“ஏய்… மல்லிகா, உங்க அம்மா சொல்றதைக் கேட்காதே. வா நம்ம வீட்டுக்குப் போகலாம்”. மல்லிகா காது கேட்காதது போல  தலைகுனிந்து நின்றிருந்தாள். பக்கத்திலிருந்த அவள் அம்மா பரமு, “டேய்ய்ய்ய்… இப்போ நீ போகப்போறியா, இல்ல போலீசைக் கூப்பிடவா?” எனக் கோபத்தோடு கத்தத் தொடங்கினாள்.

“ச்ச்சீய்ய்… நீ பேசாத, என் பொண்டாட்டியை நான் கூப்பிடறேன், உனக்கு என்ன?” என்று சீறினான். மல்லிகாவிடம் திரும்பி,  “ஏய்  மல்லி, இப்ப நீ எங்கூட வரல… நான் மருந்தைக் குடிச்சு செத்துடுவேன்”, சுற்றுப்புறம் பற்றி கவலைப்படாமல் சத்தமாக சொல்லிக்கொண்டே பேன்ட் பாக்கெட்டிலிருந்த பாட்டிலை  எடுத்து மூடியைத் திருகினான் தினேஷ்.

அந்த நீதிமன்ற வளாகத்தில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு அனிச்சையாக திரும்பிப் பார்த்து “ப்ச்ச்…”என்ற முகச்சுழிப்போடு திரும்பிக்கொண்டாகள். அவரவருக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள்!  நீதிமன்ற ஊழியர்கள்  இதுபோல் நிறைய பார்த்திருப்பதால், “இதுங்களுக்கு வேற வேலையில்லை” என முனங்கிக்கொண்டே முகம் சுளித்தவாறு அந்த இடத்தைக் கடந்தனர்.

“நீ ஏண்டா சாகனும், நீ ஆம்பள சிங்கம்டா… இவ இல்லாட்டி ஒனக்கு நூறு பொம்பள கெடைப்பா” மகனைத் தேடிவந்த தினேஷின் அப்பா அவனிடமிருந்த பாட்டிலைப்  பிடுங்கியெறிந்தார். கோபத்துடன் மல்லிகாவைப் பார்த்து ‘த்த்தூ…’  எனத்துப்பிவிட்டு  அவனை இழுத்துக்கொண்டு போனார். “என்கூட வந்துரு மல்லி… என் கூட வந்துரு மல்லி”,  தினேஷின் குரல் மெல்ல மெல்ல காற்றில் கரைந்து கொண்டே போனது.

எந்தச் சலனத்தையும் காட்டாத மல்லிகாவின்  கண்களிலிருந்து நீர் மட்டும்  வழிந்து கொண்டிருந்தது. ஆத்திரம் தீராமல் தினேஷை மட்டுமல்லாமல், அவனது ஒட்டு மொத்த குடும்பத்தைப் பற்றி வண்டை வண்டையாய் வசவால் உரித்துக்கொண்டிருந்த அம்மாவை வெறுமையாய்ப் பார்த்தாள். பணியில் இருந்த போலீஸ் அருகில் வந்து, “இங்க நின்னு ஏம்மா சத்தம் போடற? போ…போ… வந்த வேலை முடிஞ்சிடுச்சின்னா வெளியே போங்க” என அதட்ட, இருவரும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தனர்.

மல்லிகாவின் அப்பா செல்லத்துரைக்கு சொந்த கிராமத்தில்  தீப்பெட்டி ஆபிஸ், பக்கத்து டவுனில் பால் ஏஜென்சி, ஏழெட்டு லாரி, சிட்பண்டு என வசதிக்குக் குறைவில்லை. மல்லிகா, மாலா,  முருகேஷ் என  மூன்று பிள்ளைகள். வசதி வாய்ப்பு பெருகப் பெருக, புருசனும் பொண்டாட்டியும் தலை கால் புரியாமல்  ஆடினார்கள். ஆடம்பரம், ஆடம்பரம்… எல்லாம் தாட்பூட் தஞ்சாவூர்தான். அந்த கிராமமே  அதிசயித்து பார்க்கும் அளவுக்கு  ஒன்றுக்கு இரண்டாய்  கார், பங்களா மாதிரி  காரை வீடு, ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரூம், ஏசி, வீட்டு வேலைக்கு நான்கு பேர், நினைத்த நேரத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுவது என ராஜ வாழ்க்கைதான். தன் குடும்பத்தின் சொகுசு வாழ்க்கைக்காக கடன் வாங்கி செலவழிக்கவும் தயங்கவில்லை செல்லதுரை.

