சமையலறை ஜன்னலுக்கு வெளியே செம்பருத்திப்பூ ரத்தச் சிவப்பில் நிறையப் பூத்திருந்தது. இலைகளில் தேங்கியிருக்கும் ரத்தம். பக்கத்தில் சிவப்பு ரோஜாச்செடி மட்டும் இளப்பமா என்ன? அதுவும் தன் பங்குக்கு இரத்தக் கோப்பையாகப்  பூத்துத் தள்ளியிருந்தது. சொட்டாத, சிந்தாத, சிதறாத இரத்தம். அடுப்பில் இட்லிக் கொப்பரையை ஏற்றி விட்டு வெளியே வேடிக்கை பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தாள் ஷைலஜா. சுரேந்தர் கூப்பிட்டது கூடக் காதில் விழவில்லை.

             “ஷைலா… ஏய்.” அவன் உலுக்கியதில் திடுக்கிட்டுக் கலைந்தாள். 

               “தோ… டிஃபன் எடுத்து வைக்கிறேன் சுரேன்.” அவசரமாக இட்லிக் கொப்பரை மூடியை வெறும் கைகளால் திறந்தாள். நன்றாகவே சுட்டு விட்டது. சுரேந்தர் சட்டென்று பக்கத்தில் இருந்த குழாயைத் திருப்பி அவள் கையை அதில் நீட்டினான். எரிச்சல் கொஞ்சம் தணிந்தது. ஆனாலும் கை விரல்கள் சிவந்து மீண்டும் எரியத் தொடங்கின.

                 அவளை அழைத்து வந்து உணவருந்தும் மேசை அருகில் உட்கார வைத்து விட்டு, இட்லிகளை எடுத்து ஹாட்பேகில் வைத்து தட்டுகளையும் எடுத்து வந்தான் சுரேந்தர். மூன்று தட்டுகளை தயாராக வைத்து விட்டு இட்லிகளை இரண்டிரண்டாக வைத்தான்.  சட்னியையும் பரிமாறி விட்டு மகனை அழைத்தான்.

                  “ராகுல்.. உனக்கு ஸ்கூல் வேன் வந்துடும்டா. டைமாச்சு வா.”

                 ஐந்தாவது படிக்கும் ராகுல் கண்ணாடி முன் நின்றிருந்தான். பக்கவாட்டு வகிடு எடுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான். “ப்பா… முடி படியவே மாட்டேங்குது. உங்களை மாதிரியே சைடு வகிடு எடுத்து விடுங்க.” கொஞ்சினான்.

                  சுரேந்தர் அவனைக் கொஞ்சும் மனநிலையில் இல்லை. “நாளைக்கு எடுத்து விடுறேன்டா. இப்ப சீக்கிரம் சாப்ட்டு கிளம்பு. அம்மாவ ஹாஸ்பிடல் கூப்டுட்டு போகணும்.” ராகுல் அமைதியாக வந்து சாப்பிட்டு விட்டு ஷைலஜாவுக்கு மட்டும் முத்தம் கொடுத்து விட்டுக் கிளம்பினான். “சைடு வகிடு எடுத்து விட்டால்தான் அப்பாக்கு முத்தா.” போய் விட்டான்.

               ஷைலஜா சாப்பிடாமலே அமர்ந்திருந்தாள்.

              “சாப்பிடு ஷைலா… டாக்டர் என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு அப்புறம் கவலைப் படலாம். நீ நினைக்கிற மாதிரி இருக்காது.” சுரேந்தர் அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டதோடு, இட்லியை பிய்த்து அவளுக்கு ஊட்டத் தொடங்கினான்.

