எட்டு வருடங்கள் வருடங்கள் காத்திருப்பிற்கு பின் சென்ற ஜூன் மாதம் Pride Walk க்கு சென்றது மன நிறைவாக இருந்தது.

வீட்டில் யாரிடமும் பெரிதாக சொல்லிக் கொள்ளவில்லை. அதிகாலை கிளம்பி மதியம் உணவிற்கு சென்னை சென்றுவிடலாம். பின்னர் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு எழும்பூர் சென்றால், சரியாக பெருமையின் பேரணி இருக்கும் என்றெண்ணி, வாகனத்திற்காக காத்திருந்தபொழுது, 6 மணிக்கு வர வேண்டிய ஓட்டுநர், 6 30 ஆகியும் வரவில்லை. அவரது அலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது. மாற்று ஏற்பாடு செய்து திருச்சியில் இருந்து சென்னை சேர்ந்த பொழுது 1 மணி. வேகமாகக் குளித்து, உணவருந்தி எழும்பூர் சென்ற பொழுது மணி 3.30. பேரணி தொடங்கும் முன்பே சென்று சேர்ந்தாகிவிட்டது.

சிட்னியில் ஒவ்வொரு வருடமும் பெரும் பேரணி நடக்கும். அவர்கள் அணியும் ஆடைகளுக்காகவே ஒருமுறை நேரில் சென்று காண வேண்டும் என்ற ஆசை, இன்னும் நிறைவேற்றாமல் வைத்திருக்கிறேன். இந்த வருடம் எப்படியோ சென்னை பேரணியில் பங்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திய நிகிலுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நண்பர்கள் இருவர், உடன் கவின் என்று நால்வர் கலந்து கொண்டோம். கவினுக்கு ஏற்கனவே கொஞ்சம் உடல் நலம் சரி இல்லாத பொழுதும், பேரணியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் உடன் வந்தான். ஏறக்குறைய ஒன்றரை மணி நேர நடைக்கு பின் பேரணி நிறைவு பெற்றது. அதற்கு பின் நடந்த கலை நிகழ்ச்சிகளை காண ஆசையாக இருந்த பொழுதிலும், கவினின் உடல் நிலை காரணமாக வீடு திரும்ப வேண்டியதாயிற்று.

முகநூலில் புகைப்படங்களாக பார்த்த பேரணியை நேரில் பார்க்கும் பொழுது, சற்று வித்தியாசமாக இருந்தது. புகைப்படங்களில் மிக அழகாக தெரிந்த இடம், நேரில் அப்படி இல்லை. அதை மறக்கடிக்க செய்தது அங்கு வந்திருந்தவர்கள் உடை அலங்காரங்கள். எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்றெண்ணும் அளவிற்கு மிக வித்தியாசமான நேர்த்தியான ஆடை அலங்காரங்கள். அதில் ஒருவர் கிறிஸ்துவ திருமணத்திற்கு உடுத்தும் வெள்ளை ஆடை உடுத்தி இருந்தார். பின்னல் வால் போன்று நீண்டு விரிந்த வெள்ளைத் துணி. சென்னை தெருக்களில் நடந்து, பேரணி முடிந்து வீட்டிற்கு சென்று அதை எப்படி துவைப்பார் என்ற எண்ணம் அகலவேயில்லை. ஓரிரு ஆண்கள், பெண் உடையை அணிந்திருந்தது சிறப்பாக இருந்தது.

பேரணி முடிந்து கொஞ்சம் ஆசவாசப்படுத்திக் கொண்டிருந்த பொழுது பக்கத்தில் ஒருவர் நின்றிருந்தார். மிக பிரபலம் போல. பலரும் அவர் அருகில் வந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டே இருந்தார்கள். ஒரு சில திருநங்கைகள் அறிமுகம் கிடைத்தது. அவர்களிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்த பொழுதிலும் அதற்கான சந்தர்ப்பமும் நேரமும் அமையவில்லை. அன்றைய பொழுது மிக இனிமையாகவும், சென்னை வெயிலினால் கொஞ்சம் சோர்வாகவும் கழிந்தது.

