சாதி ஆதிக்கத்தின் தாக்கம் என்னவோ அதிகமாக பெண்களைத்தானே பாதிப்படையச் செய்கிறது. சாதியின் உச்சம் நாட்டின் பல இடங்களில் பலவிதமாகச் செயல்பட்டாலும் அது என்னவோ எப்போதும் பெண்ணின் மீதும், அவளின் உடலின் மீதும்தானே திணிக்கப்பட்டு வந்திருந்திருக்கிறது.

ஆதாம், ஏவாளின் ஆதிக்காலத்தில் இருந்தே சமுதாயத்தில் எந்தவொரு பிரச்னை என்றாலும், அது ‘பெண்மை’ என்கிற கற்பிதங்களைச் சுற்றிச்சுற்றிதான் வந்திருக்கிறது. இன்றைய நவீனமயமான அறிவியல் உலகம் மட்டும் என்னவிதமான மாற்றத்தைப் பெண்கள் வாழ்வில் அள்ளிவந்து கொடுத்துவிடப் போகிறது? நம்மைச் சுற்றிப் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நடப்பதை, நடந்து கொண்டிருப்பதை எல்லாம் பார்த்தால் துளி நம்பிக்கையும் வரவில்லை என்பதுதானே யதார்த்தம்.

எத்தனையோ ஆணவக் கொலைகளையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் செய்தித்தாளில் துண்டுச் செய்தியாக மட்டுமே பார்த்து, விமர்சித்து, கடந்து செல்பவர்களாகத்தான் நாமும் இருக்கிறோம். எத்தனையோ பெண்களின் சொல்லப்படாத சாதி ஆதிக்கக் கொடுமைகள் இன்னும் வெளியே வராமல், சமையலறைக்குள் வெந்து புளுங்கிக் கொண்டிருக்கிறது. தங்களுடைய கோபதாபங்களை உள்ளுக்குள்ளே பதுக்கி வைத்தபடியே வாழ்கின்றனர். அதேநேரம் ஆண்கள் வாழ்வும் பெண்கள் வாழ்வும் ஒன்றல்ல என்பதை இன்னும்கூட இச்சமூகம் புரிந்துகொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக மனித வாழ்வு என்று எல்லாவற்றையும் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. அதற்கு என்னுடைய தோழியின் வாழ்வே சாட்சி.

காதலெனும் மாயவார்த்தையை நம்பி வாழ்வைப் பறிகொடுத்த பெண்ணவள். மனித வாழ்க்கையில் அற்புதங்களுக்கா பஞ்சமில்லை, அவை அத்தனையும் மீறி காதல் என்கிற விஷயத்தை மட்டும் தொற்றிக்கொண்டு தன்னுடைய எளிய வாழ்வை விராயமாக்கிக் கொண்டவள் அவள். காதல்தான் நம் வாழ்க்கையின் அர்த்தமா அல்லது வாழ்வின் ஒரு பகுதிதான் காதலா, இதுவரை நம்மால் புரிந்து கொள்ளப்படாத பக்கமாகவே அது இருந்து வருகிறது. அதனால்தான் இன்னும் அதன் மீதான ஈர்ப்பும்கூட குறையவில்லையோ என்னவோ!

மிக அழகான பெண். உனக்கு ஏதாவது ஒரு ராஜகுமாரனைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நாங்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்போம். தன்னுடன் வேலை பார்க்கும் உயர் வகுப்பு என்று கருதப்படும் சாதியைச் சார்ந்த ஒருவனுடன் காதல் வயப்பட்டாள். உனக்கு நான், எனக்கு நீ என்று தலைகால் புரியாமல் நம்மை இயங்க வைக்கும். உனக்குத் தலைவலித்தால் எனக்கும் வலிக்கும் என்று பைத்தியம் பிடிக்க வைக்கிற ஒரு போதைநிலை. அந்நிலையில்தான் அவளுமே இருந்தாள். நாம் எதைச் சொன்னாலும் கேட்காத அவளைக் கொஞ்சம் நிதானத்தில் வைப்பதே சிரமமாக இருக்கும்.

