திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னன் 64 வகை ஊழியங்களை வைத்திருந்தான். ஊழியம் என்றால் சம்பளம் இல்லாமல் வேலை செய்வது. வெட்டி வேலை, உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு. யானை ஊழியம் என்பது யானைக்கு மட்டை வெட்டி போடுவது. அன்றைக்கு யாருடைய முறையோ அவர்கள் கண்டிப்பாக ஊழியத்தை செய்ய வேண்டும். இல்லை என்றால் தண்டனை உண்டு. ஆனால் வேலைக்கு ஊதியமோ ஓலைக்கு கிரயமோ தரமாட்டார்கள். ஓலை ஊழியம் என்பது ஓலையை வெட்டி எழுதுவதற்கேற்ப பதப்படுத்தி, சீவி அரசு அலுவலகங்களில் சேர்க்க வேண்டும். நேற்றைய ஓலையில் இன்று எழுத முடியாது. அன்றே தயாரித்தால்தான் எழுத முடியும். உப்பு ஊழியம் என்பது தாமரைக்குளத்தில் எடுக்கப்பட்ட உப்பை நாகர்கோயிலில் உள்ள நாகராஜா கோயிலுக்கும் கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரம் கோயிலுக்கும் கொண்டு போய் சேர்ப்பது.1*

இயேசு மூன்று நாள்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததாக விவிலியத்தில் சொல்லப்படுவதையும், கடலுக்குள் சென்ற அய்யா வைகுண்டர் மூன்று நாள்களுக்குப் பிறகு கடலிலிருந்து வெளியே வந்ததாக அகிலத்திரட்டில் சொல்லப்படுவதையும் பலர் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். என்ன ஒன்று, இயேசு உயிர்த்தெழுந்ததற்கும், உயிர்த்தெழுந்த பிறகு வாழ்ந்ததற்கும் வரலாற்றுச் சான்று இல்லை. ஆனால் முத்துக்குட்டி கடலுக்குள் சென்று திரும்பி வந்து, அய்யா வைகுண்டராக தன் பெயரை மாற்றிக் கொண்ட பிறகு, அவர் உயிருடன் வாழ்ந்து மறைந்ததற்கான ஆதாரம் வரலாற்றில் உள்ளது. 

கடலுக்குச் சென்ற அய்யா வைகுண்டரை அலை இழுத்துச் சென்ற பிறகு கடலில் மீன் பிடிக்கும் கடலோடிகள் அவரை காப்பாற்றி இருக்கலாம் அல்லது வைகுண்டரே தன் முயற்சியால் உயிர்பிழைத்து வந்திருக்கலாம்.

தினசரி கூட்டு வழிபாடு, ஞாயிற்றுக்கிழமை சிறப்புக் கூட்டு வழிபாடு போன்றவை கிறிஸ்தவ மதத்தில் கடைபிடிக்கப்படுவதைப் போல, அய்யாவழியிலும் கடைபிடிக்கப்படுவது இன்னொரு ஒற்றுமை. கிறிஸ்தவ மதத்தில் விவிலியம் வாசிக்கப்படுவது போல், அய்யாவழியில் அகிலத்திரட்டு அம்மானையும், அருள் நூலும் வாசிக்கப்படுகிறது.

இயேசு, நாடு முழுவதும் தன் சீடர்களை அனுப்பி, தன் கருத்துக்களை பரப்புமாறு சொன்னார். அய்யா வைகுண்டரும் தன் சீடர்களை பற்பல ஊர்களுக்கு அனுப்பி தன் கருத்துகளைப் பரப்புமாறு சொன்னார். கிறிஸ்தவ மதகுருமார்கள் உலகமெங்கும் சென்று கடவுளுக்கு தேவாலயங்களை நிறுவினர். அய்யா வைகுண்டரின் சீடர்கள் பற்பல ஊர்களுக்குச் சென்று அய்யா வைகுண்டரின் பெயரால் பதிகளையும் நிழற்தாங்கல்களையும் முத்திரிக்கிணறுகளையும் அமைத்தனர். நிழற்தாங்கல்களை குருசடிகளுடனும், பதிகளை தேவாலயங்களுடனும் ஒப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

