செங்கோண முக்கோணத்தின் அடிப்படையான பண்பை விளக்கும் பிதாகரஸ் தேற்றம் தெரியுமா? பொருட்களின் இயக்கம் பற்றிய நியூட்டனின் மூன்றாம் விதி? உயிரினங்களின் உருவாக்கம் பற்றிய டார்வினின் பரிணாமத் தத்துவம்? பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை விளக்கும் ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம்? வாயுக்களின் செயல்பாடு பற்றிய பாயில் விதி?

அடிப்படை அறிவியல் தெரிந்த எல்லாருக்கும் இவை கட்டாயமாகத் தெரிந்திருக்கும். இன்னும் கொஞ்சம் யோசித்தால் ஹபிள்ஸ் தொலைநோக்கி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பாக்டீரியாக்களை இனங்காண உதவும் க்ராம் சாயமேற்று முறை (Gram’s staining method), நிலநடுக்கத்தின் தீவிரத்தன்மையைக் குறிக்கும் ரிக்டர் அளவுகோல், உயிரிகளுக்குள் நிகழும் க்ரெப்ஸ் சுழற்சி, ஜூலியஸ் ரிச்சார்ட் பெட்ரியால் உருவாக்கப்பட்டு எல்லா நுண்ணுயிரியல் ஆய்வகங்களிலும் பயன்படுத்தப்படும் பெட்ரி தட்டு (Petri dish), ஒலியின் அளவு பற்றிய டாப்ளர் விதி, பாலைச் சுத்திகரிக்கும் பாஸ்டர் முறை, கணித செட்களை விளக்கும் வென் வரைபடம் (Venn diagram) என்று ஒரு பெரிய பட்டியலையே சொல்லலாம். இவை அனைத்துமே விஞ்ஞானிகளின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இந்தப் பட்டியலில் இருக்கும் ஒரு பெயர்கூட பெண் விஞ்ஞானிகளை அடிப்படையாகக் கொண்டதில்லை. மீண்டும் ஒருமுறை பட்டியலை வாசித்துப் பாருங்கள்.

லமார்க் (Lamarck) என்கிற இயற்கையியலாளரை அனைவரும் அறிந்திருப்போம். உறுப்புகள் பயன்படுத்தப்படுவதைப் பொறுத்து அவை அதிகமாகவோ குறைவாகவோ வளர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் என்கிற அடிப்படையில் இவர் ஒரு கருதுகோளை முன்வைத்தார். அதற்காக அவர் கொடுத்த உதாரணமும் உலகப் புகழ்பெற்றது. மரங்களை எட்டிப் பிடிப்பதற்காக ஓர் ஒட்டகச்சிவிங்கி தொடர்ந்து சிரமப்பட்டு கழுத்தை நீட்டினால், அதன் கழுத்து காலப்போக்கில் வளர்ந்துவிடும் என்றும், அதன் சந்ததிக்கும் நீண்ட கழுத்து இருக்கும் என்றும் அவர் விளக்கினார். இது தவறானது என்பது பல விதங்களில் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால் லாமார்கிசம் என்கிற பெயர் காரணமாக அவரது பெயர் வரலாற்றில் நிரந்தமாக இடம்பிடித்துவிட்டது.

பெயரின் சக்தி இதுதான். டார்வின் என்ன சொன்னார், நியூட்டன் விதி என்ன என்பவை எல்லாம் துல்லியமாக நமக்கு நினைவில் இல்லாவிட்டாலும் அவர்களின் பெயர் மறக்காது. அறிவியலாளர்கள் என்றதும் அவர்களை நாம் நினைவுகூர்கிறோம். ஆகவே ஒரு கண்டறிதலுடன் அறிவியலாளரின் பெயர் இணைந்திருப்பது பல நன்மைகளைத் தரும்.

லிசா மெய்ட்னர்

அந்தப் பின்னணியில் பார்த்தால் பெண் அறிவியலாளர்கள் இருட்டடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சில உதாரணங்கள் மூலம் இதைத் தெளிவாக விளக்கலாம். நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த தனிம அட்டவணையை (Periodic table) எடுத்துக்கொள்வோம். இதில் 118 தனிமங்கள் இருக்கின்றன. இதில் 15 தனிமங்களுக்கு அறிவியலாளர்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒரே ஒரு தனிமத்துக்கு மட்டுமே (மெய்ட்னரியம்) லிசா மெய்ட்னர் பெண் அறிவியலாளரின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கியூரியம் என்கிற தனிமம் மேரி க்யூரி, பியரி க்யூரி ஆகிய இருவரையும் குறிப்பதால் அது பெண் அறிவியலாளரை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது என்று சொல்லிவிட முடியாது. ஆக, 14க்கு ஒன்று. இதுதான் தனிமங்களில் பெண் பெயர்களின் விகிதம்.