‘பிள்ளைகளுக்கு கண்ணுமண்ணு தெரியாம செல்லம் கொடுக்கறதும் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்கறதும்தான்  குழந்தை வளர்ப்பு’ என்று தவறாகப் புரிந்துகொண்ட பல குடும்பங்களில் செல்லத்துரை குடும்பமும் ஒன்று. ‘நான் அனுபவிக்காதது எல்லாம் என் பிள்ளைகள் அனுபவிக்கனும்’ என்று அதற்கு சால்ஜாப்பு வேறு.

அம்மாவுக்குப் பின்னால் நடந்து கொண்டே யோசித்துப் பார்க்கிறாள் மல்லிகா. அவள் வாழ்க்கையில் எல்லாமே சினிமாக் கதை போலவேதான் நடக்கிறது. விரும்பியதை உண்பது, ஆசைப்பட்டதை உடுத்துவது, நினைத்த இடத்துக்கு ஊர்சுற்றுவது என ஜாலியாகப் போய்க்கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கை ஒரேநாளில் தடம்புரண்டது.

திடீரெனெ ஒருநாள் லாரிசெட்டில்  மயங்கி விழுந்த செல்லதுரையை டவுன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓட, அங்கே பார்க்க முடியாது என்று சொல்லி மதுரைக்கு அனுப்பிவிட்டார்கள். ஏதேதோ பரிசோதனைகள் செய்துவிட்டு, ஒருவாரம் கழித்து மருத்துவர்கள் எல்லாம் கூடிப்பேசி, செல்லத்துரைக்கு வந்திருப்பது பெரிய வியாதியென்றும் உயிர்பிழைப்பது கஷ்டம் என்றும் கூறி கைவிரித்தார்கள். பரமு அழுதுபுரண்டு, “எவ்வளவு காசு செலவானாலும் பரவாயில்லை… அவரைக் காப்பாத்திக் கொடுங்க” என்று கெஞ்சிய பிறகு வைத்தியம் தொடர்ந்தது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்.

பிரமாண்டமான அந்த ஆஸ்பத்திரியில் மூன்று பிள்ளைகளுடன் பரமு  கிடையாய் கிடந்தாள். பணம்  கணக்கு வழக்கில்லாமல் செலவானது. முடிந்த அளவு பணத்தைக் கறந்து கொண்ட ஆஸ்பத்திரி ஒருநாள் செல்லப்பாண்டி உடலை பொட்டலமாகக் கொடுத்தது. கணவனின் உடலுடனும் பதினைந்து லட்ச ரூபாய் கடனுடனும் ஊருக்குத் திரும்பினாள் பரமு. அப்போது மல்லிகா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க, அவளுக்குக்கீழே ஆறாம் வகுப்பிலும், மூன்றாம் வகுப்பிலும்  தங்கையும் தம்பியும்.

வரிசையாகக் கடன்காரர்கள் வந்தார்கள். அவர்கள் எடுத்தது போக, இவர்கள் கொடுத்தது போக… குடியிருந்த வீடும், தீப்பெட்டி ஆபிசும் மட்டுமே மிச்சமாயின. நல்லாயிருந்த காலத்தில் இவர்கள் ஒதுக்கி வைத்த உறவுகள்  இப்போது தாங்களாகவே விலகிக் கொண்டார்கள். கணவன் செத்து, சொத்து அழிந்த பிறகு, பரமு முற்றிலும் மாறிப்போனாள். வாழ்க்கை மாற்றமும் பணப்பற்றாக்குறையும் அவளை ஆங்காரமிக்கவளாய் மாற்றியிருந்தது. தன் தோல்வியை, வெறுப்பை பிள்ளைகளிடம் காட்டினாள். அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவள் மூத்தவளான மல்லிகாதான்.  அடியும் திட்டும் தினம் தினம் சகஜமானது. அம்மாவின் வெறுப்பை தாங்கித் தாங்கி மல்லிகாவும் முரட்டுத்தனமாக மாறிப் போனாள்.

