இன்று சொல்லப்போவது அசோக் குமார் திரைப்படம் குறித்து. 1941ஆம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் முகவரியே தியாகராஜ பாகவதர்தான்.

தியாகராஜ பாகவதரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என் ஐயா (அப்பாவின் அப்பா). ஐயா எங்களை வெறுப்பேற்றும் அளவிற்கு தியாகராஜ பாகவதரின் தீவிர ரசிகர். பாகவதர் பாட்டு போடு என சொல்லிவிட்டாலே அன்று நாள் முழுவதும் முடிந்துவிடும். வேறு பாடல்களை மறந்துவிட வேண்டியதுதான். அப்போது மெலோடிஸ் ம்யூசிக் சவுண்ட் சென்டர், டேரா துபாய் என்கிற விளம்பரத்துடன் பாட்டு கேசட்டுகள் வரும். எங்கள் அப்பா பிரபலமான அனைத்து தியாகராஜ பாகவதர் பாடல்களையும் பதிந்து கொண்டு வந்திருந்தார்கள். ஐயா வந்து பாகவதர் பாட்டு போடு எனச் சொல்லிவிட்டாலே அது போகும் இரண்டு மணி நேரம். தொடையில் தாளம் தட்டி, ஐயா பாடல் கேட்கும் அழகே அழகுதான். ஆனாலும் மணிக்கணக்காகப் பார்க்க முடியாதல்லவா. அவர்கள் மூலம் இந்தத் திரைப்படத்தில் உள்ள, ‘உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ,’

‘பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்…’

https://www.youtube.com/watch?v=UFg-uoth6tw&t=1s

ஆகிய இரண்டு பாடல்களும் எனக்கு அறிமுகம்.

அசோகாவதானம் நூலின் அடிப்படையில் இந்தத் திரைப்படத்தின் கதை உள்ளது. அசோகப் பேரரசரின் மகன் குணாளன். அசோகரின் புதிய இளைய மனைவி திஷ்யரக்ஷா (தீட்சா). காஞ்சன மாலை குணாளனின் மனைவி. இளைய ராணி தீட்சா, குணாளன் மீது காதல் கொள்கிறார். குணாளன் மறுத்ததால், அவர் மீது இளையராணி பொய்க் குற்றம் சாட்ட, அசோகரும் குணாளனை நாடு கடத்துகிறார். குணாளன், தனது நண்பரான மகேந்திரனுடன் (எம்ஜிஆர்) மறைந்து வாழ்கிறார்.

பின், இளையராணி, கர்ப்பிணியான காஞ்சன மாலாவையும் அரண்மனையைவிட்டு வெளியே துரத்திவிடுகிறார். குணாளன், மகேந்திரனுடன் மறைந்து வாழ்வதை அறிந்து, குணாளனின் இரு கண்களையும் பிடுங்கச் சொல்லிக் கடிதம் கொடுத்து அனுப்புகிறார்.

கண்ணற்ற குணாளனும் காஞ்சனமாலையும் ஒரு கிராமத்தில் சந்திக்கின்றனர். பெண் குழந்தை பிறக்கிறது. சிறிது காலத்தில் அதுவும் இறந்தும் விடுகிறது.

அசோகர் சிகிச்சைக்காக வந்த இடத்தில் மகனைச் சந்திக்க நேருகிறது. அதே நேரம் இளைய ராணி மனம் திருந்தி நஞ்சு உண்டு இறக்கிறார். உபகுப்தர், குணாளனின் இழந்த கண்களைத் திரும்ப வர வைக்கிறார். அசோகர் அமைதி வழிக்கு வருகிறார். புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதாக உறுதிகொள்கிறார்.

‘கருணாநிதியே, புத்த தேவா, கருணாமூர்த்தி’ என புத்தரை வணங்குவதுடன் படம் முடிகிறது.

அசோகரைப் பற்றி கவியரசு கண்ணதாசன் வெண்புறா என்கிற கவிதை நாடகத்தை எழுதியிருக்கிறார். அதில் கலிங்கப் போருக்குப் பின் அசோகர் புத்தம் தழுவியது போன்று கதை வரும். அதிலும் இறந்த அசோகரின் மகனை உபகுப்தர் உயிர்ப்பித்த பின்தான், அவர் புத்தம் நோக்கித் திரும்பினார் என வரும்.