                 போனவாரம் ஆரம்பித்தது இந்தப் பிரச்சினை. அலமாரிக்கு மேலே வைத்திருந்த பெட்டியை எடுக்க நாற்காலியை எடுத்துப் போட்டு முயன்று கொண்டிருந்தாள் ஷைலஜா. பெட்டி உள்ளே தள்ளி வைத்திருந்தது. நுனி விரல்களால் எக்கி சிரமப்பட்டு எடுத்த போது வலது கையில் ‘சளுக்’கென்று மின்னலடித்தது. வலது அக்குளில் தாள முடியாத வலி உண்டானது. துடித்துப் போய் பெட்டியைக் கீழே போட்டு விட்டாள். இறங்கியவள் வலித்த இடத்தில் ஒரு மருந்துக் களிம்பைத் தேய்த்தாள். வலி குறையவில்லை. சிறிது நேரம் கடந்தும் தாளாமல் போகவே, ஒரு வாடகைக் காரை வரவழைத்து அருகில் இருந்த ஞான புஷ்பம் மருத்துவமனைக்குச் சென்றாள்.

               டாக்டர் மகிமா அவளைப் பரிசோதித்துவிட்டு ஒரு சந்தேகத்தில் மேமோகிராம் பரிசோதனை செய்யச் சொன்னார். அதன் முடிவு  இன்று தான் தெரியும். ஷைலஜா ஒரு வாரமாகவே மனம் உழன்று கொண்டிருந்தாள்.

                சுரேந்தர் அவளை ஞான புஷ்பம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். சிறிது நேரம் காத்திருந்தார்கள். செவிலி வந்து அழைத்ததும் தயக்கத்தில் கால்கள் பின்ன உள்ளே சென்றாள் ஷைலஜா.

             மேசைக்குப் பின்னிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த மகிமா அவர்களை சற்று மௌனமாகப் பார்த்தார். அவரது மௌனமே ஷைலஜாவுக்கு பாதி உண்மையைத் தெரிவித்து விட்டது. 

              “என்னாச்சு டாக்டர்?” சுரேந்தர் வறண்ட குரலில் கேட்டான்.

                மகிமா சற்றுத் தயங்கி விட்டு, “அது… வந்து… ஷைலஜா இப்பத்தான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும். ஓகேவா? இது ஆரம்ப ஸ்டேஜ்தான். முறையா சிகிச்சை எடுத்துகிட்டா இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. மார்பகப் புற்றுநோய்க்கு இப்பல்லாம் எவ்வளவு அட்வான்ஸ் ட்ரீட்மெண்ட்ஸ் வந்துருச்சு தெரியுமா? நீங்க ஒத்துழைச்சா சீக்கிரமே குணப்படுத்திடலாம்.” முடிப்பதற்குள் ஷைலஜாவின் கண்கள் நீரைப் பொழிந்தன.

            “அழாதீங்க ப்ளீஸ். அப்புறம் இன்னொரு விஷயம்.. இந்தப் புற்றுநோய் செல்கள் உங்க வலது மார்பில் நிறையப் பரவியிருக்கு. அது மேலும் பரவாமல் இருக்கணும்னா…” சற்றே நிறுத்தினார் மகிமா. “உங்க வலது மார்பை ஆபரேஷன் மூலமா ரிமூவ் பண்ணிடனும். அதுதான் உங்களுக்கு நல்லது.” தயக்கத்துடன் சொன்னார்.

           ஷைலஜாவுக்கு காலுக்கு அடியில் நிலம் பிளந்தது. அப்படியே பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்று நினைத்தாள். இது கனவென்று யாராவது சொல்ல மாட்டார்களா என்று ஏங்கினாள். இதோ, “எழுந்திரு ஷைலா. என்ன இது பகல் தூக்கம்?” என்று சுரேந்தர் தட்டி எழுப்ப மாட்டானா? அய்யோ! அவன் முகம் ஏன் இப்படி சுருங்கிக் கிடக்கிறது? ஒருகணம் குனிந்து தனது மார்பைப் பார்த்துக் கொண்டாள் ஷைலஜா.

              வளர் இளம் பருவச் சிறுமியாக இருந்தபோது ஷைலஜாவும், அவளது சித்தி பெண் ஸ்வேதாவும் தங்களது வளராத மார்புகளைப் பார்த்து பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். பெரிய பெண்கள் மாதிரி தாங்களும் மாராப்பு போடவேண்டும்; அதை நொடிக்கொரு முறை சரி செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். பள்ளி இறுதி வரும்போது தோழிகளுடைய மார்பு மாதிரி தங்களுக்கும் இல்லாதது அவர்களுக்குப் பெரிய குறையாக இருந்தது.