சென்னையில் பணிபுரியும் இணையரின் அண்ணன், தங்கள் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு இருக்கும் வாய்ப்புகளை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அது பற்றி பல பேருக்கும் தெரிவதில்லை. ஒருசிலர் மட்டுமே அந்த வாய்ப்பை பயன்படுத்துகிறார்கள். இரண்டு நபர்கள் ஒரு பணிக்கு சரியாக இருந்தாலும், அவர் திருநராக இருக்கும் பட்சத்தில் அவரைத்தான் தேர்வு செய்வோம் என்றார். பதவி உயர்வுகளுக்கும் அவர்களுக்கே முதல் வாய்ப்பு என்றும் குறிப்பிட்டார். அவர் உயர் பதவியில் இருப்பதினால், இது பற்றிய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது என்றார்.

இந்தியாவில் இவ்வளவு விழிப்புணர்வு இருக்கிறதா என்று கொஞ்சம் ஆச்சர்யப்பட்ட பொழுது, அவை எல்லாம் MNC கம்பெனிகள் என்பது நினைவுக்கு வந்தது. 20 வருடங்களுக்கு முன்னரே கூட திருநருக்கு பல பெயர்கள் இருந்தன. இப்போது சொல்ல நாக்கூசுவதால், அதைக்கடந்து செல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். ஒருமுறை பேருந்தில் பயணம் செய்த பொழுது, ஒரு திருநங்கை அருகில் நின்று கொண்டிருந்தார். அவர் என் மேல் பட்டுவிடாத மாதிரி எவ்வளவு ஒதுங்கி நிற்க முடியுமோ அவ்வளவு ஒதுங்கி நின்றேன். ஆனாலும் அவ்வப்போது அவர் என்மேல் உரசியது சங்கடத்தைத் தந்தது.

அதில் இருந்து சில வருடங்கள் கழித்துதான் திருநர் என்றால் யார் என்ற புரிதல் லேசாக வர ஆரம்பித்தது. அன்றில் இருந்து அவர்களைப் பார்க்கும் கண்ணோட்டம் மாறி இருந்தது. ஒரு பூக்கடையில் இருந்த ஒரு சிறுவன்/மி அப்போது தான் திருநரென உணர்ந்தாள்போல. தோற்றத்தில் ஆண்போல இருந்தாலும், பாவாடை சட்டை அணிந்திருந்தாள். நான் உன்னை அங்கீகரிக்கிறேன் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அவள் என்னை பார்த்தால் அன்பாக சிரிக்கலாம் என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘நீ என்ன என்னை அங்கீகரிப்பது. இது என் உடல் என் உரிமை’ என்பது போல, அவள் என்னை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. அவள் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.

எங்கள் அலுவலகத்தில் இது குறித்த விழிப்புணர்வு காணொளி பார்ப்பது காட்டாயம். அதில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் மட்டுமல்லாது, வேறு பல பிரிவுகள் இருந்தது கொஞ்சம் புதிய செய்தியாக தான் இருந்தது. அதில் ஒருவர், ‘நான் பெண்ணாகவோ ஆணாகவோ உணரவில்லை. சமூகம் சொல்லும் கட்டமைப்பில் நான் எந்த வகையை சேர்ந்த இனம் என்பது தெரியாது. அதை பற்றிய கவலையோ அக்கறையோ எனக்கில்லை. என்னை அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை. என்னை ‘they, them’ என்ற சொற்றொடர்களால் குறிப்பிடுங்கள் என்று சொல்லும் பொழுது அதில் இலக்கண பிழை உள்ளது என்கிறார்கள். என் உணர்வை விட உங்கள் இலக்கணம் ஒன்றும் பெரிதில்லை’ என்றார். அலுவலகங்கள் மின்னஞ்சல்களில் he/him , she /her , they /them என்று சிலர் தங்கள் பெயர்களுக்கு கீழே குறிப்பிடும் பொருள் அப்போது தான் புரிந்தது. என் உடல் என்னை யார் என்று தீர்மானிப்பதில்லை, என் உணர்வு தான் தீர்மானிக்கிறது.