மல்லிகா பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கூடப்படித்த கோகிலாவின் அண்ணன் தினேஷ், “மல்லி, நான் உன்னை எட்டாப்புல இருந்து லவ் பண்றேன் தெரியுமா?” என்றபோது, மல்லிகாவுக்கு சிறகுகள் முளைத்தது போல இருந்தது. வீட்டில் கிடைக்காத அன்பு வெளியிலிருந்து வார்த்தைகளாக வந்தபோது   மனசுக்குள் என்னவோ செய்தது. “நீ தேவதை மாதிரி இருக்க தெரியுமா?” என்று தினேஷ் கிறங்கியபோது, “அய்யோ… என்ன நீ இப்படிலாம் பேசற”, என்றபடி இவளும் கிறங்கிப்போனாள். வாழ்க்கையில் புதுவாசல் திறந்தது போல் இருந்தது. ‘டியூஷன் போகிறேன்’ என்று வீட்டில் சொல்லிவிட்டு தினமும் அவனைச் சந்தித்தாள்.

ஒரு நாள் விஷயம் இரண்டு வீட்டாருக்கும் தெரியவர, உலக வழக்கமாய் பிரச்னை வெடித்தது.  மகள் காதலிக்கிறாள் என்பதைவிட, வேறு ஜாதிப் பையனை காதலிக்கிறாள் என்பதைத்தான் பரமுவால் தாங்க முடியவில்லை. வழக்கம்போல மகளின் மீது கோபம் கொப்பளித்தது. ஆனால் இப்போது அவள் பழைய மல்லிகா இல்லையே? அடிக்க வந்த அம்மாவின் கையைத் தட்டிவிட்டு, திருப்பிக் கை ஓங்கிய மகளைப் பார்த்து பரமு அதிர்ந்து போனாள். அதன்பிறகு மல்லிகா அம்மாவை  சட்டை செய்யவே இல்லை. ஃபோனிலும் நேரிலுமாக காதலை வளர்த்துக் கொண்டார்கள். காதல் மனசுக்குள் நுழைந்த வேகத்தில்  படிப்பு வெளியேறியது. பெயரளவுக்கு பள்ளிக்குப்போய், தக்கி முக்கி பத்தாவது பாஸ் ஆகி பதினொன்றாம் வகுப்பிற்குள் மல்லிகா நுழைந்த போது தினேஷ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்.

மகளின் காதலை முறிக்க,  திருமணம்தான் ஒரே வழி என்ற  முடிவுக்கு வந்த பரமு,  அவசரம் அவசரமாக கல்யாண ஏற்பாடும் செய்து விட்டாள். மாப்பிள்ளை வீட்டார் பரிசம் போட வருவதாக இருந்த நாளன்று  16 வயது மல்லிகாவும் 19 வயது தினேஷும் ஊரை விட்டு ஓடிப்போனார்கள்.  வழக்கமான காதலர்கள்போல் சென்னை போய் இறங்கியவர்களுக்கு சினிமா, பீச், மால் என ஒருவாரம் ஜாலியாகத்தான் இருந்தது.  கையிலிருந்த  காசு தீர்ந்ததும் அடுத்து என்ன செய்ய எனத் தெரியாமல் மெல்ல ஆரம்பித்தான்.  

“ஊருக்கே போகலாமா மல்லி, எங்க அப்பா, அம்மா கோவப்பட்டாலும் நம்மை ஏத்துக்குவாங்க”

“உங்க அப்பா ஏத்துக்கிட்டாலும் எங்க அம்மா நிச்சயம் ஏத்துக்க மாட்டா, ஆனா அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, ஒருவேளை அங்க போனதும் நீ உங்க அப்பா, அம்மா பேச்சைக்கேட்டு மனசு மாறிட்டா… நான் என்ன செய்யறது?”

