ஒரு மாதத்திற்குப் பிறகு இன்றுதான் ராகவி மீண்டும் மருத்துவமனைக்குள் வந்தாள். அந்தக் கட்டிடம் அவளுக்குப் பழக்கமான இடம்தான். ஆனால் இன்று அது வேறோர் உலகம்போல இருந்தது.
அனைவரும் தன்னையே பார்ப்பது போல், யாரோ கிசுகிசுப்பது போல் தோன்றியது. ஓய்வறையின் அருகே இருந்த கண்ணாடியில் தன் முகம் தெரிந்ததும் அவள் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். கடந்த ஒரு மாதமாக அவள் கண்ணாடியில் தன்னைப் பார்க்கவே விரும்பவில்லை.
கன்சல்டேஷன் ரூமுக்குள் நுழைந்த உடனே அவள் கை நடுங்க ஆரம்பித்தது. முன்னால் இருந்த ஸ்டெதஸ்கோப்கூட அவளுக்கு அந்நியமாகத் தோன்றியது. அதைக் கவனித்த நர்ஸ் நீலா மெதுவாக அவள் கையை அழுத்தினாள்.
“உன்னால முடியும் ராகவி…”
அந்த ஒரு வார்த்தையைக் கேட்டதும் ராகவியின் கண்கள் கலங்கின.
“இல்ல நீலா… என்னால முடியல… நான் ஒரு கொலைகாரி… என்னால ஒரு உயிர் போச்சு… நான் எப்படி இன்னும் உயிர காப்பாத்துற வேலையைச் செய்வேன்?”
அவள் மூச்சு வேகமானது. உடம்பு நடுங்க ஆரம்பித்தது. நீலா உடனே அவளை ஓய்வறைக்கு அழைத்துச் சென்றாள்.
“நீ கொஞ்சம் தூங்கு ராகவி. எல்லாம் சரியாகிடும்.”
அவள் கையைத் தட்டிக்கொடுத்து ஊசி போட்டாள். மருந்தின் மயக்கம் மெதுவாகப் பரவியது. ஆனால் அந்தக் கறுப்பு இரவு மட்டும் அவள் நினைவில் மீண்டும் தெளிவாகத் திறந்தது.
அன்று நல்ல மழை. அவசர பிரசவ கேஸ் ஒன்று மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
“அவங்க புருஷன் யாரு?”
முன்னால் வந்து நின்ற கணவனுக்கு மருத்துவ விவரங்கள் எதுவும் தெரியவில்லை. மனைவியின் ஃபைலை மட்டும் நடுங்கிய கைகளால் தந்தான்
“அம்மா… எப்படியாச்சும் ரெண்டு உசிரையும் நல்லபடியா காப்பாத்தி குடுத்துடுங்க…”
அவன் கண்களில் பயமும் பதற்றமும் மட்டுமே இருந்தது.
ராகவி அந்தப் பெண்ணின் ஃபைலைப் பார்த்தவரையில் ஏதும் பிரச்னைகள் இல்லை.
வலியால் கதறிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்த ராகவி வேறு எதுவும் பேசாமல் பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்றாள். அறைக்குள் செல்லும் முன் அந்தப் பெண் ராகவியின் கையைக் பிடித்தாள்.
“டாக்டர்… ரொம்ப வருஷம் காத்திருந்த குழந்தை… என் பிள்ளையைக் காப்பாத்தி என்கிட்ட குடுத்துடுங்க…”
நம்பிக்கை அளிக்கும் விதமாக அவள் கையைத் தட்டிக்கொடுத்த ராகவி, “எல்லாம் நல்லா நடக்கும். தைரியமா இருங்க” என்றாள்.
முழுக் கவனத்தோடும் சிகிச்சை ஆரம்பித்தாள். அவள் செய்ய வேண்டிய மருத்துவ நடைமுறைகளைச் சரியாக மேற்கொண்டாள்.
