நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ என்ன உணர்கிறீர்களோ அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. – மரிஸ்ஸா பியர்

என்னுடைய திருமண வாழ்க்கையை 10 வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். ஓர் உயிர்த்துடிப்பு (spark) இல்லை. பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கிறது என்றார் 40 வயது நிரம்பிய விமல்.

நான் நான்கு வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். மகிழ்ச்சியாக துவங்கிய உறவு இப்போது பிரச்னையில் சென்று கொண்டிருக்கிறது. அவர் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டே இருக்கிறார். திருமணம் செய்துகொள்வதற்கான எந்த முன்னெடுப்பும் செய்யாமல் இருக்கிறார். என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது என்றார் 27 வயதில் தனியார் நிறுவனத்தில் நல்ல பணியில் இருக்கும் நிர்மலா.

நான் என்னுடைய கணவரைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகிறது. சட்டப்பூர்வமாக வெளியே வந்துவிட்டேன். ஆனாலும் மனதளவில், என்னால் அதை விட்டு முழுவதுமாக வெளியே வர முடியவில்லை. நடந்த ஒவ்வொன்றும், என்னைக் காயப்படுத்திய வார்த்தைகளும், நினைவிலிருந்து மாறவில்லை. கடந்த வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் தோன்றி என் மன அமைதியைச் சீர்குலைத்துக் கொண்டே இருக்கிறது என்றார், 10 வயது மகளுடன் உறவில் இருந்து வெளியே வந்த ஆனந்தி.

இதே போன்று நமக்கும் வாழ்வில் உறவுகளால், மன அமைதியும், மகிழ்ச்சியும் குறைந்து போவதற்கான காரணங்கள் இருக்கலாம். ஏனென்றால், சமூக விலங்குகளாகிய நமக்கு, வாழ்வில் உறவுகள் மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றன.

அதே நேரத்தில் நம் மகிழ்ச்சியைச் சீர்குலைப்பதிலும் உறவுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அது குடும்ப உறவாக இருக்கலாம், நட்பாக இருக்கலாம், அல்லது வேறு எந்த உறவாகவும் இருக்கலாம்.

உணர்வுகளைப் பொறுத்தவரை, உங்கள் உணர்வுகளுக்கு நீங்களே பொறுப்பு. உணர்வுகள் மொத்தமும் உங்களுடையவையே. உங்களால் உணரபட்டவை. உங்களுக்குள்ளாகவே ஓடிக்கொண்டிருப்பவை. இது உறவுகளால் ஏற்படும் உணர்வுகளுக்கும் பொருந்தும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில், ஒரு நபரை உங்களுக்குப் பிடிக்கவில்லை. அவரைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் வருகிறது என வைத்துக்கொள்வோம். அலுவலகத்தில் உள்ள எல்லா நபர்களுமா குறிப்பிட்ட நபரைப் பார்த்தவுடன் கோபமும் எரிச்சலும் அடைகிறார்கள், இல்லைதானே? நீங்கள் மட்டும் எரிச்சலடைகிறீர்கள் என்றால், அது உங்களிடம் உள்ள பிரச்னைதானே?

இது போலதான், எந்த வகையான உணர்வாக இருந்தாலும், அது உங்களுக்குள்ளாக இருக்கும் ஒன்று. உங்களிடம் எழும் இன்ப துன்ப உணர்வுகளுக்கு, நீங்களே பொறுப்பு. நீங்களாக அந்தப் பொறுப்பை அடுத்தவரிடம் கொடுக்காதவரை.

அப்படியானால், நம்மை எப்படிச் சமநிலையில் வைப்பது? உறவுகளால் உண்டாகும் உணர்வுகளைச் சமன்படுத்தி எப்படி மகிழ்ச்சியைத் தக்க வைப்பது?

  1. உறவுகளைநன்றிஉணர்வோடுஅணுகுங்கள்

பொதுவாக மகிழ்ச்சி தராத உறவில் இருக்கும்போது, வருத்தப்படுவோம் அல்லது அடுத்தவரை குறை சொல்லிக்கொண்டு இருப்போம். ஆனால் கண்டிப்பாக அந்த உறவினால், சிறிதளவு நன்மையேனும் கிடைக்காமல் போயிருக்காது. அதுதான் இயற்கையின் நியதி. ஆனால், நாம் அவர் தந்த பிரச்னைகளை மட்டுமே மையப்படுத்தி குறைசொல்லிக்கொண்டே இருப்போம்.

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வருத்தப்படுவதோ குறை சொல்வதோ அந்த உறவை கண்டிப்பாகச் சரி செய்யப் போவதில்லை. அது போல உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக்க போவதில்லை. உண்மையில் நீங்கள் குறைசொல்லச் சொல்ல உங்கள் உறவின் வலிமையும் வாழ்வில் மகிழ்ச்சியும் குறைந்து கொண்டே செல்லும்.

