1948

‘சந்திரலேகா கா…….’ என நீட்டி இழுத்து ‘திருடா திருடா’ திரைப்படத்தின் ஒரு புகழ்பெற்ற பாடல்தான் இந்தச் சந்திரலேகா யார் என என்னைக் கேட்க வைத்தது. பிற்காலத்தில் இந்தப் பெயரில் விஜய் நடித்த திரைப்படம் ஒன்றும் வந்துள்ளது.

சந்திரலேகா என்பது ஒரு புகழ்பெற்ற நாற்பதுகளின் திரைப்படத்தின் தலைப்பு. அந்தத் திரைப்படத்தின் முரசு நடனத்தை, இப்போதுகூட யாராலும் எடுக்க முடியாது என்றெல்லாம் படித்திருந்தேன். இப்போதும், சந்திரலேகா என இணையத்தில் தேடினால், பக்கம் பக்கமாகத் தரவுகள் குவிகின்றன.

இவ்வாறு காலம் காலமாக இந்தத் திரைப்படம் பேசப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், இரு சகோதரிகள் 1957 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில், பாடல் ஒன்று வருகிறது. வருமானம் இல்லாத பாகவதர் ஒருவருக்குத் துணி வாங்கிக் கொடுத்து, விற்று வரச் சொல்கிறார் அவர் மனைவி. பாகவதரின் சீடர், அந்தத் துணிப் பொட்டலத்தைத் தலையில் தூக்கி வருகிறார். திண்ணை திண்ணையாக வைத்து இருவரும் விற்கிறார்கள். இருவரும் இணைந்து பாவாடை, தாவணி, சட்டைத் துணி சரிகைத்துணி, பட்டுச்சேலை எனக் கூவிக் கூவி அதை விற்கிறார்கள். “சந்திரலேகா வாயிலு கனக்கு கனக்கு வாயிலு” என வருகிறது.

இப்படித் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

திரைப்படத்தின் கதை எனச் சொல்ல வேண்டுமென்றால், வீரசிம்மனும் சசங்கனும் ஒரு ராஜாவின் இரு மகன்கள்.

வீரசிம்மன் ஒரு கிராமத்தின் வழியாகச் செல்லும்போது, சந்திரலேகா என்கிற நடனக் கலைஞரைச் சந்திக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், சந்திரலேகாவிற்குத் தான் காதலிப்பவர் ஓர் இளவரசர் என்பது தெரியாது.

சசங்கன் ஊரைக் கொள்ளையடிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்துவருகிறான். அப்படிக் கொள்ளையடிக்கும் போது நடந்த கலவரத்தில், சந்திரலேகாவின் அப்பா இறந்து விடுகிறார். அந்த ஊரில் இனிமேலும் வாழ வழியில்லை என்கிற நிலையில், சந்திரலேகா தனது அத்தை ஊருக்குத் தனக்குத் தெரிந்த குடும்பத்துடன் புறப்படுகிறார். வழியில், சசங்கன் குழுவிடம் மாட்டிக்கொள்கிறார். சசங்கன், சந்திரலேகாவை நடனம் ஆடச் சொல்லி சாட்டையால் அடிக்கிறார். இவரும் ஆடுகிறார். (ஆடாமல் ஆடுகிறேன், பட்டத்து ராணி பாடல்களுக்கெல்லாம் முன்னோடி.)

அதன் பின் சந்திரலேகா தப்பித்துவிடுகிறார். தப்பித்து ஒரு மலை அருகில் செல்லும்போது, அங்கு வீரசிம்மன் கட்டுண்டு இருப்பதைக் காண்கிறார். சசங்கனின் ஆட்கள் வீரசிம்மனை ஒரு குகையில் சிறை வைத்து, அதன் நுழைவு வாயிலை ஒரு பெரிய பாறையால் மூடுவதை சந்திரலேகா பார்க்கிறார். அந்த வழியே வரும் ஒரு சர்க்கஸ் குழுவின் உதவியால் வீரசிம்மனைச் சந்திரலேகா மீட்கிறார். வீரசிம்மனும் சந்திரலேகாவும், யாருக்கும் தெரியாமல், சர்க்கஸ் குழுவினருடனேயே இருக்கிறார்கள். வீரசிம்மன் இறந்து விட்டதாகத்தான் நாட்டில் அனைவரும் நினைக்கிறார்கள்.

சசாங்கன், வீரசிம்மன் இறந்துவிட்டார் என்கிற பூரிப்புடன், பெற்றோரைச் சிறையில் அடைத்து விட்டு, தான் முடிசூட்டிக் கொண்டு மன்னராகிறார்.

சசங்கன், சந்திரலேகாவைக் கண்டுபிடிக்க ஓர் ஆளை அனுப்புகிறார்.

அந்த ஆள் சர்க்கஸில் சந்திரலேகா சாகச வேலைகள் செய்யும் போது பார்த்துவிடுகிறார். இதனால் வீரசிம்மனும் சந்திரலேகாவும் தப்பித்து வேறு இடம் செல்கிறார்கள். வழியில் ஒரு நாடோடி கூட்டம் அவர்களுக்கு உதவுகிறது. வீரசிம்மன் உதவி தேடிச் சென்ற நேரத்தில் சந்திரலேகா, சசங்கன் ஆட்களிடம் பிடிபட்டுவிடுகிறார்.