மேற்சொன்ன ஒப்புமைகளைவிட முக்கியமான ஒப்புமைகள் சில எனக்கு தெரிகிறது. அவை –

  1. மனிதம்

கிறிஸ்தவம் தன்னுடைய தேவாலயங்களைச் சார்ந்து மருத்துவத்தையும் கல்வியையும் மக்களுக்கு வழங்கியதுபோல், ஆதிகாலத்தில் அய்யா வைகுண்டர் உருவாக்கிய பதிகளும் நிழற்தாங்கல்களும் மக்களுக்கு கல்வியையும் மருத்துவத்தையும் வழங்கியதோடு, மக்களின் பசிப்பிணி நீக்குவதையும் முக்கியக் குறிக்கோள்களாகக் கொண்டிருந்தது.

உலக உயிர்களின் லட்சியம் உயிர் பிழைத்திருத்தல் ஒன்றே! மனித இனமும் அதற்கு விதிவிலக்கல்ல. மனித இனம், தன்னுடைய ‘உயிர் பிழைத்திருத்தலுக்கான’ (SURVIVE)  அத்தியாவசியத் தேவைகளான உணவு, மருத்துவம், மற்றும் பகுத்தறிவுக்கல்வி ஆகியவற்றைத் தருகின்ற ஒரு சித்தாந்தத்தை மதம் அல்லது இயக்கம் என்று எந்தவொரு வடிவில் இருந்தாலும், அதை எளிதாகவும் விரைவாகவும் ஏற்றுக் கொள்ளும். அதனால்தான் வரலாற்றில், மருத்துவம் மற்றும் கல்வியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மதங்கள், மக்களிடயே எளிதில் செல்வாக்கைப் பெற்று, வேகமாகப் பரவியிருக்கின்றன.

பெரும்பான்மையான மக்கள், அத்தகைய மதங்களைத்தான் தேர்ந்தெடுத்தனர், இன்றும் தேர்ந்தெடுக்கின்றனர், இனியும் அப்படியே!உலக வரலாறு முழுவதுமே இவ்வுண்மையைக் காண முடிகிறது.

கிறிஸ்தவ மதம் உலகெங்கும் பல்கிப் பெருகுவதற்கு, அம்மதம் வழங்கிய மருத்துவ சேவையும், கல்வி சேவையும், உணவளிக்கும் சேவையும், ஆகியவையுமே முக்கியக் காரணங்கள். கிறிஸ்தவத்துக்கு முன்பு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல தேசங்களிலும், புத்தம் மற்றும் சமண மதங்கள் பல்கிப் பெருகக் காரணமாக இருந்ததும், அம்மதங்கள் மக்களுக்கு போதித்த கல்வியும், கொடுத்த மருத்துவ சேவையுமே ஆகும். மருத்துவம் மற்றும் கல்வியை மக்களுக்கு கொடுப்பதையும், பசிப்பிணி நீக்குவதையும் முதன்மைப் பணிகளாகக் கொண்டதால்தான் ஒரு ஏழை சாமானியன் (அய்யா வைகுண்டர்) உருவாக்கிய அய்யாவழி என்ற இயக்கமும், மிகக்குறைந்த கால கட்டத்தில், மிக அதிகமான மக்களிடம் பரவி வளர்ந்தது என்பது எனது கருத்து.

