அடுக்களையிலிருந்து ஐ நா சென்ற தன் அனுபவங்களை கட்டுரைத் தொடராகத் தருகிறார் ஆசிரியை ரமாதேவி.
அமெரிக்க விசாவுக்கும், கல்வித்துறை அனுமதிக்கும் பைரவராய்(!) அல்லாடிக்கொண்டிருந்த ஒரு நாள் உறக்கம் கலைத்த தொலைபேசி அழைப்பு…..”Ms Ramadevi, we are from American Consulate….”
குரல் கேட்டு அட்டென்ஷனில் , “யெஸ்ஸ்ஸ் சார்…சொல்ல்ல்லுங்க சார்….”,என சவுண்டாக விறைப்பைக்காட்டி எழுந்து நிற்க, அமெரிக்க ஆங்கிலத்தில் குசல விசாரிப்புகள்; அங்கு நான் உரையாடுவது குறித்த செய்திகள். “யா…யா…யெஸ், யெஸ்…நோ..நோ”, என ‘படிக்காதவன்’ ரஜினி பாணியில் இங்கிலிபீசில் நான் டாக் பண்ண…” யு ஆர் ஒன்லி ஒன் பெர்சன் ப்ரம் இந்தியா, மிஷைல் ஒபாமா அட்டென்ட்ஸ் த ப்ரோகிராம்..வீ வான்ட் டூ சீ யூ இன் கஞ்சிவராம் (காஞ்சிபுரம்) ட்ரடிசனல் ட்ரஸ்”.
டொக்…. போன் கட் ஆயிடிச்சி. ஆஹா.. எங்கோ இருக்கும் அமெரிக்கனுக்கு காஞ்சிபுரம் பட்டு சேலை தெரிஞ்சிருக்கே, அடடா..பெருமை தாங்கல. மறுநாள் மலேசியாவில் உள்ள உலகக் கல்வி அமைப்பின் ஆசியா பசிபிக் அலுவலகத்திலிருந்து அழைப்பு. அதே செய்திகளுடன் கூடுதலாக காஞ்சிபுரம் பட்டுப்புடவை ( உடம்பும், பார்டரும்) கான்ட்ராஸ்ட் கலர்களில் என விளக்கம் வேறு. ”அய்யோ எங்க அப்பத்தா கூட கட்டாத அந்த காலத்து டிசைன் ஆச்சே… இன்னுமா நீங்க அப்டேட் ஆகல ஆப்பிசர்? “, மைன்ட் வாய்சை அடக்கிவிட்டு , மீண்டும் கீறல் விழுந்த ரிக்கார்டாக “யெஸ் மேம், நோ மேம்”…
அத்தோடு விட்டால் பரவாயில்ல, நகைகள், பூ மற்றும் தமிழ் கலாச்சார அடையாளங்களுடன் என ஒருங்கிணைப்பாளர் சசி பாலா சிங் விளக்கி விட்டு கிண்டலாக, “சுருக்கமாக சொன்னால் தமிழ் மணப்பெண் போல வா ரமா”, எனக் கூறி டொக். மணப்பெண் போலவா? சட்டென நம்தன நம்தன பாடும் ரேவதி, கன்னத்து திருஷ்டி பொட்டோடு என்னைப் பார்த்து கண்ணடித்து சிரித்தது போல மனக்கண்ணில் தெரிந்தது. மறுக்கா மொதல்ல இருந்தா………ஙே…..இப்படியெல்லாமாப்பா ஒரு ட்ரெஸ்கோட் கொடுப்பீங்க? ஏற்கனவே திவாலான நம் கம்பெனி மீண்டும் ஷாப்பிங் போனால் தாங்காது என்பதால், இருக்கும் சேலைகளில் ஒன்றை தேர்வு செய்து வைத்துக்கொண்டேன்.