சந்திரலேகாவின் சர்க்கஸ் குழுவில் உடன் இருந்த பெண் ஒருவர், மருத்துவர் போல பேசி உள்ளே வந்து, “சசங்கனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம். அதற்காக எனக்கு விருப்பமான முரசு நடனம் ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் வை” என சொல்லிச் செல்கிறார். அதன்படி அதே கோரிக்கையை சந்திரலேகா வைக்கிறார். சசங்கனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறார். முரசு நடனம் நடைபெறுகிறது.

சந்திரலேகாவும் இணைந்து ஆடுகிறார். நடனம் முடிந்தவுடன் வீரசிம்மனும் அவரது வீரர்களும் முரசுகளின் உள்ளிருந்து வெளியே வந்து போரிடுகிறார்கள். சசங்கன் கைது செய்யப்படுகிறார். வீரசிம்மன் தன் பெற்றோரை விடுவித்து புதிய அரசனாகிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

டி. ஆர். ராஜகுமாரி

எம். கே. ராதா

ரஞ்சன்

சுந்தரிபாய்

என். எஸ். கிருஷ்ணன்

டி. ஏ. மதுரம்

எல். நாராயணராவ்

இப்படி நாயகியின் பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள்.

100 ஜெமினி யுவர்கள் 400 ஜெமினி யுவதிகள்; தயாரித்தது இயக்கியவர் S S வாசன் எனப் போடுகிறார்கள்.

அண்ணன் தம்பி ஒரே பெண்ணைக் காதலிப்பது என்கிற வழக்கமான கதை என இதைக் கடந்துவிட முடியாது.

பிரம்மாண்டம் என்கிற சொல்லுக்கு இணைச் சொல்லாகவே சந்திரலேகா எனச் சொல்லலாம். அப்படி இருக்கிறது திரைப்படம். அரண்மனை, அதன் அலங்காரங்கள், உடைகள் எல்லாம் மேற்கத்திய பாணியில் உள்ளன. அவற்றின் நேர்த்தியும் ஒழுங்கும் நம்மை பிரமிக்க வைக்கின்றன என்றால், சர்க்கஸ் நிகழ்ச்சி இன்னமும் அபாரமாக இருக்கிறது.

நாடோடி குழுவினரின் நடனம் அதைவிட, பிரம்மாண்டமாக இருக்கிறது. V N ஜானகி அம்மையார் குழுவினருடன் ஆடும் மிக அழகிய இந்த நடனம், கதையை நகர்த்திச் செல்லப் பெரிதும் உதவுகிறது.

இறுதியில் ஆறு நிமிடங்கள் இடம் பெறும், முரசு நடனம் என்பதுதான் பிரம்மாண்டத்தின் உச்சம். இசை, நடன அமைப்பு, அரங்க அமைப்பு என எத்தனை தடவைப் பார்த்தாலும், புதிதாகவே பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. 400 நடனக் கலைஞர்களுள் ஒருவராக நடித்த (அறிமுகமான) எஸ்.என்.லட்சுமி அம்மா தன் இறுதிக்காலம் வரை ( 2012), 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர், இவர் மிகக் கூடுதலான காலம் நடிப்புத் துறையில் இருந்தவர் என்கிற பட்டியலில் உறுதியாக இடம் பெறுபவர்.

1943 ஆம் ஆண்டு படப்பிடிப்பைத் தொடங்கி, 1948 ஆம் ஆண்டுதான் வெளியிட்டு இருக்கிறார்கள். அவ்வளவு நாட்கள் தொடர் உழைப்பில், இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கிறது. முரசு நடனத்திற்கான ஒத்திகை மட்டுமே ஆறு மாதம் நடைபெற்றதாக இணையம் சொல்கிறது.

இந்தி, ஆங்கிலம் (சந்திரா), ஜப்பானிய மொழிகளிலும் இந்தத் திரைப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. AVM போன்ற தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் இந்திப் பட உலகில் கால் பதிப்பதற்கு அடித்தளமாக இருந்தது சந்திரலேகாவின் வெற்றிதான் என்கிறார் வரலாற்றாளர் ஸ்ரீராம்.

இப்படிக் கதை கதையாகச் சொல்லும் அளவிற்கு இணையத்தில் இத்திரைப்படம் குறித்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

டி.ஆர்.ராஜகுமாரி, 1939இல் வெளியான குமார குலோத்துங்கன் திரைப்படத்தில் அறிமுகமாகி, தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.கே.ராதா, டி.ஆர்.மகாலிங்கம் என அனைத்து நடிகர்களுடனும் நடித்துக் கொடி கட்டிப் பறந்து கொண்டு இருந்தாலும், சந்திரலேகா அவருக்காகவே உருவாக்கப்பட்ட திரைப்படம் என உறுதியாகச் சொல்லலாம்.

மற்ற நடிகர், நடிகைகள் என எடுத்துக்கொண்டாலும் சரி, தொழில் நுட்பக் கலைஞர்கள் என எடுத்துக்கொண்டாலும் சரி, எல்லாரும் அப்படி உழைத்து இருக்கிறார்கள் என்பது திரைப்படம் நெடுகிலும் தெரிகிறது. தமிழ் திரையுலகின் மைல் கற்களில் ஒன்று இந்த சந்திரலேகா.


(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.