மகேஸ்வரி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இசையமைத்தவர் ஜி. ராமநாதன். தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பான ராணி ரங்கம்மாவுக்கு, எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார்.
ஜெமினி கணேசன்
சாவித்திரி
கே.ஏ.தங்கவேலு
சி.கே.சரஸ்வதி
அ.கருணாநிதி
எம்.என்.ராஜம்
இசை ஜி. ராமநாதன்.
கதை வசனம் ஸ்ரீதர்
இயக்கம் டி. ஆர். ரகுநாத்
மகேஸ்வரி பத்தொன்பதாவது நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்ததாகக் கற்பனை செய்யப்பட்ட கதை.
எடுத்ததும், மாணிக்கம், கிழக்கிந்திய கம்பெனியின் காவலர்களிடம் வம்பை வளர்க்க, அவர்கள் விரட்டுகிறார்கள். இவர், ஒரு வீட்டில் வந்து ஒளிகிறார். அது மகேஸ்வரியின் வீடு. மகேஸ்வரி தந்தையை இழந்தவர். தாயின் நடத்தை மீது கேள்விகேட்டு, ஊரே அவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. மாணிக்கமும் மகேஸ்வரியும் காதலிக்கிறார்கள். மாணிக்கம், ஜமீன்தார் மகன்.
மாணிக்கத்தின் தந்தை தர்மலிங்கம் மகேஸ்வரியின் தாயார் காந்திமதியிடம் ஒரு பெரிய வரதட்சணை கேட்கிறார். இவர், தனது சொத்து முழுவதையும் விற்றுக் கொடுக்கிறார். திருமணம் மாப்பிள்ளை வீட்டில் நடக்கிறது. வாழ்த்து ஓலைகளைப் பொதுவில் படிக்கும்போது, ‘பெண் வீட்டிலிருந்து யாராவது திருமணத்திற்கு வந்திருக்கிறார்களா? வர மாட்டார்கள். ஏனென்றால், தாய் நடத்தை கெட்டவள்” என ஒரு ஓலை சொல்கிறது. இதனால் மாமனார், மருமகளை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். கணவன் “அப்பா பிள்ளை”.
அம்மாவும் இறந்துவிட, மகேஸ்வரி யாருமில்லாமல் நிற்கிறார். மீண்டும் கணவன் வீட்டிற்குச் சென்று பார்த்தால், அவன் வேறு ஒருவரின் கணவன். இரண்டாவது மனைவியின் பெயர் அல்லி. மகேஸ்வரி, மாமியாரிடம், “இங்கு வேலைக்காரியாக இருந்து கொள்கிறேன்” எனக் கெஞ்சுகிறார். மாமியார் நல்லவர் என்றாலும் அவர் சொல் அந்த வீட்டில் எடுபடாது. இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இரண்டாவது மனைவி, இவரைக் கணவனிடம் கொண்டு விடுகிறார். ஓரிரவைக் கழித்த மகேஸ்வரி, யாருக்கும் இடையூறாக இருக்கக் கூடாது என, கணவனின் செருப்பை எடுத்துக் கொண்டு மீண்டும் தன் வீடு செல்கிறார்.
மகேஸ்வரியைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகத் தோழி ஒருவர் காட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இன்னொரு மனிதரிடம் கொண்டு சென்று ஒப்படைப்பதே நோக்கம். ஆனால் கொள்ளையர் கும்பலின் தலைவரான மாயாத்தேவன் காப்பாற்றித் தன் மகள் போன்று நடத்துகிறார். அனைத்துப் பயிற்சியும் கொடுக்கிறார். மகேஸ்வரியை ராணி ரங்கம்மா என்று பெயர் மாற்றுகிறார். மகேஸ்வரி கொள்ளைக்காரியாக உருமாறுகிறார். வெளியில் எவ்வளவு ஆடம்பரமாக இருந்தாலும், இவர், கணவனை நினைத்துக் கொண்டே, எளிய வாழ்வு வாழ்கிறார். இடையில் தனது வீட்டிற்குச் சென்று, கணவரின் செருப்பை எடுத்துவந்து பூஜை செய்கிறார்.
