ஆக்னஸ் (Agnes) குடும்பம் மிக அழகான சிறிய குடும்பம். கார் மெக்கானிக்காக இருக்கும் கணவன் லூயி (Louie) சொந்தமாக தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். கூடவே பெரிய மகன் ஸிக்கி (Ziggy) தந்தைக்கு தொழிலில் உதவியாக இருக்கிறார். சிறியவன் கேபி (Gabe) பள்ளி செல்கிறான்.

ஒருமுறை லூயியின் பணி இடத்திற்கு செல்லும் ஆக்னஸ், தன் கணவன் ஒரு இளம் வயது பெண்ணிடம் கடுமையாக வாக்குவாதம் செய்வதைப் பார்க்கிறாள். “இங்கு பணி புரியும் அத்தனை ஆண்களும் அவளிடம் flirt செய்ய முற்படுவார்கள். அப்பா மட்டும் தான் அவளை மதிக்கவேமாட்டார்”, என்பார் ஸிக்கி . “உன் தந்தை மிக பண்பானவர்”, என்பாள் ஆக்னஸ். “அப்பாவும் உன்னை பற்றி அப்படித்தான் குறிப்பிடுவார்” என்கிறார் ஸிக்கி.

இவ்வளவு அழகிய அமைதியான குடும்பத்தில், பலர் ஏங்கும் ஒரு பூரணமான வாழ்க்கையில், ஆக்னஸுக்கு ஏதோ ஒரு குறைபாடு இருந்தது. வீட்டில் அனைத்தும் அவள்தான். அதை அவள் விரும்பிகூட செய்தாள். எந்த அளவிற்கு தன்னை குடும்பத்திற்காக மட்டும் அர்ப்பணித்து இருக்கிறாள் என்றால், கேபி தன்னுடைய கேர்ள் ஃப்ரெண்டை வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது, அவள் சொல்லும் அத்தனை விஷயங்களுமே அவளுக்கு புதிதாக இருந்ததும். வீகன் என்றால் என்னவென்று தெரியவில்லை. புத்த மதம் பற்றி தெரியவில்லை. லேசான கூச்சம் அடைந்தபோதும் அதை பெரிதுபடுத்தாமல், அடுத்த வேலையைத் தொடங்குகிறாள்.

தன் பிறந்தநாள் கொண்டாட்டம்கூட அவள் கணவனின் ஆசைப்படிதான் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைக்கும் லூயி அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க, ஆக்னஸ் விருந்தாளிகளை கவனிப்பதிலும் அவர்களுக்கு வேண்டியதை செய்யவும் அவளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. அவளுக்கு பெரிய மகிழ்ச்சியற்ற இரவாகவே கழிகிறது. அவளுக்குப் பிறந்தநாள் பரிசாக அவள் குடும்பம் அவளுக்கு அளித்தது ஒரு அலைபேசி. அதை வைத்து என்ன செய்வது, வீட்டில் தொலைபேசி இருக்க, அலைபேசி எதற்கு என்று அவள் சொல்ல, “அம்மா, உலகமே கைக்கு அடக்கமாக இந்த அலைபேசியில் இருக்கிறது. நீ சமைக்கும் உணவு முறையைகூட இதில் தேடி கண்டுபிடித்து கொள்ளலாம்” என்கிறான் கேபி . “சரி, அவசர தேவைக்காக மட்டும் உபயோகித்து கொள்கிறேன்”, என்று அதை வைத்து கொள்கிறாள் ஆக்னஸ்.

வீட்டில் அனைவரும் கிளம்பிவிட, வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மற்ற பரிசு பொருள்களை பிரிக்கத் தொடங்குகிறாள் ஆக்னஸ். அப்போது அதில் 1000 துண்டுகளைக் கொண்ட புதிர் – puzzle ஒன்று இருக்கிறது. அதைப் பார்த்ததும் அவளுக்கு ஏதோ ஒரு பரவசம் பிறக்கிறது. உடனேயே அதை பிரித்து சேர்க்கத் தொடங்குகிறாள். எவ்வளவு நேரம் சென்றிருக்கும் என்று அவளுக்கு தெரியாது. அவள் அதைச் சேர்த்து முடிக்கும் தருணம், லூயி மற்றும் ஸிக்கி பணி முடிந்து வீடு திரும்பி இருப்பார்கள். சேர்த்த புதிர் முன்பு அமர்ந்திருக்கும் ஆக்னஸைப் பார்த்து லூயி கேட்பார், “என்ன செய்து கொண்டிருக்கிறாய். இரவு உணவு தயாரிக்காமல்?”

