அடக்குமுறைகள் பலவிதம்!
நான் கல்லூரி படிக்கும் காலத்தில், ஒருமுறை பெங்களூருக்கு புராஜெக்டுக்காக வந்தேன். அப்போது மிகவும் பரபரப்பான லால்பாக் சாலையில் நடைபாதையில் கணவன் முன்னே போய்க்கொண்டிருந்தான். பின்னே மனைவி தன் 4 வயது குழந்தையின் கைப்பிடித்து மெதுவாக நடந்து போனாள். உடனே கோபப்பட்ட அந்தக் கணவன், ‘வேகமா வரத் தெரியாதா’ எனக் கேட்டு நடு ரோட்டிலேயே அவள் கன்னத்தில் ஓங்கி அடித்தான். அவள் கன்னத்தில் கைவைத்தபடியே அமைதியாகப் பின்னே சென்றாள். அதன்பின் லால்பாக்கின் நெரிசல் மிகுந்த அந்த ரோட்டைப் பார்க்கும்போதெல்லாம், கன்னத்தில் கை வைத்துக்கொண்டே போன அந்த முகம் ஞாபகம் வரும்.
மற்றொரு நிகழ்ச்சி… ஒரு நாள் மதியம் வீட்டிற்குள் நான் இருந்தபோது, திடீரென அடிக்கும் சப்தமும், தொடர்ந்து ஒரு பெண்ணின் அழுகைக் குரலும் கேட்டது. நான் பால்கனிக்கு சென்று பார்த்தேன். வீட்டிற்கு எதிரே இருந்தே காஃபி ஷாப்பின் படிக்கட்டுகளில் ஓர் இளம் வயது பெண் குறுகி, சுவரில் சாய்ந்தமர்ந்து, கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். ஒரு பையன் முதுகில் பையை மாட்டியபடி, நடு விரலைக் காண்பித்து, ஆங்கிலத்தில் திட்டிக் கொண்டு போய்விட்டான். அவள் முகம் சிவந்து சிறுபிள்ளை போல அழுது கொண்டிருந்தாள். எல்லாரும் கண்டும் காணாமல் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நான் மனது கேளாமல் அங்கு சென்று அதே காபி ஷாப்பிலிருந்து நீர் வாங்கிக் கொடுத்து, “அது யார் உன் கணவனா?” எனக் கேட்டேன். இல்லையென்று சொன்னாள். “காதலனா?” என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். “எதற்கு அடித்தான்? எனக் கேட்டதற்கு ‘சண்டை’ எனச் சொன்னாள். அதன் பின் அவள் அலைபேசியில் அவளின் அம்மாவை அழைத்தாள். அருகில்தான் வீடுபோல. அவள் அம்மாவும் தோழிகளும் வந்து கூட்டிச் சென்றார்கள். அவன் அடித்துக் கொண்டிருந்தபோது, ‘ஏன் அடிக்கிறாய்’ என அங்கிருந்த ஒருவரும் அவனைக் கேட்டிருக்கவில்லை. நமக்கேன் வம்பு என்று மற்றவர்கள் நினைப்பதுதான் பொதுவெளியில் அடிக்கும் பல ஆண்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது.
மேலே சொன்ன இரண்டுமே ஒரே மாதிரியான நிகழ்வுதான். முந்தையது 20 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. பிந்தையது ஓரிரு வருடங்கள் முன் நிகழ்ந்தது. காலம் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
உலக அளவிலேயே மூன்றில் ஒரு பெண் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுகிறாள். அடிப்பதும் பின் வந்து மன்னிப்பு கேட்பதும், ‘உரிமையில் / கோபத்தில் அடித்தேன்’ எனச் சொல்வதும் எல்லா இடங்களிலும் நடக்கும். பெண்களும் ‘நம் புருஷன்தானே’ என விட்டுவிடுவதால்தான். அதுவே நாளடைவில் தொடர்கிறது.
இந்த குடும்ப வன்முறையால் நானுமே ஒரு காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தேன். எல்லாவித அடக்குமுறைகளையும் கண்டிருக்கிறேன்.. ஒவ்வொன்றுக்காய் “நோ” சொல்லி, என்னை மீட்டு எனக்கான இடத்தை , உரிமையை போராடிதான் பெற்றுக் கொண்டேன்.நான் விழித்துக் கொண்டது சற்று காலதாமதமாகத்தான். ஆனால், எந்தக் களையையுமே ஆரம்பத்திலேயே களைவதுதான் சரியாக இருக்கும். அடிப்பது பெருந்தவறு என வீட்டில் இருப்பவர்களோ, பெண்ணை பெற்றவர்களோ தட்டிக் கேட்கவில்லையென்றாலும் பரவாயில்லை. மனைவி கேட்டே ஆக வேண்டும்.