திருவிதாங்கூரின் 18,19ஆம் நூற்றாண்டுகளின் வாலாற்றைப் பொறுத்தமட்டில், கிறிஸ்தவ மதபோதகரான ரிங்கல்தொபே, அவர்  கட்டிய தேவாலயங்களுக்கு அருகிலேயே சிறிய கிராமப் பள்ளிக்கூடங்களை உருவாக்கினார்.2* அவர் மிஷனரி பொறுப்பை விட்டு வெளியேறும்போது அவர் உருவாக்கிய பள்ளிக்கூடங்களில் (திருவிதாங்கூர் மிஷன்) மொத்தமாக 188 ஆண் குழந்தைகள் மட்டுமே பயின்றார்கள். ‘திருவிதாங்கூரில் பெண் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படவில்லை என்பது சமுதாயத்துக்கு இழப்பு’ என்று ரிங்கல்தொபே பதிவு செய்துள்ளார்.3*

இன்றும் மயிலாடியில் இயங்கி வரும் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு ரிங்கல்தொபேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  அவருக்குப் பிறகு திருவிதாங்கூர் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ மிஷனரிக்கு பொறுப்பேற்ற சார்லஸ் மீட் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை 59ஆக உயர்த்தினார்.4*  அதனைத் தொடர்ந்து திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மிஷனரிகள் கல்விக்கு ஆற்றிய பணி மகத்தானது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டம் முதலாக கேரளா முழுவதும், கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்கள் சிறப்பாக இயங்கி வருவதைக் காண்கிறோம். இதே போல் கிறிஸ்தவ மிஷனரிகள் உலகெங்கும் பல பள்ளிக்கூடங்களை நிறுவியுள்ளனர். அதிலும், பெண் குழந்தைகள் படிக்க அனுமதிக்கப்படாத திருவிதாங்கூரின் சமுதாயத்தில், 1819-ம் ஆண்டு சார்லஸ் மீட்டின் மனைவியான ஜொஹன்னா ஹார்ஸ்ட் (JOHANNA HORST) என்கிற பெண்மணி உருவாக்கிய பெண் குழந்தைகளுக்கான சிறிய கிராமப் பள்ளிக்கூடம் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.5*

johanna horst

திருவிதாங்கூரின் முதல் பெண்கள் பள்ளியை உருவாக்கிய ஜொஹன்னா, ‘தென்னிந்திய பெண்களின் கல்வி மற்றும் பெண் சுதந்திரத்தின் தாய்என்று அழைக்கப்பட்டார்

martha mault

1819-ம் ஆண்டின் இறுதியில் சார்லஸ் மால்ட்டும், அவரது மனைவி மார்த்தா மால்ட்டும் திருவிதாங்கூர் மிஷன் பொறுப்பை ஏற்றனர். அந்த தம்பதியினர் மீட் மற்றும் ஜொஹன்னா ஹார்ஸ்ட்டின் மிஷனரி பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மார்த்தா மால்ட் சமுதாயத்தில் அடிமைகளாக அங்கீகரிக்கப்பட்டு கொடுமைகளில் சிக்குண்டுக் கிடந்த பெண்களுக்கு ரேந்தாத் தையல் (lace) செய்யக் கற்றுக் கொடுத்து, அதன் மூலம் அப்பெண்களுக்கு பொருளீட்டும் வழியைக் காட்டினார்.6* பொருளாதார சுதந்திரம் அடைவதன் மூலமாகவே பெண்களின் சுதந்திரத்தை சாத்தியப்படுத்தமுடியும் என்பதை மார்த்தா மால்ட் உணர்ந்திருக்கிறார் என்று கருதுகிறேன். லேஸ் செய்யக் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடத்தையும், கல்வி கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடத்தையும் ஜொஹன்னாவும் மார்த்தாவும் கவனித்துக் கொண்டனர்.

1859-ம் ஆண்டுக்குப் பிறகு, கிறிஸ்தவ மதபோதகர் டதியின் இரண்டாவது மகள் பீட்ரைஸ் ஜெஸ்ஸி, லேஸ் தொழிற்சாலையில் கிடைத்த பணத்தைக் கொண்டு  ஜொஹன்னா தொடங்கிய கிராம பள்ளிக்கூடத்தை பெரிய பள்ளிக்கூடமாகக் கட்டினார். அப்பள்ளி நாகர்கோயிலில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி என்னும் பெயரில் இன்றும் இயங்கி வருகின்றது.