             ஒருமுறை ஸ்வேதா மூச்சிரைக்க ஓடிவந்தாள். “ஹேய் ஷைலு… புதுசா எக்ஸர்ஸைஸ் ஒண்ணு புக்குல படிச்சேன். வா செஞ்சு பார்க்கலாம்.” 

              “ம்ப்ச்.. போடி.. பெரிய எக்ஸர்ஸைஸு. எனக்கு இப்ப பண்ண மூடு இல்லை.” அவள் அசுவாரசியமாகப் பதிலளித்தாள்.

                ஸ்வேதா இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அவளை முறைத்தாள். “அப்ப… வரமாட்டே இவ்லையா? சரி போ. இது பண்ணா பிரெஸ்ட் பெரிசாகும்னு போட்டிருந்தது.” அவள் முடிப்பதற்குள் ஷைலஜா குதித்து எழுந்தாள். 

                “சாரி.சாரி.சாரிடி. வா! இப்பவே பண்ணலாம்.” குதித்தாள்.

                  இருவரும் சுவரிலிருந்து மூன்றடி பின்னால் நகர்ந்தார்கள். அங்கிருந்து லேசாக முன்னால் சாய்ந்து இரண்டு கைகளையும் சுவரில் பதித்துக் கொண்டார்கள். முன்னும் பின்னுமாக தண்டால் எடுப்பது போல் வேகமாக அசைய வேண்டும். இவ்வளவு தான் உடற்பயிற்சி என்று வகுப்பெடுத்தாள் ஸ்வேதா. 

                 தினமும் ஐம்பது முறை காலையும் மாலையும் இதைச் செய்தால் மார்பகம் வளரும் என்று ஸ்வேதா சொல்லியதில் இரண்டு மாதம் மாங்குமாங்கென்று பயிற்சி செய்தார்கள். “இதென்னங்கடி புதுவிதமான உடற்பயிற்சி?” என்று கேட்ட ஷைலஜாவின் அம்மாவிடம் தோளுக்கு பயிற்சி என்று பொய் சொல்லி விட்டு, அவர் நகர்ந்ததும் ஒருவரையொருவர் பார்த்து கிளுக்கிட்டு சிரித்துக் கொண்டார்கள். நாள்தான் தேய்ந்தது. பயிற்சியால் ஒரு பலனும் இல்லை.

                 அப்புறம் ஓய்ந்து தெளிந்த ஒரு நாளில் பாதாம் பிஸ்தா முந்திரி என்று கொறித்தார்கள். அதன் பின்னர் சில வருடங்களில் அதன் விளைவோ அல்லது உடல்வாகோ ஷைலஜா பெரிய மார்பகங்களைப் பெற்றாள். ஆனால் அதுவே அவளுக்கு எதிரியாக மாறியது. மாணவர்கள் அவளைப் பார்த்து வழிவதும், விதவிதமான பெயர்கள் வைப்பதும், கிண்டலடிப்பதும், பிற மாணவிகள் அவளைப் பார்த்துப் பொறாமைப்படுவதும் அவளது கவனத்துக்கு வந்தபோது அவள் மிகவும் கவலைப்பட்டாள். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு பெருமிதம் இருந்தது. அவள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. “டி ஷர்ட், டிரவுசர் போட்டு விளையாடணும். உனக்கு டி ஷர்ட் சௌகரியமா இருக்காது. தேவையில்லாத கவனச் சிதறல் வரும்.” ஆசிரியைகளே நிராகரித்தார்கள். அவள் கவனத்தை இலக்கியத்தின் பக்கம் திருப்பினாள். கதை, கவிதை, கட்டுரைகள், பெண்ணியச் சிந்தனைகள் என்று எழுதத் தொடங்கி கவனம் பெற்றாள். கல்லூரியில் வெளிவரும் மாத இதழின் ஆசிரியர் பொறுப்பைக் கைப்பற்றினாள்.