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவில் பத்துக்கும் மேற்பட்ட முக்கியத் தொலைநோக்கிகள் உண்டு. இவற்றில் ஆறு தொலை நோக்கிகளுக்கு ஆண் விஞ்ஞானிகளின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. நான்சி கிரேஸ் தொலைநோக்கி மட்டுமே ஒரு பெண் விஞ்ஞானியின் பெயரை அடிப்படையாகக் கொண்டது. நான்சி கிரேஸ் ஒரு முக்கியமான வானியலாளர். ’ஹபிள் தொலைநோக்கியின் தாய்’ என்று அழைக்கப்பட்டவர். வாழ்நாள் முழுவதும் பெண்கள் ஸ்டெம் துறைகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தவர். பெண் என்பதால் பல அடக்குமுறைகளைச் சந்தித்தவர். அவருக்கு இப்படி ஓர் அங்கீகாரம் கிடைத்திருப்பது நல்லதுதான் என்றாலும் 2025ம் ஆண்டில்கூட ஆறுக்கு ஒன்று என்கிற விகிதம்தான் பெண் அறிவியலாளர்களுக்குக் கிடைக்கிறது என்பது உறுத்துகிறது.

விண்வெளியில் கண்டறியப்படும் புதிய பகுதிகளுக்கு விஞ்ஞானிகளின் பெயர்களை வைப்பதும் ஒரு பொதுவான வழக்கம். அதில் இருக்கும் பாலினப் பாரபட்சத்தை ஆராய்கிறார் வானியலாளர் ஆனி லெனாக்ஸ். நிலவில் இருக்கு 1578 பள்ளங்களில் இரண்டு சதவீதப் பள்ளங்களுக்கு மட்டுமே பெண் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றனவாம். செவ்வாயில் இருக்கும் 280 நிலவியல் அமைப்புகளில் 1.8% மட்டுமே பெண் பெயர்கள் தாங்கியவை. ’புதனில் பெண்களின் நிலை கொஞ்சம் பரவாயில்லை. அங்கு இருக்கும் நில அமைப்புகளில் 11.8% இடங்களுக்குப் பெண் பெயர்களை வைத்திருக்கிறார்கள்’ என்று அவர் கிண்டலாக எழுதுகிறார். வானியலின் இத்தனை கருமேகங்களுக்கு நடுவில் ஒரு சின்ன ஒளிக்கீற்றும் இருக்கிறது. HD86081 என்கிற நட்சத்திரத்துக்கு இந்திய அறிவியலாளர் பிபா சௌதுரியின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சூரியனிலிருந்து 340 ஒளி ஆண்டுகள் தொலைவில் மஞ்சள் வெளிச்சத்தில் பிபா ஒளிர்கிறது.

நட்சத்திரங்கள், விண்வெளிக்கூறுகளைப் போலவே புதிதாகக் கண்டறியப்படும்  உயிரினங்களுக்கும் பெயர்கள் வைக்கும்போது விஞ்ஞானிகளை அங்கீகரிக்கும் வழக்கம் இருக்கிறது. அங்கும் இதே நிலைதான். 2022இல் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியானது. அதில் புழுக்களின் பெயர்கள் விரிவாக ஆராயப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக வைக்கப்படும் பெயர்களில் 19% மட்டுமே பெண் ஆராய்ச்சியாளர்களை அடிப்படையாகக் கொண்டவை என்று ஆய்வில் தெரியவந்தது. பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா நுண்ணுயிரிகளில் புதிதாக வைக்கப்பட்ட 224 பெயர்களில் 14% மட்டுமே பெண் விஞ்ஞானிகளை அடிப்படையாகக் கொண்டவை. அட, இவ்வளவு ஏன், ஆலோ (சோற்றுக்கற்றாழை இந்தக் குழுவைச் சேர்ந்ததுதான்) என்கிற ஒரு பேரினத்தில் உள்ள எல்லாச் சிற்றினப் பெயர்களையும் ஆராய்ந்து பார்த்ததில், 80% பெயர்கள் ஆண் விஞ்ஞானிகளை அடிப்படையாகக் கொண்டவை என்பது தெரிந்தது.

