“ஏன் கொட்ற மழைல குடையைப் பிடிச்சிட்டு வீட்டு வாசல்ல நிக்குறீங்க… உள்ளப் போங்க…”
“உள்ளப் போனா பாப்பா அழறா. வெளிலதான் நிக்கணும்னு அடம் பண்றா.”
வெளியில் ஜோவென மழை பெய்து கொண்டிருந்தது. கடைக்குச் சென்றிருந்த நான் குடையைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன். என்னைப் பார்த்த என் இரண்டு வயது மகள் அவளும் குடையைப் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும் என அடம்பிடித்தாள்.
அவளை ஒரு கையில் தூக்கிக் கொண்டு மறு கையில் குடையைப் பிடித்துக்கொண்டு மழையில் நின்றேன். அவளுக்குப் பெரும் சந்தோஷம்.
குடையின் மேல் விழும் மழையின் சத்தம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டடி நடந்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தேன்.
“ம்மா… ம்மாஆ.. வா” என வெளியில் கை நீட்டினாள்.
“அம்மா புதுப் பந்து நேத்து வாங்கினேன்ல, அதை எடுத்து விளையாடலாம்.. உள்ள போலாம் சரியா?”
“அம்ம்ம்மா வா” என மீண்டும் கையை வெளியே நீட்டினாள்.
அடுத்து சில நிமிடங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.
நம்மால் இனி பேசி ஜெயிக்க முடியாது. கொஞ்ச நேரமாவது அவளுடன் மழையில் நின்றுதான் ஆக வேண்டும். மீறி உள்ளே சென்றால் அழுகையும் கதறலும்தான் மிஞ்சும்.
குடையைப் பிடித்துக்கொண்டு வீட்டு வாசலில் நின்றேன். குடையின் மேல் விழும் மழையின் சத்தத்தை நானும் ரசித்தேன். இப்படிக் காரணங்களின்றி மழையுடன் நின்று கொண்டிருக்கும் வாய்ப்பை எனக்குத் தந்த மகளின் முகத்தைப் பார்த்தேன். அவ்வளவு சந்தோஷம் அவளிடம். அதில் நானும் மகிழ்ந்து போனேன்.
இப்படியான இதுவரை அனுபவித்திராத பல இனிமையான தருணங்களை அளித்த குழந்தை வளர்ப்பைப் பற்றிப் பேச வேண்டாமா!
என் கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தார். நானும் என் மாமியாரும் மட்டும்தான் வீட்டில் இருந்தோம். இரவு இரண்டு மணி இருக்கும், குழந்தை அழும் சத்தம் கேட்டு எழுந்தேன். அவளைத் தூக்கித் தட்டிக் கொடுத்தேன். பால் கொடுத்தேன் என்ன செய்தும் தூங்கவில்லை.
அருகில் இருந்த என் மாமியார், “தூங்க மாட்டிங்கிறாளா… நீ கொஞ்ச நேரம் படு நான் தூங்க வைக்கிறேன்” என்று குழந்தையை வாங்கிக் கொண்டார்.
தாயின் மன நிலையைப் பொறுத்த வரைக்கும் முழு நேரமும் யாராவது உடன் இருந்தாலும் போதாதுதான். ஆனால், இப்படி நமக்காக ஏன் பிறர் வேலை செய்ய வேண்டும், என் மாமியாருக்கும் வயதாகிவிட்டது. இரவில் கண் விழித்தால் அவர் உடல் நிலையும் பாதிக்கும். ஆனால், எனக்காக மட்டுமே அவர் அந்த நொடி விழித்திருந்தார்.
இப்படிச் சிலர் செய்யும் சிறு சிறு உதவிகளுக்கு நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டாமா!
ஒரு நாள் வெளியில் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் பக்கத்து வீட்டிற்குள் ஓடினாள். நானும் அவளைப் பிடிக்க அவள் பின்னாலே சென்றேன்.
“அத்தை எங்கன்னு பார்க்க வந்தியா… ஆப்பு சாப்பிட்டியா இல்லையா.. நீ அடம் பண்ணாம சாப்பிட்டா உனக்கு நான் மீன் காமிப்பேன்” என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.