“உனக்கு என்மேல நம்பிக்கை இல்லைனா, நான் சொல்ற ஐடியாவைக் கேளு, நாம் ரெண்டு பேரும் சேர்ந்து நெருக்கமா இருக்குற மாதிரி போட்டோ எடுத்து ரெண்டுபேர் போன்லயும் வைச்சுக்குவோம்.  யாராவது நம்மை பிரிக்க நினைச்சாலோ,  இல்ல நம்மளில் ஒருத்தர் மனசு மாறினாலோ இந்த போட்டோ நமக்கு பயன்படும், என்ன சொல்ற?” என்று தினேஷ் சொன்ன யோசனை, காதல் மயக்கத்தில் இருந்த மல்லிகாவுக்கு சரியெனப்பட்டது.

“என் உயிரே போனாலும் நான் மனசு மாற மாட்டேன் தினேஷ்”

“நானும்தான் மல்லி”, இருவரும் மாறி மாறி   சத்தியம் செய்துவிட்டு ரொம்ப நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். மறுநாள் இரவு கடைசி பஸ்ஸுக்கு ஊருக்குள் வந்தவர்களை வீட்டுக்குள் நுழைய விடவில்லை தினேஷின் அப்பா.

“உள்ளே நுழைஞ்சே… காலை வெட்டிடுவேன் பார்த்துக்க” ஆக்ரோஷமாய் கத்தினார். அரைமணி நேர  வசைபாடலுக்குப் பின், “என் கண்ணுல முழிக்காம எங்கயாவது போய்த் தொலைங்க”, சொல்லி விட்டு முகம் திருப்பிக்கொண்டார்.

தினேஷ் ஒரு வார்த்தை பேசவில்லை. ‘இவ்வளவு திட்டு வாங்கிட்டு எருமைமாடு மாதிரி  நிக்கறதைப்பாரு’ – மல்லிகாவுக்கு முதன்முறையாக தினேஷின்மீது கோபமாக வந்தது.  தினேஷின் அம்மா அழுதுகொண்டே இருந்தாள்.

“சரி சரி… ஊரைவிட்டு ஓடிப்போயி குடும்பமும் நடத்திட்டு வந்துடுச்சுங்க. இனி என்னா பண்றது? உள்ள போகச்சொல்லுங்க… ஒரு கொழந்தை பொறந்தா எல்லாம் சரியாகிடும்” என சமரசம் செய்தார் பக்கத்து வீட்டு தாத்தா.

“அது சரி, நாங்க ஏத்துக்கிட்டாலும் அவங்க அம்மா ஏத்துக்கனுமே, அதுகிட்ட வாய்கொடுத்து மீளமுடியுமா?” தினேஷின் அம்மா குரலில் பரமு குறித்த பயம் தெரிந்தது.

“பொண்ணைப் பெத்தவுகளுக்கு மொதல்ல ஆத்திரம் இருக்கத்தான் செய்யும், பிறகு பேரனோ, பேத்தியோ பொறந்தா ஓடியாந்துருவாக, அதுவரைக்கும் இந்தப் பிள்ளைங்க இங்கனயே இருக்கட்டும்.”

பக்கத்திலிருந்தவர்கள்  சமாதானம் பேசி இருவரையும் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்கள். விடிந்ததும் விஷயம் தெரிந்து கொதித்துப்போன பரமு தலைவிரி கோலமாய் தினேஷ் வீட்டு வாசலில் நின்று மண்ணை வாரித் தூற்றினாள்.

“சாதி கெட்ட நாய்களுக்கு எங்க சாதியில் பொண்ணு கேட்குதோ? ஒண்ணுந்தெரியாத எம்மவளை மயக்கி இழுத்துட்டுப் போகச் சொல்லிட்டு இப்ப குடும்பமா சேர்ந்து நாடகமாடறீகளோ..? வயிறெரிஞ்சி சொல்றேன்…குடும்பத்தோட நாசமாப் போயிடுவீங்க”, என சாபமிட்டு அழுதுகொண்டே  போய்விட்டாள்.