ராணி ரங்கம்மாவைப் பிடித்துக் கொடுப்போருக்குப் பரிசெல்லாம் அரசு அறிவிக்கிறது. ஆனாலும் காட்டிக் கொடுப்பாரில்லை. அவரின் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அடித்துத் துன்புறுத்துகிறார்கள். வேறு ஒரு பெண், ‘நான் தான் ராணி ரங்கம்மா’ என வருகிறார். இதையெல்லாம் அறிந்த ராணி, தானே வந்து விடுகிறார். சிறையிலிருக்கும் அவரை அவரது நண்பர்கள் தப்பிக்க வைத்து அழைத்துச் செல்கிறார்கள்.
இந்நிலையில் ராணியின் குழு, அவர் கணவர் வீட்டிலேயே அனைத்தையும் கொள்ளையடித்து வர, இப்போது மாமனாருக்கு, கிழக்கிந்திய நிறுவனத்திற்குக் கொடுக்க பணம் வேண்டும். அப்பாவிடம் பணம் வாங்கி வா என இரண்டாவது மருமகளை அனுப்புகிறார். அப்பா, கொடுக்க மறுக்க, கணவன், என்னுடன் வராதே எனச் சொல்கிறான். இவர் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறார். அவன் புறந்தள்ளிச் செல்கிறான். ‘உன்னை என் காலைப் பிடிக்க வைக்கிறேன்’ என மனைவி சொல்கிறார்.
இதையெல்லாம் அறிந்து வந்த ராணி, அல்லியை அழைத்துச் செல்கிறார். கணவனை இழுத்து வரச் செய்கிறார். கணவர், அல்லியின் அடிமையாகிறார். காலைப் பிடிக்கச் சொல்கிறார். பின் தான் யார் என அல்லி காட்டுகிறார்.
ராணி, யார் எனக் கணவருக்குத் தெரியப் படுத்துகிறார். ‘புகுந்த வீட்டை’ பல இடையூறுகளிலிருந்து காக்கிறார். இறுதியில் மாமனார் உள்ளம் மாறுதலடைய, மகேஸ்வரியாக மாறி கணவருடன் இணைகிறார்.
வலுவான பெண் பாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களும் இதுவும் ஒன்று. மகேஸ்வரியாக வரும் சாவித்திரி, அல்லியாக வரும் எம் என் ராஜம், கொள்ளைக்கூட்டத்தில் ஒருவராக வரும் முத்து லட்சுமி எனப் பல சிறப்பான பாத்திரங்கள். அனைவரும் அழகாகவும் இருக்கிறார்கள். தங்கள் பாத்திரங்களை உணர்ந்து மிகவும் சிறப்பாகவும் செய்திருக்கிறார்கள்.
ஜெமினி அழகாக இருக்கிறார். தகப்பனாராக வரும் தங்கவேலுவின் வயதான தோற்றம் ஒன்றும் சிறப்பாக இல்லை. அவரது மனைவியாக வரும் சி கே சரஸ்வதி நல்ல மாமியாராக வருகிறார். உருவமும் நடிப்பும் அவருக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறது. கொள்ளைக்காரராக வரும் நாயகியாக இருந்தாலும் குடும்பத்தலைவன் என்ன சொல்கிறானோ அதை, மகன் மனைவி என அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் எனச் சொல்லும் கதை.
மிக இயல்பாக முதல் மனைவி இருக்கும்போதே, இரண்டாவது திருமணம் செய்யும் கணவன்,, கணவரின் செருப்பைப் பூஜை செய்து, பாலும் பழமும் மட்டும் சாப்பிட்டு ஒறுத்தல் நிலையில் வாழும் மனைவி என ஆணாதிக்க, பெண்ணடிமைத்தனத்தை மிகவும் இயல்பாகக் கடத்தும் கதை.
குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் நடனங்கள் மற்றும் காட்சியமைப்புகள் மிகமிக அழகு.
சிறையிலிருக்கும் நாயகியைக் காப்பாற்றத் தோழி ஆடும் நடனமிது. பாரதியாரின் இப்பாடலை ரத்னமாலா குழுவினர் பாடுகிறார்கள். முத்து லட்சுமி அவர்களின் நடனம் அவ்வளவு அழகாக இருக்கிறது. நடனக்குழுவில் உள்ள பெண்களும் அவ்வளவு அழகாக ஆடுகிறார்கள்.


உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா
கலகத் தரக்கர்பலர் -எங்கள் முத்து…
கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்து…
பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்து…
பய னொன்று மில்லையடி-எங்கள் முத்து…
நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்து
நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்து
துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்து
தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்து
மணி வெளுடக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்து
மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்து
பிணிகளுக்கு மாற்றுண்டு,-எங்கள் முத்து
பேதைமைக்கு மாற்றில்லை,-எங்கள் முத்து
அணிகளுகொ ரெல்லையில்லாய்,-எங்கள் முத்து
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம்,-எங்கள் முத்து

திரைப்படத்தின் பல பாடல்களைப் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதியுள்ளார். அவர், ‘படித்த பெண்’ என்ற படத்தில் முதலில் பாடல் எழுதியிருந்தாலும், மகேஸ்வரி தான் முதலில் வெளிவந்த திரைப்படம். எளிமையான தமிழில் பொதுவுடைமைக் கருத்துகளைத் தனது பாடல்களில் வைத்தவர். எம் ஜி ஆர் தனது முதல்வர் நாற்காலியின் நான்காவது கால் ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு அவரின் வீச்சு இருந்தது. மக்கள் கவிஞர் என்று போற்றப்படுபவர், இருபத்தொன்பது வயதில் இறந்தது மாபெரும் சோகம். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டையில் இவருக்கு மணிமண்டபம் அமைக்கப் பட்டுள்ளது.
ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய இப்பாடல் மிகவும் பிரபலமானது.
அறம் காத்த தேவியே குலம் காத்த தேவியே
நல் அறிவின் உருவுமான ஜோதியே
கண் பார்த்தருள்வாயே அன்னையே
ஏ மாதா என் தாயே
உன் பாதம் நம்பினேன் அம்மா
சத்தியமே லட்சியமாய்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா
துன்பமில்லாமல் எல்லோரும் மனம்
ஒன்று கூடி இன்பம் கொண்டாடும் தினம்
நம் மனதில் உறுதியாகவே
மலிந்த கொடுமை நீக்கவே
இம்மனித வாழ்வில் உயர்வு காணவே
நீ வாழ்த்திடுவாயே தேவியே
ஏ பவானி லோக மாதா
ஏழைகளின் வாழ்வில் சுகம் தா
சத்தியமே லட்சியமாய்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா

பட்டுக்கோட்டையார் எழுதி, ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய பாடல்
அழகு நிலாவின் பவனியிலே
அமைதி கொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
ஆடும் காரணம் ஏதோ
களங்கமில்லா என் மனதினிலே
கலைஅழகே உமதன்பாலே
இன்ப உதயம் ஆவது போலே
இதய உறவினாலே
மாலை நிலவின் நீல ஒளியிலே
மங்கை உனது அங்கமெல்லாம்
பசுந்தங்கம் போலே மின்னிடுதே
இல்லறமென்னும் இன்ப காவிலே…ஆஆ
நல் ஒளி சேர்க்கும் புது மதியே
மோன விழியிலே வீணை மொழியிலே
நானே அடிமை ஆனெனே
வீணே என்னை கேலி செய்வதும்
ஏனோ முறையாகாதே
உண்மை காதல் இதுவல்லவோ
உயிரும் உடலும் உமதல்லவோ
பட்டுக்கோட்டையார் எழுதி, T. V. இரத்தினம் பாடிய பாடல் இது.

அள்ளி வீசுங்க பணத்தை அள்ளி வீசுங்க
என் ஆசை வேணுமென்றால் காசை
பணம் பெருத்த சீமான் என்னைப்
பார்த்தே அன்பைக் காட்டுங்க -கையில்
பசையில்லாத ஆசாமிகள்
பைய கம்பி நீட்டுங்க
க்ளாவர் ஜாக்கி மேலே துருப்பு
ஆட்டின் ராணி அடிக்கிறேன் -உன் ‘
ஆட்டின் ராணி சீட்டு மேலே ஆசை வச்சு படிக்கிறேன்
சீட்டாட்டத்தில் பணத்தையெல்லாம்
கோட்டை விட்ட கோமானே!
ஒரு செல்லாக்காசும் இல்லா போது
சிரிக்க வேண்டாம் சீமான்- என் ஆசை…

பட்டுக்கோட்டையார் எழுதி, S. C. கிருஷ்ணன் & A. G. ரத்தினமாலா பாடிய பாடல்
ஜனக்கு ஜனக்கு ஜிஞ்சனாக்கு
சின்னவே ராணி எங்க ராணி
சிங்கார தங்க நிறம் அவள் மேனி
கொள்ளைக்காரன் போலே எல்லை தாண்டி வந்த
கொடியவரி அழிக்கும் கோபராணி
எங்கள் அடிமைதனை எதிர்த்த அன்பு ராணி
நெஞ்சார பொய் கூறும் வீணர்களின் மத்தியிலே
நெய்யாத கொய்யாக்கனி
எங்கள் ராணி ஒய்யார கண்ணின்மணி
மங்கையரின் பக்கத்திலே மயில் போலெ -கெட்ட
வம்புக்கார கும்பலுக்குப் புயல் போலே
செங்கமல செவ்விதழின் முகத்தாலே -என்றும்
மங்காத அன்பு தனை வளர்ப்பாளே!
வாளெடுத்து வீசுவா மானம் காக்க- ஏழை
மக்கள் பக்கம் பேசுவா துன்பம் தீர்க்க
செல்வியவள் கண்ணாலே பொல்லாததைக் கண்டால்
தேடி வரும் வேங்கையாம் வீராங்கனை