காதலியாக இருந்தால் அவனை அப்போதே கைவிடுவதுதான் சரியாக இருக்கும். காதலினால் அதை அப்படியே அனுசரித்துப் போவது மிக மோசமாகிவிடும் என்பது என் அனுபவங்களில் உணர்ந்தது. மணமாகியிருந்தால்கூட பரவாயில்லை. காதலிக்கும்போதே இப்படியான வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
அப்படி ஒரு பெண்ணைப் பற்றிச் சொல்கிறேன். இளம் வயது பெண். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு வந்துவிட்டாள். அதே அலுவகத்தில் வேலை பார்க்கும் ஒருவன் மீது காதல் வந்துவிட்டது. அவன் ஒரு சைக்கோ என அவனைப் பற்றி அவள் சொன்ன ஓரிரு நாட்களிலேயே எனக்குத் தெரிந்துவிட்டது. இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் வராது என்பதால், அவள் அவனுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் எனக் கட்டளையிட்டான். அவள் பேசவில்லையென்றால், அவளுக்கு காதல் இல்லையென சொல்லி அவளிடம் பேசுவதைத் தவிர்ப்பான். அவன் எங்கு தன்னிடம் பேச மாட்டானோ என அவளும் இரவெல்லாம் அவனுடன் பேசிவிட்டு மறுநாள் அலுவலகத்தில் தூங்கி வழிவாள்.
‘இப்படியெல்லாம் சிறிய உடை உடுத்தாதே’, ‘சத்தமா சிரிக்காதே’, ‘அவர்களுடன் பேசாதே’ என ஏகப்பட்ட விதிகள் அவளுக்கு. அவன் மீதிருந்த ஈர்ப்பினால் அவளும் எல்லாம் செய்தாள். அதைவிட… வேற்று மதமான அவன், அவளை தன் மதத்துக்கு மாற வற்புறுத்திக் கொண்டிருப்பான். திடீரன அவளை அழைத்து காரணமில்லாமல் திட்டுவான். பிறகு அவளும் சண்டை போடுவாள். இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். உடனே அவள் நிம்மதியில்லாமல் புலம்பிக் கொண்டிருப்பாள். இது ஒரு வருடமில்லை. சில வருடங்கள் தொடர்ந்தது. நான் ஆரம்ப நாட்களிலிருந்து, “அவன் சைக்கோ… அவனிடம் பேசுவதை நிறுத்து” எனச் சொல்லிக் கொண்டிருப்பேன். அவள் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனுடன் பேசவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்தாள்.
வார இறுதியில் அவள் நண்பர்களுடன் பார்ட்டி போவது வழக்கம். அவன் கூடாது எனச் சொன்னபோதும் அவள் போவதை நிறுத்தவில்லை. தனியாக வீடெடுத்து தங்கியிருக்கும் அவளுடைய வீட்டுக்கு ஒரு நாள் வந்த அவன் அவள் வாயில் ரத்தம் வருமளவுக்கு அடித்துவிட்டுச் சென்றான்.மறுநாளே அவளிடம் மன்னிப்பு கேட்டு, வீட்டில் அவளுக்கு பிடித்த உணவை செய்து தந்திருக்கிறான். பிறகென்ன அவளும் மனம் கரைந்து மீண்டும் பழையபடி அவனிடம் பேசுவாள். இப்படியே ஒரு முறை காரில் சென்றபோது அடித்திருக்கிறான். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்கவில்லை.
ஒரு காலகட்டத்தில் அவள் விலக நினைத்தும் அவன் விடாப்படியாக வந்து அவளை டார்ச்சர் செய்து வந்தான். இதனால் அவள் உடல்நிலை பாதித்து பிசிஓடி பிரச்னை வந்தது. அளவுக்கதிகமான மன அழுத்தத்தால் ஹார்மோன் சமநிலையற்று போனதால் இந்தப் பிரச்னை வந்திருக்கிறது என மருத்துவர் கூறியிருக்கிறார். அவள் மிகச் சமீபமாகத்தான் அந்தக் காதலை முழுவதுமாக விட்டொழிந்து மீண்டிருக்கிறாள்.