தினேஷின் அம்மா, பக்கத்து ஊர்க் கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தாள். மல்லிகாவின் படிப்பு அத்தோடு போனது. தினேஷும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தான். ஒரு மாதத்துக்குள் மல்லிகாவுக்கு அந்த வீடு தனக்கு ஒத்து வராது என்பது புரிந்தது. தினேஷின் தங்கை கோகிலா பள்ளிக்குப் போக, தான் மட்டும் வீட்டில் வேலை செய்வது எரிச்சலாக இருந்தது. அந்த எரிச்சலை  தினேஷிடம் காட்டினாள். காதல் என நினைத்தது காணாமல் போக, யதார்த்த வாழ்க்கை மண்டையில் அடித்து பயமுறுத்தியது. தன்னைச் சுற்றி சுற்றி வந்து புகழ்ந்து கொண்டிருந்த காதலன், கணவனான பின்பு மாறிப்போனதாக எந்த நேரமும் சண்டையிட்டாள். இந்த சூழ்நிலையில் கர்ப்பமுமாகி விட்டாள்.

 ஊர் அந்த செய்தியை வெகு விரைவாக பரமுவிடம் கொண்டு சேர்த்தது.  பரமு இன்னமும் கொதித்துப் போனாள். “என் குடும்பத்து வாரிசு வயித்துல வேற சாதி குழந்தை வளருவதா?” மனம் ஆறவே இல்லை. ஒருநாள்  தினேஷ் வீட்டுக்குப் போனாள்.

“வாங்க வாங்க…” தினேஷின் அம்மாவும் அப்பாவும் கோபத்தை  மறந்து வரவேற்க, மல்லிகா அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்தாள். தலைகுனிந்து நின்ற பரமு பொத்தாம் பொதுவாகக் கேட்டாள்.

“என் பிள்ளையை நான் கூட்டிப்போறேன்” 

“எதுக்கு? இப்ப அவ மாசமா  இருக்கா…” குழப்பத்துடன் கேட்டாள் தினேஷின் அம்மா.

“அதக் கேள்விப்பட்டுதான் வந்தேன்.  வயித்துப் பிள்ளைக்காரியை ஒரு மாசம் நான் எங்கூட வைச்சிருந்து  அவளுக்கு பிடிச்சதை ஆக்கிப்போட்டு ‘புள்ளக் கெறக்கம்’ தீர்ந்ததும் கொண்டு வந்து விட்டுடறேன். தயவு செஞ்சி அனுப்புங்க”, அம்மாவுக்கு இப்படி பணிவாகக்கூட பேசத் தெரியுமா என மல்லிகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கும் அம்மாவுடன் போகவேண்டும் போல இருந்தது. ஆனால் தினேஷுக்கு அனுப்ப மனமில்லை.

“அதெல்லாம் வேண்டாம், நாங்களே பார்த்துக்கறோம்” என்றான் விரைப்பாக.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பரமு திடுமென நெடுஞ்சாண் கிடையாக தினேஷ் காலில் விழுந்தாள். “நான் பத்திரமா கொண்டுவந்து விட்டுடறேன் தம்பி, என்னை நம்புங்க”

பதறிப்போன தினேஷின் அம்மாவும் அப்பாவும் அரை மனதோடு அனுப்பி வைத்தார்கள். மல்லிகாவோ ‘அம்மா வீட்டுக்குப்போறோம்’ என சந்தோஷமாகக் கிளம்பி வந்தாள்.

“கண்ட கழிசடையோட போயி வயித்துல வாங்கிட்டு வந்திருக்கா, அவளை சீராட கூப்பிட்டு வந்தியாக்கும்?” வாசலில் உட்கார்ந்திருந்த பாட்டி  வெறுப்பைக் கக்கினாள். 

பரமு தன் அம்மாவைப் பார்த்து “சும்மா இரு” என இரகசியக்குரலில் கூறியவள், மல்லிகாவைப் பார்த்து, “தலை முழுகிட்டு வீட்டுக்குள்ள போ” என உறுமினாள். அம்மாவின் குரல் இப்போது மாறியிருந்தது.