சில நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தை உயிருடன் பிறந்தது.
அந்த அழுகைச் சத்தம் கேட்டதும் ராகவி பெருமூச்சு விட்டாள். ஆனால் அந்த நிம்மதி சில நொடிகள் மட்டுமே நீடித்தது.
திடீரென அதிக ரத்தப்போக்கு ஆரம்பித்தது. (postpartum hemorrhage)
ராகவி உடனடியாகச் சிகிச்சையைத் தீவிரப்படுத்தினாள். தேவையான மருந்துகள், அவசர நடவடிக்கைகள், கூடுதல் உதவி — எல்லாமே செய்யப்பட்டன. மருத்துவக் குழுவினர் அனைவரும் போராடினார்கள். ஆனால் சில நேரத்தில் உயிர்ப் பறவை மருத்துவ அறிவையும் தாண்டி பறந்துவிடும்.
ரத்தப்போக்கு கட்டுப்படவில்லை.
சில நிமிடங்களில் மானிட்டரில் நேர்க்கோடு மட்டும் தெரிந்தது.
அந்த அறை முழுக்கக் கனமான அமைதி.
ராகவியின் காதுகளில் அவள் இதயத் துடிப்பு மட்டும் கேட்டது.
“நான் ஏதாவது தவறு பண்ணிட்டேனா?”
“இன்னும் ஏதாவது செய்திருக்கலாமா?”
அந்தக் கேள்விகள் அவளை நொறுக்கின.
வெளியே உண்மை தெரிந்ததும் முதலில் உடைந்து அழுத கணவன் பிறகு கோபமாக மாறினான்.
“நீங்க சீக்கிரம் பாத்திருந்தா அவ பொழைச்சிருப்பா.”
உறவினர்கள் கத்த ஆரம்பித்தார்கள்.
“நல்லாத்தான கூட்டிட்டு வந்தோம்… சாகடிச்சிட்டீங்களே!”
அந்த நொடியில் யாருக்கும் உண்மை தேவையில்லை. ஒரு குற்றவாளி மட்டும் வேண்டும்.
மருத்துவமனை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துடன் ராகவியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அதோடு முடியவில்லை.
யாரோ எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
“டாக்டரின் அலட்சியத்தால் உயிரிழப்பு.”
அதுதான் தலைப்பு.
முதல் நாள் சில நூறு பேர் பார்த்தார்கள். அடுத்த நாள் ஆயிரக்கணக்கான பேர் கருத்து எழுத ஆரம்பித்தார்கள்.
“இவ மாதிரி டாக்டர்ஸை ஜெயிலில் போடணும்.”
“கொலைகாரி.”
“காசுக்காக உயிரை வாங்குறாங்க.”
ஒவ்வொரு கருத்தும் அவள் மனதில் கல்லாக விழுந்தது.
ஓர் இரவு முழுக்க அந்த கருத்துகளைப் படித்துக்கொண்டே அழுதாள். போனை அணைத்த பிறகும் அந்த வார்த்தைகள் மட்டும் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.
சட்டப்படி ராகவி தவறு செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டது. மருத்துவரீதியாக அவள் சரியான முறையையே கையாண்டிருந்தாள். மீண்டும் பணியில் சேர அனுமதியும் கிடைத்தது.
ஆனால் அவளுடைய மனம் மட்டும் அவளை விடவில்லை.
ஒவ்வோர் இரவு தூங்கும்போது அந்தப் பெண்ணின் குரல் கேட்கும்.
“என் பிள்ளையைக் காப்பாத்தி என்கிட்ட குடுத்துடுங்க…”
அந்தக் கையைத் தட்டிக்கொடுத்த தன் கைகளில் எத்தனை முறை கழுவினாலும் அதில் ரத்த வாடை அடிப்பது போல உணர்ந்தாள்.
“நான் உயிர்காக்க தகுதியில்லாதவள்…”
அதைத்தான் அவள் மீண்டும் மீண்டும் நம்ப ஆரம்பித்தாள்.