அவள்போலவே பல பெண்கள் இருக்கிறார்கள். காதல் கண்ணை மறைத்து, அடிப்பதைக்கூட பரவாயில்லையெனத் தேற்றிக் கொள்வது நாளை நிலையான தலைவலியில் போய் முடியும். இந்தக் காலப் பெண்களும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? காதல் என்றால் எல்லாவற்றையும் மழுங்கடித்துவிடுமா? எவ்வளவு காதல் இருந்தாலும் அடிப்பதை பொறுத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பது எத்தனை மடத்தனம்?
இந்தச் சம்பவங்களை நான் சொல்வதற்குக் காரணமே, அடிப்பதும் பின் வந்து மன்னிப்பு கேட்பதும் ஆண்களின் ஒரு வகையான யுக்தி. கோபத்தில் அடித்து பின் கொஞ்சம் இறங்கி வந்து கொஞ்சினால் போதும். இந்தப் பெண்கள் வாயை மூடிக் கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம். உண்மைதானே? அப்படித்தானே இருக்கிறோம். அடிக்கிற கைதான் அணைக்கும் என்று சொல்வது அயோக்கியத்தனம் அல்லவா? அடித்தால் அந்த அடியை நாம் பிரச்னைக்கு உள்ளாக்க வேண்டும். கலகங்கள்தாம் தீர்வை தரும். சகித்துக் கொண்டு போவது மறுபடியும் அடி வாங்குவதற்கான மற்றொரு படி… அவ்வளவுதான்.
தென்னிந்தியாவே பரவாயில்லை என்பதுபோல வட இந்தியாவில் ஆணாதிக்கம் அதிகம், சிந்தி, மார்வாரி, குஜராத்தி, பெங்காலி மற்றும் மகாராஷ்டிராவின் எல்லை வரை இருக்கும் பெண்களிடம் பழகியிருக்கிறேன். மகராஷ்டிராவில் இருக்கும் கிராமங்களில் 13 வயதிலேயே மணமும் நடக்கின்றன. என்னவென்றே தெரியாத வயதில் மணம் செய்து கணவன் வீட்டுக்குள் ஒரு வேலைக்காரி போல வாழும் பெண்களின் நிலை கண்டால் இன்னும் எத்தனை தூரம் நாம் செல்ல வேண்டுமென மலைப்பாக இருக்கிறது. இதில் படித்த பெண்கள் படிக்காத பெண்கள் எந்த வித்தியாசமுமில்லை. எல்லாருக்குள்ளும் காதலோ பயமோ, தயக்கமோ என ஏதோ ஒரு தடங்கல் இருக்கத்தான் செய்கிறது.
சில வருடங்கள் முன் நடந்தது. எங்கள் வீட்டருகே ஒரு குஜராத் குடும்பம் குடி வந்தது. அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாள்.வேறு ஆண்கள் அவர்கள் வீட்டுக்குச் சென்றால் கதவின் மறைவிலிருந்து பதில் சொல்வாள். நானும் அவளும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் தெரிந்தது. அவள் கணிப்பொறியில் முதுநிலை படித்திருக்கிறாள் என்பது.
வீட்டில் தொலைகாட்சி இல்லை. பேசுவதற்கென சிறு நோக்கியா மொபைல் மட்டுமே. அவளுடைய ஒரு வயது குழந்தையுடன் நாள் முழுவதும் வீட்டில் இருப்பாள். எப்போவாவது கடைக்குச் சென்று வருவாள். கணவன் வாரம் ஒருமுறை வெளியில் – அவர்களுடைய வீடு கட்டும் இடத்துக்குக் – கூட்டிச் செல்வான். தன் கணவனிடம் அவள் பேசும் போது ஒரு கண்டிப்பான ஆசிரியரிடம் மாணவி பயந்துகொண்டு பேசுவது போலிருக்கும். அவ்வப்போது கணவன் கத்துவது கேட்கும். அவளின் ஒரு சத்தமும் வெளிவராது. அதன் பின் எங்கள் இரு குடும்பங்களும் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்துக்குச் செல்லும் நிலை வந்தது. அப்போது மனம் தாங்காமல் அவளை இப்படி வைத்துக் கொள்வது சரியானது இல்லை என அவளின் கணவனிடம் சொல்லிவிட்டேன்.