அணுக்கள் எலக்ட்ரான்களை வெளியேற்றும் இயற்பியல் நிகழ்வுகளைத் துல்லியமாக விளக்குவது ஆகர் விளைவு என்று அழைக்கப்பட்டு வந்தது. இதை 1922இல் லிசா மெய்ட்னர் கணித்துச் சொன்னார். 1923இல், அதாவது ஓர் ஆண்டு கழித்து பியர் ஆகர் என்பவரும் தாமாகவே இதைக் கண்டறிந்தார். ஆனால், இது ஆகர் விளைவு என்று மட்டுமே அழைக்கப்பட்டு வந்தது. கடந்த 30 ஆண்டுகளாக, இதை ’ஆகர் மெய்ட்னர் விளைவு’ என்று அழைக்க வேண்டும் என்று அறிவியல் உலகம் வலியுறுத்தி வருகிறது. பல விஞ்ஞானக் கூட்டமைப்புகள் இதை இப்போதும் பரிந்துரைக்கின்றன. ஆனால், இன்றுவரை இந்தப் பெயர்மாற்றம்  அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்படவில்லை. ஆய்வுக் கட்டுரைகள் என்று வரும்போது அவரது புரிதலுக்கும் அரசியல் சார்புக்கும் ஏற்றபடி அறிவியலாளர்கள் இந்த விளைவைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் கனவாகத்தான் இருக்கிறது.

ஹென்ரியட்டா ஸ்வான்  லீவிட் என்கிற அமெரிக்க அறிவியலாளர், ஒரு செபீட் நட்சத்திரத்தின் ஒளிரும் காலத்தை அறிந்தால், அதன் ஒட்டுமொத்த பிரகாசத்தைக் கண்டறியலாம், அதை வைத்து நட்சத்திரத்தின் தூரத்தை அறியலாம் என்கிற விதியைக் கண்டறிந்தார். 1912இல் அவர் இதை ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டார். ஆனால், நெடுங்காலம் வரை இது Period Luminosity law என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. பல தசாப்தங்கள் கழித்து, ’இது இனிமேல் லீவிட் விதி என்று அழைக்கப்பட வேண்டும்’ என 2009இல்தான் வானவியல் கூட்டமைப்புகள் வலியுறுத்தின. இப்போது ஒருவழியாக இது லீவிட் விதி என்றே குறிப்பிடப்படுகிறது.

ஹென்ரியட்டா ஸ்வான்  லீவிட்

ஆலிஸ் பால் என்கிற பெண் அறிவியலாளர், 1915இல் ஒரு வேதியியல் முறையை உருவாக்கினார். இந்த முறைப்படி சால்மூக்ரா எண்ணெயைப் பிரித்து நோயாளிகளுக்குக் கொடுத்தால் தொழுநோயாளிகளின் உடலில் மருந்து சரியானபடி சென்று சேரும் என்பது உறுதியானது. ஆனால், அவரின் கண்டறிதல்கள் பதிப்பிக்கப்படுவதற்கு முன்பே அவர் இறதுபோனார். ஆலிஸ் பாலின் முறையில் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்த அவரின் சக அறிவியலாளர் ஆர்தர் லைமன் டீன், ’டீன் முறை’ என்று பெயரிட்டு அதைப் பிரசுரம் செய்தார். தொழுநோய் வல்லுநரான ஹால்மன், டீனின் செயல்முறை தவறானது என்றும், பால் செயல்முறை என்றுதான் அது அழைக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டுக்கொண்டார். இவையெல்லாம் நடந்து பல தசாப்தங்களுக்குப் பிறகே ஆலிஸுக்கான அங்கீகாரம் கிடைத்தது.

ஓர் அறிவியலாளர் என்கிற முறையில் இந்த வரலாறுகள் எனக்குச் சலிப்பூட்டுகின்றன. அறிவியலில் இருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் ஒரு பெயருக்காகவும் போராட வேண்டுமா என்று யோசிக்க வைக்கின்றன. இதனாலேயே பல பெண் அறிவியலாளர்கள், ’ஏதோ பேரை வெச்சுக்கோங்க. என்னால இனிமே முடியாது’ என்று விலகியிருப்பார்கள் என்றும் தோன்றுகிறது. நியாயமான ஓர் அங்கீகாரத்துக்கே ஸ்டெம் பெண்கள் போராட்டம் செய்தால்தான் முடியும் என்பதுதான் கசப்பான நிதர்சனம்.

ஏன் பெண்களின் பெயர்கள் வைக்கப்படுவதில்லை?

