அவளுக்கு வார்த்தைகள் பிடிக்கும். எல்லா வடிவங்களிலும்!
பேசப் பிடிக்கும்
எழுதப் பிடிக்கும்
வாசிக்கப் பிடிக்கும்
ரசிக்கப் பிடிக்கும்
யோசிக்கப் பிடிக்கும்
கற்றுக்கொள்ளப் பிடிக்கும்
அவள் எண்ணங்களை வார்த்தைகளாக மாற்ற கற்றுக்கொண்டது எப்போது என்று சரியாக நினைவில்லை. ஆனால், அவள் முதல் கவிதை எழுதியபோது அவள் வயது 10. எதுகை மோனை என்றால் என்ன என்று அறியாத வயதில் ஒரு மழை நாளில் வார்த்தைகளைக் கோத்து அதற்கு கவிதை என்று பெயரிட்டுக்கொண்டாள்.
சில நேரம் எழுதி ரசித்தும் பல நேரம் எழுதிக் கிழித்தும், வார்த்தைகள் அவளுக்குள் இருந்து காகிதத்தில் சென்று சேர்ந்தன. சில நேரம் நாட்குறிப்பில், பல நேரம் குப்பைத் தொட்டியில். எது எதில் சென்று சேரும் என்கிற ரகசியம் அவளும் வார்த்தைகளும் மட்டுமே அறிந்தது. அவள் உலகம் வார்த்தைகளால் ஆனது என்று சிறு வயது முதல் ஏதோ ஒருவிதத்தில் அவள் அறிந்திருந்தாள்.
அந்த ரகசியம் பிறருக்குத் தெரிய பல வருடங்கள் ஆனது. ஒரு காலகட்டத்தில் அவள் கண்முன் கண்ட அனைத்தையும் கவிதையாகக் கண்டாள். காலையின் முதல் கதிர் தொடங்கி இரவின் நட்சத்திரக் கூட்டம் வரை இயற்கையின்அனைத்து அதிசயங்களும் அவள் வார்த்தைகளின் தூரிகையில் அழகு கவிதைகளாகப் பிறந்தன.
சுனாமி, கும்பகோணம் தீவிபத்து போன்றவை நிகழ்ந்த நேரத்தில்தான், தன் வலியன்றி பிறர் வலியையும் தான் உணர்ந்து வார்த்தைகளாகக் கண்ணீர் வடிக்க முடியும் என்று உணர்ந்துகொண்டாள்.
ஒருமுறை கவிதைப் போட்டியில் பங்கு பெற முயற்சி செய்து தோல்வி அடைந்தபின், அவளுடன் போட்டிக்கு வந்திருந்த ஆசிரியர் வழக்கமாகப் போட்டியில் பங்கு பெறும் மாணவர் வந்திருந்தால் வென்றிருக்கலாம் என்று யதார்த்தமாகக் கூறியது, அவளை மீண்டும் அவளின் இதயக்கூட்டுக்குள் சுருக்கிக்கொள்ளச் செய்தது. தன்னால் ஒரு விஷயம் முடியாது என்று யாராவது கூறினால் அதைச் செய்து காட்டும் விடாமுயற்சி மனப்பான்மை அப்போது அவளுக்கில்லை. இனி கவிதைப் போட்டிகளில் கலந்துகொள்வதில்லை என்று குழந்தைத்தனமான முடிவுக்கு வந்தாள். அதன்பின் அவள் தோழிகள் மட்டுமே அவள் கவிதைக்கு ரசிகர்களாக இருந்தார்கள். அவளுக்குத் தமிழ்ப்புலவி, கவிஞர் என்று பட்டங்கள் சூட்டினர். அதில் மனம் நிறைந்து மகிழ்ந்திருந்தாள். அவள் பங்கு பெற்று வெற்றி பெற்ற போட்டிகளில் கவிதைப் போட்டி மட்டும் இல்லாமல் போனது.
சில வருடங்கள் கழித்து அது மாறும் என்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. கவிதை அவள் அடையாளமாக மாறும் என்று அவள் கனவிலும் எதிர்பாராத நேரத்தில்தான் அது நிகழ்ந்தது அவள் தோழியின் வடிவில். அவள் 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவளிடம் சொல்லாமல் அவள் பெயரை மாவட்ட அளவிலான கவிதைப் போட்டிக்குப் பதிவு செய்த அன்றுதான், அவளுக்கு அவ்வளவு கோபம் வரும் என்று அவள் தோழிகள் அறிந்த நாள். அவளின் அந்த உணர்ச்சி வெளிப்பாடு பல வருடங்களாக அவளுக்குள் புதைத்து வைத்திருந்த அவநம்பிக்கை, வலியின் வெளிப்பாடு என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
வேண்டா வெறுப்பாக அந்த போட்டியில் பங்கு பெற சென்றபோது மீண்டும் அந்த ஆசிரியரும் உடன் வந்திருந்தார். எந்த எதிர்பார்ப்புமின்றி எழுதிவிட்டு வந்த கவிதைக்கு மூன்றாம் பரிசு பெற்றதில் அதிகம் ஆச்சரியப்பட்டது அவள்தான். பின் அடுத்த கட்டமாக கல்வி மாவட்டங்களுக்கு இடையே ஆன போட்டியில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு அவள் பள்ளியில் இருந்து தேர்வான ஒரே மாணவி அவள் மட்டும்தான். அது அவளுக்கும் அவள் பள்ளிக்கும் எவ்வளவு பெரிய விஷயம் என்பதைக் காட்டிலும் அதே ஆசிரியர் அவளைப் புகழ்ந்து பிற ஆசிரியர்களிடம் பேசியபோது ஏற்பட்ட மகிழ்ச்சி எதையோ பெரிதாகச் சாதித்த மகிழ்ச்சியைத் தந்தது.
வாழ்க்கையின் முக்கியமான ஒரு பாடத்தை அவள் அப்போது கற்றுக்கொண்டாள். தோல்வி என்பதை வெற்றியாக மாற்றும் மந்திரக்கோல் விடாமுயற்சி மட்டுமே. ஓடிஒளிந்துகொள்வது எளிது, ஆனால் நிமிர்ந்து நின்று முயன்று பின் கிடைப்பது வெற்றியோ தோல்வியோ அது தரும் அனுபவம் போல் வேறொன்றும் இல்லை. அவள் உலகம் வார்த்தைகளால் விரிந்து கொண்டே சென்றது.
மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சியும், அதற்கு கிடைத்த அங்கீகாரமும் அவள் தன்னம்பிக்கையைப் பல மடங்கு அதிகரித்து. அவள் திறமைகள் மீது அவளைவிட அவள் பெற்றோருக்கு அதிகம் நம்பிக்கை இருந்தது என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள். இவை அனைத்துக்கும் காரணமான தோழியை இன்று வரை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறாள். நாளிதழ்களில் வரும் கவிதைப் போட்டிகள் அனைத்திலும் அவள் பங்கு பெற இன்று வரை ஊக்கப்படுத்தும் அவள் அம்மா, இந்தக் கட்டுரைகள் எழுத அவளுக்கு ஊக்கப்படுத்தும் அதன் முதல் வாசகனாக இருக்கும் அவள் கணவன் என அவள் திறமையை ஊக்கப்படுத்துபவர்கள் கிடைத்தது அவள் செய்யாத தவத்துக்கு வாழ்க்கை அளித்த வரமாகவே அவள் நினைத்துக் கொள்வாள்.
பின்னாளில் அவள் கடந்து வந்த பலரைக் காட்டிலும் அவள் வாழ்க்கை பல வகையிலும் எளிமையானதாக பாதுகாப்பானதாக இருந்துள்ளது என்பது அவளின் சின்ன உலகை விட்டு வெளியே பறந்து சென்ற போதுதான் அவளுக்குப் புரிந்தது. அந்த பெரிய உலகில் அவளை பாதுகாத்துக்கொள்ள அவள் மட்டுமே இருந்தாள்.
அந்த உலகில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள் பல… அவளை இன்று இருக்கும் இவளாக மாற்றியதில் அந்த பெரிய உலகத்தின் பங்களிப்பு அதிகம்.
அதைப் பற்றியும் சொல்வாள்.
(தொடரும்)
படைப்பாளர்:
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல்மருத்துவர். சிறுவயதுமுதல் தன் எண்ணங்களை கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைத்தளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகளைப் பெற்றுவருகிறார். மாநில அளவிலான கவிதைப் போட்டி, செஸ் ஒலிம்பியாட், ரங்கோலி போட்டி போன்றவற்றில் பரிசுகளை வென்றுள்ளார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர்.