ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு வாங்கும் மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டு போகிறது. கடந்த மாத பில்லையும் இந்த மாத பில்லையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே நமக்குத் தெளிவாகப் புரியும். இந்த விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நடுத்தர மக்கள் தாம். பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலை அனைத்தும் விண்ணை முட்டும் அளவிற்குப் பல மடங்கு உயர்ந்துவிட்டன. இதன் நீட்சியாக உணவு, மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. நடுத்தர, அடித்தட்டு மக்களின் மாதச் சம்பளம் அப்படியே தான் இருக்கிறது . 4 பேர் கொண்ட சிறிய குடும்பத்திற்கான செலவு தற்போது இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது.

இவை போதாதென்று புதிதாக 143 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை உயர்த்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது. இது மேலும் மக்களைக் கலக்கமடையச் செய்துள்ளது. இதன்படி தற்போது 18 சதவீதமாக உள்ள 143 பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியானது 28 சதவீதமாக உயரவுள்ளது. 2022-2023ஆம் நிதியாண்டிற்கான சில்லறைப் பணவீக்கம் 5.7 சதவீதமாகக் கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி திறன் அதிகளவில் குறைந்ததும் இந்த விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தாமல், நாட்டின் வளர்ச்சி அதிகரிப்பது சாத்தியமில்லை என்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சமீபக் காலங்களில் தொழில்துறை வளர்ச்சிக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை, உணவு உற்பத்திக்கும் வேளாண்துறைக்கும் அரசு கொடுப்பதில்லை என்ற விமர்சனங்களில் பல விவசாயக் குடும்பங்கள் கடனில் மூழ்கித் தவிக்கின்றன. கடன் காரணமாக விவசாயத்தையே விட்டுவிடும் சூழலில் தள்ளப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தவண்ணம் உள்ளன.

தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நிகராக அதிகளவில் கட்டுமானத்தொழில் பொருட்களின் விலை உயர்வு அந்தத் துறையைத் தள்ளாட வைத்துள்ளன. பணமதிப்பிழப்பு, கொரோனா பேரிடர் எனக் கட்டுமானத் துறை கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் மந்த நிலையில் இருந்த நிலையில், இப்போது சற்று மீண்டு வந்தது. ஒவ்வொரு மாதமும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. கம்பி விலை, சிமெண்ட் விலை, செங்கல், ஜல்லி போன்றவற்றின் விலை ஏறியுள்ளதால் பல கட்டுமான நிறுவனங்கள் கட்டிடக் கட்டுமானத்தை விட்டுவிட்டு வெறும் கன்சல்டிங் அடிப்படையில் வேலையைச் செய்து கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல கட்டுமான நிறுவனங்கள் பாதியிலேயே பணியை நிறுத்தி வைத்துள்ளனர். தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு சிமண்ட் விலை சிறிதளவு குறைத்தது. இருப்பினும், கடந்த ஓர் ஆண்டுக்கு முன் இருந்த நிலையுடன் ஒப்பிட்டால் தற்போது சிமெண்ட்டின் மொத்த விற்பனை விலை குறியீடு 3% சரிந்துள்ளது. இப்படிப் பல துறைகளிலும் இதே நிலைமை தான், மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தால் சிறு, குறு தொழில் புரிவோர் திக்குமுக்காடிக்கொண்டிருக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் ஆர்டர்களை எடுக்கும் பல நிறுவனங்கள், திடீர் விலை ஏற்றத்தால் அதிகப் பாதிப்புக்குள்ளாகின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை பொருளாதாரச் சமநிலையை இழந்து அனைவருக்குமான வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது என்பதைப் பணக்காரர்கள் ஏழைகளுக்கான அளவுகோல்கள் உணர்த்துகின்றன. இங்கு பெரு முதலாளிகளின் வியாபாரக் கட்டமைப்பு நல்ல லாபம் பெற்று வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டுள்ளது. ஆனால், சிறு குறு வியாபாரிகளின் நிலைமை கொரோனாவிற்குப் பிறகு இன்னும் மோசமடைந்துள்ளது. வடிவேலு பாஷையில் சொல்வதென்றால் ‘பில்டிங் ஸ்டாராங்கு பேஸ்மெண்ட் வீக்கு’, இங்கே பில்டிங் என்று குறிப்பிடுவது கார்பரேட் நிறுவனங்களை, அவை அரசிடமிருந்து பல சலுகைகளைப் பெற்று நன்கு செழிப்பாக வளர்ந்துவருகிறது. ஆனால், நாட்டின் அடித்தட்டு மக்கள் அத்தியாவசிய செலவுகளுக்கே அல்லல்பட வேண்டியுள்ளது.

ஒரு பக்கம் அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் பத்திரிகையின் 2022-க்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி பத்தாவது இடத்திலும் அதானி பதினோராவது இடத்திலும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமியின் (CMIE) தரவுப்படி, இந்தியாவின் வேலையில்லாதோர் எண்ணிக்கை 8% சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் உலகில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் அதிகமாக இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

அதிகரித்துள்ள பல தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர கடன் அட்டைகளையும் லோன்களையும் தாராளமாக வாரி வழங்கிவருகிறது. இதனால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. எல்லாக் கடைகளிலும் உணவகங்களிலும் மக்கள் தாராளமாகச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். கிரெடிட் கார்டுகளின் வருகையால் நடுத்தர மக்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தைவிட வசதியான ஒரு வாழ்க்கைத் தரத்தை வாழ்ந்து பழகிவிட்டார்கள். இப்போது மேலும் மேலும் விலைவாசி உயர்வதால் கடனில் கார் வாங்கியவர்களும் வீடு வாங்கியவர்களும் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். சரி, இந்த விலைவாசி உயர்வைச் சமாளிக்கப் பொருளாதார நிபுணர்களிடம் அறிவுரை கேட்டால் அவர்கள் கூறுவது, வீட்டில் அனைவரும் முடிந்த வரை ஒரு வாகனத்தைப் பயன்படுத்துங்கள். மாதத்திற்கு நான்கு முறை உணவகங்கள் செல்லாமல் இரண்டு முறை செல்லுங்கள். மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது என்று நம் தேவைகளைக் குறைப்பது மட்டுமே இதற்கான தீர்வாக உள்ளது. இவை அனைத்தும் மக்களின் தனி மனித வாழ்வியல் தேவையில் எது தேவை, தேவையில்லை என்பதை முடிவு செய்வதாக இருந்தாலும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவாது. நாட்டின் ஒட்டுமொத்த சமநிலையான நீடித்த வளர்ச்சிக்கு அரசிடம் தான் இருக்கிறது மந்திரக் கோல்.

படைப்பாளர்

ரம்யா சுரேஷ்

Mphil ஆங்கில இலக்கியம் பயின்றவர்.