காரணங்கள் எளிதானவை, எளிதில் யூகித்துவிடக்கூடியவை. ஒப்பீட்டளவில் ஒரு பெரிய கண்டறிதலுடன் தொடர்புள்ள இடத்துக்கு ஸ்டெம் பெண்கள் வருவதே குறைவு. அப்படியே வந்தாலும் அந்தக் குழுவில் இருக்கும் ஆண்கள்தான் இதைச் செய்திருக்க முடியும் என்று பிறர் நம்புவார்கள். யார் பெயர் வைக்கிறார்கள் என்பது அதிகாரம் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி, இந்த அதிகார மையங்களில் பெண்களுக்கான பிரதிநிதிகள் குறைவு. ஆய்வுக்கான நிதியை வாங்கவும் ஆய்வகத்தில் வசதிகளைப் பெறவும் மாநாடுகளில் கலந்துகொண்டு ஆய்வுகளை விவாதிக்கவுமே பெண்களுக்குப் பல தடைகள் இருக்கின்றன எனும்போது, இது ஒரு கூடுதல் போராட்டமாக மாறுகிறது, ஸ்டெம் பெண்கள் எல்லாராலும் இதற்காகப் பாடுபட முடியாது. ஆகவே பல ஆய்வுக் கட்டுரைகளில் நன்றியுரைகளிலும் அடிக்குறிப்புகளிலும் மட்டுமே பெண் அறிவியலாளர்களின் பெயர்கள் தங்கிவிடுகின்றன.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு பெயராக்கத்தையும் நிச்சயம் குறிப்பிடவேண்டும். இந்தப் பெயர்கள் நேரடி அறிவியலுக்குள் வருவதில்லை என்றாலும் கவனிக்கத்தக்கவை.

அமெரிக்காவைத் தாக்கிய கத்ரீனா புயலை நினைவிருக்கிறதா? இர்மா புயல்? ஃப்ரான்சீன் புயல்?

20ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக அமெரிக்காவில் புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் இருக்கவில்லை. சும்மா ’மிச்சிகன் புயல்’, ’நியூயார்க் புயல்’ என்றுதான் சொல்வார்கள். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் புயல்களை அதிகமாக கவனித்தார்கள். அவ்வாறு கவனித்த புயல்களுக்குத் தங்களது காதலி அல்லது மனைவியின் பெயரை வைக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக தனக்குப் பிடிக்காத முன்னாள் காதலி/மனைவியின் பெயரைக் கோரமான புயல்களுக்கு வைப்பதிலும் ஆண் வானிலை ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டினார்கள். ’புயல்கள் பெண்களைப் போன்றவை’ என்று வானிலை ஆய்வாளர்கள் சொல்வதாக 1972இல் ஒரு கட்டுரைகூட வெளியாகியிருக்கிறது. ’பெண்களின் நிலையற்ற மனநிலையைப் பிரதிபலிக்கும்படி புயல்களுக்குப் பெண் பெயரை வைப்பதுதான் சரி. இல்லாவிட்டால் புயல் எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள்’ என்கிறது 1977இல் வெளியான இன்னொரு கட்டுரை! பெண்களை வர்ணிப்பதைப் போலவே புயல்களையும் வர்ணிப்பதும் அந்தக் காலத்தில் ஒரு வழக்கமாக இருந்தது, ’அவள் கடற்கரையுடன் ஊடல் செய்கிறாள்’, ’அவளது மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்றெல்லாம் புயலைப் பற்றிப் பேசுவார்கள்.

1970களில் பெண்கள் இதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். ’சும்மா போகிறபோக்கில் எங்களைப் பேரிடர்களோடு தொடர்புபடுத்துகிறீர்கள், இது வெறுப்பூட்டுகிறது’ என்று அவர்கள் தெரிவித்தார்கள். அவர்கள் இதை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால், அதைச் செயல்படுத்துவதில் அதிகார மையங்கள் சுணக்கம் காட்டின. ’ஆண் பெயர் வைத்தால் புயலைப் பார்த்துப் பயப்படமாட்டார்கள்’ என்கிற பழைய பல்லவியைத் தொடர்ந்து பாடிய அதிகார அமைப்புகள், கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு வந்தன. 1979இல் இந்த வழக்கம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஆண்/பெண் இருவகைப் பெயர்களையும் புயல்களுக்கு வைக்கவேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ’பெயரில் என்ன இருக்கிறது?’ என்கிற முந்தையை கேள்விக்கு இதையும் பதிலாக சொல்லலாம்.

ஆண்-பெண் என்கிற பாலின இருமைக்குள் பொருந்திவரக்கூடிய பெண்களுக்கே இந்நிலை என்றால், ஸ்டெம் துறையில் பால்புதுமையினரின் நிலை என்னவாக இருக்கிறது?

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!