UNLEASH THE UNTOLD

சூழலும் பெண்களும்

துரித ஆடைகளும் சுற்றுச்சூழலும்

ஓர் ஆடை உற்பத்தியில் தேவைப்படும் நீரின் அளவை எடுத்துக்கொள்வோம். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் செயல்முறையின்போது செலவழியும் நீரை மறைநீர் (Virtual water) என்பார்கள். ஒரு சாதா வெள்ளை நிறப் பருத்தி டீஷர்ட்டை உற்பத்தி செய்ய 2494 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது! ஒரு ஜீன்ஸ் பேண்ட்டை உருவாக்க 8000 முதல் 20,000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது! இவை சாயமேற்றாத உடைகளுக்கான கணக்குகள் மட்டுமே, அதே டீஷர்ட்டில் வண்ணம் வேண்டுமென்றால் கூடுதல் நீரைச் செலவழிக்க வேண்டும்.

காலநிலை மாற்றமும் பெண்களும்

ஓர் இடத்தின் காலநிலையில் தொடர் மாற்றங்கள் ஏற்படும்போது, அங்கு இருப்பவர்கள் பாதுகாப்புக்காகவோ பிழைப்பு தேடியோ வேறு இடத்துக்குச் செல்வார்கள். இது காலநிலை புலம்பெயர்வு (Climate Migration) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இடம்பெயர்பவர்களில் 70% பெண்களே என்கிறது ஓர் ஆய்வு. இவ்வாறு இடம்பெயரும் பெண்கள் புதிய இடத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இன்னொருபுறம், விவசாயமோ இயற்கை சார்ந்த தொழிலோ காலநிலை மாற்றம் காரணமாகப் பொய்த்துப்போய்விட்டால், ஆண்கள் மட்டுமே பிழைப்புக்காக வேறு ஊர்களுக்குச் செல்வதும் நடக்கிறது.

மாதவிடாய்ப் பொருட்களின் சூழலியல் அம்சங்கள்

அந்தக் காலத்தில் குப்பி அல்லது டேம்பான் போன்ற பொருட்களால் பெண்களின் கன்னித்தன்மை போய்விடும் என்ற பயமும் இருந்தது. இன்னொருபுறம், இந்த மாதவிடாய்க் குப்பிகளை ஒரு முறை வாங்கிவிட்டால், அவற்றைப் பத்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால், குப்பிகளை விற்பனை செய்த பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஆகவே தொடர் லாபம் தராத மாதவிடாய்க் குப்பிகளை உற்பத்தி செய்ய நிறுவனங்களும் முன்வரவில்லை. மாதவிடாய் சார்ந்த முதலாளித்துவம் (Period Capitalism) என்ற இந்த அம்சமும் நாப்கின்களின் புகழுக்கு ஒரு முக்கியக் காரணம்.

"நம் வீடு பற்றி எரிகிறது..."

உலக அளவில் இளைஞர்களிடையே காலநிலை செயல்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் க்ரெட்டாவின் பங்கு முக்கியமானது. அவரது செயல்பாடுகளால் உந்தப்பட்டு 150 நாடுகளில் உள்ள பதின்பருவத்தினர் காலநிலை செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். க்ரெட்டாவைப் பார்த்து ஊக்கம் பெற்று இவ்வாறு இளைஞர்கள் களத்தில் இறங்குவது ‘Greta Effect’ என்று அழைக்கப்படுகிறது. சமகால சூழல் வரலாற்றில் க்ரெட்டா ஏற்படுத்தியிருக்கும் சலசலப்பு மிகவும் முக்கியமானது, அவசியமானதும்கூட.

சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் பைபிள்

தடை செய்யப்பட்டாலும் அப்போதைய பயன்பாட்டின் நச்சு எதிரொலி இன்று வரை தொடர்கிறது என்பதையே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டிடிடி பயன்பாடு அதிகமாக இருந்த நாற்பதுகளில் குழந்தைகளாக இருந்தவர்களிடம் ஆரம்பித்த பாதிப்பு, அவர்களது மூன்றாம் தலைமுறை வரை தொடர்கிறதாம். “நான் குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். 40களில் குழந்தைகளாக இருந்தவர்களின் மூன்றாம் தலைமுறை, அதாவது அந்தப் பாட்டிகளின் பேத்திகளை ஆராய்ந்து வருகிறேன். இவர்களுக்கு மார்பகப் புற்றுநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன” என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் பார்பரா கோன்.

கருப்பைக்குள் படியும் நச்சுப்புகை

காற்று மாசுபாடுகளிலேயே மிகவும் கவலையளிக்கும் ஒரு வகைமை என்பது உட்புறக் காற்று மாசு (Indoor Air Pollution). அதாவது ஒரு வீட்டுக்குள்ளோ கட்டிடத்துக்குள்ளோ இருக்கும் காற்று மாசு இது. காற்று மாசு என்றதுமே நமக்கு வானுயர தொழிற்சாலைக் கட்டிடங்களில் இருந்து வெளியாகும் புகைதான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, வெளிப்புறக் காற்று மாசுக்கு ஈடான பாதிப்பு வீட்டுக்குள்ளும் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.

நீர் ஜனநாயகம்

சாதி, வர்க்கம், வசிக்கும் பகுதிகளின் ஆண்மைய மனப்பான்மை ஆகிய எல்லாவற்றையும் பொறுத்து பெண்களின்மீதான நீர்ச்சுமை அதிகரிக்கிறது. இந்தப் படிநிலைகள் நீங்கலாகப் பார்த்தாலும் நீர்ப் பிரச்னைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தாம். “உலக அளவில் நீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளைச் சேர்ந்த 80% குடும்பங்களில் நீர் சேகரிப்பது பெண்களின் தனிப் பொறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், உலக அளவில் நீர் பற்றிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க பதவிகளில் 17% மட்டுமே பெண்கள்” என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று.

கானல்நீர்ப் பெண்டிர்

ஏற்கெனவே திருமணமாகியிருந்தும், தண்ணீர் சேகரிக்க ஆள் போதவில்லை என்பதற்காக மட்டுமே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை இது! சில சமயங்களில் இரண்டாவது மனைவியும் நீர் சேகரிக்கப் போதாமல் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட ஆண்களும் இருக்கிறார்கள்.

காடு யாருக்குச் சொந்தம்?

கிராமப்புற ஏழை எளிய மக்கள் சூழலையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற உலகளாவிய பொது புத்தியையும் சிப்கோ இயக்கம் மாற்றியமைத்தது. வளங்கள் மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்கான மக்களின் இயக்கம் வெற்றி பெறும் என்பதற்கு சிப்கோ இயக்கம் உலகளாவிய முன்னுதாரணமாக விளங்கியது. சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடுவது பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்காக இருந்த காலட்டத்தில், சூழலைப் பாதுகாப்பது ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் என்ற ஒரு புரிதலை சிப்கோ இயக்கம் ஏற்படுத்தியது. உலகளாவிய சூழல் லட்சியங்களில் சிப்கோவுக்கு இருந்த தாக்கம் அளப்பரியது.

சூழலும் பெண்களும்

ஓர் இடத்தின் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னொருபுறம், சீரழிந்த சுற்றுச்சூழலை யார் பாதுகாக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சூழல் பாதுகாப்புக்காகக் குரல் கொடுக்கும் பெண்களைப் பாராட்டும் அதே நேரம், பச்சை மையில் கையெழுத்துப் போட்டு இந்த முடிவுகளை எடுக்கும் இடங்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பதையும் கேள்வி கேட்க வேண்டும். இவற்றைத் தவிர, சாதி, வர்க்கம் போன்ற வெவ்வேறு சமூகப் படிநிலைகள் இந்தப் பிரச்னைகளுக்குள் எப்படி இயங்குகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும்.