“இதையெல்லாம் செய்ய உங்களுக்குக் கடினமாக இருக்கும். இதற்கு வலு தேவை. நீங்கள் எதற்கு சிரமப்படுகிறீர்கள்? நானே பார்த்துக்கொள்கிறேன்.”

இந்தியாவில் எலும்புமூட்டு அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்று, முதுகலை மருத்துவத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். தனித்திறமையால் வெளிநாட்டில் ஒரு பட்டயப்படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு உள்ள அனுபவமிக்க மருத்துவர்களிடமும் சக பணியாளர்களிடமும் நல்ல மதிப்பைப் பெற்ற பெண் மருத்துவர் அவர். பட்டயப்படிப்பு முடிந்த பின்னர், புதிதாக வந்து சேர்ந்த ஓர் ஆண் மருத்துவரிடம் தனது கண்காணிப்பில் உள்ள நோயாளிகளுக்கு என்னென்ன வேண்டும் என்று பயிற்சி கொடுக்கும்போது அவர் எதிர்கொண்ட சொற்கள் இவை. அத்தனை மாதங்களாக அந்த நோயாளிகளின் எலும்புகளை இறுக்கிப் பிடித்து கட்டுப்போட்டது இந்தப் பெண் மருத்துவர்தான். ஆனால் இவரால் இப்படிப்பட்ட கடுமையான வேலைகளைச் செய்ய முடியாது என்று புதிய மருத்துவர் நமுட்டுச் சிரிப்புடன் அறிவிக்கிறார். தனக்கான மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே, “பெண்ணான நீங்கள் எதற்கு இந்தப் படிப்புக்கெல்லாம் வருகிறீர்கள்? எளிமையான படிப்பை நோக்கிச் செல்லலாமே” என்பது போன்ற விமர்சனங்களைக் கேட்டிருந்தாலும் இந்தச் சொற்கள் கொஞ்சம் எரிச்சலூட்டிவிட்டன என்று அந்தப் பெண் மருத்துவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

“விருது பெறுபவர்கள் வெறும் ஆண்களாகவே இருந்துவிட்டால் யாராவது வந்து கொடி தூக்குவார்கள், அதனால் சும்மா பேருக்கு ஒரு பெண்ணையும் விருதுப் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.”

“இது உங்களுக்குப் புரிவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கலாம், கொஞ்சம் ஆழமான அறிவியல்…”

“பரவாயில்லையே… பெண்ணாக இருந்துகொண்டு இவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறீர்களே?”

“எல்லாருக்கும் காபி கொண்டுவர முடியுமா?”

“நீங்கள் ரிசப்ஷனிஸ்ட் என்று நினைத்தேன், விஞ்ஞானி என்று தெரியவில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள்.”

“நீங்கள் ஏன் எப்போதும் முகத்தைக் கடுகடுவென்று வைத்திருக்கிறீர்கள்? கொஞ்சம் சிரித்துதான் பேசுங்களேன்.”

“பெண்களுக்கு இந்தத் துறையெல்லாம் ஒத்துவருமா?”

“பெண் என்பதால் சாஃப்ட் கார்னரில் பதவி உயர்வு தந்திருப்பார்கள்.”

“பெண்களைக் களப்பணிக்கு அழைத்துச் சென்றால் அவர்களை நாம் பார்த்துக்கொள்ள வேண்டிவரும். இதெல்லாம் வேண்டாத வேலை.”

“பெண்களை வேலைக்கு எடுத்தாலே இப்படித்தான், தொட்டதற்கெல்லாம் அழுவார்கள்.”

“வேலையை விட்டுவிட்டு எப்படியும் கல்யாணம் செய்துகொண்டு போய்விடுவீர்கள்.”

“இது அதிக நேரம் எடுக்கும் வேலையாயிற்றே, உங்கள் கணவர் அனுமதிக்கிறாரா?”

“பெண் என்பதால் வேலை தந்திருக்கிறார்கள்.”

“ஏன் தொட்டதெற்கெல்லாம் எரிச்சல்படுகிறீர்கள்? ஓ! மாதத்தின் அந்தக் காலகட்டமா?”

“பெண்களுக்கு அவ்வளவாகக் கணக்கு புரியாது.”

இவை மிகச் சில உதாரணங்கள் மட்டுமே. ஒவ்வொரு நாளும் பணியிடத்தில் பெண்களிடம் காட்டப்படும் பாரபட்சத்தையும் அவர்கள் சந்திக்கும் கிண்டல் கேலிகளையும் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும். இவையெல்லாம் சும்மா கற்பனைக்கூற்றுகள் அல்ல. ஸ்டெம் பெண்கள் பலரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொண்ட உண்மை அனுபவங்களின் அடிப்படையில்தான் மேலே இருக்கும் எல்லாவற்றையும் எழுதியிருக்கிறேன். இந்தக் காலகட்டத்திலும் இப்படியெல்லாமா நடக்கும் என்று யோசனை வரலாம். இப்போதும் இதெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த ஸ்டெம் பெண்களிடம் பேசிப் பாருங்கள், உண்மை நிலவரம் புரியும்.

