பாவாடை சட்டை
முழுநீளப் பாவாடை/ சட்டை நாங்கள் அணிந்த காலம் என்பது மிகவும் குறுகிய காலம் தான். எட்டாம் வகுப்பு வரை அரைப்பாவாடை போட்டுக் கொள்ளலாம். ஒன்பதாம் வகுப்பிற்குப் பின் தான் பாவாடை உடுத்த வேண்டும். பின் குறுகிய காலத்தில் தாவணிக்கு மாறிவிடுவோம். அதனால் முழுப் பாவாடை, சட்டை அணிந்த காலம் மிகவும் குறுகியது. பாவாடைக்கான சட்டை பஃப் கை வைத்து சிலர் தைப்பார்கள். மற்றபடி பெரும்பாலும் நீளச் சட்டை தான். நாங்கள் 9-10 படித்த காலத்தில் பெரும்பாலும் ஆண்கள் சட்டை போன்றே போட்டோம்.
முழுப்பாவாடை அணிந்து விளையாடும் போது இரு கை விரித்து கிறு கிறுவென சுற்றித் தரையில் அமர்ந்தால், கவிழ்த்து வைத்த கிண்ணம் போல நிற்கும். அதை ஒரு விளையாட்டு போலச் செய்வோம்.
1961
அரைப் பாவாடை Skirt / சட்டை
எங்களுக்கு விவரம் தெரிந்த நாள் முதலே நாங்கள் அணிந்தது அரைப் பாவாடை சட்டை தான். அரைப் பாவாடைக்கான சட்டையின் கைகள் பஃப் கை, நீளக்கை, முட்டிவரை வந்து பின் கிண்ணம் போல விரிந்த கைகள் என விதவிதமாகத் தைப்பார்கள். பைப்பிங் வைத்து தைத்த கழுத்து, வட்ட காலர் கழுத்து என கழுத்து தைப்பதிலும் சில வேறுபாடுகள் இருந்தாலும் பெரும்பாலும் வட்டக் கழுத்து தான்.
வளரும் பிள்ளை என நீளமாக தைத்து, பெரும்பாலும் முதல் ஆண்டு அது முக்கால் பாவாடை போன்றே இருக்கும்.
மும்பையில் இருந்து சிலரது அப்பாக்கள் கொண்டுவரும் பாவாடையில், பாக்கெட் இருபுறமும் இருக்கும். மும்பையில் இருந்து வரும் சில அரைப்பாவாடைகள் மேலே பெட்டிக்கோட்டுடன் வரும். வெளிநாட்டில் அப்பா இருந்தவர்கள் மட்டும் கவுன் போன்ற வேறு வகை ஆடைகள் சில அணிவார்கள்.
ரவிக்கைகள்
தாவணி சேலைகளின் மேலாடையாக ரவிக்கை உள்ளது. ரவிக்கை போடும் வழக்கம் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் ஓர் ஊரில் உள்ளவர்கள் அனைவருமே ரவிக்கை போடாமல், புதிதாக வரும் ஒரு மருமகள் மட்டும் ரவிக்கை போடுவதாக எடுக்கப் பட்ட திரைப்படம். படத்தில் முகத்தில் பூசும் பவுடர் போன்றவை எல்லாம் நாயகி போடுவார். ஊர்ப் பெண்களுக்கு அறிமுகம் செய்வார். அதனால் கதைக்களம் மிகவும் முந்தைய காலம் அல்ல. ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்தின் மிகவும் பிற்காலம் தான். அப்போது வரை கூட, ஓர் ஊர் முழுவதுமே ரவிக்கை போடாமல் இருந்திருக்கிறது. முதல் மரியாதையில் நடிகைகள் ராதா, ரஞ்சனி போன்ற ஒரு சிலரின் கதாபாத்திரங்கள் ரவிக்கை அணியவில்லை. இவ்வாறு ஊருக்கு ஊர் வேறுபாடு இருந்திருக்கிறது.
எங்கள் ஊரிலும் ரவிக்கை அணியாத பாட்டிகள் பலர் உண்டு. குறிப்பிட்ட காரணம் இருந்ததாகத் தெரியவில்லை. வீட்டில் பெண் பிள்ளைகள் நிறைய இருந்தால், அவர்களுக்கு ரவிக்கைகளின் தேவை நிறைய என நினைத்து நிறுத்தியது தான் காரணம் என என் அம்மா சொன்னார். அது உண்மையாக இருக்கலாம். ஒரே குடும்பத்தில் இருந்த இரு அக்கா, தங்கைகளில் ஒருவர் ரவிக்கை அணிபவராகவும் மற்றவர் அணியாதவராகவும் இருந்தார்.
புள்ளி போட்ட ரவிக்கைக்காரி
புளியம்பூ சேலக்காரி
நெல்லறுத்துப் போகையில்
யார் கண்ணி உந்தன் காவலடி
என்பது அன்னக்கிளி திரைப்படத்தில் வரும் நாட்டுப்புறப் பாடல். நாங்கள் சேலை கட்டும் காலக்கட்டத்தில் புள்ளியோ பூவோ எந்த விதமான டிசைனோ இல்லாத பிளைன் சட்டை தான் போட்டோம்.
பொதுவாகவே ரவிக்கையின் கையின் அளவு மணிக்கட்டில் இருந்து 4 இன்ச் மேலே இருப்பதுவாகவே இருந்தாலும் அவ்வப்போது அதில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தப் படம் 1960 ஆம் ஆண்டு எடுக்கப் பட்டது. இதில் பலர் பூ போட்ட சட்டைப் போட்டிருக்கிறார்கள்.
1951 பஃப் கை
1962 நீளக்கை சட்டை
1974
குட்டை கை
உள்ளாடை
உள்ளாடையாக அணிந்த பாவாடை எந்த டிசைனும் இல்லாத சீட்டித் துணியில் தைக்கப்பட்ட பாவாடையாக இருந்துவந்தது. ஏறக்குறைய 80 கள் காலகட்டத்தில் தான் இப்போது தைப்பது போல அம்பரெல்லா கட்டிங் பாவாடைகள் வழக்கத்திற்கு வந்தன.
அதேபோல பாடியும் தைக்கப்பட்டு தான் அணிந்தனர். முடிச்சு வைத்து சிலர் தைப்பார்கள். சிலர் இப்போது பயன்படுத்தும் சிம்மீஸ் போன்று சிறிது குட்டையாக தைப்பார்கள். 80 களுக்குப் பின் தான் பெருமளவில் ஆயத்த ஆடையாக அது உருமாறியது.
(தொடரும்)
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.