குளித்துவிட்டு ரூமுக்குள் வந்து உடை மாற்றத் துவங்கும்போது தங்கை மாலா, “ஏன் இங்க வந்த? அங்கேயே இருந்திருக்க வேண்டியது தான? அம்மாவும், ஆச்சியும் ஏதோ ப்ளான் பண்றாங்க” என அரைகுறையாகக் கூறிவிட்டு அகன்றாள்.

‘அம்மா ஆசையாகத்தானே கூப்பிட வந்தாள்?’ மல்லிகாவுக்கு குழப்பமாக இருந்தது. மறுநாள் காலை, பாட்டி கையில் ஏதோ வைத்துக்கொண்டு எழுப்பினாள்.

“ஏய் மல்லிகா எழுந்திரு, வெறும் வயத்துல இதைக் குடிக்கனும்”

“என்னது பாட்டி இது?”

“ஒண்ணும் இல்ல, உன் உடம்பு ரொம்ப பலகீனமா இருக்கு, அந்தப் படுபாவிங்க கஞ்சி ஊத்துனாங்களோ இல்லியோ… இந்த சூப்பைக் குடி கொஞ்சம் தெம்பு கிடைக்கும்.”

தங்கை பாட்டியின் பின்னால் நின்று, “வேணாம் குடிக்காத…” என சைகை காட்டினாலும், “ம்ம்ம்ம்… சீக்கிரம் குடி” என்ற பாட்டியின் அதட்டலில், டக்கென குடித்துவிட்டாள்.  கொஞ்ச நேரத்தில் உயிர் போவது போல அடிவயிறு வலித்தது. “அய்யோ அம்மா…” கதறினாள், வயிற்றை பிடித்துக்கொண்டு தரையில் உருண்டாள்.  

“அப்பாடா… மருந்து வேலை செய்யத் தொடங்கிடுச்சு. இனி கவலையில்லை” பாட்டி பூரிப்புடன் சிரித்தாள்.

“மருந்தா? என்ன மருந்து..? சூப்புனுதான சொன்னீங்க?” அழுதுகொண்டே கேட்டாள் மல்லிகா.

“ஆமா… கண்ட கண்ட சாதிப் பயலுகளோட ஊர் மேயுற கழுதை நீ… உனக்கு  சூப்பு  கொடுப்பாங்களாக்கும்? உன் வயித்துல வளருதே அந்த கழிசடைக்கு பொறக்கப்போறது… அதை அழிக்கத்தான் நாட்டு மருந்து வாங்கி கொடுத்துருக்கோம்”

மல்லிகா வலிமறந்து வெறித்துப் பார்த்தாள். “ஒழுங்கா நாங்க சொல்றதை கேட்காட்டி, உன் வயித்துல இருந்த கருவை அழிச்சதுமாதிரி உன்னையும், அந்தப் பயலையும் அழிச்சிடுவோம்” என மிரட்டி, கழுத்தில் கட்டியிருந்த தாலிக்கயிறை இருவருமாய் அறுத்து எறிந்தார்கள்.    

மல்லிகாவின் மனதிலிருந்து தினேஷின் நினைப்பைப் மறக்கடிக்க வேண்டும் என்பதற்காக பில்லி, சூனியம் என அலைந்து, எதையெதையோ தின்ன வைத்தார்கள், குடிக்க வைத்தார்கள். நல்லது கெட்டது சிந்திக்கும் அளவுக்கு மனமுதிர்ச்சியும் இல்லை, அம்மாவையும் பாட்டியையும் எதிர்க்கும் வலுவும் இப்போது மல்லிகாவிடம் இல்லை. இருவரும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தேள் போல் வார்த்தைகளால் கொட்டிக் கொண்டேயிருந்தார்கள். இதற்கிடையில் மல்லிகாவைப் பார்க்க வந்த தினேஷை வாசலில் வைத்தே விரட்டியடிக்க, அவன் தெருவில் நின்று மல்லிகாவை தன்னுடன் அனுப்பும்படி கத்தினான். உள்ளேயிருந்த மல்லிகா அழுது கொண்டேயிருந்தாள். எப்போதும் ஒரு வெற்றுப்பார்வையுடன் யாரோடும் பேசாமல் தனக்குள் ஒடுங்கிப்போனாள்.