திடீரென்று அவனோ வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டான். என்ன ஏது என்று விசாரித்தபோது அவனுக்குத் திருமணம் என்றனர். இதையறிந்து அவளிடம் கேட்கச் செல்வதற்கு முன் அவளது வீட்டிலோ ஒரு பிரளயமே நடந்துகொண்டிருப்பதை அறிந்து அத்தோடு விட்டுவிட்டேன். காதலுக்காகத் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்து, அதன் தொடர்ச்சியாக வீட்டுக்கு காதல் விவகாரங்கள் எல்லாம் தெரிந்து, வேலையை விட்டே அவளையும் நிறுத்திவிட்டனர். அதன்பின் அவளுக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்தது என்கிற செய்தி மட்டுமே எனக்குக் கிடைத்தது.

இரண்டு வருடங்கள் கழித்து நான் அந்த ஊருக்கு என் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காகச் செல்ல நேர்ந்த போதுதான் அவளை மீண்டும் சந்திக்க முடிந்தது. அவளோ வாழாவெட்டி என்கிற கோலத்தில் நான்கு வயது பெண் குழந்தையுடன் நிராதரவாக நின்றிருந்தாள். அப்போதுதான் கடந்தகாலத்தில் நான் அறிந்திராத மீதிப் பக்கங்களை அவள் சொன்னாள்.

“அவனுக்குத் திருமணம்னு கேள்விப்பட்டதும் அதைப் பத்திக் கேட்கப் போனேன். அப்போ நானுமே நாப்பதுநாள் புள்ளத்தாச்சியா வேற இருந்தேன்” என்று அழ ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு ஆறுதல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லாததால் அவளே அழுது முடித்து பேசட்டுமென்று காத்திருந்தேன்.

“நீ கீழ்ச்சாதியைச் சேர்ந்த பொண்ணுங்குறதால உன்ன கல்யாணம் செஞ்சுக்க முடியாது. வேணும்னா வச்சிக்கலாம். ஏன்னா அந்தக் காலத்துல அப்படித்தான உங்களை வச்சிருந்தோம். இப்ப வேணும்னா சொல்லு, எங்கயாவது கூட்டிட்டு போய் வச்சிக்குறேன்னு சொன்னான்” என்று அவள் கதறியபோது நெஞ்சமே வெடித்தது போல் இருந்தது. தெளியத் தெளிய சித்திரவை செய்கிற வார்த்தைகள் என்று தெரிந்தேதான் அவன் ரத்தக்கறை படிந்த வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறான்.

என்னவொரு துணிச்சல், காதல் என்கிற ஒன்றை வைத்துக்கொண்டு, அவளது உடலை நெருங்க என்னவெல்லாம் தந்திரமான வார்த்தைகளை உபயோகித்திருக்கிறான்… ஏன், கீழ்ச் சாதிப் பெண்ணின் உடலைத் தீண்டிய இவன் இப்போது மட்டும் தீட்டாகியிருக்க மாட்டானா?

“என்னோட வீட்டுல யாரு என்னன்னு கேட்டாங்க. அவன்கிட்ட சண்டை போட்டு சேர்த்து வச்சாலும் உன்னை வச்சி அவன் காப்பாத்துவானா? அவங்களோட சாதிய எதிர்த்துச் சண்டை போட்டு நாங்க போய் அசிங்கப்படவா? உனக்கு அப்புறமா உன் தம்பி, தங்கச்சிய நெனைச்சுப் பாருன்னு சொன்னாங்க. ஒன்னு நீ செத்துரு, இல்லை எங்க பேச்சக் கேட்டு இந்தக் குழந்தையைக் கலைச்சிருன்னு சொல்லிட்டாங்க.”

“ஆனா, என்னால முடியல. என்னோட முதல் குழந்தைல. குழந்தைங்கிறது எவ்வளவு சந்தோஷமான விஷயம், அதுவும் நான் காதலிச்ச ஒருத்தரோட ஞாபகார்த்தமா, நான்கூட முழுசா பார்க்காத என் உடலை முதல் முறையாக ஒருத்தருக்கு கொடுத்து உருவானது. நான் உண்மையாத்தான் காதலிச்சேன். என்னோட காதல் உண்மைதானே, அவன் பொய்யா பேசுனான், அப்படிங்கறதுக்காக நான் தப்பானவளா ஆகிட்டேனா…”