              அவள் மூன்றாமாண்டு படிக்கும் போது கல்லூரி மாணவர் தலைவர் தேர்தல் வந்தது. அவர்கள் கல்லூரி வரலாற்றிலேயே அவள் தான் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாள். அதுகுறித்து மாணவியரின் கிசுகிசுப்பு கூட அவள் காதுகளுக்கு எட்டியது. “இது அவளுக்கு கிடைச்ச வெற்றி இல்லை. அவ சைசுக்கு கிடைச்ச வெற்றி.” அப்போதும் மனசுக்குள் லேசான பெருமித உணர்வு.

              அப்புறம் படித்து முடித்த கையோடு அவளை ஒரு சுப தினத்தில் சுரேந்தரின் கையில் பிடித்துக் கொடுத்தார்கள். ராகுல் பிறந்தான்.  சமயங்களில் பால் கட்டிக் கொண்டு அவஸ்தைப் படும்போது மார்புகள் இரண்டையும் பிய்த்து எறிந்து விட வேண்டும் போல் இருந்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு குழந்தை பால் குடிக்க மறுத்தான். பால் சுரந்து வழிந்தது‌. ஒரு நாளைக்கு மூன்று நைட்டிகள் மாற்ற வேண்டி இருந்தது. மார்பு பெரிய தொல்லையாக இருந்தது. ராகுல் வளர்ந்தான். அப்புறம் மார்பு குறித்த சிந்தனையே இல்லாமல் போனது. வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே வளைய வந்து கொண்டிருந்தாள். 

             இப்போது டாக்டர் சொன்னது  ஒரு கூடை நெருப்பை வாரி எடுத்து அவள் மீது கொட்டியது போல் இருந்தது. “அய்யோ! இனி சுரேனுக்கு என்மீது இருக்கும் ஈர்ப்பு குறைந்து விடுமோ?” என்றுதான் முதலில் தோன்றியது. 

                 “என்ன சொல்றீங்க ஷைலஜா? ஆபரேஷனுக்கு ஒத்துக்குறீங்களா?” மகிமா கேட்டார்.

                  “டாக்டர் ப்ளீஸ்… அதைத் தவிர நீங்க வேற என்ன ட்ரீட்மெண்ட் வேணாலும் குடுங்க. எப்பேர்ப்பட்ட வலினாலும் தாங்கிக்கிறேன். பிரெஸ்டை மட்டும் எடுக்கச் சொல்லாதீங்க டாக்டர். அப்புறம்… அப்புறம்… நான் பொண்ணு அப்படிங்குற அடையாளமே அழிஞ்சிருமே.” கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

              மகிமா அவளை ஆறுதலாகப் பார்த்து, மென்மையாகப் புன்னகைத்தார். ‘இத்தனை வருடங்களில் உன்னை மாதிரி எத்தனை பெண்களைப் பார்த்திருக்கிறேன்.’ என்று அந்தச் சிரிப்பு சொல்லாமல் சொன்னது.

              “வீட்டுக்கு போய் உங்களைக் கொஞ்சம் நிதானப்படுத்திட்டு, பொறுமையா யோசிங்க. அப்புறம் பேசிக்கலாம்.” என்ற மகிமாவிடம் விடை பெற்றுக் கொண்டார்கள்.

                நான்கு நாட்கள் கடந்து போயிருந்தன. இந்த நான்கு நாட்களும் நான்கு யுகங்களாகத் தோன்றியது அவளுக்கு. உண்ணாமல், உறங்காமல், எந்த வேலையையும் செய்யாமல் அழுத வண்ணமே கிடந்தாள். ராகுல்,அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று புரிந்து வைத்திருந்தான். அவ்வப்போது அவளுக்கு சாப்பிட, கடையில் சுரேந்தர் வாங்கி வரும் உணவுகளை  தட்டில் வைத்துக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவான். குழந்தைக்காக நாலு கவளம் சாப்பிடுவாள். மேற்கொண்டு சோறு உள்ளே இறங்காமல் சண்டித்தனம் பண்ணும். உடைந்து அழும் அம்மாவைக் கட்டிக் கொண்டு குழந்தையும் கண்கலங்க அமர்ந்திருக்கும். 