A. மருதகாசி எழுதி, S. C. கிருஷ்ணன் & A. G. இரத்தினமாலா பாடிய பாடல் இது
சொன்னா போதும் கண்ணாலே- உன்ன
சோடிச்சுப் புடுவேன் பொன்னாலே
அண்ணன் காதுக்கு கேட்டுறாப்பிலே
அலறாதீங்க மாப்பிள்ளே! -இது
ஆளைப்பாத்தா அரை செவிடு* -கொஞ்சம்
அர்த்தம் புரிஞ்சிட்டா எதிரிகள் தவிடு
போடா போடா பொக்கை பையா
புண்ணாக்கு தின்ன மக்கு பையா
மம்மத ராசாவே வாங்க
சம்மதம் சொன்னா சரிதாங்க
தூங்கிற நாளில் துணிச்சலா பேசி,
கம்முனு விஷயத்தை கலந்து புட்டீங்க!
பொட்டி பணமெல்லாம் ஒனக்குத்தான்
பத்து பணம் வரிப்பணம்
பாழாக்கணக்கு தான்
கட்டிக் கரும்பே உன்
கண்ணாடி உடம்புக்கு
ஒட்டியாணம் அட்டியலு ஒசந்த மதிப்பு தான்
கல்யாணக் காரியம் நடக்கணும்ங்க -செலவுக்கு
கணக்கு பிள்ளே கொஞ்சம் பணம் கொடுங்க
பணமா வேணும்? ஐயோ பையோடு தாரேன்
நானும் கையோடு தாரேன்.
நல்ல பெண்களின் நாணயம் குலைக்க
பல்லை இளிக்காதே! நாட்டின் பண்பை அழிக்காதே
கள்ளமறியாத குடும்பப் பெண்ணிடம்
காட்டுப்பூனை போல் முழிக்காதே!
அது உசுருக்கு ஆபத்து -வீணா
நீ ஒழுங்கா நடக்கத்தான் இந்த குத்து
* இது போன்ற சொற்களில் எழுத்தாளருக்கோ, பதிப்பகத்தாருக்கோ உடன்பாடு இல்லை. பாடலில் இருக்கும் சொல் எடுத்தாளப் பட்டிருக்கிறது.
A. மருதகாசி எழுதி, M. L. வசந்தகுமாரி பாடிய பாடல் இது.
அந்த நாளும் எந்த நாளோ
சொந்தம் கொண்ட துணைவரோடு
துன்பம் தீர ஒன்று கூடும்
அந்த நாளும் எந்த நாளோ
இதயம் காணும் கனவு யாவும்
இறைவன் அருளால் நனவாகி
புதிய உலகிலே அவரும் நானும்
பூவும் மணமும் போல் சேர்ந்தே வாழ்ந்திடும்
கண்ணில் கலந்து கருத்தில் நிறைந்த
கணவன் பாதம் தன்னை வணங்கி
தொண்டு செய்து அன்பாலே
துயரமெல்லாம் மறந்து நான் வாழ்ந்திடும்
வாழ்விலே ஒரு நாள் வந்த திருநாள்
வானவில்லாய் மறைந்த பொன்னாள்
ஏழை வாழ்வினிலே மீண்டும் தோன்றியே
இன்பம் அளிக்கும் புது நாள்
ஏ.எம்.ராஜா, ஜிக்கி இணைந்து பாடிய பாடலை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

மனமே நிறைந்த தெய்வம்
எனையே நினைந்து வருமோ?
நிலையான வாழ்வு தருமோ?
நினைவே நிறைவேறாதோ?
இதயம் அமைதி பெறாதோ
என் அன்பைக் காண்பதும் என்றோ?
துணையே இல்லாத நானே-பெரும்
துயரால் நலிந்து போனேன்
மனமே உன் இன்ப கீதம்
கனிந்தெனைக் காண என்று வருமோ?
நிலையே இல்லாத ஓடம்
கரை ஏறுவதும் எந்நேரம்?
சுக வாழ்வதே வெகுதூரம்
உனைக்காணும் ஆவலாலே
விழி தாவும் அலையைப் போலே!
தடை போடும் தந்தையாலே
புயலானதே என் வாழ்வே!
நிலையே …வெகுதூரம்
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.




