ஹாய் தோழமைகளே,

எல்லாரும் நலமா?

போன வாரம் நாம் பரிவோடு இருப்பதைப் பற்றிப் பேசினோம். பரிவோடு இருப்பதற்கும், உணர்வுசார் நுண்ணறிவோடு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

நம் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் போவதற்கு முக்கியமாக இரண்டே காரணம்தான். ஒன்று நாமே நமது எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் இல்லாமல் இருப்பது, அடுத்தது மற்றவர்கள் நமது எதிர்பார்ப்புக்கு மாறாக நடப்பது.

இரண்டையும் தன்னை அறிவதன் மூலமும், மற்றவரின் நிலையில் நின்று நம்மால் யோசிக்க முடிவதின் மூலமும் சரிசெய்யலாம்.

மற்ற காரணங்கள் இருந்தாலும் அவை யாவும் புறக்காரணிகளே, இவை இரண்டுமே அகக்காரணிகள்.

நமது மொத்த நாளையும் உருப்படியாகக் கழிக்கப் போகிறோமா அல்லது வீண் மன வருத்தத்தில் கழிக்கப் போகிறோமா என்பது நமது ‘மூட்’ எனும் உணர்வு நிலையைப் பொறுத்துதான். அதையும் அந்த மூடைக் கெடுப்பது காலை உணவான உப்புமா, அலுவலகத்தில் பிழிந்தெடுக்கும் மேலாளர், சரியான சில்லறைத் தராத பேருந்து நடத்துநர், இன்னும் சுத்தம் செய்யப்படாத அலுவலக அறை, காலையில் நேரத்திற்கு எழாத பிள்ளைகள் என்று எளிதான காரணங்கள் போதும். இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கலாம், அது உங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியமானதாக இருக்கலாம், இந்த அற்ப காரணங்களுக்காக அதைக் கெடுத்துக் கொள்ளலாமா?

அருண் ஒரு தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி. நிர்வாகம் சமீபத்தில் அறிவித்த போனஸில் தொழிலாளர்களுக்குத் திருப்தி இல்லாததால் அவர்கள் பேச்சு வார்த்தைக்கு நேரம் கேட்டுக் காத்திருந்தனர். ஒருவேளை இன்றே பேச்சு வார்த்தை நடக்காவிடில் போராட்டம் என்பது அவர்களின் முடிவு.

அருணுக்கோ காலையில் இருந்தே போனஸ் சம்பந்தமாக ஏகப்பட்ட அறிக்கைகள் தயார் செய்ய வேண்டிய வேலை, தொழிலாளர்களின் அதிருப்தி, போன வருட போனஸ் சதவீதம், இந்த வருட எதிர்பார்ப்பு என அத்தனை தகவல்கள் சேகரித்து ஒன்றிணைத்துச் சோர்ந்து போனான். இன்று சாயந்திரம் தங்கையின் நிச்சயதார்த்தம், அதில் அண்ணனாக நின்று கடமையாற்ற வேண்டி வந்ததால் 4 மணிக்கே வீட்டுக்குப் போக அனுமதியும் வாங்கி இருந்தான்.

இப்போதே மணி 3.30. அறிக்கை தயாரித்தாயிற்று,  இன்னும் தொழிலாளர்களைச் சந்திக்கவில்லை. ஒருவேளை சந்திக்க அமர்ந்தால் அவன் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள முடியாமல் போகலாம். சந்திக்காமல் சென்று விட்டால் அது இன்னும் என்ன விதமான பிரச்னையைக் கொண்டு வருமோ?

சிறிது நேரம் எல்லாப் பிரச்னையையும் மறந்து, ஆழ்ந்த மூச்செடுத்து சமன் படுத்திக்கொண்டான்.

பின்னர் தொழிலாளர்களிடம் அவர்களின் சார்பாக இருவரை மட்டும் பேச அழைத்தான். தனக்கும் வந்த இருவருக்கும் காபி வரவழைத்தான். காபியைச் சாப்பிட்டதில் இவன் தலைவலியும் கொஞ்சம் குறைந்தது, வந்தவர்களின் சூடும் குறைந்தது.