             சுரேந்தர் மனம் கலங்கியிருந்தாலும் அவள் உடைந்து விடக் கூடாது என்று கவனமாக இருந்தான். அப்படியும் இரண்டு நாள் முன்பு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது பாடல் காட்சியில் காமிரா கதாநாயகியின் மார்பகங்களை ஃபோகஸ் செய்தது. இரண்டொரு நொடிகளில் கடந்து விட்ட அந்தக் காட்சியை வைத்து பெரிதாகப் பிரச்சினை செய்தாள் ஷைலஜா.

                “பாத்தியா… நான் இருக்கும் போதே அடுத்தவளைப் பாக்குறே. என்னோடதை ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டா உனக்கு என்னைப் புடிக்காது. வேற எவளையாவது பார்ப்பியா?” முடியை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடினாள்.

                அடுத்த அரைமணி நேரத்தில், “சாரி சுரேன். நீ வேணா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ. என்னால உனக்கு இனி என்ன பிரயோஜனம் சொல்லு.” என்று கண்ணீர் சிந்தினாள்.

                இரவு. படுக்கையில் அழுதபடியே கிடந்தாள். ஆறுதலாக அவளை அணைத்து நெஞ்சில் சரித்துக் கொண்ட சுரேனிடம், “ஆபரேஷன் பண்றதுக்கு முன்னாடியே அனுபவிச்சுடணும்னு நினைக்கிறியா?” என்றாள் வெடுக்கென்று. பதறி அவளை விலக்கினான் சுரேந்தர்.

              மறுநாள் இரவு. அவள் உறங்கிய பின் நேரம் கழித்து வந்தான். சத்தமில்லாமல் படுக்கையில் சரிந்தான். சில நிமிடங்கள் கழித்து, “ஏன் சுரேன் வியாதிக்காரின்னு தொட மாட்டேங்குறியா?” என்று அஸ்திரத்தை வீசினாள். சுரேந்தர் அயர்ந்து போனான். பொங்கி வந்த ஆத்திரத்தை அவளது இயலாமையும், சூழ்நிலையும் அடக்கி விட்டன.

               வானம் இருட்டிக் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. ஷைலஜா கட்டிலில் அமர்ந்தவாறு மழையையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருகணம் எதிரே இருந்த கண்ணாடியில் மார்பைப் பார்த்தாள். “மார்பில்லாமல் நான் எப்படி இருப்பேன்? நான் பெண்ணென்று எல்லோரும் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? இந்தச் சமுதாயத்தில் நான்குபேர் நடுவே எப்படி வாழ்வது? ஒவ்வொருவர் கேள்விகளையும், பார்வைகளையும் எப்படி எதிர்கொள்வது? என் மார்புகள் என் தாய்மையின் அடையாளம். என் காதலின் சின்னம்.  நான் பெண்ணென்ற அங்கீகாரம். அதை எப்படி இழப்பது?” மனதுக்குள் கேள்விகள் அலையடித்தன.

            மெல்ல எழுந்து கண்ணாடியின் அருகே சென்றாள். முகத்தைப் பார்த்தவள் அதிர்ந்தாள். “இதென்ன இதுவா நான்? என் முகத்தில் மிளிரும் தன்னம்பிக்கை எங்கே போய்த் தொலைந்தது?” தன்னையே கேட்டுக் கொண்டாள். நான்கு நாட்களில் நாற்பது வயது முதிர்ந்திருந்தாள்.

           சன்னல் வழியாகக் குளிர்ந்த காற்று சுழன்றடித்தது. புத்தக அலமாரியில் இருந்து அவளது கல்லூரி மேகஸின் கீழே விழுந்தது. அவளது கட்டுரைகள், கவிதைகள் வெளிவந்த மாகஸின்களை தூக்கிப் போட மனமின்றி அவளுடனே எடுத்து வந்திருந்தாள்.

