கேள்வி

நான் மருந்துக்கடையில் வேலை பார்க்கிறேன், என் பெயர் கண்ணம்மா. என் பெண்ணுக்கு 4 வயதாகிறது. 12 கிலோ தான் இருக்கிறாள். சரிவர சாப்பிடுவதில்லை. எப்போதும் நொறுக்கு தீனி! பசிக்கும், வளர்ச்சிக்கும் என்ன டானிக் கொடுக்கலாம்?

பதில்

என்னம்மா கண்ணம்மா! டானிக் எதுவும் விலை கொடுத்து வாங்க வேண்டாம். கடையிலிருந்து எடுத்து ஈஸியாக தந்து எடையை ஏற்றி விடலாம் என்று நினைக்கிறீர்களா? சத்துள்ள சாப்பாட்டை விட 5-10 மில்லி டானிக் கொடுத்து குழந்தையை வளர்த்துவிடலாம் என்ற எண்ணமே சரியானதல்லவே!

“கேள்வியே பதிலாக வந்தார் கண்ணம்மா” என்று பாடத் தோன்றுகிறது!! உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. “சாப்பிட மாட்டேங்கிறா! ஆனால் நொறுக்கு தீனி அதிகம்!” அப்போ பாப்பாவுக்கு நல்ல பசி இருக்குதானே! பசி எடுத்தால்தானே தீனிகள் உள்ளே போகும்? ஜங்க் தீனிகள் வயிற்றை அடைத்து பசியை போக்கி விடும். நொறுக்குத் தீனி வகைகளைக் குறைத்தால் இட்லி, தோசை,சைவ, அசைவ உணவுகள் எல்லாமே உள்ளே போகும். எடையும் தானாக ஏறிவருமே!

4 வயதில் 12 கிலோ என்பது குறைவுதான்! உங்கள் மகள் பிறக்கும்போது 2.5 கிலோ அல்லது அதற்கு மேல் இருந்திருந்தால் இது குறைவுதான். இருக்க வேண்டிய எடையை கணக்கிட ஒரு பார்முலா உள்ளது. வயது (முடிந்த வருடங்களில் உ-ம். 3 ½, 3 ¾, 4)x2+8 = இருக்க வேண்டிய எடை. அதாவது வயதை இரட்டிப்பாக்கி எட்டு சேர்த்தால் இருக்கவேண்டிய எடை. உங்கள் குழந்தைக்கு 4 வயது முடிந்திருந்தால் 4×2+8= 16 கிலோ இருக்க வேண்டும். ஒரு கிலோ கூடவோ குறையவோ இருக்கலாம். உங்கள் குழந்தை பிறந்த போது என்ன எடை இருந்தது? குறைமாதக் குழந்தையா என்ற விபரங்களையும் கருத்தில் கொண்டுதான் இந்த எடை குறைவா, சரியா என்று முடிவு செய்ய வேண்டும். 4 வயதில் குழந்தையின் உயரம் 4×6+77= 101 செ.மீட்டர் இருக்க வேண்டும். எடையும் குறைவு, உயரமும் குறைவு என்றால் நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும் (வயதை ஆறால் பெருக்கி 77 கூட்டினால் இருக்கவேண்டிய சென்டிமீட்டர் உயரம் கிடைக்கும்).

அவள் என்ன உணவு சாப்பிடுகிறாள் என்பதைப் பொறுத்துத் தான் எடை அதிகரிக்கும். காலை உணவு நிறைய மாவுச்சத்து, புரதம், விட்டமின்கள் சேர்ந்ததாக இருக்க வேண்டும். நம் வீடுகளில் வழக்கமாக செய்யப்படும் காலை உணவுகள் எல்லாம் அப்படியானவை தான். உதாரணமாக இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி, பூரி தொடுகறிகளாக சாம்பார், சட்னி, குருமா இவையெல்லாம் சத்துணவு தான். அத்துடன் ஒரு முட்டையும் சேர்த்து விட்டால் கேட்கவே வேண்டாம்! சூப்பர் ஊட்டச்சத்து. காலையில் எழுந்ததும் காபி, டீ, பாலில் ஏதாவது பவுடர் கலந்து கொடுக்கும் வழக்கம் இருந்தால் நிறுத்தி விடுங்கள். எந்த விளம்பர பானத்தாலும் எடை, உயரம், அறிவு, விளையாட்டுத் திறன் எதுவும் அதிகரிக்காது. பள்ளிக்கூடத்துக்கு எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும், காலையில் எத்தனை மணிக்கு அவள் எழுந்திருக்கிறாள் என்பதைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டும். எழுந்ததும் பால் 100 மில்லி தரலாம். ஆனால் காலை உணவு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான். நேரம் போதாது என்று நினைத்தால் பாலை தவிர்த்துவிட்டு நேரடியாக காலை உணவு தரலாம். பள்ளிக்கு கிளம்பும் போது குழந்தை விரும்பினால் பால் தரலாம். கட்டாயம் இல்லை.

