தீபாவளி வந்துவிட்டது. புத்தாடைகள், பட்டாசுக் கடைகள், பலகாரக் கடைகள் சலுகைவிலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை என நகரெங்கும் இணையமெங்கும் தீபாவளிக்கான கொண்டாட்டங்கள் விறுவிறுவென நடந்தவண்ணம் உள்ளன. பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம்தானே! ஆமாம். யாருக்கெல்லாம் கொண்டாட்டம்? கொஞ்சம் மனம்விட்டுப் பேசுவோம். வாருங்கள்.
தெருவுக்குத் தெரு அரவை மில்களில் எந்நேரமும் கூட்டமாகவே இருக்கிறது. மாதாந்திர செலவில் இம்மாத மளிகை செலவுக்கான தொகை இருமடங்கை எட்டுகிறது. எண்ணெயும் மைதாவும் வெல்லமும் ஐம்பது வயதைக் கடந்த குடும்ப உறுப்பினர்களை சமையலறையிலிருந்து விலக்கிவைக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பண்டிகை நாள்களுக்கான மகிழ்வும் ஆர்வமும் இப்போது இல்லைதானே.
பாட்டியும் அம்மாவும் இந்நேரம் முறுக்கு பிழிந்திருப்பார்கள்; அதிரசம் செய்திருப்பார்கள். “எங்க பாட்டி செய்ற அதிரசம் இருக்கே” என சிலாகிக்காத அப்பாக்கள் வெகு குறைவு. இதைக் கேட்டு ஒவ்வொரு முறையும் அம்மா அத்தனை சுவையாக அதிரசம் செய்து அந்தப் ‘பாட்டியின் அதிரசச் சுவை’யை எட்டிவிட முயற்சி செய்வதுண்டு. பலமுறை அம்மாக்கள் வென்றிருக்கவும் கூடும். ஒன்றுக்கு இரண்டு அதிரசத்தை நடுவர்போல சுவைத்து முடித்தபின் “நல்லாயிருக்கு. ஆனாலும் அது வேற டேஸ்ட்” என்பதே பதிலாக வரும்.

