அங்கே சாலை ஓரமாக இருந்த ஒரு பெரிய மரத்தடியில் வந்து நின்று கோலவிழியை விடுவித்தான் கஜா.

“ஏதோ அறிவில்லாம  யூடியூப்ல பணம் சம்பாதிக்கலாம்ன்ற நெனப்புல ஆட்டமா ஆடிட்டு இருக்க, போகப்போக நீயே புரிஞ்சுக்குவன்னு இருந்தா, நீ என்ன இப்படித் தடம் மாறி போயிட்டு இருக்க?” எனப் படபடத்தான்.

“நீ என்ன கஜா, இப்படி அடாவடி பண்ணிட்டு இருக்க? இத்தனை வருஷம் கழிச்சுப் பார்த்த சந்தோஷம்கூட ஒரே செகண்ட்ல போயிடுச்சு.”

”நான் அடாவடி பண்றனா, இல்ல  நீ அடாவடித்தனம் பண்ணிட்டு இருக்கியா? அக்காவும் மாமாவும் உன்ன நெனச்சு எவ்வளவு வருத்தப்படுறாங்கன்னு தெரியுமா உனக்கு?”

“ஓ… அவங்களப் பத்தி எல்லாம் உனக்கு அக்கறை இருக்கா? இவ்வளவு வருஷத்துக்கு அப்புறமா திடீர்னு உங்க அக்கா மேல பாசம் பொங்கி வழியுதா உனக்கு?”

“பாசமோ கோவமோ மொகத்துக்கு நேரா காமிக்கிறதுல தப்பில்ல, ஒருத்தர சுயநலத்துக்காக உபயோகப்படுத்திக்கறதும், பாசம் இருக்கிற மாதிரி நடிக்கிறதும்தான் தப்பு.”

“யாரை இப்ப பாசம் இருக்கற மாதிரி நடிக்கிறாங்கன்னு சொல்ற?”

“ஏன் இதுல உனக்கு டவுட் வெறயா? உன்னத்தான் சொன்னேன்.”

“கஜா, வேணாம் சொல்லிட்டேன்” என்று குரலை உயர்த்தினாள் கோலவிழி.

“இதோ பாரு, இப்படிச் சத்தமா பேசினா மட்டும் நீ செய்யறது எல்லாம் சரின்னு ஆகாது. நீ இப்ப வந்திருக்கிற இந்த இடம் எவ்வளவு மோசமானது உனக்குத் தெரியுமா? சம்பளத்துக்காக வேலை செய்யற என்னாலயே இதையெல்லாம் சகிச்சுட்டுப் போக முடியல. வேற நல்ல வேலை கிடைச்சா இங்க இருந்து போயிடலாம்னு இருக்கேன்” என்றான்.

“நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணும் இல்ல. நம்பிக்கையான பிரெண்டு ஒருத்தங்க சொல்லித்தான் இங்க வந்தேன்.”

“யாரும்மா அந்த நம்பிக்கையான பிரண்டு?”

“அதை எதுக்கு நான் உன்கிட்ட சொல்லணும்?”

“சரி, நீ எதுக்கு வந்திருக்க, யார் சொல்லி வந்துருக்கன்னு எங்கிட்ட சொல்ல வேண்டாம். அக்காவுக்கு போன் போடுறேன், அவங்க கிட்ட சொல்லிக்கோ. இதிலேயே உனக்கு அவங்க மேல இருக்கிற அன்பும் அக்கறையும் தெரிஞ்சுடப் போகுது.”

“என்ன கஜா, என்ன பிளாக்மெயில் செய்யறியா?”

“ஆமாம், அப்படித்தான்னே வெச்சுக்கோ. ஒண்ணு எங்கிட்ட சொல்லு. இல்லன்னா அக்கா கிட்ட சொல்லு” என்று அவன் விடாப்பிடியாக நின்றதில் வேறு வழியில்லாமல்தான் வந்த காரணத்தை அவனிடம் சொன்னாள் கோலவிழி.

“ப்ளீஸ் கஜா, இதத்தான் என்னோட கடைசி முயற்சியா வெச்சிருக்கேன். இதுக்கு எந்தக் காரணம் கொண்டும் முட்டுக்கட்டைப் போட்டுடாத. இதுல நான் ஜெயிச்சா அது எல்லாருக்கும்தான் சந்தோஷம். ஒருவேள தோத்துப் போனா, நான் இந்தப் பாதையில இருந்து விலகி அக்கா என்ன சொல்லுதோ அதை அப்படியே கேட்டுக்கறேன்” என்று அவள் இறங்கி வந்த கெஞ்சவும் அவனுடைய முகம் கனிந்தது. இதழில் சிறு புன்னகை படர்ந்தது.

