அது ஒரு புலிட்சர் பரிசு பெற்ற படம். அந்தப் படத்திலிருந்தவர் ‘நேபாம் சிறுமி’ என்று உலகம் முழுக்க அறியப்பட்டவர். தன் உயிரைக் காப்பாற்ற உடைகளை உதறி சாலையில் நிர்வாணமாக கதறிக்கொண்டு ஓடிவந்த சிறுமியின் படம் மறுநாள் உலகின் பார்வைக்கு வந்தபோது உலகமே அதிர்ந்தது, அழுதது, வெகுண்டெழுந்தது. அந்த நாள்…
நாள் : ஜூன் 8, 1972
இடம் : தெற்கு வியட்நாமில் உள்ள ட்ராங் பேங் கிராமம்
அந்தக் குழந்தை தன் சகோதரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். உடன் வேறு சில குழந்தைகளும். போரின் பயங்கரம் குறித்து அந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திடீரென காதைக்கிழிக்கும் ஓசை, எங்கும் புகைமூட்டம்… சுற்றியிருக்கும் வீடுகள் தீப்பற்றி எரிந்தன, இல்லையில்லை… அந்தக் கிராமமே தீப்பிடித்து எரிகிறது. எங்கிருந்தோ வந்த தீ, விளையாடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தைகளின் ஆடைகளையும் பற்றிக்கொள்கிறது. ஒன்றும் புரியாமல் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் திடுக்கிட்டு கத்தினார்கள் அந்தக் குழந்தைகள். அவர்களைச் சுற்றியிருக்கும் அத்தனை பெரியவர்களும் ஓடுவதைக் கண்டு இவர்களும் தன்னிச்சையாக ஓடினார்கள். உடன் அந்தக் குழந்தையும் ஓடினாள். எங்கோ ஓரிடத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில் ஓடினார்கள். ஆடையில் பற்றிய தீ அந்தக் குழந்தையின் உடலைச் சுட்டெரித்தது, தகித்தது. எரிச்சல் தாங்காமல் அரற்றினாள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தன் ஆடைகளையெல்லாம் கிழித்துக்கொண்டு உடம்பில் துணியின்றி ஓடினாள். எதிரில் வருபவர் தெரியாத அளவுக்குப் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது.
வியட்நாம் போரில் அமெரிக்கத் தளபதியின் உத்தரவின் பேரில் தென் வியட்நாம் படையால் வீசப்பட்ட நாபாம் குண்டு அது. Napalm என்பது எரியக்கூடிய ஜெல், இது போரில் பெட்ரோல் போன்ற எரிபொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. வியட்நாமிய புகைப்படக் கலைஞர் நிக் உட் (Nick Ut) போர் படுகொலைகளைப் பதிவு செய்வதில் கவனமாக இருந்தார். எங்கெங்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள் ‘கடமையே கண்ணாக’ கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். திடீரென சிறிய குழந்தை ஒன்று நிர்வாணமாக qua nong….qua nong (Too hot, Too hot) எனத் தன் தாய்மொழியில் கத்திக்கொண்டு ஓடிவருவதை நிக் உட் பார்த்தார். தீ அவளது உடைகளைப் பொசுக்கி, தோல்களில் பரவி, கன்னங்கள், உதடுகள்கூடக் கருகியிருந்தன. அந்தக் குழந்தையுடன் வேறு சில குழந்தைகள், சில பெரியவர்கள் பயத்துடன் அலறிக்கொண்டே நெடுஞ்சாலையில் ஓடிவந்து கொண்டிருப்பதையும் கண்டார். ஒரு கணம் மூச்சடைத்தது அவருக்கு. ஆனாலும் உணர்வுகளை ஒதுக்கி வைத்து, நெஞ்சை உலுக்கும் அந்தத் தருணத்தைத் தன் கருவியில் உறைய வைத்தார். மறுநாள் அந்தப் படம் அமெரிக்க செய்தித்தாளான ‘தி நியூயார்க் டைம்ஸில்’ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. தன் கிராமத்தின்மீது போடப்பட்ட குண்டுகளால் எரிக்கப்பட்ட தீக்காயங்களோடு ஓடிவரும் இந்தப் பெண்ணின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலித்தது. போரின் அட்டூழியங்களுக்கு நேபாம் குழந்தை ஒரு குறியீடு ஆனார். வியட்நாம் அரசாங்கம் அவளைப் போரின் அடையாளச் சின்னமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. போரும் குண்டுகளும் அப்பாவிகளையும் குழந்தைகளையும்கூட விட்டு வைப்பதில்லை என்பதற்கு அந்தப் படம் சர்வதேச சான்றாக மாறியது. போரின் கொடூர முகத்திற்கு சாட்சியாக அந்தப் பெண் 17 விதமான அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு இன்றும் தன் உடலில் போரின் வடுக்களை, வலிகளை தாங்கி நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும், இந்த உலகம் அவளிடமிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ள வில்லை. அந்தக் குழந்தையின் பெயர் கிம் புஃக் (Phan Thi Kim Phuc).