இன்றைய காலகட்டத்திலும்கூட மெடில்டா விளைவு தொடர்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள். விருது மற்றும் அங்கீகாரத்தில் பெண்களின் சாதனைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, ஆய்வு முடிவுகளைப் பிரசுரிப்பதில் உள்ள பாரபட்சம், உயர் பதவிகளில் ஸ்டெம் பெண்கள் அமர்வதில் உள்ள தடைகள், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், பணியிடத்தில் பால்வேற்றுமை காட்டப்படுவது, குடும்பத்தையும் வேலையையும் ஒருங்கே நிர்வகிப்பதில் சமகாலப் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் எனப் பல விதங்களில் சமகால மெடில்டா விளைவு வெளிப்படுகிறது.

ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். ஹப்பிள் தொலைநோக்கியை நாம் அனைவரும் அறிவோம். விண்வெளியில் செலுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொலைநோக்கி மூன்று தசாப்தங்களாக பூமியைச் சுற்றிவருகிறது. பிரபஞ்சம் விரிவடைவது, தூரத்து நட்சத்திரக்கூட்டங்கள், வெளிக்கோள்களின் வளிமண்டலம், நட்சத்திரங்களின் உருவாக்கம் மற்றும் பரிணாமம், நெபுலாக்கள், சூப்பர்நோவாக்கள் என்று பல்வேறு விண்வெளி அற்புதங்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருந்துகொண்டிருக்கிறது. நன்றாக வேலை செய்யும் கருவி என்றால் சிறிய பல்கலைக்கழகத்துக்குள்ளேயே அதைப் பயன்படுத்த போட்டா போட்டி நடக்கும். உலகத்துக்கான முக்கியமான தொலைநோக்கியாயிற்றே! சும்மாவா? தொலைநோக்கியைப் பயன்படுத்த வேண்டுமானால் செய்யப்போகும் ஆய்வு பற்றிய விண்ணப்பத்தைச் சம்ர்ப்பிக்க வேண்டும். நடுவர் குழுவினரின் தீவிரமான அலசலுக்குப் பிறகு, தொலைநோக்கியை யார் பயன்படுத்தலாம், எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்கிற பட்டியல் வெளியிடப்படும்.

2001ஆம் ஆண்டு முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், ஹப்பிள் தொலைநோக்கிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களையும் அவற்றின் தேர்வு விகிதத்தையும் ஆராய்ந்தார் நீல் ரீட் என்கிற அறிவியலாளர். ஆண்கள் சமர்பிக்கும் விண்ணப்பம் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிந்தார். இதை உலகின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இன்னொரு ஆய்வில், விண்ணப்பங்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதை அலசினார்கள். எழுத்துரீதியாக எதுவும் ஆவணப்படுத்தப்படுவதில்லை என்றும், விவாதங்களின்போது பெண் விஞ்ஞானிகளின் தகுதி குறைத்து மதிப்பிடப்படுகிறது எண்றும் அவர்கள் கண்டறிந்தார்கள்.

எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்ட நாசா, ஆய்வுக்குழுவினரின் தனிப்பட்ட தகவல்களைத் தெரிவிக்காமல் விண்ணப்பத்தை மட்டும் வைத்து தேர்வு நடத்தும் முறையை வடிவமைத்தது. இந்தப் புதிய செயல்முறை 2018இல் அமலுக்கு வந்தது. புதிய நடைமுறை வந்த மூன்றே ஆண்டுகளில் பெண் விஞ்ஞானிகளுக்கு எதிரான பாரபட்சம் குறைந்தது. இதையும் தரவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. நாசாவின் வழிமுறை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற பிற பகுதிகளில் உள்ள பெரிய ஆய்வகங்களும் இதே நடைமுறையைப் பின்பற்றப்போவதாக அறிவித்திருக்கின்றன.

