(Effective Communication)
ஒரு கதை. கணக்கு ஆசிரியர் மாணவனிடம் ஒரு வினா எழுப்பினார்.
“நான் உனக்கு 2 வாழைப் பழங்கள் தருகிறேன், உன் நண்பன் 3 வாழைப் பழங்கள் தருகிறான். உன்னிடம் மொத்தம் எத்தனை வாழைப் பழங்கள் இருக்கும்?”
சில நொடி யோசனைக்குப் பின் 7 பழங்கள் என்றான். ஆசிரியருக்குச் சிறிது ஏமாற்றம். இவ்வளவு சிறிய கணக்குக்கு விடை வரவில்லையே என. இன்னொரு மாணவனைக் கேட்டார், அவன் ஐந்து பழங்கள் என்றான். ஆசிரியர் அவனைப் பாராட்டிவிட்டு முதலாமவனிடம் மறுபடியும் கேட்டார். அவன் புன்னகையுடன் 7 என்றான். அவர், எப்படி உன்னிடம் ஏழு பழங்கள் இருக்கும் எனக் கோபமாகக் கேட்டார். மாணவன், என்னிடம் இருக்கும் 2 பழங்கள் + நீங்கள் தந்த 2 + நண்பன் தந்த 3 = மொத்தம் 7 பழங்கள் என்றான்.
இங்கு தவறு யார் மீது, கேள்வி கேட்கும் போது அனுமானத்திற்கு இடம் கொடுத்த ஆசிரியரிடம்தான்.
நாம் பலரிடம் பேசும் போதும், மற்ற வழிகளில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் போதும் நாம் இது போன்ற பல தவறுகளைச் செய்கிறோம்.
மொழியே உருவாகாத காலத்தில்கூட மனிதர்கள் தங்கள் உணர்வுகளை, எண்ணங்களை வெளிபடுத்த பலவகை சமிக்ஞைகளை வைத்திருந்தார்கள். ஏன் விலங்குகள்கூட தங்களுக்குள் தொடர்புகொள்ள உடல் மொழி, ஒலிகளை உபயோகிக்கின்றன.
ஆனால், மொழி வளர்ந்த பின்பும் ஒவ்வொருவரும் பல மொழி கற்ற பிறகும் நாம் மற்றவருடன் தகவல்களை, உணர்வுகளைச் சிறப்பாகப் பரிமாறிக்கொள்கிறோமா என்றால் இல்லை. எப்போது பேசுவது, எப்படிப் பேசுவது, என்ன பேசுவது, நாம் பேசும் போது கேட்பவர் ஆர்வமாக கேட்கிறாரா அல்லது காயப்படுகிறாரா, மற்றவர் பேசும் போது எப்படிக் கேட்பது என்பதைப் பலர் கற்றுக் கொள்வதே இல்லை. இதனால்தான் பலர் அழகான உறவுகளை இழக்கிறோம்.
நாம் மற்றவரோடு தொடர்புகொள்வது, பேசுவதால் மட்டும் அல்ல, உடல் மொழி, உபயோகிக்கும் வார்த்தைகள், முக பாவனைகள், பேச்சுக்கு நடுவே தரும் இடைவெளி, மற்றவர் சொல்வதைக் கவனத்துடன் கேட்பது, நாம் கவனத்துடன் கேட்பதைச் சொல்பவருக்குத் தெரியப்படுத்துவது, நமது மொழி புலமை என அனைத்துமே சேர்ந்ததுதான்.
இதில் எங்கு தவறு நேர்ந்தாலும் நாம் தனிப்பட்ட வாழ்க்கையை, அன்புக்குரிய உறவுகளை, அலுவலகத்தில் மதிப்பை, வியாபாரத்தில் வெற்றியைப் பாதிக்கும்.
நம்மில் பலர் மொழி புலமை மட்டுமே சிறப்பான தொடர்புக்கு முக்கியத் தகுதியாகக் கருதுகிறார்கள். ஆனால், எப்படிப் பேசுவது மட்டுமல்ல எப்போது பேசுவது, எப்போது அமைதி காப்பது என்று தெரிந்திருப்பதுதான் மிகச் சிறப்பான தகுதி.
நம் மனதில் உள்ளதை அது மகிழ்ச்சியோ, கோபமோ, குறையோ அதைத் தெளிவாக, மற்றவரைக் காயப்படுத்தாமல் வெளிப்படுத்தும் போது நமக்குத் தெளிவு பிறக்கும். அதைச் சரியாக வெளிபடுத்த முடியாமல் நமக்குள்ளேயே புழுங்கும் போது மற்றவரிடம் இருந்து தனிமைப்பட்டு விடுவோம். பின்பு நம்மோடு நாம் பேசுவதே எதிர்மறையாகி, வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி அனைத்துமே கைவிட்டுப் போகும்.
அதனால்தான் பெரு நிறுவனங்களிலும் பொது வெளியிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பான தகவல் பரிமாற்றத் திறன் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. தகவல் மட்டுமல்லாது அதன் பின் உள்ள உணர்வுகள், அதைப் பக்குவமாக வெளிப்படுத்த வேண்டிய வழிமுறைகளே இந்தத் திறனின் அடிப்படை.
ஒரு தேவாலயப் பிரார்த்தனையில் இருந்த இரு நண்பர்களுக்குப் புகைபிடிக்க வேண்டுமெனத் தோன்றியது. ஆனாலும் இருப்பது தேவாலயமாதலால், ஒரு நண்பன் புனித தந்தையிடம் சென்று பிரார்த்தனை நேரத்தில் புகைபிடிக்க அனுமதி கேட்டான். அவர் அவனுக்குப் பிரார்த்தனையின் மகத்துவத்தைக் கூறி, அப்போது வேறெதிலும் கவனம் சிதறக் கூடாதென அறிவுரை சொல்லி அனுப்பினார்.
மற்றொரு நண்பன் சென்று புகைபிடிக்கும் போது பிரார்தனை செய்யலாமா, அதற்கு அனுமதி உண்டா எனக் கேட்டான். புனிதத் தந்தை புகைபிடிப்பது உடலுக்குத் தீங்கு எனினும் அந்நேரத்திலும் பிரார்த்தனை செய்வது மிகுந்த நன்மை பயக்கும் எனக் கூறி வாழ்த்தி அனுப்பினார், இருவரும் வேண்டிய அனுமதி கிடைத்ததென மகிழ்ச்சியோடு சென்றனர்.
இது ஒரு கதையே. இருவரும் ஒன்றையே கேட்டனர், கேட்ட விதத்தில்தான் வேறுபாடு. தகவல் பரிமாற்றத் திறனின் ஜாலம்.
வாருங்கள் தோழிகளே, நாம் அடுத்த அத்தியாயத்தில் அந்த மாயாஜாலத்தைக் கற்போம்.
(தொடரும்)
படைப்பாளர்:
யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.