         ‘உள்ளே வைத்திருந்த மாகஸின் எப்படி வெளியே வந்து விழுந்தது?’ கேள்வியோடு அந்த இதழை எடுத்துப் பிரித்தாள். அவளது கவிதை அச்சாகியிருந்தது. சத்தமாக வாசித்தாள்.

             “அவள் மனமெங்கும் வலி இருந்தது

               ஆனாலும் அவள் வீழவில்லை…

               சமூகம் பார்த்தது கேலியாக

               சமூகம் பார்த்தது காமமாக

               சமூகம் பார்த்தது சதையாக 

               ஆனால்

               அதுவல்ல நான்…

               என் தைரியம் என் புன்னகை 

               என் இலட்சியம் என் வெற்றி

               இதுவே நான்..

               உடல் என் அடையாளம் அல்ல

               நான் என்பது நான் தான் 

               நான் மட்டும் தான்…

               நானே என் நம்பிக்கை 

               நானே என் மீட்பு!.”

அவள் கண்ணில் நீரோடு அந்தக் கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்தாள். “வெறும் மார்பு மட்டுமா நான்? அதுவா என் அடையாளம்? அது வெறும் சதைக்கோளம். அவ்வளவு தான். விபத்தால் கை, கால் இழப்பது மாதிரி தானே மார்பை இழப்பதும்.” மனதுக்குள் ஒரு ஷைலஜா போரிட்டாள். கைகள் புத்தகத்தைப் புரட்டின.

              புத்தகத்துக்குள்ளிருந்து ஒரு சிறிய வெள்ளைப் பேப்பர் கோடு போட்டது கீழே விழுந்தது. எடுத்துப் பிரித்தாள். ராகுலின் குண்டு குண்டான கையெழுத்தில் ‘அன்புள்ள அம்மா உனக்கு சீக்கிரம் உடம்பு சரியாகணும். நீ மறுபடியும் என்னைக் கொஞ்சணும். கொஞ்ச நாளா நீ அழுதுட்டே இருக்கே. அழாதேம்மா. நான் சீக்கிரம் பெரியவனாகி உன்னையும், அப்பாவையும் பாத்துக்கிறேன். ஐ லவ் யூ அம்மா.” என்று சின்னச் சின்ன ரசிக்கத்தக்க எழுத்துப் பிழைகளோடு எழுதி ராகுல் என்று கையெழுத்துப் போட்டிருந்தது.

              அவளுக்கு கண்ணில் நீர் பெருகியது. ‘என் துயரத்தில் இந்த சின்னஞ்சிறு ஜீவனை எப்படி மறந்தேன்? ச்சே…’ தன்னையே கடிந்து கொண்டாள். “இவர்களுக்கு நான் முக்கியம். அதனால் எனக்கு உயிர் முக்கியம்.” சுரேந்தரின் முகம் நினைவில் எழுந்தது. ‘பாவம் சுரேன். அவன் மனசை  ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்.’ அலைபேசியை எடுத்தாள். “ஹலோ டியர்… ஈவினிங் பர்மிஷன் போட்டுட்டு சீக்கிரம் வாங்க. ராகுலும் நாலு மணிக்கு வந்திடுவான். நாம மூணு பேரும் வெளியே போயிட்டு வரலாம். அப்புறம் இன்னொரு விஷயம்.. நாளைக்கே டாக்டர் மகிமாவைப் பார்த்து ஆபரேஷனுக்கு தேதி ஃபிக்ஸ் பண்ணிட்டு வரலாம். சரியா?” புன்னகை வழியும் குரலில் சொல்லி விட்டு, மறுமுனையில் அவன் திகைத்துக் கொண்டிருக்கும் போதே அலைபேசியைத் துண்டித்து மேசை மீது வைத்தாள்.

            குளிர்ந்திருந்த சன்னல் கம்பிகளில் முகம் பதித்தாள். சில்லிப்பு உள்வரை இறங்கியது. மழை நின்றிருந்தது.

 ***

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.