வியட்நாமிய மொழியில் ‘காங் செயின் சோங் மை’ (அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்புப் போர்) என்றும் இரண்டாம் இந்தோசீனாப் போர், அமெரிக்க எதிர்ப்புப் போர், வியட்நாம் போர், வியட்நாம் பிரச்னை, வியட்நாம் முரண்பாடு என்றும் பல்வேறு பெயர்களால் வியட்நாம் போரை வரலாறு தனக்குள் பதிவு செய்துகொண்டது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சொந்த நாட்டின் ஐக்கியத்திற்காக நடந்த போராட்டம் அது. அமெரிக்காவின் கனரக பீரங்கிகளுக்கு முன்னால் தங்கள் ரத்தத்தாலும் மூச்சினாலும் வியட்நாமியர்கள் நிகழ்த்திய போர் அது.
1954இல் ஜெனிவா ஒப்பந்தத்தின்படி வியட்நாம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட, வடக்கில் கம்யூனிச அரசாங்கமும் தெற்கில் அமெரிக்க ஆதரவு அரசாங்கமும் அமைந்தன. தெற்கு வியட்நாம் அமெரிக்காவின் கைப்பாவை அரசாகச் செயல்பட்டதன் காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்ட வியட்நாமியர்களின் வாழ்வில் மீண்டும் ஒரு போர் திணிக்கப்பட்டது. தெற்கு வியட்நாமை அமெரிக்காவின் பிடியிலிருந்து விடுவிப்பது தங்கள் கடமை என்று வடக்கு வியட்நாமியர்கள் எண்ணினர். முழு வியட்நாமும் கம்யூனிஸ்ட் நாடுகளாகிவிடக் கூடாதே என்கிற அச்சம் அமெரிக்காவைப் போர் நோக்கி நகர்த்தியது. 1965இல் அமெரிக்காவிலிருந்து ராணுவத்தினர் வியட்நாம் வந்து இறங்கினர். கம்யூனிஸ்டுகளை நசுக்குகிறேன் என்று அமெரிக்க ராணுவம் பொதுமக்களை வீதியில் விரட்டி விரட்டி சுட்டது. கம்யூனிஸ்டுகள் எனச் சொல்லப்பட்டவர்கள் விசாரணையே இல்லாமல் கொல்லப்பட்டனர். புத்த பிட்சுகள்கூட இதை எதிர்த்துப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களையும் இரக்கமின்றி நசுக்கியது. புத்த பிட்சுகள் நடு வீதியில் உட்கார்ந்தவாறே தங்களைத் தாங்களே தீக்கிரையாக்கி தங்கள் உயிர்களை தாய்நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்தனர்.
10 வருடங்கள், நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள், (இன்றைய பண மதிப்பில் பல நூறு டிரில்லியன்கள்), அறுபதாயிரம் அமெரிக்க உயிர்கள், பல்லாயிரக்கணக்கான காயமடைந்த வீரகள் எனத் தயங்காமல் காவு கொடுத்தது அமெரிக்கா. 35 லட்சம் அமெரிக்க வீரர்கள் பங்கேற்று சுமார் 58 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்கிறது அரசின் கணக்கு. இந்தப் பக்கமும் இழப்புக்குக் குறைவில்லை. போர் வீரர்களும், பொதுமக்களுமாக 30 லட்சம் வியட்நாமியர்கள் கொல்லப்பட்டனர். 20 லட்சம் குடிமக்கள் காயமுற்றனர். 3 லட்சம்பேர் காணாமல் போயினர்.
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த பனிப்போர் வியட்நாம் போரை மேலும் தீவிரப்படுத்தியது. வியட்நாமின் அமைதியான கிராமங்களில்கூடக் குண்டுகளை வீசியது அமெரிக்கா. அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் ‘தேடுதல் – அழித்தல்’ என்பதே கட்டளையாகக் கொடுக்கப்பட்டு, ‘உடலின் எண்ணிக்கையை’ அதிகப்படுத்துவதே அவர்களுக்கான அசைன்மென்ட்டாக இருந்தது. அமெரிக்காவின் நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் பார்த்து மிரளாத ஹோ சி மின்னின் கெரில்லாப்படை அமெரிக்காவின் ராணுவத்தளங்களுக்குக் குண்டு வைத்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளிலும் குளிரிலும் தாக்குப்பிடிக்க முடியாத பல அமெரிக்க வீரர்கள் போர்களத்திலிருந்து தப்பி ஓடினர். போர்க்களத்தின் சில நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் கலக்கமூட்டுவதாக இருக்கிறது.
நாள்: பிப்ரவரி 25, 1969
நேரம்: இரவு 8 மணி முதல் 9 மணி
இடம் : தான் ஃபோங் கிராமம்
இளம் அமெரிக்க சிப்பாய் பாப் கெர்ரி சிப்பாய் மட்டுமல்ல, அமெரிக்க செனட்டரும்கூட. அவரின் திறமையறிந்து, பதவி உயர்வு கொடுத்து வியட்நாமுக்கு அனுப்புகிறது அமெரிக்க அரசு. லெப்டினன்ட் பாப் கெர்ரி தலைமையிலான குழு வியட்நாம் வந்திறங்கியது. கிராமம் கிராமமாக கம்யூனிஸ்டுகளைத் தேடுவதாகக் கூறி மக்களை வேட்டையாடியது. தனது வேட்டையின்போது ஒருநாள், தான் பூ மாவட்டம், பென் ட்ரே மாகாணத்திலுள்ள தான் ஃபோங் கிராமத்தை வந்தடைந்தார் கெர்ரி. அவர்கள் தேடிய ஆட்கள் கிடைக்கவில்லை. அதற்காக வெறுங்கையுடன் திரும்ப முடியுமா என்ன? ஒரு வீட்டின் முன் வயதான தம்பதி சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தது. சிரிப்பது எவ்வளவு பெரிய குற்றம்… கண்களில் வெறி ஏறியது. கெர்ரி கண்ணசைக்க, 66 வயதான புய் வான் வாட், 62 வயதான லுயூ தி கான் ஆகியோரின் கழுத்தை அறுக்கிறது ராணுவ வீரர்கள் என்ற பெயரிலிருந்த அந்தக் குழு. அப்படியும் வெறி தீரவில்லை. மறைந்திருந்த மூன்று பேரக்குழந்தைகளையும் ஒரு வாய்க்காலிலிருந்து வெளியே முரட்டுத்தனமாக இழுத்து நிதானமாகக் கொன்றனர். இந்தக் களேபரங்களைக் கண்டு ஓடிஒளிந்திருந்த குடும்பங்களைத் தேடியலைந்தனர். மூன்று கர்ப்பிணி பெண்கள் உட்பட 15 அப்பாவிக் குடிமக்களைச் சுட்டுக் கொன்றனர். வெறி சற்றே தணிகிறது. திரும்பிச் செல்கின்றனர். இவையெல்லாம் நடந்து முடிய, உலகின் மற்றொரு மூலையில் ஓர் அரசு ஆவணம் இப்படிச் சொல்கிறது, ‘மே 14, 1970இல் (அதே) பாப் கெர்ரி, அதிபர் ரிச்சர்ட் எம். நிக்ஸனிடமிருந்து உலகிற்குச் சேவை செய்த 12 சேவையாளர்களுள் ஒருவராக வெள்ளை மாளிகையில் கௌரவிக்கப்பட்டார்.’ கடந்த ஏப்ரல் 2001இல் அமெரிக்க செனட்டர் பாப் கெர்ரி சர்வதேச மக்களிடம் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
போரில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஒன்று ஆபரேஷன் ரான்ச் ஹேண்ட். மொத்த வியட்நாமியர்களும் இன்றுவரை அந்தக் கொடூரத்தின் பாதிப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆபரேஷனுக்காக ஏஜென்ட் க்ரீன், ஏஜென்ட் பிங்க், ஏஜென்ட் பர்ப்பிள், ஏஜென்ட் புளு, ஏஜென்ட் ஆரஞ்ச் என்று பல கொடிய வேதிப்பொருள்களை வியட்நாம் காடுகளிலும் வயல்களிலும் அமெரிக்கா தூவியது. சாதாரணச் செடிகளில் தெளிப்பதைவிட 50 மடங்கு அதிகமாகக் கொட்டித்தீர்த்தார்கள். அவற்றுள் மிகவும் கொடிய வேதி அரக்கன்தான் ஏஜென்ட் ஆரஞ்ச். டைக்ளோரோ ஃபினாக்ஸி அசிடிக் அமிலம், டிரைக்ளோரோ ஃபினாக்ஸி அசிடிக் அமிலம் என்கிற இரண்டு அமிலங்களும் 50 சதவீதத்தில் கலந்ததுதான் இந்த ஏஜென்ட் ஆரஞ்ச். வடக்கு வியட்நாமின் கெரில்லா போராளிகள் காடுகளுக்குள் மறைந்திருந்து போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மறைவிடம், உணவு ஆகியவற்றைத் தந்துகொண்டிருந்த காடுகளையும் கிராமப்புற விவசாய நிலங்களையும் அழிக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்டம். அமெரிக்காவின் சிந்தனையிலிருந்த கொலைவெறி, கம்யூனிசம் வேறூன்றி விடக் கூடாதென்ற ஆதிக்க வெறி எதையும் செய்யத் துணிந்தது. 42 சதவீத விவசாய நிலங்களில் அந்த வேதி அரக்கர்கள் தூவப்பட்டன. அதன்மூலம் சாப்பிட உணவின்றி, மறைந்திருக்க உறைவிடமின்றி போராளிகள் வெளியே வருவார்கள் எனக் கணக்குப்போட்டது அமெரிக்கா. ஆனால், அது மிகப்பெரிய பஞ்சத்துக்கு வழிவகுத்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் செத்து மடிந்தார்கள்.
‘மிகக் கொடூரமான மனிதத் தன்மையற்ற பயோ வார்’ என்று உலகமே கண்டித்தது. 1925ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜெனிவா சட்டத்தின்படி பயோவார்களில் கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டிருந்தாலும், அன்றும் இன்றும் அமெரிக்காவுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் பொருந்துமா என்ன? 3,100,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன. மரங்கள் அழிந்தன. மண் சத்திழந்தது, நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த வேதிப் பொருள்கள் மண்ணில் ஊடுருவி, உணவுச் சங்கிலியில் கலந்தன. விலங்குகள், மீன்கள் அத்தனையும் விஷத் தன்மையானது. 24 வகையான பறவைகளும், 5 வகை பாலூட்டிகளும் மறைந்து போயின. விவசாய நிலங்கள் விவசாயத்துக்கு தகுதியற்றதாக மாறியது.
ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பின. (ஒரு இனத்தை அழிக்க ஒன்பது நாடுகள் கைகோப்பது உலக வழக்கம்தானே) வடக்கு வியட்நாமுக்கு சோவியத் யூனியன் ஆதரவு அளித்தது. கெரில்லா தாக்குதலைத் தாக்குபிடிக்க முடியாமல் அமெரிக்கப் படை பின்வாங்கியது. மில்லியன்கணக்கான வியட்நாமியரைப் போலவே நூறாயிரக்கணக்கான அமெரிக்கப் படைவீரர்களும் ஏஜென்ட் ஆரஞ்சு மூலம் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை அனுபவித்தனர். அமெரிக்காவில் கடும் யுத்த எதிர்ப்பு கிளம்பியது. நிக்சன் அமெரிக்க அதிபரான பிறகு போர் நிறுத்த முயற்சிகள் ஆரம்பித்தன. 1973இல் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை மீண்டும் ஏற்படுத்தும் ஒப்பந்தம் பாரிஸில் கையெழுத்தானது. வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும் ஒரு நாடாக செங்கொடியின் கீழ் இணைந்தன. 1973, மார்ச் 29 அன்று சைகோனிலிருந்த அமெரிக்கக் கொடி இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ஏப்ரல் 30 அன்று தங்க நட்சத்திரம் பொறிக்கப்பட்ட செங்கொடி சைகோன் நகரில் வானளாவப் பறந்தது. 1976இல் வடக்கு தெற்கு வியட்நாம்கள் இணைக்கப்பட்டன. வியட்நாம் சோஷலிசக் குடியரசு (Socialistic Republic of Vietnam) பிறந்தது. வெளிநாட்டு மேலாதிக்கத்திற்கு எதிராக 1000 + ஆண்டுகாலப் போராட்டத்தால் வடிவமைக்கப்பட்ட நாடு தனது குறிக்கோளாக, ‘விடுதல் – சுதந்திரம் – மகிழ்ச்சி’ என்பதை ஏற்றுக்கொண்டது எத்தனை பொருத்தமானது!
