ஹாய் தோழமைகளே,

நலம், நலம்தானே?

பரிவு பற்றி நாம் பேசிக்கொண்டிருந்த போதே சில நிகழ்வுகள், சமூகத்தின் எதிர்வினைகள் மனதை மிகவும் பாதித்தன.

நம் எல்லாருக்கும் ஒரு தீரா வியாதி உள்ளது. அது நாம் எல்லா நிகழ்வுக்கும் கருத்துக் கந்தசாமிகளாக மாறி அனைவருக்கும் இலவசமாக அட்வைஸ்களை அள்ளித் தெளிப்பது. நம்மை யாரும் கேட்காவிடினும் சொல்வது, நமக்குச் சம்பந்தமே இல்லாத நிகழ்வு எனினும் அந்த நபர் நமக்கு அறிமுகமில்லாவிடினும் நம் நட்பு வட்டத்தில் அதைப் பற்றிப் பகிர்வது.

முன்பெல்லாம் இந்த சோஷியல் மீடியா இல்லாததால் நாலு பேரு நாலு விதமாகப் பேசுவாங்க என்பதில் விஷயம் அந்த நாலு பேரோடு முடிந்து போனது (அதாவது சொந்தம், நட்பு, தெரிந்தவர், ஊர்க்காரர்கள்). ஆனால், சோஷியல் மீடியா வந்த பிறகு உலகமே சிறு கிராமமாகிப் போனதில் இந்தக் கருத்து கந்தசாமிகளுக்குக் கொண்டாட்டம்தான். சம்பந்தமிருக்கோ இல்லையோ அனைத்து விஷயத்திற்கும் கருத்துகளை அள்ளி வீசுகின்றனர். அது சம்பந்தப்பட்டவரின் மனதை எவ்வளவு பாதிக்கும் என்கிற இங்கிதம்கூட இல்லாமல் போயிற்று.

சமீபத்தில் ஒரு குழந்தை வீட்டின் மாடியில் இருந்து தவறி விழ இருந்தது. அதை அக்கம் பக்கம் வீட்டினர் கவனித்து, கூச்சல் போட்டு, கூட்டம் சேர்த்து, எல்லாருமாக அந்தக் குழந்தையைக் காப்பாற்றிவிட்டனர். அதைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போதே பரவசத்தில் எனக்குக் கண்ணீர் வந்தது. யாரோ ஒரு குழந்தை என்று போகாமல் அனைவரும் சேர்ந்து அவருக்குத் தெரிந்த விதத்தில் செயல்பட்டு, குழந்தையைக் காப்பாற்றினார்கள். அது மனித சக்தியின் மகத்துவம்.

அடுத்த நாளில் இருந்து ஆரம்பமானது நமது நெட்டிசன்களின் பின்னூட்டங்கள். ’அந்தக் குழந்தை விழும்போது தாய் ஏன் கவனிக்கவில்லை, அவள் என்ன பண்ணிக்கொண்டிருந்தாள் என அந்தத் தாயைக் குறி வைத்து அவரவருக்குத் தெரிந்த வகையில் வன்மத்தைக் கொட்டி இருந்தனர். இணையத்தின் உதவியால் அது அந்தத் தாயின், வீட்டாரின் கவனத்திற்கு உடனுக்குடன் சென்றது.

ஒரே ஒரு நிமிடம் உங்களை அந்தத் தாயின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள். நீங்கள் வேண்டுமென்றா குழந்தையைத் தூக்கிப் போட்டிருப்பீர்கள்  அல்லது எப்படியோ போகட்டும் என அலட்சியப்படுத்தி இருப்பீர்களா? அது ஒரு சறுக்கல். நம் அனைவருக்குமே எத்தனையோ முறை நேர்ந்த ஒன்று. அதனால் ஏதும் பாதிப்பு வராததால் அல்லது அதை நாம் வெற்றிகரமாகச் சமாளித்ததால் அதைப் பற்றி வெளியில் தெரியவில்லை.

இதையும் யோசித்துப் பாருங்கள், அந்தப் பெண்ணுக்கு உடல் நலம் கெட்டிருக்கலாம், மருந்துகளின் விளைவால் தூங்கி இருக்கலாம் அல்லது இரவு முழுக்கக் குழந்தைத் தூங்க விடாமல் அழுததால் பகலில் கண்ணயர்ந்து போயிருக்கலாம். அல்லது தொடர்ச்சியான வீட்டு வேலை, அலுவலகப் பணி காரணமாக அசதியில் சற்று அசந்து இருக்கலாம். இன்னும் நம் கருத்துக்கு எட்டவே முடியாத பல காரணங்கள் பல இருக்கலாம். இது எதுவுமே தெரியாமல் அந்தத் தாயைப் பற்றிப் பேசியது எங்கே கொண்டு போய் நிறுத்தி உள்ளது?