“பொம்பளப் புள்ளையை முதலிலேயே கட்டுசெட்டா வளர்த்திருக்கனும், இல்ல… அதுங்களா கல்யாணம் பண்ணிடுச்சுங்க. உனக்குப் பிடிக்கலைனா எங்கேயோ எப்படியோ வாழட்டும்னு இருக்க வேண்டியதுதானே? ஏன் அதுங்களை பிரிச்சு இப்படி ரெண்டுபேரு வாழ்க்கையையும் நாசம் பண்ற? ரெண்டு மாசம் அவன்கூட வாழ்ந்து, புள்ள உண்டாகியிருக்கா. இனியும் உம் மவளைப் பிரிச்சு வைச்சு என்ன செய்யப் போற?”, தினேஷ் மேல் பாவப்பட்டு கேட்ட பக்கத்து வீட்டுப் பெண்ணை,  “நல்லா சொல்லுவ… எவனோ ஒரு சாதிகெட்டவனை என் மருமகன்னு சொல்லச் சொல்றியா? இவ செத்தாக்கூட எனக்குக் கவலையில்ல. அவன்கூட மட்டும் வாழக்கூடாது. ஓடுகாலி நாயி…காலம்பூரா இப்படியே கெடந்து சாகட்டும் எனக்கென்ன?” என இரக்கமேயில்லாமல் வார்த்தைகளை வீசினாள்.

தினமும் மல்லிகா வீட்டு வாசலில் வந்து கெஞ்சியும் தினேஷால் மல்லிகாவைப் பார்க்கவே முடியவில்லை.  அம்மா, அப்பாவிடம் உதவி கேட்டபோது, “நீங்களாக ஏற்படுத்திக்கொண்ட வாழ்க்கை, நாங்கள் தலையிட முடியாது” என  கை கழுவிக் கொண்டார்கள். வேலைக்குப் போகாமல் எந்த நேரமும் குடித்துவிட்டு தான்தோன்றியாய் சுற்றத் தொடங்கினான்.  தெருவில் பரமுவையோ மல்லிகாவையோ பார்க்கும்போதெல்லாம் வந்து சண்டையிட்டான். ‘தன்னை பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்து தவறாக நடந்து கொள்வதாக’ மல்லிகாவின் பெயரில் பரமு காவல் தூறையில் புகாரளித்து வழக்கும் பதிவு செய்தாள். கோபமான தினேஷின் அப்பா, “ஜாதிப்பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டியதுடன் கொலை முயற்சி செய்தார்கள்” என்று பதில் வழக்குத் தொடுத்தார்.

அதன்பிறகு இரண்டு வீட்டு பெற்றோரும் மாறி மாறி பல பொய் புகார்கள் கொடுத்துக் கொண்டார்கள். காவல் நிலையமும், நீதிமன்றமும் மல்லிகாவுக்கு பழக்கமான இடமாகிப் போயின. அம்மாவுடன் கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் இப்படித்தான் தினேஷ் ஏதாவது சொல்லி சண்டை போடுவான், தன்னுடன் வரும்படி கூப்பிடுவான். மல்லிகா எந்தப் பதிலும் பேசாமல் கண்ணீர் வடிப்பாள். மூன்று வருடங்களாக வழக்கு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்த கண்ணாம்மூச்சி விளையாட்டில் இரண்டில் ஒன்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முடிவில்தான் தினேஷ் இன்று பூச்சி மருந்தைக் குடிக்க முயற்சிக்க, அவன்  அப்பா தடுத்து  விட்டார். வீட்டுக்கு வந்தவர், அவனுக்கு வேறு திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் சொந்தத்திலேயே பெண் இருப்பதால், அவர்களிடம் பெண் பேசப்போவதாகவும் கூறிவிட்டு  மனைவியையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்.  