இந்த உதாரணத்தில் நாம் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவதாக, “கருவியைப் பயன்படுத்துவதற்கான நேர ஒதுக்கீடு” என்று மட்டும் இதைப் பார்க்க முடியாது. கருவியைப் பயன்படுத்தினால்தான் தரவுகள் கிடைக்கும், அதை வைத்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதிப் பிரசுரிக்கலாம், ஆய்வுக்களத்தில் மதிப்பு உயரும், அடுத்தடுத்து ஆய்வுகள் நடத்துவதற்கு ஊக்கமும் நிதி உதவியும் கிடைக்கும். அது மட்டுமல்ல, ஹப்பிள் தொலைநோக்கியைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே ஒரு விஞ்ஞானியின் வாழ்வில் மைல்கல்தானே! ஆக, எந்த வகையில் பார்த்தாலும் ஒருவரது துறைசார்ந்த பயணத்தில் இது ஒரு முக்கியப் படியாக இருக்கும். இங்கேயே பெண்களுக்குப் பாரபட்சம் வந்துவிட்டால் அவர்கள் எப்படி முன்னேறுவார்கள்?

இரண்டாவதாக, இது 12 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த விஷயம். வேறு ஒருவர் தானாக முன்வந்து ஆய்வு செய்து இந்தப் பாரபட்சத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். அப்போதும் அந்தத் தவறு சரிசெய்யப்பட ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. மாற்றம் வந்துவிட்டது என்பதை நினைத்து மகிழ்வதோடு இந்தப் பாதை எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கிறது என்பதையும் யோசிக்க வேண்டும்.

மூன்றாவது, நாசாவைப் பார்த்துப் பெரிய அமைப்புகள் மாறிவிட்டன. ஆனால், சிறிய அமைப்புகள் என்ன செய்யும்? நேரடியாக முகம் பார்த்துதான் அனுமதி கேட்க வேண்டும் என்பது போன்ற சூழ்நிலையில் இருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கு என்ன மாற்றுவழி இருக்கிறது? இவையெல்லாம் அடுத்தகட்ட கேள்விகளாக எழுகின்றன.

ஓர் உதாரணத்தை விளக்கமாகப் பார்த்துவிட்டோம். இன்னும் என்னென்ன வழிகளில் ஸ்டெம் பெண்கள்மீது பாரபட்சம் காட்டப்படுகிறது?

  • பெண்கள் எழுதும் ஆய்வுக்கட்டுரைகள் ஒப்பீட்டளவில் குறைவான மேற்கோள்கள் (Citations) பெறுகின்றன.
  • பெண்கள் எழுதும் ஆய்வுக்கட்டுரைகளைத் தேர்வு செய்து பிரசுரிக்க, ஆய்விதழ்கள் இரண்டு மடங்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கின்றன.
  • ஆய்விதழ்களின் ஆசிரியர் குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது.
  • ஆய்வுக்கட்டுரைகளைச் சரிபார்க்கும் Reviewer பதவிகளில் போதுமான பெண்கள் இல்லை.
  • இயற்பியல் மற்றும் அது சார்ந்த துறைகளில் பெண் விஞ்ஞானிகள் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தால் அது எதிர்மறையான விமர்சனங்களையே சந்திக்கிறது.
  • பெண்களுக்கு ஸ்டெம் துறைகளில் உயர் பதவிகள் வழங்குவதில் பாரபட்சம் இருக்கிறது.  இது ஒரு பெரிய சிக்கலை உருவாக்குகிறது. ஆய்வுக்குழுவில் அவர்கள் சிறப்பாகப் பங்கேற்றால்கூட படிநிலை அடிப்படையில் ஆசிரியர்களின் பெயர்கள் வரும் சூழலில் பெண்களின் பெயர் முதல் இடத்தில் இருப்பதில்லை.
  • ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு மானியங்கள் (Research grants) ஆண்களுக்கே அதிகமாகக் கிடைக்கின்றன.
  • சராசரியாகப் பெண் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கும் மானியத் தொகையும் ஆண்களுக்குக் கிடைக்கும் தொகையைவிட இரண்டு மடங்கு குறைவு.

சரியாக கவனித்தால் இது ஒரு மீளா சுழற்சி என்பது புரிய வரும். உயர்பதவிக்குப் போக வேண்டும் என்றாலோ நிதி மானியங்கள் பெற வேண்டும் என்றாலோ போதுமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட வேண்டும், ஆனால் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுவதில் பாரபட்சம் இருக்கிறது. இதனால் பெண்களுக்குப் பதவி உயர்வும் நிதி ஒதுக்கீடும் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நிதியும் பதவியும் இல்லாவிட்டால் எப்படி ஆய்வுக்கட்டுரை எழுதி முதல் ஆசிரியராகத் தன் பெயரைப் போட்டு பதிப்பிக்க முடியும்? இரண்டாவது படியில் ஏறினால்தான் முதல் படியில் ஏறமுடியும் என்பதுபோன்ற சிக்கல் இது. இதில் மாட்டிக்கொண்டவர்கள் கிணற்றுக்குள்ளேயே வண்டி ஓட்ட வேண்டியதுதான்.