ஐ நா விற்கு நான் அனுப்பிய என்னைப் பற்றிய குலம், கோத்திரம், தகவல்களில் குடும்ப உறுப்பினர்களோடு சேர்த்து , அம்மா, அம்மம்மா, அப்பா, அப்பப்பா , அத்தை, அத்தத்த்தை ஜாதகம் வரை கொடுத்தாச்சு. நான் நியூயார்க்கில் இருக்கும் நாட்களில் எனக்கு ஏதாவது ஆனால்(!!??? என்னய்யா செய்யப் போறீங்க என்னை?? எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்கப்பூ..??), இந்தியாவில் தொடர்பு கொள்ள வேண்டிய நபர், போன் நம்பர், ஜாதகம் கேட்க தம்பியை பலிகடா ஆக்கியாச்சு. அடுத்தடுத்த நாட்களில் எனது மற்றும் உடன்பிறப்பின் போன்கால்கள் அனைத்தும் ரிக்கார்டு செய்யப்பட்டன. எங்களுக்கு அடிக்கடி போன் வரும் எண்களும் கண்காணிக்கப்பட்டன.
தம்பி சரவணன் ஈ.பியில் அரசுப்பணி மற்றும் ஊழியர் சங்கத்தின் உயர் மட்ட பொறுப்பில் இருந்ததால் அவனுக்கான தொல்லை அதிகமாக இருந்தது. உடன்பொறப்புக்காக, ‘கிழக்குச்சீமயிலே’ விஜயகுமாராக ( பொறுமையாக) மாறியிருந்தான். ராக்கோழி போல நடுராத்திரிலாம் தூங்கவிடாம, வெளிநாட்டு எண்ணிலிருந்து இருவருக்கும் அழைப்புகள். நாம பேசறது அவிங்களுக்கு புரியல…அவிங்க பேசறது நமக்கும் புரியல. எதுக்கு இவ்வளவு அலப்பறைன்னும் தெரியல! ஆனா எங்க ரெண்டு பேரையும் அவிக கன்ட்ரோலுக்கு கீழ கொண்டு போய்ட்டாங்கனு மட்டும் புரிஞ்சது.
துறை அனுமதி பெறும் சடங்கோ எண்டு கார்டு இல்லாமல் போய்க்கொண்டேயிருந்தது. ஏழரை மணிக்கு பிரதமர் உரைனா வருமே ஒரு திகில், அது போல தினம் தினம் என்ன பேப்பர் ( டாக்குமென்ட்) கேட்பாங்களோன்னு திகில்மயம்தான். வீட்டில் எடைக்குப் போட வைத்திருந்த குமுதம் கல்கண்டு முதல், என் பொண்ணு எழுத வைத்திருந்த ரெண்டுகோடு நோட்டு வரை கொடுத்தாச்சி.
ஆனால், ஐ.நா கடிதம் வந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் என்னை விட டென்சனுடன் என்கூடவே அலைந்து, நான் சோர்வுறும் போதெல்லாம், ம்ம்ம்ம்ம்…..இன்னும் கொஞ்சம் தான், இன்னும் கொஞ்சம் தான்னு என்னைத் தள்ளிக் கொண்டேயிருந்த தோழி பொற்செல்வி இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி ஆல்வேஸ்…இன்னிக்கு வரைக்கும். எனக்கான ப்ளைட் டிக்கட், நியூயார்க்கில் தங்கப்போகும் ஹோட்டல் ரூம் உறுதி செய்யப்பட்டு மெயில் வந்து விட்டது. நியூயார்க் கிளைமேட் முதல் கிடைக்கும் சாப்பாடு வரை செய்தி சொல்லப்பட்டது. ஏர்போர்ட்டில் என்னை அழைக்க வருபவர் போட்டிருக்கும் கோட் கலர் வரை தகவல் வந்து விட்டது.
கருத்தரங்குக்கு கொஞ்சம் தயார் செய்து, என்ன பேசப் போகிறோம் என்பதை உலகக் கல்வி அமைப்பிற்கு தெரிவித்து, கல்வி அமைப்பின் மூலமே வெளியுறவுத்துறையிடம் அனுமதி பெற்று ( இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிடக் கூடாதில்ல) பேச வேண்டிய பேசிக் கன்டென்ட்டும் ரெடி. விசா மட்டும் கிணற்றில் போட்ட மலை போல தேமேனு கெடக்கு. விசா நேர்காணலுக்கு தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி ஏதாவது ஒரு மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழுக்கான தேதி எனது பயண தேதி வரை கிடைக்காததால், உயிரைத் தற்காலிகமாகத் துறந்து ( தமிழ் தானே நமக்கு உயிர்?)ஆங்கிலத்தில் நேர்காணல் செய்யவும் ஒத்துக் கொண்டேன். அப்பவும் ‘தேமே’ தான்.