அய்யாவழியின் நிழற்தாங்கல்களும் பதிகளும் இரவு நேரங்களில் மக்களுக்கான பள்ளிக்கூடங்களாக இயங்கி வந்தன என்பதை நாம் அறிந்தோம். மருத்துவத்தைப் பொறுத்தவரையில் ‘மண்ணும் தண்ணியும் தந்து அய்யா நோய் தீர்த்தார்’ என்பதே அய்யாவழி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால்., ‘தண்ணீர் மண்ணால் சகல நோயைத் தீர்த்து இருக்கும் சமயம்’  என்ற அருள்நூலின் வரியை ஏற்றுக் கொண்ட அய்யாவழி மக்கள்,

வருடியிருப்பதாலே மருந்துவாழ் மலையில்

மருந்து வளரலாச்சே சிவனே அய்யா’ 7* என்ற அருள்நூலின் வரியை கவனிக்க தவறுகின்றனர்.

மருந்துவாழ் மலை பல மூலிகைச் செடிகள் பரவிக்காணப்படும் மலையாகும். சுவாமி தோப்புக்கு வடக்கே அமைந்துள்ள இம்மலையிலிருந்து நாட்டு மருத்துவர்கள் மூலிகைச் செடிகளைப் பறிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. அய்யா வைகுண்டர் நாட்டு மருத்துவம் அறிந்தவராக இருக்கலாம் என்பது எனது கணிப்பு,  அவ்வகையில் ஆய்வு அவசியம். கிறிஸ்தவ பாதரியார் ஒருவர் தன் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்-

“முத்துக்குட்டியிடம் சென்ற நிறைய காலரா நோயாளிகள் இறந்து விட்டார்கள். ஆனால் இறந்து போனவர்களைப் பற்றி மக்கள் பேசவில்லை. முத்துக்குட்டியால் காப்பாற்றப்பட்ட காலரா நோயாளிகளைப் பற்றி மட்டுமே புகழ்ந்து பேசுகிறார்கள்”8* ஆக, அய்யா வைகுண்டர் காலரா நோயாளிகளுக்கு மருத்துவம் செய்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அய்யாவழியில் கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது புலனாகிறது. ஆனால் அய்யாவழியினர் ‘அய்யா மண்ணும் தண்ணியும் தந்து நோய் தீர்த்தார்’ என்ற மூடநம்பிக்கையை மட்டுமே நம்புகிறார்கள்.

இவ்வாறாக ‘மனித இனம் வாழ்வதற்கான அடிப்படைத்தேவைகளை மக்களுக்கு வழங்கும் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது’ என்பதில் கிறிஸ்தவ மதமும் அய்யாவழி இயக்கமும் ஒன்றுபடுகிறது.

ஆனால், கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் ஏழை மக்களுக்கான சலுகைகளுடன் இன்றும் சிறப்பாக இயங்கி வருகின்றன.

திருவிதாங்கூரில் புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடங்களில் சில; ஆண்களுக்கான ஸ்காட் கிறிஸ்டியன் உயர்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி-நெய்யூர், சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி-மார்த்தாண்டம், சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி-மத்திகோடு, சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி-ஜேம்ஸ் டவுண், ஆண்களுக்கான சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி-மார்த்தாண்டம், ரிங்கல்தொபே நினைவு உயர்நிலைப்பள்ளி-மயிலாடி முதலானவை…