அந்தப் பெண்ணின் தற்கொலை, மன அழுத்தத்தின் காரணமாக. இப்போது பேசிய எந்த வாயாவது அந்தக் குழந்தைக்குத் தாயாக இருக்க முன் வருமா? அந்தப் பெண்ணைப் பற்றிக் கருத்துச் சொன்ன அனைவருமே குற்றவாளிகள் தான். அப்படிப் பேசியவர்களின் தற்போதைய மனநிலை என்னவாக இருக்கும்? கொஞ்சமே கொஞ்சம் மனசாட்சி இருந்தால் குற்ற உணர்வு இருக்கும். அப்போது மன அமைதிக்கு இடமேது?

கொஞ்சம் பரிவோடு இருந்திருக்கலாம். அந்தக் குழந்தைக்கு அம்மா இருந்திருப்பாள், நமக்கும் மன அமைதி கிட்டி இருக்கும்.

அடுத்த கொடூரம், சமீபத்திய நீயா நானாவில் அதிகம் தோசை சாப்பிடும் வாலிபன். அவன் இருபது தோசை சாப்பிட்டது நமக்கெல்லாம் கண்ணை, கருத்தை உறுத்தியது. அது அவனது தனிப்பட்ட உரிமை. சுட்டுத் தருவதற்குத் தாய் தயாராக இருக்கிறார். தங்கைக்கு விருப்பமில்லை எனில் விட்டுவிடலாம். நமது கருத்து செய்ய விரும்பாத தங்கையை வற்புறுத்தக்கூடாதென்பது மட்டுமென்றால், அது பெண் சுதந்திரம் பேணுவது. ஆனால் அத்தனை தோசை சாப்பிடுவதா எனத் தொடங்கி, இவனுக்குப் பெண் எப்படிக் கிடைக்கும் என்பது முதல் எத்தனை விவாதங்கள், கருத்துகள்? நமக்குப் பெண் இருந்து இப்படி ஒரு வரன் வந்தால் தர வேண்டிய அவசியம் இல்லை, ஆனால், பொது வெளியில் மற்றவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கமெண்ட் செய்யும் அதிகாரத்தை வழங்கியது யார்?

அந்த வாலிபன் ஒரு ரயில்வே கிராசிங்கைக் கடக்கும் போது விபத்தில் மரணமென்ற  செய்தியைப் படித்த போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அந்த வாலிபனின் மரணத்திற்கும் தோசையைப் பற்றிய விவாதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைதான். ஆனால் அவன் இறந்து விடுவான் என்று தெரியாததால் பேசியவர்கள், இதைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் அப்படிப் பேசி இருக்க மாட்டார்கள். போகட்டும் குழந்தை சாப்பிடட்டும் என்றுதான் தோன்றி இருக்கும். இப்போது அந்தத் தாயின் மனநிலை எப்படி இருக்கும், அவரைப் பற்றிப் பேசியவர்கள் மேல் எப்படிபட்ட கோபம் இருக்கும்? அப்படி அவனைக் கேலி செய்தவரின் இன்றைய மனநிலையில் எந்த விதமான எதிர்மறை பாதிப்புகள் இருக்கும் ?

வாழ்க்கையின் மிகப்பெரிய சுவாரசியமே யாருக்கு எப்போது என்ன நடக்கப்போகிறது என்று தெரியாததுதான். ஆனால், அது தெரியாமல் காலம் யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்று புரியாமல் நாம் சொல்லும் கருத்துகள் அவர்களை எவ்வளவு வேதனைப்படுத்தும்? ஒரு நிமிடம் அந்தத் தாயின் தங்கையின் நிலையில் இருந்து யோசியுங்கள், உங்களால் நிம்மதியாக ஒரு தோசை சாப்பிட எத்தனை நாட்களாகும்? அவனது தோசையின் விருப்பமும் அதைப் பற்றிய மற்றவரின் பேச்சும் மனதை எவ்வளவு காயப்படுத்தும்?

அப்படிப் பேசிய எத்தனை பேர் ஓர் இரண்டு நாட்களாவது மனதில் வேதனையோடு இருந்தீர்கள்?

நாம் மற்றவரைப் பற்றிய பரிவோடு நடந்து கொள்ளாமல் இருக்கும் போது, அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மனம் புண்படும். மனம் அமைதி இன்றி தவிக்கும். குறைந்தபட்சம் நம் மன அமைதிக்காகவாவது மற்றவரிடம் பரிவுடன் இருப்போமே?

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.