உலகக் கல்வி அமைப்பிலிருந்து டில்லியில் இருக்கும் அமெரிக்கன் எம்பஸிக்கு, “ இந்த மாரி, இந்த மாரி…. இவங்க ரொம்ப நல்ல மாரி, இந்த மாரி இந்த மாரி, இவங்க “தரமான கல்வி” குறித்த உரையாடலுக்காகத்தான் அமெரிக்கா வாராங்க, சாமி சத்தியமா இந்தியா திரும்ப வந்திடுவாங்க, கல்வி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான தற்காலிக B1 விசா கொடுத்தா போதுமுங்கோவ்” னு கடுதாசி ஒண்ணு அனுப்ப, ஒருவழியாக நேர்காணலுக்கான அழைப்பு வந்தாச்சு.
செப்டம்பர் 23 ம் தேதி காலை 1.45 க்கு டில்லியிலிருந்து ப்ளைட். நான் 22 ம் தேதி காலை மதுரையிலிருத்து கிளம்ப வேண்டும். செப்டம்பர் 16, 17 இரு நாட்கள் நேர்காணல் என்று மெயில் வருகிறது. நடுவில் இருப்பது நான்கே நாட்கள். நேர்காணலில் தேர்வு பெற்றாலும் கூட, உடனே விசா கிடைக்காது. பாஸ்போர்ட்டை வைத்துக் கொள்வார்கள். ஏழு நாட்கள் கழித்துதான் விசா ஸ்டாம்பிங் அடிக்கப் பட்ட பாஸ்போர்ட் நம் கைக்கு வரும். நம்பிக்கையே இல்லை. “சோனமுத்தா…போச்சா” னு அசரீரி கேட்குது. ட்ராவல்ஸ் பொண்ணு நம்ப டென்சன் புரியாம…’அக்கா கவலைப் படாதீங்க, விசா ரிஜெக்ட் ஆயிடிச்சினா 15 நாள் கழித்து மறுபடியும் அப்ளை பண்ணலாம்’, என வெந்த புண்ணில் ஆல்கஹாலை ஊற்ற, நெற்றிக் கண்ணை திறந்து எரித்து விட்டு, 16ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் போனால், கூட்டம் அள்ளுகிறது.
ரெண்டு கி.மீ. நீளத்துக்கு க்யூ. க்யூ எவ்ளோ நீளம் இருக்குனு ஆட்டோ ட்ரைவ் பண்ணி பார்த்த அறிவாளி நான். ‘அமெரிக்கா போக இம்பூட்டு பயபுள்ளக நிக்குதுவளே’ னு மெரண்டு போய் , மீண்டும் ஆட்டோலயே க்யூ கடைசில போய் விட்ருப்பானு சொன்னா…ஏதோ வினோத ஜந்துவ பார்க்குறது போல பார்த்துட்டு கொண்டு போய் விட்டார் ஆட்டோக்கார். க்யூவில் நானும், என்னோடு க்யூவும் ஊர்ந்து ஊர்ந்து செல்ல…முதல் நாள் விசா அப்ளிகேசன் சென்டரில் நமது டாகுமென்ட்ஸ் எல்லாம் சரி பார்க்கப்பட்டு, சில பல கேள்விகளுடன் கைரேகை, போட்டோ எடுக்கப்பட்டது. அன்று இரவு ஐநா கனவு – கனவு மட்டுமே, என்ற உறுதியான நம்பிக்கையுடன் தூக்கமின்றி புரண்டு, காலையில் கலைந்த ஐ நா கனவுகளுடன், அண்ணா சாலையில் உள்ள அலுவலகம் நோக்கி பயணம்.
காலை 11 மணிக்கு நேர்காணல். ஆசிரியர் வேலைக்கான நேர்காணலையே அசால்ட்டாக இடதுகையில் ஹேண்டில் பண்ணிய எனக்கு கொஞ்சம் படபடா…..மயங்கி விழுந்தா தூக்கிவிடக்கூட துணைக்கு ஆளில்லை. அக்கம் பக்கம் விசாரிக்க, விசா கொடுப்பதை விட ரிஜக்ட் பண்றது தான் அதிகம் என பேசிக்கொண்டனர். அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலைபார்க்க வழங்கப் படும் H 1 B விசா வாங்குவதற்கே இந்தியாவின் எதிர்காலம் (இளைஞர் பட்டாளம்) அங்கு குவிந்திருப்பதைக் காண முடிந்தது. உலகிலேயே அமெரிக்க H 1 B விசாவிற்கு அதிக அளவில் விண்ணப்பிப்பவர்கள் இந்தியர்கள் தானாம். “தமிழன்டா, தமிழ் டா, உயிர் டா” னு வசனம் பேசும் பல பச்சை, மஞ்சள், சிகப்புத் தமிழ் ஹீரோக்களும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாம். இதெல்லாம் காத்து நின்ற எனக்கு, காத்து வாக்குல வந்த செய்தி.