அக்காலத்தில் காலராவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் ஆற்றிய பணியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.  அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட  கிறிஸ்தவ மருத்துவமனைகள் இன்றளவும் சிறப்பாக இயங்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவமனைகள் – சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனை-நெய்யூர், சி.எஸ்.ஐ மருத்துவமனை-மார்த்தாண்டம், சால்வேஷன் ஆர்மி காத்தரின் பூத் மருத்துவமனை-நாகர்கோயில் மற்றும் பல…

ஆனால் அய்யா வைகுண்டர் உருவாக்கிய, ‘நிழற்தாங்கல்கள் மற்றும் பதிகளோடு கூடிய பள்ளிக்கூடக் கட்டமைப்பு’ முறையை அய்யாவழியினர் வளர்த்தெடுக்கத் தவறிவிட்டனர். அய்யா வைகுண்டரின் பெயரால், சேவை மற்றும் சலுகைகளுடன் கூடிய பள்ளிக்கூடமோ மருத்துவமனையோ ஒன்றுகூட இப்போது இல்லை… எவரும் அய்யாவழியின் ஆன்மீகப் பயணத்தில் கல்வி மற்றும் மருத்துவத்தை முன்னிலைப்படுத்தவில்லை.  அதே போலவே அய்யா வைகுண்டரின் மருத்துவ முறையை ‘மண்ணும் தண்ணியும் தந்து அய்யா காப்பாற்றினார்’ என்று பரப்பப்பட்ட மூடநம்பிக்கை ஒன்றால், அய்யாவழியினர் மழுங்கடித்துவிட்டனர்.

அதேபோல், 18, 19-ம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் உருவாக்கிய ஆதரவற்றவர்களுக்கான இல்லங்களை, கிறிஸ்தவர்கள் தற்காலத்திலும் நடத்தி வருகிறார்கள். அதில் இந்துக் குழந்தைகளையும் அவர்கள் இணைத்துக் கொள்ளத் தயங்கவில்லை. ஆனால் அய்யா வைகுண்டர் நோயுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் நிழற்தாங்கல்கள் மற்றும் பதிகளில் கொடுத்த இடம் தற்போது வெற்றிடமாகவே உள்ளது. தலைமைப்பதியான சுவாமி தோப்பின் வளாகத்தில் ஆதரவற்றவர்களும் நோயுற்ற மக்களும் தங்கியிருப்பதை இன்றளவும் காணலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் குடும்பங்களில் சண்டைகள் உருவாகும் போது, பெண்களும் வயதானவர்களும், “எனக்கு போறதுக்கு போக்கிடம் இல்லன்னு நெனைக்காத, போயி சாமிதோப்புல படுத்துக்கிடுவேன்” என்று சொல்வதைக் காண இயலும்… இதுதான் அய்யா வைகுண்டர் ஆதரவற்றவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் கொடுத்த ஆதரவின் எச்சம்.

ஆக, “நமது மக்கள் கூட்டத்திலும் (மதத்திலும்), கிறிஸ்தவத்தில் இருப்பதைப் போல சேவை மனப்பான்மையுடனான ஆன்மீக வழிபாட்டு முறை இருந்தால், நம் மக்களும் மதம் மாறாமலே, சுதந்திரத்துடனும் நாகரீகத்துடனும் வாழலாமே” என்ற உள்ளக்குமுறல் ஒன்றை அய்யாவழியின் நடைமுறைகளில் என்னால் உணர முடிகின்றது. இது எனது (ஆசிரியரின்)  தனிப்பட்ட கருத்து.

2.  “ஆணுக்கு பெண் கீழானவள்” என்ற ஆரிய தத்துவத்தை ஆதரிக்கும் கிறிஸ்தவமும், எதிர்க்கும் அய்யாவழியும்

அடிமைகளாக இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஏழ்மைச் சூழலைப் பயன்படுத்தி அவர்களை மதம் மாற்றிய சில கிறிஸ்தவ மிஷனரிகளின் தந்திர யுக்தியைத்தான் அய்யா வைகுண்டர் எதிர்த்தார். அன்றி, அய்யா வைகுண்டர் இயேசுவின் சீர்திருத்தக் கொள்கைகளை எதிர்க்கவில்லை என்பதற்கு, அய்யாவழிக்கு வைகுண்டர் விதித்து வைத்திருக்கும் விதிமுறைகளே சான்று!