மெல்ல தூக்கத்தில் இருந்து எழுந்த ராகவி அருகில் அமர்ந்திருந்த நீலாவைப் பார்த்தாள்.
“சாரி… உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்குறேன்…”
“நீ இப்படி உன்னையே காயப்படுத்திக்கிறதுதான் கஷ்டமா இருக்கு ராகவி.”
“நான் வேலையை விட்டுடப் போறேன்…”
நீலா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
“பேசுறது யாரு தெரியுமா? நிறைய பேரோட உயிர காப்பாத்தின டாக்டர் ராகவி.”
ராகவி உடைந்து சிரித்தாள்.
“ஆனா இப்போ நான் கொலைகாரி.”
“என்ன பேச்சு இது?” என்று நீலா குரல் உயர்த்தினாள். “ஒரு டாக்டரா உன்னால முடிஞ்சதை எல்லாம் நீ செஞ்ச. அதுக்கு மேல நாம கடவுள் இல்லயே ராகவி.”
ராகவி அமைதியாக அழுதாள்.
“எனக்குத் தெரியும்… ஆனா அந்தக் குழந்தையின் அம்மாவை என்னால மறக்க முடியல. அவ என்னை நம்பி கையைப் பிடிச்சா.”
நீலா மெதுவாக அவள் அருகில் அமர்ந்தாள்.
“நாம அதிகமா பேசுறது நம்ம மனசுகிட்டதான். அதுல என்ன பதிய வைக்கிறோமோ அதுதான் நம்ம வாழ்க்கையா மாறும்.”
“நான் என்ன பதிய வச்சேன்?”
“அந்தப் பெண்ணின் சாவுக்கு நீயும் காரணம்னு நீயே நம்பிட்ட. அதான் வெளியில யாரோ ‘கொலைகாரி’ன்னு சொன்னதும் உன் மனசும் அதையே நம்பிச்சு.”
அறை முழுக்க அமைதி.
பிறகு நீலா மெதுவாகச் சொன்னாள்.
“முதல்ல ஒரு விஷயம் மட்டும் நம்பு. நீ ஒரு மனுஷி. உனக்குன்னு வரம்புகள் இருக்கு.”
அந்த வார்த்தைகள் ராகவியின் உள்ளத்தில் ஆழமாக இறங்கின.
“ஆம்… நான் மனுஷிதான்… ஆனா இன்னும் என்னால என்னை மன்னிக்க முடியல.”
“பரவாயில்ல. இன்று மன்னிக்க வேண்டிய அவசியம் இல்ல. முதல்ல குற்றவாளி மாதிரி பார்க்குறதை நிறுத்து. மன்னிப்பு அதுக்கப்புறம் வரும்.”
அந்த வார்த்தைகள் ராகவியை யோசிக்க வைத்தன.
சில நொடிகள் கழித்து அவள் மெதுவாக எழுந்து அருகில் இருந்த கண்ணாடி முன் நின்றாள்.
ஒரு மாதமாகத் தவிர்த்த அந்த முகத்தை மீண்டும் பார்த்தாள்.
“நான் மனுஷிதான்… என் செயல்பாட்டுக்கு ஒரு வரம்பு இருக்கு…”
அந்த ஏற்றுக்கொள்ளுதல் மெதுவாக அவளுக்குள் ஒரு கதவைத் திறந்தது.
அவள் உடனே குணமடைய மாட்டாள். அந்த நினைவுகள் உடனே மறையவும் மாட்டாது. ஆனால் இனி அவள் தன்னையே வெறுக்காமல் வாழக் கற்றுக்கொள்வாள்.
அந்த நம்பிக்கையோடு ராகவி தன் வாழ்க்கையின் அடுத்த அடியை நோக்கி நகர்ந்தாள்.
“உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்.
(தொடரும்)
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.