எனக்கு முன்னே நின்றிருந்த பெண், இரண்டு முறை ரிஜக்ட் செய்யப்பட்டு மூன்றாம் முறையாக வந்திருக்கிறார். கணவன் அமெரிக்காவில் பணிபுரிய, டிப்பன்ட்ன்ட் ( H4) விசா கேட்டு அலைகிறார். தடக் தடக் இதயத்தோடு நின்றிருந்த அவரையே நான் படக் படக் இதயத்தோடு பார்க்க, ஐந்து நிமிட விசாரணைக்குப் பிறகு ரிஜக்ட்டடு என்ற ஸ்டாம்பிங் அடிக்க, அந்தப் பெண் பாவம் அழுதே விட்டார்.
‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ னு முடிவுக்கு வந்த நான் விரக்தியுடன் நிற்க, அந்த அமெரிக்க இளைஞன் அட்டகாசமாய் சிரித்தபடி கேள்விகளைத் தொடங்கினான். “வாவ்…யு ஆர் அ டீச்சர்…..வாவ்….யு அர் கோயிங் டூ அட்டன்ட் யு என்”…… ‘வாவ் வாவ்’ என வாக்கியத்திற்கொரு முறை அநியாயத்திற்கு ஆச்சர்யப்பட்டான். நம்ம ஊர் ‘வவ் வவ் ‘ ஆபீசர்களுக்கு ஆப்போசிட்டா சிரிச்சிகிட்டே, “வாட் ஆர் யு கோயிங் டூ ஸ்பீக் இன் த கான்பரன்ஸ்? ஸ்பீக் ட்டூ மினிட்ஸ் நௌ”, என எனக்கே ( டீச்சர்க்கே)டெஸ்ட் வைக்க, வாய்பாடு ஒப்பிக்கத் தயாராகும் ஒண்ணாப்பு புள்ள போல ரெடியாகி கையைக் கட்டி, “ ரெஸ்பெக்கட்ட் சார், அஸ் ஐயம் சபரிங் ப்ரம் பீவர்” என ஆரம்பிக்க, பயந்து போய் ( யாரு கிட்ட..?) ஓ.கே ஓ.கே என என்னை நிறுத்தி விட்டு ஏதோ கிறுக்கினான்…
நிமிர்ந்து என்னைப் பார்த்து, “கங்ராட்ஸ்..யு அர் எலிஜிபில் பார் கெட்டிங் விசா” சந்தோசத்தில் மலங்க மலங்க விழித்த என்னைப் பார்த்து, ‘இங்கிலீஷ் தெரியாத ஊர்நாட்டான்’ போலனு நினைச்சிட்டு ,“ரெமாதெவிக்கு விசா க்டைச்சாச்சூ” என தமிழில் கத்த, அழகனின் அமெரிக்கத் தமிழ் கேட்டு மீண்டும் மயங்கினேன். அடுத்து நடந்தது தான் மாஸ் . “ஓ.கே. யூ கேன் கோ, யூ கேன் கலெக்ட் யுவர் பாஸ்போர்ட் நெக்ஸ்ட் வீக்” என அறிவிக்க, நான் மெதுவாக “அது வந்துங்க ஆபிசரய்யா” என அசடுவழிந்து , எனது ப்ளைட் டிக்கட்டையும், கான்பரன்ஸ் தேதியையும் காட்ட, “ஓ மை காட்”, என தலையில் அறைந்து கொண்டான் .