“நீ பொய்யிலயே பிறந்து, பொய்யிலயே வளர்ந்தவ மாதிரிதான் ஒவ்வொண்ணும் செஞ்சுட்டு இருக்க. உன்னை நான் எப்படி நம்புறது?”

“போ கஜா, உன்ன நம்ப வைக்க எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல” என்று முணுமுணுத்தாள்.

“சரி, நான் உன்ன நம்புறேன்னு வெச்சிக்கோ. ஒரு வேள இதுல உனக்குப் பிரச்னை வந்துதுன்னா இதோட இந்த வேலையெல்லாம் தலைமுழுக்கிட்டு, அக்கா சொல்றத நிச்சயம் கேட்பதான?”

“ஆமாம், சத்தியமா அக்கா சொல்றதைக் கேட்பேன்.”

“சரி, அப்படின்னா நானே உனக்கு உதவி செய்யறேன். நீ இதுல நேரடியா இறங்க வேண்டாம். எந்தப் பிரச்னை வந்தாலும் அது என்ன தாண்டி உன்கிட்ட வரட்டும்” என்று அவன் சொன்னதும் அவனை வியந்து பார்த்தாள். சிறுவயதில் அவனுடன் ஓடி ஆடி விளையாடிய நாள்கள் மனதிற்குள் நிழலாடியது. அப்பொழுது ஒரு விலை உயர்ந்த பெரிய ரக கார் ஒன்று அவர்களைக் கடந்து ரெசார்ட்டின் உள்ளே நுழைந்தது.

“சரி வா போகலாம். தங்கராஜ் சாரோட வண்டிதான் உள்ள போகுது” என்று திரும்பி நடந்தான்.

“ஆமாம், இப்ப நீ என்ன செய்யப் போற” என்று கேட்டாள்.

“உள்ள வா பேசிக்கலாம்” என்று சொல்லி ரிசப்ஷன் பகுதிக்கு வந்தவன், “மேடம், சார் வந்துட்டாங்கல்ல, இப்ப இவங்கள கூட்டிட்டுப் போய் அவர பார்க்கலாமா?” என்று அங்கு பணியிலிருந்தவரிடம் கேட்டான்.

“இவங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்களா? நிரஞ்சனா மேடம் சொல்லி வந்ததாதான சொன்னாங்க” என்று சந்தேகமாகக் கேட்டார் அந்தப் பெண்.

“இவங்க என்னோட கசின்தான். நிரஞ்சனா மேடம் சொல்லித்தான் வந்திருக்காங்க” என்றவன், “இவங்ககூட நானும் போய் சார பார்க்கணும்” என்றான்.

“இருங்க கேட்டுச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, தங்கராஜின் அலுவலக அறைக்குச் சென்று சில நிமிடங்களில் திரும்ப வந்த அந்தப் பெண், “சார் உங்க ரெண்டு பேரையும் வரச் சொன்னாங்க” என்றார்.

அவசரமாக அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அவனை முந்திக்கொண்டு சென்ற கோலவிழியைத் தடுத்து, “ஏய் முந்திரிக்கொட்ட, மரியாதையா என் பின்னால வா” என்று போய் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான். நாற்காலியில் அமர்ந்திருந்த தங்கராஜை பார்த்து “குட்மார்னிங், சார்” என்றான்.

அவனை ஏற இறங்கப் பார்த்தபடி, “பார் பவுன்ஸர்தான நீ, உன் பேர் என்ன?” என்று கேட்டார்.

“கஜபதி சார்” என்றான்.

“உன் டியூட்டி டைம் முடிஞ்சிருச்சில்ல, வீட்டுக்குக் கிளம்பாம நீ என்னடா இந்தப் புள்ளைக்கு பாடிகார்டு வேலை பார்த்துட்டு இருக்க?” எனக் குடைந்தார். அவரின் முகத்தில் சிரிப்பு இருந்தது. ஆனாலும் கேட்ட தொனி, சாதாரணமாகக் கேட்கிறாரா இல்லை, இடக்காகக் கேட்கிறாரா எனப் பிரித்தறியமுடியாவண்ணம் இருந்தது.

ஆனாலும் அசராமல், முந்தைய இரவு பாரில் நடந்ததை சொன்னவன், “இவங்க என்னோட மாமா பொண்ணுதான். நான் எதேச்சையாதான் இவங்கள இங்க பார்த்தேன். அதான் கூட வந்தேன்” என்றான்.