தியாகராஜ பாகவதர், குணாளன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அசோகர் ‘குணாளா’ என அழைத்தவுடன், ‘குணாளா, குலக்கொழுந்தே’ என்பது காமராசர் குறித்து அண்ணா பயன்படுத்திய சொல்லாடல். இணைந்து நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.  

டி. வி. குமுதினி, காஞ்சனமாலா வேடத்தில் நடித்திருக்கிறார். பி. கண்ணாம்பாதான் இளைய ராணி. குணாளனின் நண்பர் மகேந்திரன் வேடத்தில் எம். ஜி ஆர் வருகிறார். M G ராமச்சந்தர் எனப் போடுகிறார்கள். இளைய ராணியின் பணியாளராக டி. ஏ. மதுரம் வருகிறார். மருத்துவராக என்.எஸ். கிருஷ்ணன் வருகிறார். அசோகராக நாகையா.

முரசு அறிவிப்புடன் கதை தொடங்குகிறது. முரசு அறிவிக்கும் இடம் குருத்தோலை தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதுவே அரச மற்றும் சமூக திரைப்படம் போன்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. அது போலத்தான், கதாபாத்திரங்கள் அரசப் பாத்திரங்களாக இருந்தாலும், கதை சமூகக் கதைபோலவே இருக்கிறது.

பெண்கள் யாருமே சட்டை போடவில்லை. நீளமான காதணி அணிந்திருக்கிறார்கள். நாற்பதுகளின் நாகரிகமாக அது இருந்திருக்கலாம். வழக்கமான படங்களில் வருவது போன்ற அரச அணிகலன்களைப் போட்டிருக்கிறார்கள். சேலையை ஒருவிதமாக பரதநாட்டிய உடை மாதிரி அணிந்திருக்கிறார்கள். மேல்பகுதி மட்டும் அரச உடைக்கும் பொது மக்கள் உடைக்கும் வேறுபாடு உள்ளது.

திரைப்படம் முழுவதுமே வரும் பெரும்பாலான ஆண்கள் தலைப்பாகை வைத்துள்ளார்கள். சட்டை அணிந்திருக்கிறார்கள். வேட்டியை கால்களைச் சுற்றிக் கட்டியிருக்கிறார்கள்.

பத்தினி சாதிப் பெண் பாட்டில் பரவசமடையக் கூடாது என ஒரு வசனம் வருகிறது. வில்லியாகக் காட்டப்படும் இளையராணி கலை ஆர்வம் உடையவராக இருக்கிறார்.

கணவனின் மகன் மீது ஆசை கொள்வது தவறுதான். ஆனால்,

“உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ

வடிவழகிலும் குணமதிலும் நிகரில்

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ”

என்கிற பாடலைப் பார்க்கும் போதும், கேட்கும் போதும் காதல் பாடல்தான் என்கிற உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கதை தெரியாமல் அந்தப் பாடலைப் பார்த்தால் அது கண்கூடாகத் தெரியும், அதனால் இளையராணியின் வில்லி பாத்திரம் வலுவிழந்து போய்விடுகிறது.

மருத்துவராக நடித்திருக்கும் என்.எஸ். கிருஷ்ணன்,

“சித்தரத்தையோடு அத்தினத்தையும்

துத்தி வேரோடு துளசி வேரையும்

கொத்தை மல்லியும் குப்பை மேனியும்

நித்தம் தின்ன நோய் நெடுக ஓடுமே”

என்கிற மருத்துவக் குறிப்பைப் பாடலாக அறிமுகப்படுத்துகிறார். மருத்துவர், முடி திருத்துபவர், படை வீரர் அனைவரும் கத்தி வைத்திருக்கிறார்கள் எனச் சமத்துவமும் பேசுகிறார்.

திரைப்படத்தில், எழுத்து நடையில்தான் அனைவரும் பேசுகிறார்கள். சுவாமி, நாதா என்பது போன்ற நடை இல்லை. தேவையில்லாத கதாபாத்திரங்கள் இல்லை. சண்டை போன்ற காட்சிகள் இல்லை. அதனால், கதையும் தொய்வில்லாமல் போகிறது. ராஜா சந்திரசேகர் என்பவரின் இயக்கத்திற்கும் இளங்கோவனின் உரையாடலுக்கும் (வசனம்) கிடைத்த வெற்றி என்று இதைக் கருதலாம்.


(தொடரும்)