“வெயிட்” என என்னை நிற்க வைத்து விட்டு அவனே எழுந்து போய் உள்ளே உயர் அதிகாரிகளுடன் பேசிவிட்டு, பாஸ்போர்ட்டை கொடுத்து விட்டு வந்தான். “வெயிட் பார் டென் மினட்ஸ்” என என்னிடம் சொல்லி விட்டு அடுத்த ஆளை அழைத்து வேலையைத் தொடர்ந்தான். நான் நகம் கடித்து, போன் நோண்ட ஏழாவது நிமிடம் “ரெமாதெவி” என அதே குரல். அருகில் சென்றால் பத்து வருட விசாவுடன் என் பாஸ்போர்ட் ரெடி. “ஆல் த பெஸ்ட்”, எனச் சொல்லி அழகாகச் சிரித்து விட்டு அடுத்த பெயரை அழைத்துக் கொண்டிருந்தான்.
கலைந்து போயிருந்த என் ஐ.நா கனவு லல்லா…லால்ல்லலா…தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக்குடன் “ நீஈஈஈஈல வானம்…நீஈஈஈஈயும் நானும்” என ரிவர்ஸ் டெக்னாலஜியுடன் மீண்டும் ஒன்று சேர்ந்தது. இதுபோன்ற சூழலில் இந்திய அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், அதிகாரிகளின் செயல்கள் எவ்வாறு இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். பாஸ்போர்ட் ரெனிவல் பண்ணப் போன என்னை, அலையாய் அலைய வைத்து, இறுதியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் , கேட்ட சந்தேகத்திற்கு கூட பதில் சொல்லாமல் மூஞ்சியில் எறிவது போல பாஸ்போர்ட்டை தூக்கியெறிந்த மதுரை பாஸ்போர்ட் ஆபிசின் உம்மணாமூஞ்சி நடுத்தர வயதுப் பெண்மணி ஏனோ நினைவில் வந்து போனார்.
ஒரு வழியாக விசா ரெடி என்ற மகிழ்வுடன் ஊர் வந்து சேர்ந்தால், ஒன்பதாவது அதிசயமாக ( எட்டாவது அதிசயம் நிறைய பேரு சொல்லிட்டாங்களே!) கல்வித்துறை அனுமதி உரிய நேரத்தில் கிடைத்து விட்டதாக காதில் தேன் மாரி பொழிந்தது. ஆனால், அதற்குப் பின்னால் , நண்பர் இரமேஷ் முதல் , எங்கள் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு.நெ.ரெங்கராஜன் அவர்கள் வரையிலான ஆசிரியர்களின் அயராத அலைச்சல் இருந்தது . இவ்வளோ பரபரப்பிலேயும் ஒரு கிளுகிளுப்பாக, நியூயார்க்ல , இருக்கப் போற மூன்று நாளில், எங்க ஷாப்பிங் போலாம் ,என்னென்ன இடம் பார்க்கலாம் னு வீக் என்ட்ல டீ சாப்பிட(!) நியூயார்க் போய்ட்டு வரும் தம்பி திருப்பதி ராஜனும், தம்பி மனைவி ரஞ்சனியும் லிஸ்ட் போட்டு, தேவையான அமெரிக்கன் டாலர்களும் கொடுத்து, ஒன் டாலர் ஷாப் பற்றிலாம் டிப்ஸ் கொடுக்க அந்த நாளும் வந்தது.
உறவுகளும், நட்புகளும், ஆசிரியர் சங்க தோழர்களும் புடைசூழ, பெருங்கூட்டம் கண்டு மதுரை ஏர்போர்ட் கலகலக்க, ஏதோ அரசியல்வாதி போலனு செக்யூரிட்டி பதற, மதுரையிலிருந்து ஒருவழியா பிளைட் ஏறியாச்சு…….
பறப்போம்…
கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகள்
கட்டுரையாளர்
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!
Dear Akka,
It is nice to read the beautiful article with a clean Tamil speaking language. Nice to have the experience of traveling with your ARTCLE..
Many more success on you way..
Best Wishes from.
K.Thirupathi Rajan
Madurai
‘கனவுகள் மெய்ப்படட்டும் ‘ கட்டுரையின் ஆசிரியர் தானா இக்கட்டுரையை எழுதியது ?????……..
நீல வானும் நிலமும் போல் எத்தனை வேறுபட்ட மொழி நடை !!!!!!!………
புறநானூற்றுப் பாடல்களை புரட்டி எடுத்த கரங்களால் சென்னைத் தமிழை சிலாகித்து எழுதியிருக்கிறார் Hats off.