தனிமையில் இருந்த தினேஷ்  யோசித்தான் – தனக்கு வாக்குறுதி கொடுத்த மல்லிகா தன்னை ஏமாற்றி விட்டதாக உறுதியாக நம்பினான். இனி ஜென்மத்துக்கும் இரண்டு பேரும் சேரவே முடியாது என்பது புரிந்தது.  தன் கையிலிருந்த செல்போனைப் பார்த்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். ‘மல்லிகாதினேஷ்’ என்ற பெயரில் முகநூலில் புதிதாய் ஒரு கணக்குத் துவங்கினான்.  தன்னிடமிருந்த  புகைப்படங்களை தேடிப்பிடித்து ஒவ்வொன்றாய் பதிவு செய்யத் தொடங்கினான். அத்தனையும் இருவரும் மிகமிக நெருக்கமாக அரைகுறை ஆடையிலும் ஆடையின்றியும் இருந்த புகைப்படங்கள்.

மறுநாள் காலை. எழுந்திருக்கும் முன்பே பரமுவுக்கு தொடர்ச்சியாக அலைபேசி அழைப்புகள். யார் யாரோ உறவுகள், தெரிந்தவர், தெரியாதவர் பேசுகிறார்கள், திட்டுகிறார்கள், “போனைப்பார்… பிள்ளை வளர்த்திருக்கிற லட்சணத்தைப்பார்” என்று ஏளனமாக காறித்துப்புகிறார்கள். பரமுவுக்கு ஒன்றும் புரியவில்லை. “அம்மா அம்மா…” கத்திக்கொண்டே வந்த  மாலாவும் முருகேஷும் செல்போனில் இருந்த புகைப்படங்களை பரமுவிடம் காட்ட, அதிர்ந்து போனாள். வாழ்க்கையில் எதற்கும் அசராத பரமு இந்த விஷயத்தில் உடைந்து போய் அழுதாள்.  

“நீயெல்லாம் ஏன்டி உயிரோட இருக்க? சாக வேண்டியதுதான..?” கையில் கிடைத்த விளக்குமாரை எடுத்து ஆத்திரம் தீர மகளை அடித்து நொறுக்கியவள், மகளை அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு, மீண்டும் ஒரு வழக்குத் தொடுக்க வக்கீலைத் தேடிப் போனாள்.

வெறித்த பார்வையுடன் இருந்த மல்லிகா இப்போதும் ஒரு வார்த்தை பேசவில்லை. கண்களிலிருந்து வழக்கம்போல கண்ணீர். பக்கத்தில் செல்போன் கிடந்தது. நினைத்துப் பார்க்கிறாள். அப்பாவுடன் இருந்த நாட்கள்… அப்பாவுக்குப் பின் தலைகீழாய் மாறிப்போன வாழ்க்கை. தினேஷ் காதல் சொன்ன நாள். சென்னையில் கழிந்த பரவசமான நிமிடங்கள். முடிவில் அந்த போனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள். “என் உயிரே போனாலும் நான் மனசு மாறமாட்டேன் தினேஷ்”, என தான் கொடுத்த சத்தியம். யார் மீது தவறு? தன்மீதா? அம்மா மீதா? தினேஷ் மீதா? அவளால் இன்னும் இந்த வாழ்வைப் புரிந்துகொள்ள முடியவில்லை.  

சிறிது நேரத்தில் கதவைத் திறந்து உள்ளே வந்த பரமு அலறினாள். அறைக்குள் இருந்த ஃபேனில் மல்லிகா சலனமற்று தொங்கிக் கொண்டிருந்தாள். அந்த உயிரற்ற முகத்தில் விடை தெரியாத கேள்விகளும் அறியாமையும் இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பது போலத்தோன்றியது.

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். அடுத்து, ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும், ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வி த் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் அழகாக எழுதியிருக்கிறார். இம்மூன்று தொடர்களும் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ‘வியட்நாம் அனுபவங்கள் ‘என்கிற இவரது நான்காவது தொடர் நூலாக்கம் பெற்றுவருகிறது. இது தவிர ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துக்காக ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் எழுதியுள்ளார். குட்டிப் பெண்களின் பெரிய கதைகள் இவர் எழுதும் ஐந்தாவது தொடர்.