இன்னும் ஒரு படி மேலாக, இயேசு கிறிஸ்துவால் தவிர்க்க முடியாத  மூடநம்பிக்கை ஒன்றை, ‘நீசத்தனம்’ என்று அய்யா வைகுண்டர் சாடியிருக்கிறார் என்றே சொல்வேன்.

ஆணைப் படைத்து ஆணின் உடலிலிருந்து பெண்ணை படைப்பதன் மூலம் ‘பெண் ஆணுக்கு கீழ்’ என்ற தத்துவத்தை சொல்கிறது விவிலியம். ஆனால், அகிலத்திரட்டில் நீசனுக்கான பெண் மட்டுமே நீசனின் விலா எலும்பிலிருந்து படைக்கப்படுகிறாள். ‘ஆணின் உடலிலிருந்து பெண்ணை படைக்கும்’ விவிலியம் மற்றும் குர்ஆன் ஆகியவற்றின் தத்துவத்தை நீசனுக்கு மட்டுமே உரியது என்றுரைக்கின்றது அகிலத்திரட்டு அம்மானை. இதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆக, அய்யா வைகுண்டர் ‘பெண் ஆணுக்கு கீழ்’ என்ற கருத்தாக்கத்தை நீசத்தனம் என்றுரைக்கின்றார் என்பது தெளிவு.

இதைத்தொடர்ந்து எனக்குள் எழுந்த ஒரு சந்தேகத்தையும் இங்கு பதிவு செய்ய விழைகிறேன். அகிலத்திரட்டு அம்மானை சொல்லும் கதையில்,  நீசனின் உடலிலிருந்து (விலா எலும்பிலிருந்து) அவனுக்கான பெண் படைக்கப்படுகிறாள். அந்த நீசன் காசிக்கு சென்று தவமிருக்கும்போது, சலனம் கொள்கிறான். அப்போது வெளியாகும் அவனுடைய விந்திலிருந்து வெண்ணீசன் பிறக்கிறான். நீசன் திருவனந்தபுரம் திரும்பி வந்து, நீசனின் சகோதரியின் மகனை அரசனாக்குகிறான்.

எனில் ஈசனால் படைக்கப்படும் நீசனை ‘ஆரியர்கள்’ (பிராமணர்கள்) என்று கொண்டால், ஆதிக்கப் பாசிச  மனப்பான்மை கொண்ட கிறித்துவ வெள்ளையர்களையும் (வெண்ணீசர்கள்), திருவிதாங்கூரியின் நம்பூதிரி வம்சாவழியையும் (மாநீசன் அல்லது கருநீசர்கள்) ஆரிய வம்சாவழியினர் என்று சொல்கிறதா அகிலத்திரட்டு அம்மானை? அதனால்தான் ‘ஆணுக்குப் பெண் கீழ்’ என்னும் ஆரிய தத்துவத்தை நீசத்தனம் என்று சொல்கிறதா அகிலத்திரட்டு அம்மானை? ஆய்வு தேவை.

3. விளக்கெண்ணெய் காசும் தசம பாகமும்

அடுத்தபடியாக, ‘காணிக்கை, கைக்கூலி வேண்டாம்’ என்று சொன்ன அய்யா வைகுண்டர், ‘விளக்கெண்ணெய் காசையும், சமையலுக்கான தானியங்கள், காய்கறிகள், உப்பு முதலான பொருட்களையும், மக்களிடம் வசூலிக்க சம்மதிக்கிறார்’ என்ற முரண்பாடு, பலரும் சொல்கின்ற குற்றச்சாட்டு.

