மனிதகுல வரலாற்றில் தனித்து வாழத் தெரியாதவர்கள் தங்கள் தேவைக்கேற்ப உருவாக்கிக்கொண்ட அமைப்புதான் குடும்பம் என்கிற கட்டமைப்பு. அது பெண்களையும் குழந்தைகளையும் காப்பதற்காகவே என்று சொல்லப்பட்டு வந்தாலும், வேலியே பயிரை மேய்வது போல கட்டிய கணவனே மனைவியைத் துன்புறுத்திக் கொண்டு இருப்பதை அன்றாட நிகழ்வில் இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் பெண்ணின் பாதுகாப்பு ஒருபோதும் நிலையானதாக இல்லையே?

செய்தித்தாளின் ஒருபுறம் பெண்மையைப் போற்றின வாசகங்களும் சாதனைகளும் இடம் பெற்றாலும் மறுபுறம் ஏதோ ஓர் இடத்தில் பெண்ணின் தற்கொலையும் கொலையும் பாலியல் துன்புறுத்தல் செய்திகளும் இருப்பது வேதனை.

யானை, குரங்கு, மாடு போன்ற மிருகங்களை அடக்கித் தன்வசப்படுத்தி வைத்திருப்பதைப் போல பெண்ணையும் வைத்திருக்கிறது இந்தச் சமூகம். காலையில் அடித்து உதைத்து வசைபாடிவிட்டுச் சென்ற கணவனுக்கு மாலையில் திரும்பி வந்ததும் அடிஉதை எல்லாவற்றையும் மறந்து இல்லறம் நடத்துவதற்குத்தானே பெண்களுக்குக் கற்பிக்கிறார்கள்.

மற்றவர்களை அழகுப்படுத்தி பார்ப்பது, பிறரின் மீது அனுதாபங்களைக் காட்டுவது, யாரையும் எளிதில் நம்புவது, உலகப் படைப்புகளில்தான் மட்டுமே மற்றவருக்குத் தொண்டு செய்ய ஜனித்து வந்ததுபோல ஓடிக் கொண்டிருப்பதுதானே பெண்ணின் குணம். அதன் குணத்தை வைத்தே பெண்மையைச் சிறைப்படுத்தி வைப்பதும் அடிமைத்தனம்தானே. பெண்களை யதார்த்தமான வாழ்வில் இருந்து வெளியேற்றிவிட்டு வாழ்வைப் பற்றிய கனவு மயக்கத்தில் வைத்தே அவர்களை அடிமைப்படுத்தும் பணியை இந்தச் சமுதாயம் தொடர்ந்து அவள்மீது நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.

கற்பனை உலகில் பெண்களை நிலைக்க வைத்துவிட்டு, “நீ ரொம்ப அழகா இருக்க! நீ எவ்வளவு பெரிய திறமைசாலி தெரியுமா? நீயே எல்லாத்தையும் செஞ்சிருவ, நீ சிங்கப்பெண் இல்லையா!” இது போன்ற போலி வார்த்தைகளைச் சொல்லி அவளைத் தன்வசம் வைத்திருப்பதும், அடிபணிய வைப்பதும் ஒரு வித்தையாக வைத்திருக்கின்றனர். நவீன யுகத்தின் பெண்கள், எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அறிந்து இந்தச் சமுதாயம் அவர்களைக் கையாள எடுத்த முடிவுதான் அவளின் குணத்தை வைத்தே அவளைப் பணிய வைப்பது.

பெரும்பாலான பெண்கள் தன் அன்பினால் வீட்டின் எல்லாவற்றையும் சரிசெய்து விடுவேன் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு இன்னமும் வாழ்கின்றனர். நம்மைச் சுற்றியிருக்கும் யாரையும் திருத்த முடியாது, அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு, கட்டிய கணவனைத் திருத்திவிடலாம் என்று தன்னையே, தன் வாழ்வையே அர்ப்பணித்துத் தொலைத்த பெண்கள் அநேகம்.