பள்ளிக்கு ஸ்நாக்ஸ் என்ன தரலாம்? பழத்துண்டுகள், உலர் பழங்கள், கடலை மிட்டாய், எள் மிட்டாய் , பொரி உருண்டை போன்றவை மிகவும் நல்லது (இந்த டாக்டருக்கு பிஸ்கட், சாக்லேட், சிப்ஸ், முறுக்கு, மிச்சர் இதெல்லாம் தெரியாதா? என்று அம்மாவும் பொண்ணும் சிரிக்கிறீர்கள் தானே!).

மதியம் சாப்பாட்டுக்கு ஏதாவது கலவை சாதம், பொரியல், கூட்டு, இட்லி போன்றவை தரலாம்.

மாலை வீட்டிற்கு வந்ததும் மதிய உணவுக்காக வீட்டில் சமைத்த சாப்பாட்டை தர வேண்டும். குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், அசைவம் எல்லாம் இதில் அடங்கும். வாரத்தில் ஐந்து நாட்களாவது முட்டை தர வேண்டும். இதற்கு மேல் பசி இருந்தால் பழங்கள், ஏதாவது ஒரு சுண்டல், பால் தரலாம்.

மாலை சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து நன்கு ஓடி ஆடி விளையாட விடுங்கள். இரவு உணவை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டால் தவறில்லை. தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவை ஒரு சத்தான தொடுகறியுடன் தரலாம். இரவு உணவுக்கு பிறகு குழந்தை கேட்டால் 100 மில்லி பால் தரலாம்.

 இந்த உணவு முறையை பின்பற்றி கொடுத்தால் எடை ஏற ஆரம்பிக்கும்.

  1. உங்கள் அம்மா அல்லது மாமியார் குடும்பத்து உடல் வாகை பொறுத்தும் குழந்தை ஒல்லியாக இருக்கும். உங்கள் மாமியாரிடம், உங்கள் நாத்தனார் அல்லது கணவர் 4 வயதில் எப்படி இருந்தார்கள் என்று கேளுங்கள். அதே மாதிரி நீங்கள் உங்கள் உடன்பிறந்தோர் சிறுவயதில் எப்படி இருந்தார்கள் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நோய் ஏதும் இல்லாமல் இருந்தாலும் நன்றாக சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். அதற்கு பயம் தேவையில்லை.
  2.  நான்கு வயதிற்கு ஏற்ப குழந்தையின் விளையாட்டு, பேச்சு, புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
  3.  குழந்தைக்கு இரத்த சோகை (Anemia), குடல் பூச்சி, செரிமானக் கோளாறுகள், இதய நோய்கள், சுவாசப் பாதை நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்று மருத்துவரிடம் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். மனதில் அழுத்தம் ஏதாவது இருந்தாலும் எடை ஏறாது. வேலைக்குப் போகும் அம்மாவின் குழந்தைகளுக்கு மனதில் ஏக்கம் இருக்கும். மூத்த அல்லது இளைய குழந்தைகளுடன் அடிக்கடி சண்டை, அதிகம் பிடிவாதம், உற்சாகமின்மை போன்றவை மன அழுத்தத்தின் வெளிப்பாடு.
  4.  குழந்தை மண், சிலேட்டுக் குச்சி, சாக்பீஸ், அரிசி போன்ற ஏதாவது சாப்பிடுகிறதா என்றும் பார்க்க வேண்டும்.மேற்சொன்னவற்றில் ஏதாவது இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுங்கள்.

குழந்தை வயதிற்கேற்ப எடை இல்லையென்றால் அதனை அறிவியல் ரீதியாக அணுகி சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். குடும்ப வாகு என்றால் ரொம்ப ரொம்ப நல்லது. ஒல்லியாக, ஆனால் ஆரோக்கியமாக இருப்பதுதான் இப்போதைய தேவை. உடல் பருமன் அதிகரித்து விட்டால் குறைப்பது சிரமம். அதுவும் பெண் குழந்தை 10 வயதிற்கு மேல் கிடுகிடுவென்று வளரும். உயரமும் எடையும் அதிகரிக்கும்.

அம்மாடி இந்த அம்மாகிட்ட இனிமேல் கேள்வியே கேட்க மாட்டேன் என்கிறீர்களா? நீங்கள் ஒருவர் கேட்டால் பல ஆயிரம் பெண்கள் கேட்பதற்கு சமம்! ஏனென்றால் எல்லோரும் அறிவியல் விளக்கங்கள் தெரிந்து கொள்வார்கள் இல்லையா?

இந்த விளக்கம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? டானிக் வாங்கிக் கொடுத்து குழந்தையைக் குண்டாக்கிவிடலாம் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள் சகோதரி!

தொடரும்…

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.