பின்னர், காலையில் இருந்து தயார் செய்த அறிக்கைகளைக் காட்டி, “இந்த அறிக்கைகள் உங்கள் அதிருப்தியை மேனேஜ்மென்ட்க்குப் புரிய வைப்பதற்காகத் தயார் செய்ததுதான். இதை அவர்கள் படித்து, விவாதித்து ஒரு முடிவுக்கு வர சிறிது அவகாசம் தேவை. அதற்கு முன்பாகவே நீங்கள் வேலை நிறுத்தம் செய்தால் அது உங்களுக்குப் பாதகமாகவே அமையும். மேனேஜ்மெண்ட் விவாதித்த பின் வரும் புது போனஸில் உங்களுக்குத் திருப்தி இல்லாவிடில் நீங்கள் பேச்சு வார்த்தைக்கோ வேலை நிறுத்தத்தையோ பற்றி முடிவு செய்யலாம். எதுவாயினும் உங்கள் கோரிக்கைகளை, தேவைகளை அறிக்கையாக நான் சமர்ப்பித்துவிட்டேன். இனி நான் செய்ய ஏதுமில்லை. நீங்களே யோசித்து ஒரு முடிவெடுங்கள்“ என்றான்.

அவர்களும் மேனேஜ்மெண்ட்டும் மேலாளரும் தங்களைப் பற்றி விவாதிக்கும் போது வேலை நிறுத்தம் எதிர்மறையான போக்கைதான் உருவாக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, “சரி சார், புது போனஸ் அறிவிப்பு வெளியாகட்டும் பின்பு இதைப் பற்றிப் பேசலாம்“ என்று அமைதியாகக் கலைந்து சென்றனர்.

அருண் யாரையும் சந்திக்க நேரமில்லை என்று கிளம்பி இருந்தாலும், அது தவறில்லை. அவரது வீட்டு விசேஷமும் அதற்கான முன் அனுமதியும் மேனேஜ்மெண்ட்டுக்குத் தெரியும். ஆனால், மறுநாள் வேலை நிறுத்தம் வந்தால், நிர்வாகத்திற்கும் நஷ்டம், தொழிலாளர்களுக்கும் சிரமம். அதைத் தாண்டி மனிதவள மேம்பாட்டு மேலாளராக அருணுக்கு அது தோல்வியும்கூட. இந்த நெருக்கடியிலும் அமைதியாக யோசித்து எது முக்கியம் என்று முடிவெடுத்ததுதான் அந்த நாள் நிறைவாக முடிந்ததற்குக் காரணம்.

தனது நோக்கமும் நிறைவேற வேண்டும், எதிரில் உள்ளவர்களின் உணர்வையும் கையாள வேண்டும், அதே நேரம் வேலை நிறுத்தமும் தவிர்க்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கருத்தில் கொண்டு நிதானமாக நடந்து கொண்டதுதான் உணர்வுசார் நுண்ணறிவு.

இங்கு அவர் என்னவெல்லாம் செய்தார் எனப் பார்ப்போம்.

  1. தன் தேவை என்ன, தன் கடமை என்னவென்று புரிந்ததால்தான், தொழிலாளர்களைச் சந்திப்பதைவிட அறிக்கை தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.
  2. தொழிலாளர்களின் மன நிலையும் மேனேஜ்மெண்ட்டின் பிரச்னையும் புரிந்ததால்தான், ஒரு குறுகிய இடைக்காலச் சந்திப்பை நடத்தினார்.

இது போன்ற நிறைய சிறு சிறு சந்தர்ப்பங்கள் நம் வாழ்வில் நடந்திருக்கலாம். அவற்றை எல்லாம் நீங்கள் எப்படிக் கையாண்டீர்கள், என்னென்ன வழிமுறைகள், அதற்கான காரணங்கள், அதை எப்படிச் சரியாகக் கையாண்டிருக்கலாம் என்பதை எழுத முயற்சி செய்யுங்கள். இந்தப் பயிற்சி அடுத்த முறை அதே போன்ற சூழ்நிலைகளைக் கையாள உதவும்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.