‘கர்னல் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick)  நினைவு மணிமண்டபம்’ என்ற பெயரைத் தாங்கிக்கொண்டு, அந்த பச்சை நிறக் கட்டிடம் ஒரு வரலாற்று நாயகனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நின்று கொண்டிருந்தது.

பின்னணியில் மனதைக் கவ்வும் மலைகள். தேனி மாவட்டம்  கூடலூரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  லோயர்கேம்ப் பகுதியில் 2.23 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கிறது அந்த மணிமண்டபம்.

மணிமண்டபத்தில் எப்போதும் பார்வையாளர்கள் கூட்டம் நிறைந்திருக்கிறது.  உள்ளே நுழையும் போதே பயபக்தியுடன் தலைக்குமேல் இருகை கூப்பி கும்பிட்டுக் கொள்கிறார்கள். உள்ளே கம்பீரச் சிலையாய் நிற்கும் பென்னிகுவிக்குடன் மறக்காமல் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு, அங்கிருக்கும் உதவியாளர்கள் கூறும் பென்னிகுவிக் வாழ்க்கை வரலாறை (எத்தனை முறை கேட்டிருந்தாலும்!) புதிதாய் கேட்பது போல கவனமாய் கேட்டுக்கொள்கிறார்கள். 

நம்மை ஆட்சி செய்த  ஆங்கிலேயர்களில் ஒருவருக்கு, இந்தியாவின் தென்கோடி கிராமத்தில் இப்படி ஒரு சிறப்பா என்ற ஆச்சரியம் அங்கு வரும் வெளி மாவட்ட மக்களுக்கு வேண்டுமானால் ஏற்படலாம். ஆனால் தேனியிலேயே பிறந்து, தினந்தோறும் ஒரு முறையேனும் அவரது பெயரைக் கேட்டு வளர்ந்ததினால் எனக்கு அப்படியொரு வியப்பு ஏற்படவில்லை. 1841ஆம் ஆண்டு புனேயில் பிறந்து, வளர்ந்து, எத்தியோப்பியாவில் ஆங்கிலேய அரசுக்கு பணிசெய்து விட்டு இந்தியா வந்த பென்னிகுவிக் இன்றி, தேனியின் வரலாறை எழுதிவிட முடியாது.

பழம்பெரும் நாகரிகமும் பெருமையும் கொண்ட மதுரை நகரத்திற்கு, கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்புவரை வறட்சி, பசி, பட்டினி என மற்றொரு முகமும்  இருந்தது.

வைகை நதியை மட்டும் நம்பிக்கொண்டிருந்த தென் தமிழகத்தை  தொடர்ச்சியான பல பஞ்சங்கள் விழுங்கியது போக மிச்சமிருப்பதுதான் இன்றைய மதுரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும். தென்னிந்தியாவின் நடுவே ஊடுருவிச் செல்லும் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒருபக்கம் இப்படி பஞ்சத்தில்வாட, இதற்கு நேர்மாறாக இருந்தது மேற்குத் தொடர்ச்சி மலையின் மறுபக்கம். அன்றைய திருவாங்கூர் சமஸ்தான அரசின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான சிவகிரி மலைப்பகுதியில்  உற்பத்தியாகிய  பேரியாறு, கேரள மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் அனைத்தையும் தன்னுடன்  ஒன்று சேர்த்துக்கொண்டு மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் வீணாகக் கலந்து கொண்டிருந்தது.  மழைக்  காலங்களில் ஏற்படும் அதீதமான வெள்ளப்பெருக்கு,  கேரள மக்களுக்கு எப்போதும் பெருந்தொல்லைதான். மலையின் ஒரு பக்கம் நீரின்றி பசி, பட்டினி. மற்றொரு புறம் அதிக நீரால் வெள்ளம், உயிரிழப்பு.

‘வீணாகக் கடலில் கலந்து கொண்டிருக்கும் நீரை எதிர்த் திசையில் தமிழகத்தை நோக்கித் திருப்பினால், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஐந்து மாவட்டங்களைக் காப்பாற்றலாமே’ என்ற அரிய யோசனை  ராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்களின் அமைச்சராக இருந்த முத்து இருளப்பரின் சிந்தனையில் உதித்தது. அதுதான்  பேரியாற்றில் அணை கட்டும் திட்டம் என்கின்றன பிரிட்டிஷ் பதிவுகள். ஆனால் இந்தியச் செல்வத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசு அதிகாரிகள், அத்தனை பெரிய தொகையை மக்களுக்காகச் செலவழிக்க விரும்பாததால்,  இந்த யோசனையைக் காதில் வாங்கவும் தயாராக இல்லை.

1800 வாக்கில் திண்டுக்கல்லில் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரி ஒருவர் சேதுபதியின் சகோதரி ராணி மங்களேஸ்வரி நாச்சியாருக்கு பெரியாற்றில் ஒரு அணை கட்டினால், அது ராமநாதபுரத்தைத் தாக்கும் வறட்சிக்கும் பயனளிக்கும் என்பதை விரிவாக விளக்கிக் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் நிதி நெருக்கடியைக் காரணமாகக் காட்டி ராணியும் மறுத்து விட்டார். இந்தத் தகவல் தொடர்புக் கடிதங்கள்தான் அணை தொடர்பாகக் கிடைத்திருக்கும் முதல் ஆவணங்களாக உள்ளன.

அதன் பிறகு கிட்டத்தட்ட 77 ஆண்டுகள் கழித்து, 1877ஆம் ஆண்டு சென்னை மாகாணம் முழுவதும் ஏற்பட்ட  தாது வருஷப் பஞ்சத்திற்கு மதுரையும் தப்பவில்லை. பல லட்சம் பேரைப் பட்டினியால் கொன்றொழித்து, சில லட்சம் பேரை அகதிகளாக நாட்டை விட்டு ஓட வைத்தது.   அந்தப் பஞ்சத்தின் கொடூர முகத்தைக் காணச் சகிக்க முடியாமல்,  வேறுவழியின்றி  பிரிட்டிஷ் அரசு இந்த அணை கட்டுவதற்கான திட்டத்தைக் கையில் எடுத்தது. 1882 ல் முல்லைப் பெரியாறு அணை கட்டும் திட்டம் ஆங்கிலேய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அணை கட்டுவது என முடிவாகிவிட்டாலும் அதிலுள்ள  சவால்கள் மலைக்க வைத்தன. எந்தவிதமான போக்குவரத்து வசதிகளும் இல்லாத, முறையான பாதைகூட இல்லாத, வன விலங்குகளின் ஆதிக்கத்திலிருந்த அடர்த்தியான வனப்பகுதி. மலேரியா போன்ற கொள்ளை நோய்களைப் பரப்பும் கொசுக்களும் அட்டைப்பூச்சிகளும் காலார உலாவரும் பகுதி. இத்தகைய சவால்களை உடைத்து, அணையை சாத்தியமாக்கும் ஒரு சாகசக்காரனாக சென்னை மாகாணத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஜான் பென்னிகுக்கை ஆங்கிலேய அரசு கண்டுபிடித்தது.

1883 ஆம் ஆண்டு பெரியாறு (சங்க காலத்தில் பேரியாறு!) அணைத்திட்டத்திற்கென ஜான் பென்னிகுவிக் நியமிக்கப்பட்டார். அணை கட்டத் தேர்வு செய்யப்பட்ட திருவாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமான  இடத்தைப் பெறுவதற்காக ஆங்கிலேய அரசு திருவாங்கூர் சமஸ்தான அரசரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. மிக நீண்ட இழுபறி பேச்சுவார்த்தைகளுக்குப்பின்  ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்கின்ற ஒப்பந்தத்தின்படி, எட்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு வருடத்திற்கு நாற்பது ஆயிரம் ரூபாய் வாடகை என்ற ஒப்பந்தம் இடப்பட்டது. 999 ஆண்டுகளுக்கு திருவாங்கூர் சமஸ்தான அரசரிடமிருந்து, சென்னை மாகாண அரசு 1886  அக்டோபர் 9 ம் தேதி அந்நிலத்தை குத்தகையாகப் பெற்றுக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியதில் பென்னிகுவிக்கின் பங்கு மிக அதிகம். 1887ஆம் ஆண்டின் இறுதியில் சென்னை மாகாண அரசு இந்த அணை கட்டும் திட்டத்திற்கு, அப்போதைய மதிப்பீட்டின்படி 75 லட்சம் ரூபாய்  பணத்தையும் ஒதுக்கியது.

ஒரு வழியாக தென் தமிழகத்தை ஆட்டிப்படைத்த பஞ்சத்தை அழித்தொழிக்கும் திட்டம் தொடங்கியது. ஆனால் கட்டுமானப் பணிகள் அத்தனை எளிதாக இருக்கவில்லை. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், வன விலங்குகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு என சவால்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபத்தில் வந்தன.  எந்தவொரு பொருள் தேவைப்பட்டாலும் மதுரையில் இருந்துதான் வர வேண்டும். கடுமையான காட்டுப்பகுதியின் வழியாக அதனைக் கொண்டுவரவே பல நாள்களாகும். அத்தனையும் கடந்து மூன்று ஆண்டுகள் தொழிலாளர்களின் கடும் உழைப்பில் உருவான அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

‘கட்டப்பட்ட அணை  வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதற்குக் காரணம்,  அணையைச் சரிவர கட்டாததுதான் என்றும் அதனால் அரசுக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றும் கூறி பென்னிகுவிக்கின் மீது விசாரணை நடத்த சென்னை மாகாண அரசு உத்தரவிட்டது. “அணை உடைப்பிற்கு தன்னுடைய செயல்பாடுகள் எதிலும் குறைவில்லை,  ஆற்றின் முக்கியப் பகுதிகளில் தடுப்பு அணைகள் எதுவும் கட்டப்படாததுதான் அணை உடைப்பிற்குக் காரணம்” என்று வாதாடி சென்னை மாகாண அரசிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார், பென்னிகுவிக்.

அணை கட்டும் முயற்சியில் இதுவரை பணத்துடன்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் இழந்திருந்த பென்னிகுவிக், தனது சவாலைக் கைவிடத் தயாராக இல்லை. தினம் தினம் அவர் சந்தித்த சோதனைகள் அவரது மனதை கெட்டிப்படுத்தியிருந்தன. மீண்டும் பணியைத் தொடங்கினார். ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்த அணைக்கான எதிரி இம்முறை வன விலங்குகள் வடிவத்தில் வந்தது. மிகப்பெரிய ஒரு யானைக்கூட்டம் வந்து அணையை முட்டி, மோதி, உடைத்துச் சிதைத்துப் போட்டு விட்டது. நடுவில் மலேரியா தன் பங்கிற்கு தொழிலாளர்களின் உயிரைப் பலி வாங்கியது. நிலைமை கை மீறும் போதெல்லாம் கடுமானப் பணியாளர்கள் காட்டு வழியாகத் தப்பித்து ஓடினார்கள். புதியவர்களை அழைத்து வரக்கூடிய பெரும்பொறுப்பு அத்தனை எளிதாக இருக்கவில்லை. இயற்கை அளித்த தொல்லைகளுடன் தொழில்நுட்ப ரீதியான சவால்களும் சேர்ந்து கொண்டன.

இப்படித் தொடர்ச்சியான தடைகளைக் கண்ட பிரிட்டிஷ் அரசு உண்மையில் மிரண்டு போனது.  அணை கட்டும் பணியை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து, பென்னிகுவிக்கை திரும்ப அழைத்தது. மேலும் நிதி ஒதுக்க மறுத்தது. ஆனால் ‘தன் முயற்சியில் சற்றும் மனம்  தளராத பென்னிகுவிக் போல’ என்று சொற்றொடர் உருவாக்கும் அளவிற்கு மனம் தளராமல் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாரானார் அவர். அணை கட்டுமானப்பணிக்காக தானே நிதி திரட்டினார்.

‘பென்னிகுவிக் தனது தாயகம் திரும்பி, தனது பரம்பரைச் சொத்துக்களை விற்றும் மனைவியின் நகைகளை விற்றும் (‘தாலியை விற்றும்’*)பணம் கொண்டுவந்து பெரியாறு அணை கட்டினார்’ என்ற செய்தி வாய்வழியாகப் பரவி, அவர் மீதான  அன்பை மேலும் அதீதமாக்குகிறதேயன்றி, அதற்கான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.  அணை கட்டுமானத்திற்குத் தேவையான நவீன இயந்திரங்கள் வாங்கி வருவதற்காகவே தான் இங்கிலாந்து சென்றதாக (History of the Periyar Project – MACKENZIE) ஒரு கட்டுரையில் பென்னிகுவிக் குறிப்பிட்டுள்ளார்.

சுண்ணாம்பு சுர்க்கிக் கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட இந்த அணையின் கட்டுமானப் பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது. கட்டுமானத்திற்குத் தேவையான பொருள்களைக் கொண்டு செல்ல, கூடலூர் மலை அடிவாரத்திலிருந்து கிட்டத்தட்ட 3000 அடி உயரத்தில் குமுளியின்  அடர் காட்டில் குழிகள் தோண்டி, தேக்கு மரத்தடிகள் நிறுத்திக் கெட்டிப் படுத்தி, கம்பி வடப்பாதை (ரோப் வே) அமைத்திருக்கின்றனர். கடினமான உயரமான தேக்குமரத் தடிகளை இழுத்து வந்து சேர்க்கும் வேலையை யானைகள் செய்ததாகவும் குறிப்புகள் உள்ளன. லண்டனிலிருந்து கம்பி வடங்கள் வாங்கி வந்து பொருத்தி இருக்கிறார்கள் என்கின்றன ஆவணக்குறிப்புகள்.

இப்படி பல பல சோதனைகளைக் கடந்து, எட்டாண்டுகள் தமிழகப் பணியாளர்களின் கடின உழைப்பை உறிஞ்சி, கடல் மட்டத்தில் இருந்து 2980 அடி உயரத்தில், அடர்ந்த காட்டின் நடுவே, பேரியாறு என்ற காட்டாற்றின் போக்கை மாற்றி, 11.6 டி எம் சி கொள்ளளவுடன் 1895 ல் முல்லைப் பெரியாறு அணை கம்பீரமாக எழுந்து நின்றது. பேரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்று அழைக்கப்பட்டது.  முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின் கீழ் அமைந்துள்ளதால், இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ‘முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் தற்போது அழைக்கப்படுகிறது.

ஆண்டு முழுவதும்  வற்றாமல் மேற்கு நோக்கி  பாய்ந்து ஒருவருக்கும் பயன்படாது கடலில் கலந்த முல்லை பெரியாறு நதியை கிழக்கே திரும்ப வைத்ததன் மூலம், காய்ந்து கிடந்த கள்ளிக்காடு, நெல் விளையும் கழனியாக மாறியது. இரண்டரை லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்றது. பஞ்சம் என்ற சொல் (பழைய ஆவணங்களில் பயன்படுத்தப்பட்ட) பழஞ்சொல்லாக மாறியது.

தன் இலக்கிலிருந்து சற்றும் வழுவாத பென்னிகுவிக் என்ற இரும்பு மனிதனைத் தாண்டி, கடும்குளிரிலும் மழையிலும் நின்று வேலை பார்த்த எளிய தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்களுக்கும் மற்ற ஐரோப்பிய அதிகாரிகளுக்கும் இந்த சாதனையில் பெரும் பங்கிருக்கிறது. அணைக்கான முதல் திட்டம் வகுத்த ரைவ்ஸ், உடன் நின்ற பொறியாளர் ஸ்மித், பென்னிகுவிக் உதவியாளர் லோகன் துரை என்ற மற்றொரு பொறியாளர் என இவரின் அணை கட்டும் பணிக்கு உதவியவர்களில் பங்கும் நினைவுகூறத் தக்கது.

இவர்களோடு சேர்ந்து அணை கட்டுவதில் உறுதியாக நின்ற மண்ணின் மைந்தர்கள் பேயர், ஆங்கூர் ராவுத்தர், ஆனைவிரட்டி ஆங்கர், காடுவெட்டி கருத்தக் கண்ணு போன்றோர்களை வரலாறு அத்தனை எளிதில் மறக்க முடியாது. திருவாங்கூர் சமஸ்தான  அரசர், பூஞ்சாறு அரசர், ஹானிங்டன், குருவாயி, ஜார்ஜியானா, டெய்லர், டர்னர், முங்கிலி, எஸ்தர், ராமய்யங்கார் என ஒவ்வொருவருக்கும் அணையில் முக்கிய பங்கு உண்டு. பிரிட்டிஷ் பதிவுகளின்படி அணைக் கட்டுமானப்பணி நடந்த ஒன்பது ஆண்டுகளில் 5000 தொழிலாளர்கள் இறந்திருக்கிறனர்.

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய நிலங்களின் தேவைக்கும், குடிநீர்த் தேவைக்குமான தண்ணீரை பென்னிகுவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணைதான் தற்போதும் வழங்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பெரியாறு நீர் மின்சக்தித் திட்டம், வைகை நீர் மின் சக்தித் திட்டம், சுருளியாறு நீர்மின் சக்தித் திட்டம் போன்றவைகளுக்கான நீராதாரம் இந்த அணையிலிருந்துதான் கிடைக்கிறது. இத்தனைக்கு விதையிட்ட பென்னிகுவிக் தேனி மாவட்ட மக்களின் குலசாமியாக மாறிப்போனார்.

தென்தமிழ்நாட்டில் பென்னிகுவிக் இன்று ஒரு குடும்பப்பெயராக இருக்கிறார். தேநீர்க் கடைகள், பொதுப்பணித்துறை அலுவலகங்கள், பென்னிகுவிக் விவசாய சங்கம், பாலார் பட்டி கர்னல் பென்னிகுவிக் எழுச்சிப் பேரவை,  என எங்கும் பென்னிகுவிக் பெயரைப் பார்க்க முடிகிறது.  தேனி பேருந்து நிலையத்திலும் அவரது பெயர் பளபளக்கிறது.

தேனி மாவட்டத்தில் பெரும்பான்மை விவசாயக் குடும்பங்களின் பூசையறையில் கடவுளின் படங்களுக்கு இணையாக பென்னிகுவிக் (John Pennycuick) புகைப்படம்  இருக்கிறது. தலைச்சன்(வீட்டின் மூத்த) பிள்ளைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைக்கும் கிராமங்கள் இந்தத் தலைமுறையிலும் உண்டு. கம்பம் அருகேயுள்ள பாலார்பட்டி கிராமத்தில் பென்னிகுவிக் என்று கூப்பிட்டால், தெருவிற்கு நான்கு  பேர் கட்டாயம் திரும்பிப் பார்ப்பார்கள். பென்னிகுவிக் பிறந்தநாளான ஜனவரி 15ஆம் நாளை பாலார்பட்டி கிராம மக்கள் ‘பென்னிகுவிக் பொங்கலாகவே’ கொண்டாடுகிறார்கள்.

ஊரின் மத்தியில் இருக்கும் பென்னிகுவிக் கலையரங்கத்தில் ஊரே கூடி, நிலத்தை அகழ்ந்து நீண்ட அடுப்பு வெட்டி  பொங்கல் வைக்கிறது. பொங்கலிட்டு முடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பென்னிகுவிக் புகைப்படத்தின்முன், பானைக்கு ஒரு அகப்பை பொங்கல் எடுத்து வைத்து, நெற்கதிர்கள், வாழைப்பழம், தேங்காய்  படைத்து பென்னிகுவிக்கிற்கு படையல் போடப்படும். அதன்பின் அவரது படத்தை சுமந்து கொண்டு வாண வேடிக்கை, மேளதாளம், தேவராட்டம், சிலம்பம் என ஊர்மக்கள் அனைவரும் ஊர்வலம் வருகிறார்கள். மாட்டு வண்டிப் பந்தயம், சேவல் சண்டை, சிலம்பம் உள்பட வீர விளையாட்டுகளும் நடக்கும். இதனைப்பார்க்க மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஆள்கள் வந்து குவிகிறார்கள்.

2003ஆம் ஆண்டில் பென்னிகுவிக்கின் நேரடி வாரிசான, பென்னிகுவிக் மகள் வழிப்பேரன் வழக்கறிஞர் ஸ்டூவர்ட் சாம்சனை பாலார்பட்டிக்கு அழைத்து வந்து பொங்கல் விழா கொண்டாடியிருக்கிறார்கள். பாலார்பட்டி மட்டுமல்லாது சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி,  கூழையனூர் போன்ற ஊர்களிலும் இதே போன்ற விழாக்கள் உண்டு.