அவ்வளவு நேரம் ஆகி விட்டதா என்று அதிர்ச்சி அடையும் ஆக்னஸ், “இப்போது தயார் செய்து விடுகிறேன்” என்று பதற்றத்துடன் அந்தப் புதிரைக் கலைத்து அதன் பெட்டியில் போடுகிறாள். “அம்மா, அதை ஏன் கலைகிறாய். அப்படியே இருக்கட்டும்”, என்கிறான் ஸிக்கி. “பிறகு மீண்டும் சேர்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு பணியைத் தொடங்குகிறாள். புதிர் இணைத்து விளையாடியவர்களுக்குத் தெரியும், 1000 துண்டுகளைக் கொண்ட புதிரை ஒன்று சேர்ப்பதற்கு நாள்கள் ஆகும் என்று.

அடுத்த நாள் வீட்டில் அனைவரும் வெளியேறியதும் மீண்டும் புதிரை சேர்க்கிறாள். விரைவிலேயே முடித்தும் விடுகிறாள். அதன் மேலான ஆர்வம் அதிகரிக்க, அதைப் பரிசளித்தவருக்கு அழைத்து அதை எங்கு வாங்கினார் என்று கேட்டு தெரிந்து கொள்கிறாள். அடுத்த நாள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அந்தக் கடைக்கு செல்கிறாள். வீட்டில் இருந்து தொலைவில் இருக்கிறது. ரயில் மற்றும் டாக்ஸியில் பயணித்து அந்த கடைக்கு சென்று சேர்கிறாள். கடை முழுவதும் புதிர்கள். அதில் தேடி இரண்டு பெட்டிகளை எடுக்கிறாள். அதற்கு பணம் செலுத்தும்பொழுது, அங்கு புதிர் போட்டியில் கலந்து கொள்ள அவசரமாக பார்ட்னர் ஒருவர் வேண்டும் என்ற விளம்பரத்தைப் பார்க்கிறாள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்ணை எடுத்துக்கொள்கிறாள். வீட்டிற்கு வந்ததும் அந்த எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப, தன்னை வந்து பார்க்குமாறு உடனேயே பதில் வருகிறது.

அடுத்த நாளே அவனை சந்திக்க செல்கிறாள் ஆக்னஸ். ராபர்ட் பெரும் பணக்காரன். வீட்டில் அவன் மட்டும்தான் இருக்கிறான். பணிக்கு ஒரு பெண். உள்ளே சென்றதும், அறிமுகத்திற்குப் பிறகு , தான் சேகரித்து வைத்திருக்கும் புதிர்ப் பெட்டிகளில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்து அவளை சேர்க்கச் சொல்கிறான். மிக விரைவில் அவள் சேர்ப்பதைப் பார்த்து ஆச்சர்யம் அடைகிறான். ‘இவ்வளவு வேகமாக ஒன்று சேர்பவரை நான் கண்டதில்லை’ என்கிறான். வாரம் இருமுறை அவர்கள் சந்திப்பது என்று முடிவெடுக்கிறார்கள். இதற்கு முன்பு இருந்த பார்ட்னர் என்ன ஆனார் என்று ஆக்னஸ் கேட்க, “அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டாள். ஒன்றுமே சொல்லாமல்” என்கிறான் ராபர்ட்.

“அத்தைக்கு காலில் அடிபட்டுவிட்டது. வாரத்திற்கு இரண்டு முறை நான் அவர் வீட்டுக்கு சென்று அவருக்கு தேவையானதை செய்துவிட்டு வருகிறேன்” என்று ஆக்னஸ் தன் கணவனிடம் கேட்க, ‘நீ ஏன் அதெல்லாம் செய்யவேண்டும். அதெல்லாம் வேண்டாம். உன்னை எல்லோரும் உபயோகித்துக் கொள்கிறார்கள்” என்று அனுமதி மறுக்கிறான். அவனுக்குத் தெரியாமல், இவள் ராபர்ட் வீட்டிற்கு வாரம் இருமுறை செல்கிறாள். இருவருக்குள்ளும் நட்பு மலர்கிறது. தன் மனைவி தன்னை விட்டு பிரிந்ததை பகிர்ந்து கொள்கிறான் ராபர்ட். அனைவர்க்கும் சாதாரணமானவளாகத் தெரியும் ஆக்னஸ் அவனுக்கு ஆர்வமூட்டுபவளாகத் தெரிகிறாள்.

இதற்கிடையில் வீட்டில் அனைத்தும் சுமூகமாகச் செல்லவில்லை. லூயியின் தொழில் முன்பு போல இல்லை. பணப் பற்றாக்குறை இருப்பதை அறிகிறாள் ஆக்னஸ். அதைச் சரி செய்ய, ஊருக்கு வெளியே இருக்கும் தங்கள் நிலத்தை விற்றுவிடலாம் என்கிறாள் ஆக்னஸ். அது பற்றி பின்பு சிந்திப்போம் என்கிறார் லூயி. அவருக்கும் ஸிக்கிக்கும் உறவில் சிக்கல். ஸிக்கியைப் பற்றி ஏதோ ஒரு குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார் லூயி.