சில வருடங்கள் கழித்து ஒரு வெளிநாட்டு எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்தப் பெண்தான் அழைத்திருந்தாள். அவர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததாகச் சொன்னாள். அவளுடைய வாட்ஸப்பில் புகைப்படம் இல்லாமல் மொட்டையாக இருந்தது, அவளுடைய குழந்தை போட்டோவையும் அவளுடைய போட்டோவையும் பகிரச் சொன்னதற்கு, ‘புகைப்படங்கள் பகிர்வது நல்லதில்லை. கணவருக்குத் தெரிந்தால் திட்டுவார்’ எனச் சொன்னாள்.
நம் இந்தியக் குடும்பங்கள் அப்படித்தான். எந்த ஊர், எந்த நாடு எந்த கிரகம் சென்றாலும் இவர்களின் குணம் மாறாது போல என நினைத்துக் கொண்டேன்.
அடக்குமுறைகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அன்பு என்று சொல்லிச் சொல்லியே மனைவிகளை அடக்கி வைப்பதும் உண்டு.
என் தோழி குடும்பத்துடன் என் வீட்டுக்கு வந்தாள்.அவளுக்கு உடை எடுக்கச் சென்றபோது, அவளுக்குப் பிடித்த நிறத்தில்கூட அவள் கணவன் எடுக்கவிட வில்லை. ‘பிடிக்கலை’ எனச் சொல்லிவிட்டார். இருந்தாலும் அவள் விடாப்பிடியாகக் கேட்டதால் , கணவன் சம்மதித்தபின் அந்த உடையை எடுத்துக் கொண்டாள். இரு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், அதை அவள் இன்னமும் உடுத்தவில்லை.
“அவருக்கு அந்தக் கலர் பிடிக்கலைல? நீ இருக்கறதால அவர் ஓகே சொன்னார். போட்டுகிட்டா மூஞ்சியைத் தூக்கி வச்சுக்குவார்டி” எனச் சொன்னாள். அவள் எதுவுமே தெரியாத பிள்ளை போலிருந்தாள். அவளிடம், “இப்படி எல்லாவற்றிற்கும் உன் கணவரையே நம்பிக் கொண்டிருக்கிறாயே. நீயே தனியாக எல்லாவற்றையும் செய்துகொள்ள கற்றுக் கொள்ளக்கூடாதா” என ஒருமுறை சொன்னதற்குப் பக்கத்திலிருக்கும் கடைக்குக்கூட, பால் வாங்கக்கூடப் தனியா விடமாட்டார். ‘உனக்குத் தெரியாது’, ‘நானே செய்யறேன். நீ சரியா செய்யமாட்டே’ – இப்படிச் சொல்லிச் சொல்லியே வீட்டைத் தாண்டித் தனியா எங்கேயும் இதுவரை போகவிட்டதில்லை” என வருத்தமாகச் சொன்னாள்.
அவருக்கு உணவு பரிமாறும்போது அவள் அருகில் இருக்க வேண்டும். அங்குமிங்கும் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் அவர் அன்பாகக் கோவித்துக் கொள்வாராம். என்ன மாதிரியான அன்பு இது என எனக்குப் புரியவில்லை.
அன்பு என்ற பெயரில் நடக்கும் அடக்குமுறைகளைப் பொறுத்துக்கொள்வது பெருமையோ, காதலோ இல்லை. சண்டைகள் இருக்கலாம். ஆனால், அடக்குமுறைகள் இருக்கக் கூடாதல்லவா? ‘கணவன் மனதறிந்து மறு பேச்சு இல்லாமல் செய், அவர் மனம் கோணாமல் நடந்து கொள்’ என்று சொல்வது புரிதலில் வராது; அடக்குமுறையில்தான் வரும் என இந்தப் பெரியவர்களுக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
‘மனதறிவது, மனம் கோணாமல் நடப்பது என்பது இருபாலரிடையேயும் இருக்க வேண்டும்’ என நம் மகனுக்கும் மகளுக்கும் சொல்லித் தர வேண்டும். மண வாழ்க்கையைச் சமன்செய்வது அப்படித்தான். வெற்றுப் பாசாங்குகளில் அல்ல.
தொடரின் முந்தைய பகுதிகள்
கட்டுரையாளர்
ஹேமி கிருஷ்
பெருந்துறையை சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம் மற்றும் இலக்கிய மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் ,இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவிருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகள் டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.