ரேச்சல் லூயிஸ் கார்சன் ஓர் அமெரிக்க உயிரியலாளர், எழுத்தாளர், சுற்றுச் சூழல் பாதுகாவலர். 1907 மே 27 ஆம் தேதி பென்சில்வேனியாவில் உள்ள ஸ்பிரிங்டேல் கிராமத்தில் பிறந்தார். இயற்கை அவரின் முதல் தோழி. பருவ வயதில் ரேச்சல் காடு, ஆறு, மலைகள் எனச் சுற்றித் திரிந்தார். பறவைகள், பூச்சிகள், விலங்குகளை ஆய்வு நுணுக்கத்துடன் கவனித்தார். இந்த ஆர்வம் அவருடைய வாழ்க்கையை இயற்கை, விஞ்ஞானம் பற்றிய ஆர்வமாக மாற்றியது.

ரேச்சல் கார்சனின் அன்னை மரியா ஃப்ரேசியர் (மெக்லீன்), காப்பீட்டு விற்பனையாளரான ராபர்ட் வார்டன் கார்சன் தான் ரேச்சல் கார்சனின் தந்தை. பெற்றோர் இருவரும் சிறு வயதிலேயே ரேச்சலின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தனர். அதனால் அவரது அறிவு விரிவடைந்தது.

ரேச்சல் முதலில் பென்சில்வேனியா மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்தைப் படிக்கத் தொடங்கினார். அங்கு அவர் மாணவர் செய்தித்தாள், இலக்கியத்துக்குத் தொடர்ந்து பங்களித்தார் ஆனால், அவரது உள்ளார்ந்த ஆர்வம் இவரை உயிரியல் படிப்பதற்குக் கொண்டு வந்து சேர்த்தது. ரேமண்ட் பேர்லின் ஆய்வகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தார். அங்கு அவர் எலிகள், பழ ஈக்கள் தொடர்பான ஆய்வில் சேர்ந்து கல்விக்காகப் பணம் சம்பாதித்தார். 1929 இல் உயிரியல் பாடத்தில் பட்டம் பெற்றார். பின்னர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பிரிவில் 1932 இல் முதுகலைப் பட்டம் பெற்றார். இருப்பினும் 1934 இல் கார்சன் குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் முழுநேர ஆசிரியர் பதவியைத் தேட ஜான்ஸ் ஹாப்கின்ஸிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1935இல் கார்சனின் தந்தை  இறந்தார், அவர்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது. இதனால் படிப்பு தடைப்பட்டது.

ரேச்சல் கார்சன் 1936 ஆம் ஆண்டு அமெரிக்க மீன்வளம் பணியகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் கடலியல், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி செய்து, ரேடியோ நிகழ்ச்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். 1941 ஆம் ஆண்டு, அவரது முதல் புத்தகம், ’Under the Sea-Wind’  வெளிவந்தது. இது கடல்சார் உயிரினங்களின் வாழ்க்கையை விவரித்தது.

கடலின் அழகு, ரேச்சல் கார்சன் எழுதிய ’The Sea Around Us’ (நம்மைச் சூழ்ந்த கடல்) என்கிற புத்தகம் 1951ஆம் ஆண்டு பெரும் புகழைப் பெற்றது. இது 86 வாரங்கள் தொடர்ந்து நியூயார்க் டைம்ஸில் அதிக விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் இருந்தது. இந்தப் புத்தகம் ரேச்சலின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டது. இது அமெரிக்க தேசிய புத்தக விருதையும் வென்றது, பின்னர் அவர் முழு நேர எழுத்தாளராக மாறி, கடல் ஆராய்ச்சியில் மேலும் கவனம் செலுத்த முடிந்தது.

மௌன வசந்தம்

1962 ஆம் ஆண்டு, ரேச்சல் கார்சன் எழுதிய ’Silent Spring’ (மௌன வசந்ம்) என்கிற புத்தகம் உலகில் வெகுவேகமாகப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அப்போது அறிமுகமான பூச்சிக்கொல்லியான டிடிடி (TTT) என்கிற மருந்தை விவசாயத்தில் பயன்படுத்துவதால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அழிவையும், மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு அதிகமானது. மேலும் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்தது. பின்னர் டிடிடி மற்றும் பிற பூச்சிக்கொல்லிகளுக்கு நாடு தழுவிய தடைக்கு வழிவகுத்தது. இது சுற்றுச்சூழலில் கவனத்தைக் குவிக்க வழிவகுத்தது. 1980இல் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டரால் கார்சனுக்கு, அவரது மரணத்திற்குப் பின் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது.

கடைசிப் போர்

மெளன வசந்தம் புத்தகத்தை எழுதிய போது, ரேச்சல் கார்சன் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவும் அவதிப்பட்டார். ஆனால், புற்றுநோயின் தாக்கம் இருந்தபோதிலும் அவரின் சுற்றுச் சூழல் மேல் இருந்த காதலும் உற்சாகமும் குறையவில்லை. அவர் புற்று நோய் பாதிக்கப்பட்ட நிலையிலும் தனது ஆய்வு, எழுத்துப் பணிகளைத் தொடர்ந்தார்.

1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று, ரேச்சல் கார்சன் இந்த உலகிலிருந்து மறைந்தார். ரேச்சல் கார்சன் சுற்றுச் சூழலியலின் தாய் என்று போற்றப்படுகிறார். அவருடைய நூல்கள் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம், சுற்றுச்சூழல் விஞ்ஞானத்தல் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

ரேச்சல் கார்சனின் வாழ்க்கை, பணி மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவியது. ரேச்சல் கார்சன் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக மக்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பாதை அமைத்துச் சென்றிருக்கிறார். இவர் காட்டிய பாதையில் பலர் தொடர்ந்து இயற்கையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு பயணித்து வருகின்றனர்.

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.