இதைவிட பெரிய பாரபட்சம் ஒன்று இருக்கிறது. பெரிய அளவிலான ஆய்வு மாநாடுகளில் குழு விவாதம் மற்றும் முக்கியக் கருத்துரை ஆகிய நிகழ்வுகளை நடத்தும்போது, அந்தத் துறையில் பங்களித்த ஆண் விஞ்ஞானிகளையே அதிகம் அழைப்பார்கள். ஆதாரமின்றி ஒரு புலம்பலாக இதை நான் சொல்லவில்லை. உதாரணமாக, 2011ஆம் ஆண்டில் நடந்த செயற்கை அறிவு மாநாட்டில், முக்கியப் பேச்சாளர்களில் ஏழு விழுக்காடு மட்டுமே பெண்கள். 2016ஆம் ஆண்டு நடந்த ஒரு நுண்ணுயிரியல் மாநாட்டில் மொத்தம் 27 கருத்துரையாளர்கள் பேசினார்கள். இதில் 25 பேர் ஆண்கள். இப்படிப் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். இவ்வாறு ஆண்கள் மிக அதிகமாக இருந்தாலோ ஆண்கள் மட்டுமே பேச்சாளர்களாக இருந்தாலோ அவற்றை Manference என்று அழைக்கிறார்கள்.

ஆண்கள் மட்டுமே கொண்ட மாநாட்டு விவாதக்குழுக்கள் உண்டு. இவற்றை Manel (Men only Panel – Manel) என்று அழைக்கிறார்கள். சில உதாரணங்களைப் பார்க்கலாம். 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவின் சிறுநீரகவியல் துறையில் பல மாநாடுகள் நடந்தன. இவற்றில் மொத்தம் 168 விவாதக்குழு நிகழ்வுகள் நடந்தன. இதில் 59% விவாதக்குழுக்கள் ஆண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டவை. கரோனா கொள்ளைநோய் காலகட்டத்தில் நடந்த சில இணைய விவாதக்குழுக்களும் மேனல்களாகவே இருந்தன என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 2017, 2018 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து மேலைநாடுகளில் நடந்த மொத்த விவாதக்குழு நிகழ்வுகளில் 36% மேனல்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆக்ஸ்போர்டு அகராதியில் 2014ஆம் ஆண்டில் இந்தச் சொல் அதிகாரபூர்வமாகச் சேர்க்கப்பட்டது.

மேனல் மற்றும் மேன்ஃபரன்ஸ் போன்றவற்றால், பெண் விஞ்ஞானிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விடுகிறது. அவர்களது சாதனைகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இதனால் துறைசார் முன்னோடிகள் என்கிற இடத்திலும், துறையின் முக்கியப் பங்களிப்பைத் தந்தவர்கள் என்கிற பட்டியலிலும் பெண்களின் பெயர்கள் அவ்வளவாக இடம்பெறுவதில்லை. காலப்போக்கில் பெண்களின் பங்களிப்பு மறைந்தே போகிறது.

சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. மேனல்கள் இருந்தால் அந்த மாநாட்டில் பங்குகொள்ள மாட்டோம் என முக்கிய விஞ்ஞானிகள் அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மூன்றாமுலக நாடுகளுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய நிதி அமைப்புகள் கடந்த சில ஆண்டுகளில் தொடங்கப்பட்டிருக்கின்றன. 2011ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது ஸ்டெம் மாநாடுகளில் பெண் பேச்சாளர்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து வருவதாக நேச்சர் ஆய்விதழ் தெரிவிக்கிறது. எல்லா இடங்களிலும் மாற்றம் வரவில்லை என்றாலும் “ஏன் நிலைமை இப்படி இருக்கிறது?” என்பதுபோன்ற கேள்விகளாவது வரத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் அதை வைத்து மட்டுமே திருப்தியடைந்துவிட முடியாது. சமூகம் அனுமதித்ததோ இல்லையோ, அறிவியலுக்குள் ஆண்களும் பெண்களும் ஒன்றாகத்தான் நுழைந்தார்கள். அப்படியிருக்க, 2024ஆம் ஆண்டிலும் இப்படிப்பட்ட பாரபட்சங்கள் ஏன் தொடர்கின்றன என்பதைக் கவனிக்கத்தான் வேண்டும்.

ஸ்டெம் துறையில் மட்டுமல்லாமல் எங்கு சென்றாலும் பெண்களின் வாழ்வில் குறுக்கே வந்து நிற்பது உடை பற்றிய பிரச்னைதான். பெண் விஞ்ஞானிகளும் உடைசார்ந்த சிக்கல்களைச் சந்தித்திருக்கிறார்கள், தெரியுமா?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!