ஒரு மராத்திய திரைப்படத்தில் (பெயர் நினைவில்லை) வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மாடியில் தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நபர் ஒரு திருநங்கை என்று தெரிய வரும் பொழுது, அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது. மிக அழகிய திரைப்படம். தன் மார்பகங்களை ஒரு ஆண் வாஞ்சையாகத் தடவுவதை பார்த்த காதலன், தன் மாமாவாகிய அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடிக்கப் பாய , அந்த பெண்ணோ ‘அவர் என்னை தப்பான நோக்கில் தொட வில்லை. அந்த தொடுதலில் காமம் இல்லவே இல்லை. ஆர்வம்தான் இருந்தது ‘ என்பாள். அப்போதுதான் அவர் ஒரு திருநங்கை, ஒரு பெண்ணைப்போல் தனக்கு மார்பகங்கள் இல்லையே என்று எங்கும் ஒரு நபர் என்று தெரியவரும். வீட்டில் அனைவரும் உணரும் தருணத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்.

இந்தியாவில் இப்படி விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட, மறுபுறம் வேறு சில முயற்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் எங்கள் வீட்டிற்கு வந்த தமிழ்த் தம்பதிகள், ‘பாலின மாற்றம் எல்லாம் பொய். அது இளைஞர்களை மூளை சலவை செய்வதற்காண முயற்சிகள் மட்டுமே’ என்றனர். அதில் யாருக்கு என்ன லாபம் என்று கேட்டால், மருத்துவ வருமானத்திற்கு என்றும் வேறு சில காரணங்களும் கூறிவிட்டு ஒரு காணொளியை காண சொல்லி பரிந்துரைத்தார்கள். அது என்ன சேனல் என்று தெரிந்ததுமே புரிந்தது, அதில் என்ன விதமான விஷ கருத்துக்கள் பரப்பப்பட்டிருக்கும் என்று.

கோவில்களில், ரயில்களில் கைதட்டி காசு வாங்குபவர்களாக மட்டுமே காட்டப்பட்டு வந்த திருநர் மக்கள், பேராசிரியர்களாகவும், எழுத்தாளர்களாகவும், நிறுவனங்களில் பெரும் பணியில் இருப்பவர்களாகவும், கலைஞர்களாகவும் இருப்பதை சென்னை பேரணியில் பார்க்க முடிந்தது. அந்த நிலையை அவர்கள் அடைய எத்தனை போராட்டங்களை நடத்தி இருப்பார்கள் என்பதை எண்ணும் பொழுது, முன்பொரு காலத்தில் அவர்களை என்னவாக பார்த்தேன் என்னும் உறுத்தல் வந்து போகிறது. ‘பெருமையின் பேரணி’! மிகப் பொருத்தமான பெயர்.

திருநங்கை, திருநம்பி என்ற சொற்கள்கூட தேவையற்றவைதான். அவை மோசமான பிற சொற்களுக்கு மாற்றான ஒரு கண்ணியமான குறிப்புதான். ஆனால் ஆண் உருவில் இருக்கும் நபர், தான் ஒரு பெண்ணாக உணர்கிறேன் என்று சொன்ன பின்னர், அவள் என்று விளிப்பதை விடுத்து, திருநங்கை என்ற புதிய பெயர் எதற்கு என்ற கேள்விதான் எழ வேண்டும்.

மனிதர்களை அவர்கள் விருப்பப்படி பார்ப்பதில்தான் எத்தனை மனத்தடைகள் இருக்கின்றன?

Pictures courtesy: Agni Pradeep & Thilagavathi Thilo

தொடரும்…

படைப்பாளர்

சுமதி விஜயகுமார்

பொதுச் செயலாளர், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா