எனக்குப் பயணங்கள் மீது மிகவும் ஆசை. ஆனால், இத்தனை வருடங்களில் கேரளா, கொங்கு வட்டாரத்தில் சில பகுதிகளுக்கு மட்டும் செல்ல முடிந்தது. போன வருடம்தான் தூத்துக்குடிக்கு முதன் முதலாகச் சென்றேன். அதுவும் குடும்பத்துடன் கோயிலுக்கு என்பதால் பெரிதாக எந்த அனுபவமும் இல்லை. பாதி நேரம் கோயிலில் வரிசையில் நிற்பதிலும், பேருந்தில் பயணம் செய்வதிலும் கழிந்தது.

தோழிகளுடன் பயணம் செய்ய கடந்த மே மாதம் முடிவு செய்தோம். திருமணமாகாத பெண்கள் என்பதால் நாங்கள் தனியாகத் தொலைவான புதிய இடங்களுக்குச் செல்ல அனுமதி இல்லை. பெண்கள் சேர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்றால் வீட்டில் அனுமதி கேட்க வேண்டும். மாதவிடாய் பற்றி யோசிக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு எங்காவது செல்ல வேண்டும் என்று கேட்டால், “அதெல்லாம் கல்யாணம் செஞ்சுட்டு புருஷன்கூடப் போய்ப் பார்த்துக்கோ” என்பதுதான் பதிலாக இருக்கும்.

என்னிடம் ஒரு பெண், “என்னை இரவு நேரத்தில் வெளியில் தங்க அனுமதிப்பதில்லை. ஆனால், என்னுடைய திருமணமான தோழிகள் அவர்கள் கணவருடன் வருவதால் இரவு வெளியே தங்குகிறார்கள். அதனால் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று கூறினார். இத்தனைக்கும் அவர் என்னை விட வயதில் பெரியவர்.

ஆனால், இந்த முறை நானும் என் தோழியும் திருச்சி மலைக்கோட்டைக்குச் செல்ல முடிவெடுத்தோம். ஒரு நாள் பயணம் தான். திருச்சி செல்ல மூன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டும். எங்கள் பக்கத்து ஊரில் இருந்து ஒரே பேருந்து என்பதால் ஜோராகக் கிளம்பிவிட்டோம். இப்போது சேர்ந்து செல்வதால் மட்டுமே வீட்டில் அனுமதி. மலைக்கோட்டையில் அவுரேலியா என்கிற நாற்பது வயது பெண்மணியைச் சந்தித்தோம். அந்தப் பெண் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்தார். கடந்த சுதந்திர தினத்திலிருந்து கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறார். அவரே எங்களைப் பார்த்து ஹாய் என்று சொல்ல நாங்களும் பேச ஆரம்பித்தோம்.

அப்போதுதான் சோழ மன்னர் ஆண்ட பகுதிகளைத் தமிழ் நாட்டில் சுற்றிப் பார்க்கத் தனியாக வந்திருக்கிறார் எனத் தெரிந்து கொண்டோம். மொழி தெரியாது. மக்களைத் தெரியாது. ஆனால், அவர் திட்டமிட்டு பயணம் செய்கிறார். இதற்கு முன்பு வேறு நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார் என அவர் ஃபேஸ்பு பதிவுகளில் அறிந்துகொண்டேன். அவரைப் பார்க்கும் போது வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் எனத் தோன்றியது. புதிய மக்கள், புதிய அனுபவங்கள் வாழ்வில் வேண்டும். என் வாழ்வில் இதுவரை கடந்தவற்றைத் திரும்பிப் பார்த்தால் வெறும் படிப்பு, வேலை மட்டுமே இருக்கும். அதனால்தான் இப்படி ஒரு பயணம் செய்ய முடிவெடுத்தேன்.

வாழ்வில் திரும்பிப் பார்த்தால் எனக்கான நாட்கள் சில இருக்க வேண்டும். என்னுடைய தோழியும் நானும் எங்களுக்கான தனியான நினைவுகளை உருவாக்க ஆரம்பித்து விட்டோம். எங்களால் வெளிநாடு, வெளி மாநிலம் செல்ல முடியாமல் போகலாம். ஆனால், தமிழ்நாட்டில் புதிய இடங்களுக்குச் செல்ல முடியும்.

STOP DREAMING. START TRAVELLING. CREATE YOUR OWN STORY.

படைப்பாளர்:

மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.