“நானுமே தகப்பன் இல்லாம ஒரு குழந்தையை வளர்க்க முடியுமான்னு யோசிச்சுப் பார்த்தேன். அதனால அவங்க சொல்றதக் கேட்டு கலைச்சிட்டேன். எல்லாருக்கும் கருவைக் கலைக்குறப்போ வலியில அழுகை வரும். ஆனா, அப்பக்கூட எனக்கு என்னோட குழந்தையை இழக்குறமேன்னுதான் இருந்துச்சு. நம்மளால ஒரு உசுரு போகுதேன்னு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. அப்புறமா வேறு ஒருத்தன கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா, இந்த விஷயமெல்லாம் ரெண்டாவது கொழந்த பொறந்த பின்னாடி வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சு தெனமும் சண்டை போட்டு என்னை விட்டுட்டே போய்ட்டாரு” என்று சொல்லி முடித்தாள்.

அவளின் வாழ்க்கையைக் கேட்ட பின்பு இதைப்போல இன்னும் எத்தனை பெண்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்களோ என்று எண்ணிக்கொண்டேன். பெண்ணுடலைச் சுற்றியே இந்தச் சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவளின் உடலோ ரத்தமும் சதையுமுள்ள போகப் பொருளாகத்தானே பார்க்கப்படுகிறது. என்னவாயிற்று, ஏன் மறுபடியும் மறுபடியும் இப்படியான விஷயங்களுக்குப் பெண்கள் இன்னும் இரையாகிக் கொண்டே இருக்கிறார்கள், தன்னை இப்படியெல்லாம் அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்? இதனால் விளையும் அபாயங்களைச் சிந்திக்காமல் ஏமாந்து போகிறார்கள்.

ஒரு பெண் தன்னை நம்பிவிட்டால், தன்னையே சார்ந்து இயங்கிவிட்டால், தன்னுடைய தேவைக்காக மட்டும் பயன்படுத்துகிறவர்களாக ஏன் இச்சமூகம் மாறிப்போனது? உண்மையில் பெண்ணிடம் சர்வமும் அடங்கியிருக்கிறது. அவளுக்குள் அறிவு, ஆளுமை, அனுபவம், அன்பு, உழைப்பு, துணிச்சல் என்ற அனைத்தையும் வைத்திருக்கிறாள். தனக்குள்ளே சுமந்து புறத்தில் அதை வெளிக்காட்டாமல் அடக்கமாக வைத்திருப்பதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ? அவளிடமும் சொல்வதற்கும் கேட்பதற்கும் பல கதைகள் இருக்கிறதென்பதை எப்போதுதான் அறிவார்களோ?

எங்கே எந்தச் சாதிச் சண்டையனாலும் அதில் பாதிப்பு என்னவோ பெண்களுக்குத்தான். ஓர் ஊரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அவ்வூரிலுள்ள பெண்களை அவமானப்படுத்தினால் போதும் என்கிற எண்ணம் இப்போதும் இருக்கிறதுதானே? இருவேறு நாடுகளுக்குப் பகையென்றால் அந்நாட்டை அடிமைப்படுத்தி, அப்பெண்களின் உடலை வதம் செய்வதுதானே அவர்களின் முதல் நோக்கமாகிறது?

ஒரு முறை குழந்தையில்லாத தோழியிடம், “எத்தனையோ குழந்தைகள் ஆதரவு இல்லாமல் ஏங்கிட்டு இருக்க, அதிலொரு குழந்தையை எடுத்து வளர்க்கலாமே” என்றேன். அப்போது அவளுக்கும் ஆசை இருந்தது. சிறிது நேரத்தில் அவளது மாமியார் வந்து, “எவனுக்கோ பொறந்த குழந்தைய தத்து எடுத்து வளர்க்க சொல்லிருக்க… எப்படினாலும் அது எங்க இனமாகுமா, எங்க வீட்டு வரிசாகுமா? என் சாதில பொண்ணுங்களுக்கு என்ன பஞ்சமா, வேற பொண்ணப் பார்த்து மகனுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்று சொல்லும்போது கடுப்பாக இருந்தது.

குழந்தை பெற்றால் மட்டுமே அவள் பெண்ணாகிறாளா, குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரமா அவள்?

படை ப்பாளர்:

நட்சத்திரா

ஆய்வக நுட்பனராக மருத்துவமனையில் பணிபுரிகிறேன். இதுவரை புத்தக வாசிப்பு மட்டுமே கொண்டிருந்தேன். இது என்னுடைய முதல் எழுத்துப் பணி.