இன்றைய இளைஞர்கள் வெகுவாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் அதிரசத்தையோ முறுக்கையோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக முந்தைய அப்பாக்களே பரவாயில்லை. அதிரசம், முறுக்கோடு நின்றுவிடுவார்கள். இன்றைய இளைஞர்களுக்கு எந்த வகை உணவு திருப்தியளிக்கும் எனச் சமைக்கிற நமக்குமே தெரிவதில்லை. எல்லாவற்றிலும் ‘வெரைட்டி’ தேவைப்படுகிறது. தனித்துவத்தைத் தேடுகிறார்கள். எனினும் எதிலுமே நிறைவுகொள்வதில்லை என்பதே உண்மை.
“எங்க வீட்ல அதிகாலையில நாலு மணிக்கே இலை போட்டுடுவாங்க” எனப் பெருமை பேசுகிற பெரியவர்களைப் பார்க்கமுடியும். அந்த ‘நாலு மணி’ படையலுக்குப்பின் இருக்கிற உழைப்புச் சுரண்டல் எவ்வளவு தெரியுமா?
முறுக்கு, அதிரசம், ரவா லட்டு, பயறு உருண்டை, கெட்டி உருண்டை, அச்சு முறுக்கு, சோமாசா இவற்றுக்கெல்லாம் மாவு அரைத்து ஒவ்வொன்றாகத் தயார் செய்ய வேண்டும்.
இந்தப் பலகாரங்கள் எல்லாம் பண்டிகைக்கு ஒருசில நாள்களுக்கு முன்பே தயாராகிவிடும். அடுத்து இந்தியக் குடும்பங்களின் மறுக்கமுடியாத சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘குலாப் ஜாமுன்’.
சிலருக்கு வெடித்து எண்ணெய் தெறிப்பதும் சிலருக்குத் திரி திரியாய்த் திரிந்து ஓடுவதுமாக போக்குகாட்டும் மாய உருண்டை இது.
இதையெல்லாம் ஒருவாறு முடித்துவிடலாம். அடுத்து பண்டிகைக்கு முந்தையநாள் இரவு. அதுதான் பெரிய வேலையும்கூட.
சுழியன், வடை, பஜ்ஜி, அப்பம், இட்லி, இட்லிப்பொடி, சட்னி போன்ற அனைத்தும் முந்தைய நாள் நள்ளிரவுக்குப்பின் செய்யத்தொடங்கி விடிவதற்குள் செய்து முடிக்கவேண்டும். இதற்கான ஊறவைத்தல், அரைத்தல், கரைத்தலையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
பலகாரப் பணிகளை ஒருவழியாக முடித்தபின் புதுத்துணிகளுக்கு மஞ்சள் வைத்து, வழிபடும் படங்களுக்குப் பூ,பழம் இன்ன பிற வைத்து, எண்ணெய், சிகைக்காய் எடுத்து வைத்து, தேங்காய் உடைத்து படைத்ததும் ஒரு வெடி வைக்க வீட்டுப் பிள்ளைகளைக் கெஞ்சும்போது குடும்பத் தலைவியின் கண்களில் உண்மையிலேயே வெம்மை கொளுத்தும். தூக்கமும் அயர்ச்சியும் எண்ணெய் சட்டியின் எண்ணெய் வாடையும் சேர்ந்து தலைவலியைக் கிளப்பும். அதோடு சென்று குளித்து நைட்டியே போதுமென உடுத்தி சற்றே உறங்கிப்போகும் அம்மாக்களின் அசதியே தீபாவளி.
“பெண்களின் உடைகளை வைக்க வீட்டின் பீரோவே போதாது. நான்கு சட்டை பேண்ட் என எளிமையாக வாழ்பவர்கள் ஆண்கள்” என்றெல்லாம் பட்டிமன்ற மேடைகள் தொடங்கி சினிமாக்கள் வரை நகைச்சுவை செய்தியாகச் சொல்லப்படுகிறது. தவறாமல் பண்டிகை நாள் பட்டிமன்றத்தில் ‘பெண்களின் புடவை எண்ணிக்கை’ குறித்துப் பேசப்படும். இவள் வாங்கிய புடவையை உடுத்த நேரமின்றி நைட்டியோடு உறங்குவதை ஏனோ மேடைகள் கோடிட்டுக் காட்டியதில்லை.
இயல்பாகவே பள்ளி, கல்லூரி, டியூஷன் எனப் பெண்பிள்ளைகளும் ஆண்களைப்போலவே ஓடுகிறோம். திருமணத்துக்குப் பிறகு அதுவரை செய்யப் பயிலாத முறுக்கை முதல்முறையாகப் பிழியக் கற்கிறோம். அந்த முறுக்குக்கு வருகிற நக்கல்களை வெறும் விளையாட்டுச் சொற்களாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இங்கே யாரும் பலகாரம் செய்யப் படிப்பு ஏதும் பயின்றுவரவில்லை. பழகப் பழக பழக்கத்தில் நேர்த்தி வரலாம். வேண்டுமானால் நீங்களும் உதவி செய்யுங்கள். அதைவிடுத்து “அதே முறுக்கு, அதிரசம்தானா?” எனச் சலிப்புக் குரலில் கேட்காதீர்கள். முறுக்கு உரல் அழுத்திய வலியோடு சலிப்புக் குரலைக் கேட்கும்போது எரிச்சலும் கோபமும் சேர்ந்தே வருகிறது. மனதுக்குள் ‘அவர்’என்கிற சொல் மருவி, ‘இந்த மனுஷன்’ என மனதுக்குள் தோன்றுவது அநேகமாக அப்போதுதான் இருக்கும். உழைப்பை மதிக்கத் தவறுபவர்களுக்கு ஒருபோதும் மதிப்பு இருக்காது என்பதைப் புரிந்துகொள்வோம்.
தின்கிறோமோ இல்லையோ, கிலோ கணக்கில் முறுக்குக்கு மாவு அரைக்கவேண்டும். அதனைப் பிழிய வேண்டும். அதனை எல்லாருக்கும் பகிரவேண்டும். இந்த கண்டுகொள்ளப்படாத பெரு உழைப்புச் சுரண்டலை ஒவ்வொரு பண்டிகையும் தவறாது பெண்களுக்குத் தருகிறது.
கவனிக்கிற அன்புள்ள ஆண்களே! இவையெல்லாம் செய்தால்தான் அது குடும்பம் என்றும் குடும்பப் பெண்ணுக்கான அழகென்றும் காலங்காலமாக எங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது. எங்களுக்கும் இந்தச் சங்கிலியின் பிடியிலிருந்து தளர ஆசைதான். தனியாய் உடைக்கச் சிரமமாக இருக்கிறது. உடனிருந்து உதவுங்கள்.
சேர்ந்து செய்யும் பலகாரங்களுக்குச் சுவை அதிகமாம். அளவாகச் செய்யவும் பிடித்த ஒன்றிரண்டை மட்டும் செய்வது போதுமெனவும் நீங்களே சொல்லுங்கள். யாருமே சாப்பிடாத வீடுகளில் சடங்குக்காகச் செய்யப்படுகிற அர்த்தமற்ற வீண் உழைப்பை உங்களுக்குத் தெரிந்தவரை குறைக்க முயற்சி செய்யுங்கள். கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் எல்லாரும் மகிழ்ந்து களித்திட என்பதை உண்மையெனில் அந்த ‘எல்லாரும்’ எனும் சொல்லுக்குள் குடும்பத் தலைவிகளும் அடங்குவர் என்பதை உணர்வோம். எண்ணெய் சிக்கு வாடையில்லாத தீபாவளி எப்படி இருக்குமென அம்மாவைக் கேளுங்கள். அதுவே இந்தத் தீபாவளிக்கான வாழ்த்தும் பரிசும். பேசுவோம்.
(தொடரும்)
படைப்பாளர்

பா. ப்ரீத்தி
தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.





முற்றிலும் உண்மை..
எளிமையான மொழி ஆளுமை நன்று👌