சாஸ்திரங்களுக்கும் சாம்பிரதாயங்களுக்கும் கட்டுப்பட்டு வதைபடும் பெண்களும், அதற்கென தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்தானே! தன்னுடைய தேவைக்காகப் பெண்ணின் உழைப்பையும் உடலையும் சுரண்டிக் கொண்டு வாழும் பிறவியாக இந்தச் சமூகம் மாறியிருக்கிறது. பெண்ணால் தனித்து வாழ முடியாது என்பதை எல்லா வழிகளிலும் அழுத்தம் திருத்தமாக அவர்கள சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆண்மைவாதிகள் ஒருசிலர், “நாங்கள் பெண்களை அடிமைப்படுத்தவில்லை, அவர்களைப் பாதுகாக்கிறோம்” என்று பெண்ணினக் காவலாளிகள் போலப் பேசுகின்றனர். குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் பெண்களின் பாதுகாப்பு எவ்விதத்தில் உள்ளது என்கிற நடைமுறையைத்தானே காட்டுகிறது?

பெண் குழந்தை என்கிற காரணத்தினால் பிறந்தது முதலே நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது இந்தத் தலைமுறையில். பெண்குழந்தை பிறந்தவுடன் இவர்கள் இன்னும் கருவறையிலே வைத்திருக்கலாமோ என்கிற எண்ணம்தான் வருகிறது. கருவறையும் கல்லறையும் தவிர பெண்ணுக்கு எங்குமே சுதந்திரம் ஒன்று கிடையாது போல. நம் நாட்டில் ஒரு நாளில் நான்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமுறைக்கு ஆளாகின்றனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. வீட்டுக்குள் பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்ட குழந்தைளுக்கே இந்நிலை என்றால், தெருவோரக் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?.

ஒருகட்டத்தில் ஆண்கள் இல்லாமல் வாழ முடியாத பெண்கள் என்று கேள்விகள் எழுப்பினாலும், ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் அவசியம் என்பது யதார்த்தம்தானே?

குழந்தையுடன் இருக்கும் ஆண் தன் மனைவியை விவாகரத்து செய்தாலோ அல்லது மனைவி மரணித்துவிட்டாலோ, “பாவம் ஒரு ஆம்பிள எப்படிப் புள்ளய வச்சி காப்பாத்துவான், சீக்கிரம் அவனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்து கட்டி வைக்கணும்” என்று பேசும் உறவுகள், அதே இடத்தில் ஒரு பெண் என்றால் மட்டும், “அவ தல எழுத்து” என்று விதியின் கையில் விட்டுவிடுகின்றனர்.

ஏன், பெண்ணுக்கு உணர்வு என்ற ஒன்றே இருக்கக் கூடாதா? பெண் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் கணவரை விட்டுவிலகினால் இந்தச் சமுதாயம் அவளை வாழவிடுகிறதா? வாழாவெட்டி என்கிற பட்டத்துடன்தானே அவள் வாழ்க்கை முழுவதும் வதைத்துக்கொண்டிருக்கிறது. பெண்களை யாரும் பார்த்துக்கொள்ள வேண்டாம், தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளும் திறமை பெண்ணுக்கு இருக்கிறது. அதை இந்தச் சமுதாயம் அவள் தக்க வைத்துக் கொள்ள உதவுமா? எல்லாம் கேள்வியாகவே தொடங்கி கேள்வியாகவேதான் முடிகிறது. ஆம், பெண்ணின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியின் முன் கூனிக் குறுகித்தானே நிற்கிறது?

படை ப்பாளர்:

நட்சத்திரா

ஆய்வக நுட்பனராக மருத்துவமனையில் பணிபுரிகிறேன். இதுவரை புத்தக வாசிப்பு மட்டுமே கொண்டிருந்தேன். இது என்னுடைய முதல் எழுத்துப் பணி.