகளையோ அறிமுகப்படுத்துங்கள்.

உதாரணமாக அம்பேத்கரை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தும்போது, ஒரு மாணவராக உருவகப்படுத்தி அவரது பள்ளிப் பருவத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் தீண்டாமை கொடுமைகளையும் அதற்கு எதிராக அவர் மனதில் எழுந்த கேள்விகளும் குழப்பங்களும் ஒருபுறம் இருந்தாலும், அதிலிருந்த சவால்களை முறியடித்து, நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவராகவும் அரசிலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றி கண்டவராகவும் அவருடைய வரலாற்றை சுவாரசியமாக்குங்கள்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நான் பள்ளியில் படிக்கும்போது, ‘அம்பேத்கர்’ என்பவரைப் பெயரளவிலும் வினாத்தாளில் விடை எழுதுவதற்கான பதிலாக மட்டுமே அறிந்திருக்கிறேன். இதே நிலைப்பாடுதான் பெரியார், காமராஜர் போன்றவர்களைப் படிக்கும் போதும்!

ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் சொல்லிக்கொள்வது , நீங்கள் நான் குறிப்பிட்டதைப்போல இவர்களைத்தான் அறிமுகப்படுத்தவேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை. நீங்கள் அறிமுகப்படுத்தும் ஆளுமைகள் நீங்கள் படித்த புத்தகத்தில் உள்ள நபராகவோ உங்களின் மனம் கவர்ந்த ஆளுமைகளாகவோ கடந்து வந்த வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த நபராகவோகூட இருக்கலாம்.

அம்பேத்கரைப் பற்றிப் பேசும்போது நீ அந்த நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பாய் என்று கேள்வி எழுப்பலாம். அவர்களின் பதிலைப் பெற்ற பிறகு, அம்பேத்கர் செய்த செயல்களையும் அவர் பிரச்னைகளை அணுகிய விதத்தையும் பல கோணங்களில் சிந்திக்கும் திறனையும் பற்றிக் குழந்தைகளிடம் கூறுங்கள். ஏனென்றால் நாம் இப்படிக் கூறும்போது, ‘மற்றவர்களின் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்தல்’ என்ற உயரிய பண்பின் மூலம் சகமனிதர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கற்றுக்கொள்வார்கள். சமூகத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் மேம்படும்.

அப்படியே அறிவியல் பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்போது முதலிலேயே கேள்விகளுக்கான பதிலைத் கூறாதீர்கள்.

குழந்தைகளைச் சிறிது நேரம் யோசிக்கவிடுங்கள். புவியீர்ப்பு விசையைக் கற்பிக்கும்போது, நாம் ஒரு பந்தை மேல்நோக்கி எறியும்போது அது குறிப்பிட்ட தூரம் சென்றபின் மீண்டும் கீழ்நோக்கி வருகிறதே ஏன், மேல்நோக்கிச் செல்வதில்லையே ஏன் போன்ற கேள்விகளைக் கேளுங்கள். அவர்களின் பதில்கள் நம்மை சிந்திக்க வைப்பதாகக்கூட இருக்கலாம்.

பெற்றோர்களோ ஆசிரியர்களோ கூறும் ‘சின்ன’ வஷயங்கள்கூடக் குழந்தைளின் சிந்திக்கும் திறனுக்கு உரமாக அமையலாம்.

என்னுடைய குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு என்னை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. என் பள்ளிப் பருவத்தில் எனக்கு இதுபோன்ற சந்தேகங்களும் கேள்விகளும் உருவானதா என்று அசைபோட்டுப் பார்த்தால், சந்தேகங்களே எழவில்லை என்பதுதான் உண்மை.

என்குழந்தைகளுக்கு உருவான சந்தேகங்களும் கேள்விகளும் எனக்கு வராதிருப்பதற்கான காரணம் சூழ்நிலை மாற்றங்களும் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியும்தாம் பதிலாக இருக்கும். இதற்குத் தகுந்தவாறு குழந்தைகள் தங்களை ‘அப்டேட்’ செய்யத் தயாராகிவிட்டார்கள்.

இரண்டாவதாக நான் படிக்கும் காலத்தில் முக்கியத்துவம் என்பது மதிப்பெண்களுக்காகத்தான் இருந்திருக்கிறது. இதைத் தாண்டிய எந்த அறிவுத்தேடலும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

மூன்றாவதாக அந்தக் காலகட்டத்தில் கற்றவர்களின் எண்ணிக்கை குறைவு. நான் என் குழந்தைகளுக்குச் சொல்வதுபோல எனக்கு என் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தது குறைவுதான். ஏனென்றால் அவர்கள் கல்வி பயிலாதவர்கள், இருந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து எங்களைக் கல்வி பயிலச் செய்தனர். சிறிய வட்டத்திற்குள்ளே பயணிக்கப் பழக்கப்பட்டுவிட்டேன். ஆனால், இன்றைய நிலைமை அதுவல்ல. எங்கு திரும்பினாலும் பார்க்கும் இடமெல்லாம் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சி அபரிதமாக உள்ளது.

இங்கு நாம் கற்றுக்கொள்வதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும் ஏராளமான மென்பொருள்கள் இருக்கின்றன. பெரும்பாலான பெற்றோர்கள் படித்தவர்களாகவே இருக்கின்றனர்.

இன்றைய காலத்திலும் பெரும்பான்மையான பெற்றோர்கள் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சற்று முரணாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ஆசிரியர்களும் மதிப்பெண்களைத் தாண்டிய உலகமும் இருக்கின்றது என்பதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாவது மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கையைத் தாண்டிய வாழ்வியலையும் கற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.

வளர்ந்து வரும் அறிவியல், எவ்வளவோ தகவல் தொடர்புச் சாதனங்கள், மென்பொருள்கள், தகவல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி மூலம் ‘இயந்திரங்களை வேண்டுமானால் இயக்கி வைக்க முடியுமே தவிர, வாழ்வியலுக்கான ‘அறத்தை’ ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் சகமனிதரிடம் பழகும் பண்புநலன்கள் மூலம் மட்டுமே கற்க முடியும்.

(தொடரும்)

படைப்பாளர்:

திருமலைச் செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். பொறியியல் பட்டதாரி. எழுத்துகள் மீது என்றும் தீராத தாகம் உண்டு. அனைத்தையும் மாற்றும் வல்லமை எழுத்துகளுக்கு உண்டு என்று நம்புகிறேன்.