ஒவ்வொரு ஆண்டும் மணிமண்டபத்திலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். இந்த மணிமண்டபத்தில் முல்லைப்பெரியாறு அணை கட்டப்படும்போது எடுக்கப்பட்ட அரிய பல புகைப்படங்கள் மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றிலும் கட்டுமான பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், 1893ல் கட்டுமானப்பணிக்குழு அலுவலர்களுடன் பென்னிகுவிக் இருக்கும் புகைப்படம்; உடன் பேயர் நிற்கிறார். அவர் பயன்படுத்திய நாற்காலி, அவர் பயன்படுத்திய சிறிய படகு, கலவை இயந்திரம் போன்றவையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஏனோ அந்த நாற்காலி இந்தியன்(1) தாத்தாவின் நாற்காலியை நினைவூட்டுகிறது. அந்தச் சாய்வு நாற்காலியில் கம்பீரமாக பென்னிகுவிக் அமர்ந்திருப்பதை கற்பனை செய்து பார்க்கிறேன். உடல் புல்லரிக்கிறது. பணி நிறைவேறும் வரை பென்னிகுவிக் தனது வாழ்வின் நெடிய ஒன்பது ஆண்டுகளை  மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் கழித்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது மலைப்பாக இருந்தது.  தூரத்தில் அவர் வசித்த எளிமையான வீடு தெரிவதை பார்வையாளர்கள் கை காட்டி பேசிக்கொள்கிறார்கள்.  

தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரத்தில் சென்னையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவர் பென்னிகுவிக். அவரைச் சென்னையிலிருந்து ஐநூறு கிமீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகி, இரண்டு மலைகளுக்கு நடுவில் புகுந்து மேற்கே  அரபிக்கடலில் சென்று கலந்து கொண்டிருந்த ஒரு ஆற்றின் போக்கை அப்படியே கிழக்காகத் திருப்ப வைத்து, தமிழ்நாட்டின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தின் தண்ணீர் தேவையை தீர்த்து வைத்தது வரலாறு.

பென்னிகுவிக் கிரிக்கெட் மீது தீராக் காதல் கொண்டவர். பொதுப்பணித் துறையின் செயலராக இருந்தபோது அவர் உருவாக்கியதுதான் சென்னை சேப்பாக்கம் மைதானம். சென்னை உயர்நீதிமன்றமும் அந்தக் காலத்தில் கட்டப்பட்டதுதான். பெரியாறு அணையைக் கட்டி முடிக்கும்போதே பணி ஓய்வு பெற்றிருந்தார் பென்னிகுவிக். அதன்பின் இங்கிலாந்து சென்றவர், 09.03.1911 அன்று இந்த உலகிலிருந்து விடைபெற்றார். இங்கிலாந்தின் கேம்பர்லி  நகரில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் மீளாத்துயிலில்  இருக்கிறார் பென்னிகுவிக்.

ஒரு அணை உருவானதன் வரலாற்றையும் அதன் கட்டுமானத் துயரங்களையும் சுமந்து கொண்டு,  பலகோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இயற்கைக்கு முரணாகத் தன் திசையைத் திருப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது, பேரியாறு.

“இந்த உலகத்தில் இருக்கப்போவது ஒரே ஒருமுறை, எனக்கு செய்யக்கிடைத்த நல்ல செயலை நான் அலட்சியப்படுத்தவோ, தள்ளிப்போடவோ கூடாது, செய்து முடித்து விட்டேன்” என்று மனநிறைவுடன் கூறிய பென்னிகுவிக், அந்த மணிமண்டபத்தில் சிலையாக நின்று கொண்டு முல்லைப்பெரியாறு அணையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  

தொடரும்…

தரவுகள்

History of the Periyar Project – MACKENZIE

நீரதிகாரம் – கவிஞர் அ.வெண்ணிலா

நீர் விளக்கு – பொ.கந்தசாமி

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.