ஒரு நொடியில் தன்னை அத்தை என்று அறிமுகம் செய்து கொண்டாரே!
“இப்போதான் சூடா இட்லி எடுத்தேன்… பிள்ளைக்கு வேணுனா வாங்கிக்கோங்க.”
“சப்பாத்தி சுட்டேன் பொண்ணுக்குக் கொண்டு வந்தேன்.”
“பாசிப்பருப்பு குழம்பு ஊட்டுங்க… உப்பு, காரம் கம்மியாத்தான் போட்டு செஞ்சிருக்கேன்.”
இப்படி உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் அன்பைப் பகிரும்போது அதை நினைத்து இன்புற வேண்டாமா!
குழந்தை பிறந்த சில நாட்கள் அவர்களுக்காகப் பயணங்களைத் தவிர்த்து வர, குழந்தைகளுக்காக பயணம் செல்ல நேரிடம் தருணங்கள் அழகானவை. நேர்த்தியாக உடை உடுத்த வேண்டும், ஒளிப்படங்கள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் பெரிதாக யோசிக்க முடியாது.
அவர்களை மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்குப் புதிய புதிய விஷயங்களைக் காட்ட வேண்டும். அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். வேடிக்கை காட்ட வேண்டும் என்றெல்லாம் ஆர்வமாக இருக்கும்.
கடற்கரை மணலில் கால் வைத்ததும் அவள் முகம் மாறியது. அவளுக்குப் பிடிக்கவில்லை. தண்ணீரிலும் கால் வைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாள்.
குழந்தையாக மாறி பலவற்றை யோசிக்க வைத்தாள். மீண்டும் என்னை முதல் எட்டில் இருந்து நடக்க வைத்தாள். அவள் பார்வையில் இருந்து உலகைப் பார்ப்பதின் சுவையைச் சொல்லாமல் இருக்க முடியுமா!
உறவினர்கள் வீட்டிற்குக் கையில் சாக்லேட் பிஸ்கட் உடன் வரும்போதே உள்ளுக்குள் பதட்டமாகும். அதை வாங்கி உண்ணும் மகளைப் பார்க்கும்போது யாவரின் மீதும் கோபம் வரும்.
“எதுக்கு எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகுற… எல்லாத்தையும் நீ பாத்துக்கணும்னு நினைச்சா உனக்குத்தான் தேவை இல்லாத ஸ்ட்ரஸ். ஏதாவது அவ சாப்பிடும்போது குழந்தை உடம்புக்கு நல்லது இல்லைனு தோணுச்சுனா போர்ஸன் கண்ட்ரோல் அதாவது அவ சாப்பட்ற அளவு குறைக்கலாம். எல்லாருக்கும் ஷேர் பண்ணும்னு சொல்லி முழுசா சாப்பட்றத கால் வாசியா குறைக்கலாம். அதை விட்டுட்டு ரொம்ப மனசைப் போட்டுக் குழப்பிக்கக் கூடாது. கொஞ்சம் கோ வித் தே ப்லோன்னு இருந்தாதான் குழந்தைய நிம்மதியா வளர்க்க முடியும்” என்றார் என் சமவயது தாய்.
தான் சந்திக்கும் சாவல்களை இன்னொருவரும் சந்திக்கும்போது அவருக்குத் தோள் கொடுக்கும் தோழருக்குக் கைகுலுக்கி நட்புப் பாராட்ட வேண்டாமா!
என்ன இதுவரை குழந்தை வளர்ப்பில் உள்ள ஆதங்கத்தைப் பேசிவிட்டு, இன்று இனிமைகளை பேசுகிறேன் என்று தோன்றலாம்.
கிடைத்த சுய நேரத்தின் அருமை இப்போது நேரம் கிடைக்காதபோதுதான் புரிகிறது.
கசப்பைச் சுவைத்த பின் உணரும் இனிப்பின் சுவை போல சவாலான சூழலிலும் பல இனிமையான தருணங்கள் நிகழத்தான் செய்கின்றன.