அய்யா வைகுண்டர் பதிகளையும் நிழற்தாங்கல்களையும் நிறுவிய காலத்தில், பதிகளிலும் நிழற்தாங்கல்களிலும் இரவு நேரங்களில் கல்வி கற்பிக்கப்பட்டது. இரவு நேரத்தில் மக்கள் கல்வி கற்பதற்கு தேவைப்படும் வெளிச்சத்துக்காக ஏற்றப்படும் விளக்குக்கு எண்ணெய்க்காக மக்களிடம் காசு வசூலிக்கப்பட்டிருக்கலாம். அதனால்தான் அது விளக்கெண்ணெய்க்காசு என்று பெயர் பெற்றிருக்கலாம் என்பது எனது யூகம். அடுத்து, மக்களிடம் வசூலிக்கப்பட்ட சமையல் பொருள்களை, சமைத்து, சாதி மத வேறுபாடின்றி, எல்லா மக்களுக்கும் சமபந்தி பரிமாற சொல்லியிருக்கிறார் அய்யா வைகுண்டர். பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவு வழங்கும் ஊட்டுப்புரைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது இந்த சமபந்தி.

ஆக, அய்யாவழியின்  பதிகளிலும் நிழற்தாங்கல்களிலும் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் பொருள்களை, மக்களுக்கே செலவு செய்ய வேண்டும் என்பதுதான் அய்யா வைகுண்டர் சொன்ன பணிவிடை (வழிபாடு) முறை.

அய்யாவழியின் இந்த பணிவிடை முறையானது கிறிஸ்தவ மதத்தில் மக்களிடம் வசூலிக்கப்படும் தசமபாகத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றது. மக்கள் சம்பாதிக்கும் பணத்தில் பத்தில் ஒரு பங்கை கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது சர்ச்களின் நடைமுறை. அவ்வாறு கிறிஸ்தவ மக்களிடம் வசூலிக்கப்படும் பணம், கிறிஸ்தவ மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் கிறிஸ்தவ ஏழைகளின் சுபகாரிய செலவுகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் கிறிஸ்தவ மதத்தின் விதிமுறை. இதனை தசம பாகம் என்ற பெயரால் கிறிஸ்துவர்கள் அழைக்கிறார்கள்.

ஆனால் இன்றைய காலத்தில், பல அய்யாவழி பதிகளிலும் நிழற்தாங்கல்களிலும் மக்களிடம் வசூலிக்கப்படும் பணமும் உணவுப் பொருட்களும் மக்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. பல கிறிஸ்தவ தேவாலயங்களில் மக்களிடம் வசூலிக்கப்படும் பணம் மக்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. ஆக, கடவுள் வழிபாடு என்பது, எந்த மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டாலும், அங்கு சுரண்டலையும் ஊழலையும் அரங்கேற்றிவிடுகிறது பூசாரியம்.

4. பாவ மன்னிப்பும் மாப்பு கேட்டலும்

கிறிஸ்தவ மதத்தில், ஒரு மனிதன் தவறு இழைத்து, அதை அவன் உணர்ந்து, குற்றவுணர்ச்சிக்கு ஆளானால் சர்ச்சில் சென்று பாதிரியாரிடம் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் உள்ளது. அய்யாவழியில் ஒவ்வொரு முறை உச்சிப்படிப்பும், உகப்பாட்டும் பாடப்படும் போது கீழ்க்காணும் வாசகங்களைச் சொல்லி, அய்யாவழி மக்கள் மன்னிப்பு கேட்பது வழக்கம்.