ஆனால், போர் எனும் ஆக்டோபஸின் கரங்களிலிருந்து இன்னும் வியட்நாம் முழுமையாக விடுபடவில்லை. இன்றைக்கும் விதவிதமான நோய்கள் வழி வழியாகத் தொடர்கிறது. குழந்தைகளுக்கும் குழந்தைகளின் குழந்தைகளுக்கும்கூட மரபு வழியால் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பிறக்கும் குழந்தையெல்லாம் ஏதோ ஒரு குறைபாட்டுடன் பிறக்கின்றன அல்லது பிறந்து சில நாட்களில் இறக்கின்றன. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் உரிமையாளர் தோழியின் (Binh) அக்காவுக்கு இதுவரை 12 குழந்தைகள் பிறந்து சில நாட்களில் இறந்து போயிருக்கின்றன என்றும் அதனால் அக்காவும், அவரது கணவரும் மனநோயாளிகளாக மாறிவிட்டனர் என்றும் கண்களில் நீர்ருடன் கூறினார்.
வியட்நாம் முழுவதும் இவர்களைப் போல ஏஜென்ட் ஆரஞ்சின் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் மரபணு வழியாகத் தற்போது சுமார் 10 லட்சம் பேர் அதன் விளைவுகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது அரசின் கணக்கு. வாய் இரண்டாகப் பிளந்தபடி பிறக்கும் குழந்தைகள், கோணல் மாணலாக முடங்கிப்போயிருக்கும் கை கால்கள், பெரிய தலை, வெளியே பிதுங்கி கோரமாக காட்சியளிக்கும் கண்கள், நுரையீரல், குரல்வளை, ப்ராஸ்டேட் புற்றுநோய்கள், கொடிய தோல்நோய்கள், குடலிறக்கம், வலிப்பு நோய் எனத் தொடர்கிறது போரின் விளைவுகள். போர் முடிந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாமிய பெண் ஒருவரின் தாய்ப்பாலைச் சோதித்துப் பார்த்தபோது அதில் பயோவாரில் பயன்படுத்தப்பட்ட டையாக்ஸின் என்கிற வேதிமம் அதிகளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஏஜென்ட் ஆரஞ்சின் நச்சு அண்டை நாடான லாவோஸ் மற்றும் கம்போடியாவிலும் நீண்டுள்ளது என்கிறது அதிர்ச்சித் தகவல். அதுமட்டுமல்லாமல் போர் நேரத்தில் பதிக்கப்பட்ட வெடிபொருள்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்னும் நிலத்தில் பதுங்கியுள்ளன. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதுதான் அதன் நிலை. 1975க்குப் பிறகு இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்படிப் பதுங்கிக் கிடக்கும் வெடிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு வல்லரசு ஏகாதிபத்தியத்தை வெற்றிகொள்வதற்காக வியட்நாம் கொடுத்திருக்கும், கொடுத்துக்கொண்டிருக்கும் விலை மிக மிக அதிகம். பேராசைக்கான போர்களில் எப்போதும் அப்பாவி ஆடுகளே பலியாகின்றன.
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இலங்கை ‘எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களை அழகாக எழுதியிருக்கிறார். இவை இரண்டும் ஹெர் ஸ்டோரிஸில் தொடர்களாக வந்து, பின்னர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வியட்நாம் அனுபவங்கள் இவரது மூன்றாவது தொடர்.