இனிமையான தருணங்கள் மட்டுமா நெகிழ்ச்சியான தருணங்கள்கூட நிகழ்கின்றன.
அன்றொரு நாள் ஏதோ ஒரு யோசனையில் மனம் சோர்ந்து இருந்தேன். கண்ணில் இருந்து சில கண்ணீர்த் துளிகள் விழ, அதைப் பார்த்துக் கொண்டிருந்த என் மகள் என்னருகில் வந்தாள். என் கண்களைத் துடைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.
படைப்பாளர்:

ரேவதி பாலாஜி
சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.
‘அழாதம்மா, நான் உன்கூட இருக்கேன்’ என்று கூறியது அவளின் பார்வை.
என்ன எதிர்பார்த்து குழந்தை வளர்ப்பு நிகழ்கிறது. நான் தரும் அன்பை அவள் திருப்பத் தர வேண்டும் என நினைக்கிறேனா!
குழந்தைப் பிறப்பும் இயற்கையின் ஓர் அம்சம். நாம் பெற்றுவிட்டோம், நாம் வளர்க்கிறோம் என்பதற்காக அவர்கள் திருப்பி நமக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பது தவறு.
‘உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல; அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன், மகள்கள். அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை. அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம். உங்களின் சிந்தனைகளை அல்ல!’
-கலீல் ஜிப்ரான்
இப்படி ஒரு பரந்த மனப்பான்மைப் பெறுவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.
நான் என் அன்பைத் தருகிறேன் அவளும் உணர்கிறாள். திருப்பிக் கிடைத்தால் பேரானந்தம். அதற்காகத் திருப்பிக் கிடைக்கும் என எதிர்பார்த்தும் தரவில்லை. அவள் என்னுடன் வளரும் தருணங்களிலேயே வியப்பைத் தந்து செல்கிறாள்.
தண்ணீர்க் குடத்தை நடு வீட்டில் வைத்து டம்ளரில் நீரை மொண்டு கீழே ஊற்றினாள். கூடம் முழுவதும் நனைந்தது. அவளைத் தடுத்தால் அழுகிறாள், சரி செய் என்று விட்டுவிட்டேன். நானும் இரண்டு டம்ளர் மொண்டு கீழே ஊற்றினேன். சுவாரசியமாக இருந்தது.
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு வைத்திருந்த ஜாடியை எடுத்து வந்து கீழே கொட்டினாள் முதலில் கோவம் வந்தது. நானும் அவளோடு சேர்ந்து விளையாடினேன். அதுவும் ஒரு மாதிரி ஜாலியாகத்தான் இருந்தது.
என் கையில் இருந்தவள் சாலையில் வந்த மேளச் சத்தத்திற்குக் குதித்தாள். அவளோடு சேர்ந்து நானும் கைகளை ஆட்டினேன். நான் நானாக இருந்த சமயங்களில் செய்யாத சேட்டைகள், கிறுக்குத் தனங்களை இப்போது செய்ய வைக்கிறாள் என் மகள்.
குழந்தை வளர்ப்பில் நிச்சயம் பல ஆதங்கம், பல சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ஒன்று நாட்கள் வேக வேகமாகச் சென்று விடுகின்றன. காலம் செல்லச் செல்லச் சூழலும் மாறத்தான் செய்கிறது.
மனதளவில் முடிந்த வரை வலிமையாக இருக்க முயற்சித்து, இலகுவாக ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு, அவர்களோடு சேர்ந்து புதிதாக உலகை ரசித்து, சூழலை ஏற்றுக்கொண்டால் குழந்தை வளர்ப்பில் மகிழ்ச்சியும் கிட்டுகிறது.
மகிழ்ச்சியா! ஆம் மயக்குறு மகளின் அருகாமையால் மகிழ்ந்து தழும்புகிறேன். அந்த நிறைவின் தருணத்தில் தொடரை நிறைவு செய்கிறேன்.