“அய்யா நாங்கள் அறிந்து அறியாமல் செய்ததெல்லாம் அய்யா பொறுக்கணும். அய்யா பொறுத்து அய்யா மாப்பு தந்து, அய்யா வைத்து ரட்சிக்கணும். அய்யா பொறுமை தரணும். அய்யா நாங்கள், ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு, ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு ஒண்ணுக்கொண்ணு நெரப்பா இருக்கணும். அய்யா நல்ல புத்தி தரணும். அய்யா எங்களுக்கு அன்ன வஸ்திரமும் தந்து அய்யா வைத்து ரட்சிக்கணும். அய்யா எங்களை யாதொரு துன்பம் இல்லாமலும் யாதொரு நொம்பலம் இல்லாமலும் அய்யா வைத்து ரட்சிக்கணும். அய்யா உண்டு”9*

கிறிஸ்தவம் மற்றும் அய்யாவழியின் மேற்சொன்ன மன்னிப்புக் கேட்கும் இவ்வழக்கங்கள் ஒன்றோடொன்று ஒப்புநோக்கத்தக்கவை.

5. பெண் சீடர்கள்

இயேசுவுக்கு பல பெண் சீடர்கள் இருந்தார்கள் என்று ஆய்வாளர்கள் பலர் சொல்கிறார்கள். அதேபோல் அய்யா வைகுண்டருக்கும் பல பெண் சீடர்கள் இருந்தார்கள்.

6. தற்கால ஒற்றுமை

‘இயேசு கிறிஸ்து மனிதராகப் பிறந்து சமூக சீர்திருத்தங்கள் செய்து சிலுவையில் உயிர் நீத்த தியாகி’ என்று நம்பும் ஒரு பிரிவினரும், இயேசு கிறிஸ்து மேஜிக்காக மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்த வெறும் இறைவன் என்று வாதிடும் இன்னொரு பிரிவினரும் கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறார்கள். அதே போல், ‘அய்யா வைகுண்டர்,  மனிதராக பிறந்து சமூக சீர்திருத்தங்கள் செய்து, அய்யாவழி என்ற சமத்துவ ஆன்மீக வழியை உருவாக்கிய தலைவர்’ என்று நம்பும் ஒரு பிரிவினரும், ‘அய்யா வைகுண்டர் திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து திடீர் மேஜிக்காக அவதாரம் எடுத்து வந்தவர்’ என்று வாதிடும் இன்னொரு பிரிவினரும் அய்யாவழியில் இருக்கிறார்கள்.

இரண்டு அமைப்புகளிலும், முதல் பிரிவினர் வரலாறு, அறிவியலை நம்பும் பகுத்தறிவாளர்கள், இரண்டாம் பிரிவினர் மேஜிக், மூடநம்பிக்கைகளை நம்பும் சனாதனிகள்.

தொடரும்…

தொடரும்…

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

தரவுகள்

  1. தமிழ் நாட்டில் கொத்தடிமைகள்… சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை, ப. திருமலை(மூத்த பத்திரிகையாளர்), எஸ்.செல்வ கோமதி(வழக்கறிஞர்), முதல் பதிப்பு : 17 ஆகஸ்ட், 2013, பக்கம் எண்: 102.
  2. A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, REV.I.H.HACKER, 1908, PAGE NO: 26.
  3. A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, REV.I.H.HACKER, 1908, PAGE NO: 31.
  4. A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, REV.I.H.HACKER, 1908, PAGE NO: 37.
  5. A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, REV.I.H.HACKER, 1908, PAGE NO: 35.
  6. A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, REV.I.H.HACKER, 1908, PAGE NO: 43.
  7. பகவான் வைகுண்டர் அருள் நூல், பதிப்பாசிரியர் த.பாலராமச்சந்திரன் மகன் B.சங்குமன்னன், பக்கம் எண்: 4, 29.
  8. THE TINNEVELLY MISSION OF THE CHURCH MISSIONARY SOCIETY, REV.GEORGE PETTITT, PAGE NO: 287.
  9. இறைவனின் வைகுண்ட அவதாரம், பொறிஞர். ஆ.கிருஷ்ணமணி, முதற்பதிப்பு 04.03.2014, பக்கம் எண்: 28,29.