கார் பட்டறைக்குச் செல்லும் ஆக்னஸ் , ஸிக்கியிடம் ஒரு சோகத்தை உணருகிறான். ஆக்னஸ் அவனிடம் அது பற்றி கேட்க, “அம்மா, எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. என்னால் எதையும் செய்யமுடிவதில்லை. உன்னை பார். நீ எந்த வேலை செய்தாலும் எவ்வளவு நேர்த்தியாகச் செய்கிறாய். எனக்கு இந்த வேலை பிடிக்கவேயில்லை. எனக்கு உன்னைப்போல சமைக்கவேண்டும். நான் பிறந்ததில் இருந்து நீ சமைப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அதில் தான் ஆர்வம் இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லாத பொழுது, தொலைக்காட்சியில் cooking show தான் பார்ப்பேன்” என்கிறான்.

தங்கள் நிலத்தை விற்க சம்மதிக்கும் லூயி கடைசியாக ஆக்னஸுடன் ஒரு இரவை அங்கு செலவு செய்கிறான். அந்த நிலத்தை விற்று வரும் பணத்தில், ஒரு பங்கு கேபி கல்விச் செலவிற்கும், ஸிக்கி சொந்தமாக ஒரு வீடு வாங்கவும் என்று அறிவிக்கிறான் லூயி. அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஆக்னஸ் செயற்பாடுகளில் நிறைய மாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது. சில சமயங்களில் வீட்டிற்குத் தாமதமாக வருகிறாள். அதற்குப் பல காரணங்களைச் சொல்கிறாள். சில இரவுகளில் சமைப்பதில்லை. எடுத்தெறிந்து பேசுகிறாள். கோபப்படுகிறாள். “உனக்கு என்ன பிரச்னை. வீட்டையும் எங்களையும் கவனித்து கொள்ளவதுதானே உன் வேலை? என் அம்மா அப்படித்தானே இருந்தார். நீயும் அப்படி தானே இருந்தாய். இப்போது என்ன வந்தது?” என்று கோபப்படுகிறார் லூயி.

நாள்கள் இப்படியாக ஓட, ஒரு நாள் கேபி தனக்கு வரும் பங்கு பணத்தில், தன் காதலியுடன் திபெத் செல்வதாக அறிவிக்கிறான். பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். எப்போதும் அவனுக்கு ஆதரவாகப் பேசும் லூயி அதற்கு சம்மதிக்கிறார். “அப்படியென்றால் ஸிக்கி சமையற்கலை கல்வி பயிலட்டும்” என்கிறாள் ஆக்னஸ். “என்ன புதிதாக என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறாய்?” என்று லூயி சத்தமிட, “அதுதான் என் விருப்பம். அதைதான் அம்மா சொல்கிறார்” என்கிறார் ஸிக்கி. வீட்டில் குழப்பம் நிலவுகிறது.

புதிர்ப் போட்டி நெருங்க நெருங்க ராபர்ட்டுடன் நெருக்கமாகிறாள் ஆக்னஸ். அது படுக்கை வரை செல்கிறது. அவனுடன் உறங்கியும் போகிறாள். விழிக்கும்பொழுது, மிக நேரமாகிவிட்டதை அறிந்து வீடு நோக்கி விரைகிறாள். அவளுக்காக கணவன் காத்துக் கொண்டிருக்கிறான். “இனிமேலும் காரணங்கள் சொல்லாதே. பொய் சொல்லாதே. உண்மையைச் சொல். என்ன நடக்கிறது?” என்று கேட்கிறான். ராபர்ட் பற்றிக் கூறுகிறாள். அதன் பின்னர் அவளுடன் பேசுவதைத் தவிர்க்கிறான் லூயி.

போட்டியில் ஆக்னஸ் வெற்றி பெறுகிறாள். ராபர்ட்டுடன் வெளி மாநிலம் செல்ல திட்டமிட்டருந்த ஆக்னஸ், அவளுக்காகக் காத்திருக்கும் ராபர்ட்டை அலைபேசியில் அழைக்கிறாள். “நான் வரவில்லை. உன்னைக் காதலிக்கிறேன். ஆனால் இதைத் தொடர விரும்பவில்லை” என்று தெரிவிக்கிறாள்.

லூயி மற்றும் ராபர்ட் இல்லாமல் தன் விருப்பப் பயணத்தை தனியே தொடங்குகிறாள் ஆக்னஸ். அதைத்தான் அந்த நாள் வரை தவறவிட்டிருப்பதை உணருகிறாள். மகிழ்ச்சியான அவள் பயணம் தனிமையில் தொடங்குவதுடன் படம் நிறைவடைகிறது.

தொடரும்…

படைப்பாளர்

சுமதி விஜயகுமார்

பொதுச் செயலாளர், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா