“நிலா, இங்கே வாயேன்.”

“என்னப்பா?”

“உன் கிட்ட ஒண்ணு சொல்லணும். உன் புருசன் சதா போனையே நோண்டிட்டு இருக்கானே, என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா?”

“என்னப்பா இது? அவன் என்ன சின்னக் குழந்தையா?”

“இல்லம்மா, காலம் கெட்டுக் கிடக்கு. சோஷியல் மீடியா ரொம்ப மோசமா இருக்கு. பொண்ணுங்களுக்கென்ன எப்படி வேணா இருப்பீங்க. வீட்டு ஆம்பளைங்க மேல ஒரு சொல்லு யாராவது சொல்லிட்டா குடும்ப கௌரவம் கெட்டுப் போயிடும்மா. அதுக்குதான் சொல்றேன். கொஞ்சம் கண்டிச்சு வையி.”

நிலா யோசித்தாள். ஆம் இரவு நாம் தூங்கிய பிறகுகூட வருண் முழித்துக்கொண்டு போனை நோண்டுவதை உணர்ந்திருக்கிறாள். இதுவரை என்ன ஏதென்று கேட்டதில்லை.

அன்று மாலை, நிலாவும் வருணும் பால்கனியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இருவர் கையிலும் போன்தான். திடீரென்று நினைவுக்கு வந்தவளாக,

“வருண்…”

“சொல்லு நிலா.”

“என்ன எப்ப பார்த்தாலும் போனையே நோண்டிட்டு இருக்கே?”

“ஹேய், நீயும்தானே பார்த்துட்டு இருக்கே. உன்கூடப் பேசலாம்னுதான் வந்தேன். நீ கேம் ஆடுறதாலதான் நானும் எடுத்தேன். ”

“எங்கே உன் ஃபேஸ்புக் டிபி காட்டு.”

“என்ன புதுசா கேட்குற நிலா? ஒரு லைக்கூடப் போட மாட்டே. இந்தா தாராளமா பார்த்துக்கோ.” மகிழ்ச்சியுடன் போனை அவளிடம் கொடுத்தான் வருண். 

நிலா வாங்கி நிதானமாக எல்லா செயலிகளையும் திறந்து பார்த்தாள். வாட்சப் சாட்களையெல்லாம் நோட்டம் விட்ட பிறகு ஃபேஸ்புக்கைத் திறந்தாள்.

வருணைக் கொடைக்கானல் அழைத்துச் சென்று மலையுச்சியில் நிறுத்தி நிலாதான் அந்தப் படத்தை எடுத்திருந்தாள். காற்றில் முடி பறக்க அழகிய சிவப்புச் சட்டையில் வசீகரமாக நின்றிருந்தான் வருண்.

“இந்த போட்டோவையா டிபில வெச்சிருக்கே?”

“ஏன்? இதுக்கென்ன?”

“சட்டை பட்டன்ல இத்தனை கழட்டி விட்டுட்டுதான் போஸ் குடுத்துருக்கே? உன் நெஞ்சு முடிலாம் தெரியுது பாரு.”

“ஐயோ, அதுனால என்ன இப்போ?”

“அதுனால என்னவா? அந்தளவுக்கு வந்துட்டியா? எவ பார்த்து ரசிக்கணும்னு இப்டி அவுத்துப் போட்டுட்டு போஸ் குடுக்குற?”

”நீதானே நிலா இதெ எடுத்தே? அப்போ ரசிச்சியே?”

“நான் ரசிச்சேன். நான் மட்டும் பாக்குறதுக்காக எடுத்தேன்? ஊரெல்லாம் காட்டுவியா? குடும்ப ஆம்பளையா லட்சணமா உடனே போட்டோவை மாத்து.”

“நிலா ஏன் இப்படிப் பேசுற?”

“ஹேய், இரு இரு… யார் இந்தத் தீபா?”

“புதுசா என் டீம்ல ஜாயின் பண்ணி இருக்கா, ஏன்?”

“வெரி செக்ஸின்னு கமெண்டு போட்டுருக்கு அந்த *யி.” அலட்சியமான முகபாவத்துடன் தொடர்ந்து ஸ்க்ரால் செய்தாள் நிலா.

“நிலா மரியாதையா பேசு. என் டீம் மேட்” வருணுக்குக் கோபம் வந்தது.

“டீம் மேட்னா ஆபிசோட வெச்சுக்கோ. எதுக்குடா ஃபேஸ்புக்ல ஆட் பண்னிருக்கே? என்ன திட்டம் வெச்சிருக்கே?” வருணுக்குக் கோபம் வந்ததைச் சாக்காக வைத்து எகிறினாள் நிலா.

“நிலா என்ன ஆச்சு உனக்கு? உன்னோட ப்ரைவசில நான் என்னிக்காவது தலையிட்டுருக்கேனா? உன் ப்ரொஃபைல் பார்த்து எத்தனெ பேர் ஹார்ட் விடுறாங்க… ஏன் இப்படித் திடீர்னு அசிங்கமா பேசுற?”

“ஹேய், நாங்க பொம்பளைங்கடா. அப்படிதான் இருப்போம். ஆயிரம் பேர் ஹார்ட் விட்டாலும் எங்க மனசு ஸ்டெடியா இருக்கும். உங்களை எல்லாம் அடக்கி வெக்காட்டி அவ்ளோ தான். உன் போன் இந்த வீக்கெண்ட் என் கிட்டேயே இருக்கட்டும். ஏதாச்சும் முக்கியமான கால் வந்தா தரேன். போ” என்றபடி ஸ்டைலாக ஒரு தம்மைப் பற்ற வைத்தாள் நிலா.

இவளிடம் பேசினால் தலைவலிதான் வரும். திருத்த முடியாத ஜென்மம், “என்னமோ பண்ணித் தொலை” என்று தலையலடித்துக்கொண்டான் வருண்.

கொஞ்ச நேரம் அமைதியாகப் போனது.

“சரி, நிலா சாரி. இனிமே டீசண்டான போட்டோவே வெக்குறேன். இப்ப நைட் என்ன சமைக்கட்டும்?”

எப்படியாவது தாஜா பண்ணி ஃபோனைத் திருப்பி வாங்கும் முயற்சியில் இறங்கினான் வருண்.


(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.