நிகழ்கால உறவாக இருந்தாலும் சரி, கடந்த கால உறவாக இருந்தாலும் சரி, நீங்கள் நன்றியோடு நினைவுப்படுத்த நினைவுபடுத்த அவரோடு உள்ள எதிர்மறை உணர்வுகள் மெதுவாக அழிந்துவிடும். கஷ்டமான காரியம் போல் இருந்தாலும், இதைச் செயல்படுத்துவது மிக எளிதான விஷயம். ஏனென்றால், உறவுகளின் துவக்கக் காலத்தில் எல்லா உறவும் மகிழ்ச்சியானதாகவும் மனதிற்கு இதமாகவும்தான் இருந்திருக்கும்.

அவர், உங்களுக்கு எதிராக மிக மோசமானவற்றைப் பேசி இருந்தாலும் சரி, நினைத்துப் பார்க்க முடியாத அளவு துரோகத்தை, அல்லது வேறு விதமான செயல்களைச் செய்திருந்தாலும் சரி, உங்கள் மகிழ்ச்சிக்காகதான் இந்தப் பயிற்சியைச் செய்கின்றீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

அவர் வழியாக நடந்த நிகழ்வுகளுக்காகவும் அதனால், நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்களுக்காகவும் நீங்கள் அடைந்த தைரியத்திற்காகவும் நன்றி சொல்லுங்கள்.

சில அனுபவங்கள் இனிமேல் வாழ்க்கையில் வேண்டவே வேண்டாம் என்பதை முடிவு செய்வதற்கு, எந்த மாதிரியான அனுபவங்கள், வாழ்க்கையில் வேண்டும் என்பதை முடிவு செய்யவும், அவர்களே மிகவும் உதவி இருப்பார்கள்.

பயிற்சியின்போது, விமல் கீழ்வருமாறு எழுதினார்.

நான் என் மனைவியிடம் நன்றியோடு இருக்கிறேன், என் குறைகளைப் பொறுத்துக் கொண்டு 10 ஆண்டுகள், என்னுடன் பயணித்து இருக்கிறார். நான் என் மனைவியிடம் நன்றியோடு இருக்கிறேன், வீட்டின் வரவு செலவுகளை அவர் கவனித்து வருவதால், என் பணிச்சுமை குறைகிறது.

நிர்மலா:

நான் என் துணைவரிடம் நன்றியோடு இருக்கிறேன், என்னால் கட்டுப்பாடுகளுடன் வாழ்வது கடினம் என்பதை உணர்த்தியதற்காக.

நான் என் துணைவரிடம் நன்றியோடு இருக்கிறேன், நான்கு ஆண்டுகளாக எனக்கு உதவியாக இருந்ததற்காக.

ஆனந்தி:

கடந்த வாழ்க்கைத் துணைக்கு நன்றியோடு இருக்கிறேன், என் வாழ்க்கையைத் தனியே அமைக்க முடியும் என்ற தைரியத்தை உணர்த்தியதற்காக. நான் என்னுடைய கடந்த வாழ்க்கைத் துணைக்கு நன்றியோடு இருக்கிறேன், நான் நல்ல வார்த்தைகளுக்கும் பாராட்டுகளுக்கும் மட்டுமே உரியவள் எனப் புரிந்துகொண்டேன். நான் என்னுடைய கடந்த வாழ்க்கைத் துணைக்கு நன்றியோடு இருக்கிறேன், அவர் மூலம் கிடைத்த பாசமிகு மகள், வாழ்வின் நம்பிக்கையாக என்னுடன் இருக்கிறாள்.

நான் என்னுடைய கடந்த வாழ்க்கைத் துணைக்கு நன்றியோடு இருக்கிறேன், நான் நன்றாகச் சம்பாதிக்கவும் சிக்கல்களைக் கையாளவும் கற்றுக்கொண்டேன்.

அவர்கள் இப்படி எழுத எழுத, கசப்பான உணர்வுகளில் இருந்து விடுபட்டு, மன அமைதியும் மகிழ்ச்சியும் பெற்றார்கள். உறவுகளையும் சீரமைத்துக் கொண்டார்கள்.

இதை நீங்களும் ஒரு பயிற்சியாக எழுதலாம். உங்களுக்கு நடந்த அல்லது கிடைத்த பத்து நன்மைகளை எழுத ஆரம்பியுங்கள். குறைந்த பட்சம் 10 விஷயங்கள்.

இந்தப் பயிற்சி, கண்டிப்பாக இழந்த ஈடுபாட்டைக் (spark) கொண்டு வரும். உங்கள் மனதில் மகிழ்சியையும் மன அமைதியையும் கொண்டு வரும்.

முக்கியமாக நீங்கள் போராட்டத்தோடு பயணித்துக்கொண்டிருக்கும் உறவிற்காக இதைச் செய்ய ஆரம்பித்தால், பெரிய மாற்றத்தைப் பார்க்கலாம்.

வாசிக்கும் அனைவருமே இந்தப் பயிற்சியைச் செய்யலாம். பயனடைந்த பின், அந்த மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்துகொள்ளலாம்.

நன்றி உணர்வோடு ஒவ்வோர் உறவையும் அணுகி வாழ்வைக் கொண்டாடலாம் வாங்க! ஏனென்றால், வாழ்தல் இனிது; உறவுகளோடு வாழ்தல் இனிதினும் இனிது.

(இதன் தொடர்ச்சி அடுத்த கட்டுரையில்…)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.