அதைப் புறந்தள்ளி, “ஏம்மா, ரஞ்சனா பொண்ணுகிட்ட ஏதோ பணத்தேவைன்னு சொல்லியிருந்தியாமே” என்று கோலவிழியிடமே நேரடியாகக் கேட்டார் தங்கராஜ்.

“ஆமாங்க சார், யூடியூப் அப்கிரேட் பண்ண ஏதோ செலவுக்காகக் கேட்டாங்களாம்” என கஜாவே பதில் சொன்னான்.

“ஏன் இந்தப் புள்ள பேசாதா?” என்று மீண்டும் முன்பு போன்ற அதே தொனியில் கேட்டார் தங்கராஜ்.

“அப்படில்லாம் இல்ல சார், இந்தச் சூழ்நிலை எல்லாம் பார்த்து கொஞ்சம் பயந்துட்டாங்க அதனாலதான் நான் துணைக்கு வந்தேன்” என்றான்.

“இல்ல. நீ பேசிட்டு இருக்குறதப் பார்த்தா, பணம் இந்தப் பொண்ணுக்குத் தேவையா இல்ல உனக்குத் தேவையான புரியலையே?” என்றார்.

அவர் பேசிய விதத்தைப் பார்த்து கோலவிழிக்குப் பதற்றமானது. அவர் அறியாவண்ணம்  அவனுடைய கையில் கிள்ளி வைத்தாள். வலித்தாலும் முகத்தில் எதையும் காண்பித்துக்கொள்ளாமல், “பரவாயில்ல சார், நானே அந்தப் பணத்த என் பொறுப்புல வாங்கி இவங்களுக்குக் கொடுக்கறேன்” என்று அவன் சொன்ன விதத்தில் இவர் நிச்சயம் பணம் கொடுக்கவே மாட்டார் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாள் கோலவிழி. ‘சனியன் பிடிச்சவன். இவன எதுக்கு இங்க பார்த்து தொலைச்சோமோ’ எனக் கண்டபடி மனதுக்குள் வசைபாடத் தொடங்கிவிட்டாள்.

“உன் பேர்ல பணம் கொடுக்கிறதைப் பத்தி எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. வரவேண்டிய தொகை மாசா மாசம் கரெக்டா என் கைக்கு வரணும். அவ்வளவுதான். ஒரு மாசம், ஒரு நாள் லேட்டானாகூட அதுக்கும் வட்டிய போட்டுடுவேன்” என்று கறாராக அவர் சொன்னதற்கும், “எவ்வளவு பணமோ, பிரச்ன இல்ல சார், மாசா மாசம் என்னோட சம்பளத்துல பிடிச்சுக்கோங்க” என்று சொல்லிவிட்டான்.

“அப்படின்னா ரொம்ப நல்லது, இப்பவே கையெழுத்துப் போட்டுட்டு, பணத்தை வாங்கிட்டுப் போ” என்றார் தங்கராஜ்.

“சரிங்க சார்” என்று அவன் சொல்லிவிட கோலவிழிக்குத்தான் கேட்டது உண்மைதானா என்று நம்ப முடியவில்லை. அசந்து போய் நின்றாள்.

உடனே அவர் தன் மேலாளரை அழைத்து தகவல் சொல்ல, தேவையான ஆவணங்களை கஜபதியின் பெயரில் தயார் செய்து அவனிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு ஐம்பதாயிரம் பணத்தை ரொக்கமாக அவனிடம் கொடுத்தார் தங்கராஜ். “அவங்ககிட்டயே குடுங்க” என்று அவன் ஒதுங்கிக் கொள்ளக் கோலவிழி தன் கைகளாலேயே அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டாள்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு இருவரும் ரிஷப்சன் பகுதிக்கு வந்தனர். கஜாவைக் குறித்து நிறைய கேள்விகள் எழுந்தன. அவனிடம் பேசித் தெளிவுபெற எண்ணினாள். அத்ற்குள், அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களைப் பார்த்ததும் அதெல்லாம் பின்னுக்குப் போனது. “ஐ ரஞ்சனா அக்கா, நேஹாஸ் மாம் வனிதா” என்றபடி குதூகலத்துடன் அவர்களை நோக்கி விரைந்தாள் கோலவிழி. எரிச்சலுற்று அப்படியே தேங்கி நின்றான் கஜா.

(தொடரும்)

படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.