இயற்கையுடன் நம்மை இணைத்துக்கொள்ளும் பொழுதுகள் அனைத்துமே அகவயப்பயணத்துக்கும் சாத்தியமானவை.
ஓரிடத்தில் தேங்கி நில்லாது ஓடிச்செல்லும் நீர் தூய்மையாக இருக்கும். அதுபோல பயணம் மனதைத்தூய்மையாக்கும் என்பதை ஒவ்வொரு பயணத்திலும் உணரமுடிகிறது. அப்படி முதல் வெளிநாட்டுப் பயணமாக இலங்கைப்பயணம் அமைந்தது. அதுவும் வரலாறு சார்ந்த பயணம்.
‘போரில்லா சமாதான உலகு’ என்று முன்பொரு கவிதை எழுதியிருந்தேன்.
கப்பலில் போனோம் இருபதுபேர்/தென்னைகள் நிறைய
மலை, நீர் எல்லாமே இனிக்க/ஜனங்களும் இனிமையானவங்க
கேரளம் போலிருக்கும் ஈழம்/பயணக்கதையை மாமனார்சொல்ல/
முதல்முதலில் ஈழம் குறித்த பதிவு நினைவுகளில்/ஒருநாள் போகணும் கப்பலில்/அடுத்த வருடம் போவேன் எனும் உறுதி
தினமும் எடுக்கப்படும் இருபத்தெட்டு வருடங்களாக…
என்று ஆரம்பித்த கவிதையை,
என்றேனும் எமக்கான/எம் மக்களுக்கான
சுதந்திர காற்றும் நாடும் வசப்படும்/எம் சந்ததிக்கேனும்
போரில்லா சமாதான உலகு சாத்தியப்படும்/உண்கிறேன் விழிகள் மயங்குகின்றன/உணர்வுகள் களைத்திட உறங்குகிறேன்
என்று முடித்திருந்தேன்.
அந்த இலங்கைக்குச்செல்லும் வரலாற்றுப்பயணம் இருமுறை வாய்த்தது. கப்பலில் அல்ல. ஆகாயக்கப்பலில் பயணிக்க வாய்த்தது.
தமிழ்மரபு அறக்கட்டளையின் நிறுவனர் தோழி சுபாஷிணி மற்றும் சில உறுப்பினர்களுடன் 2019 அக்டோபரில் வரலாற்றுப் பதிவுசெய்ய கொழும்புக்குச் செல்ல சென்னை விமானநிலையத்தில் காத்திருந்தோம். நல்லவேளையாக தலைக்கு மேல் எந்தக் கூரையும் விழவில்லை. உள்ளே பயணச்சீட்டு, நம்மை சோதிக்கும் இடம், லக்கேஜ் சாமான்களை, பொருள்களை சோதித்து அளிக்குமிடமென எங்கும் ஹிந்தி பேசுபவர்களே இருந்தனர். விமானத்தில் பிரான்சில் இருந்து வந்திருந்த தோழிதர்மசீலிக்கும் எனக்கும் அருகருகிலான இருக்கைகள். செல்லுமிடங்களில் தங்குவதற்கு அவரே ஏற்பாடு செய்திருந்தார். பயணம் முடியும் வரையில் அனைத்து இடங்களிலும் ஒரே அறையிலேயே இருவரும் தங்கினோம்.
இலங்கையில் வரலாற்றுப் பயணமாகச் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் இல்லாமல், யாழ்ப்பாணம்,நெடுந்தீவு பற்றிமட்டுமே சிறியஅளவில் பார்க்கவுள்ளோம். மற்றவை விரிவாக அன்றி பெயர்களாகமட்டுமே பதிவு செய்யவேண்டியதாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சில பகுதிகளைப் பார்த்து பதிவுகளைச் செய்தோம்.
கந்தரோடை தற்போது சிறிய ஊராக இருப்பினும் பழைய காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியின் தலைமையிடமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. தமிழ் பௌத்தம் இருந்த பகுதியாக அறியப்படும் கந்தரோடைக் குடியேற்றம் புத்தசமயக் காலத்துக்கும் முற்பட்டது என்பதையும் பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு உரிய சான்றுகள் காட்டுகின்றன.
கந்தரோடை செல்லும் சாலையில் போரினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கடந்துசென்றோம். சாலையின் இரு பக்கங்களிலும் புதிய வீடுகளின் வரிசைகள் தெரிந்தன. இவை புனரமைப்புக்காக இந்தியஅரசு கட்டிக்கொடுத்த வீடுகளாம்.
யாழ்ப்பாண தேசிய அருங்காட்சியகம், யாழ்ப்பாணம் கோட்டை, நல்லூர் முருகன்கோயில், சிவபூமி திருவாசக அரண்மணை, சங்கிலியான்குளம், சங்கிலியான்மனை, மந்திரிமனை, சங்கிலியான் அரண்மனை ஆகியவற்றைப் பார்த்தோம். புகைப்படங்களும், குறிப்புகளும் பதிவுகளும் எடுத்துக்கொண்டோம். விரிவாக தனிக்கட்டுரையாக மட்டுமே அவற்றை எழுதமுடியும். ஆகையால் இங்கே பெயர்களைமட்டுமே குறிப்பிட்டுச் செல்லவேண்டியதாகிவிட்டது.
நல்லூர் முருகன்கோயிலுக்கு அருகில் திலீபன்நினைவிடத்துக்குச் சென்றோம்.
திலீபன் இந்திய அமைதிப்படையினரிடம், காந்திய அஹிம்சா வழியில், 15.09.1987 இல் ஐந்துஅம்சக் கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1.மீண்டும் குடியேற்றம் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2.சிறையிலும் இராணுவக் காவல்தடுப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3.அவசரகாலச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4.ஊர்க்காவல்படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றிலும் திரும்பப் பெறவேண்டும்.
5.தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல்நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்
உண்ணாவிரதத்தை முடிக்காமலேயே கோரிக்கையும் நிறைவேறாமல் 26.09. 1987 ஆம் நாள் திலீபன் மரணம் எய்தினார்.
நினைவிடத்துக்கு எதிரில் பத்துநிமிடங்கள் அவருக்கு அமைதியாக அஞ்சலி செலுத்தினோம்.
யாழ்ப்பாண நூலகம்
ஒரு இனத்தின் அறிவை அடியோடு அழிக்கவேண்டுமென்றால் அந்த மக்களின் நூலகத்தை எரித்துவிட்டால் போதும் என்னும் ஆணவத்தில் யுத்ததர்மத்தை மீறி 31.03.1981 இரவில் எரிக்கப்பட்டது யாழ்ப்பாண பொதுநூலகம்.
புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாக எழுந்து நிற்கும் அந்த நூலகத்தைப் பார்க்கச்செல்லும்போது அந்த மண்ணை வணங்கிவிட்டு உள்ளே சென்றேன். இலங்கைப் பயணத்தில் செல்லும் வழி தோறும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், கல்விக்கடவுளான சரஸ்வதி சிலைகள் இருப்பதைப் பார்க்கலாம். யாழ்நூலகத்திலும் முன்புறம் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டிருந்தது.
அனுமதி பெற்று நூலகத்தின் உள்ளே சென்றுபார்த்தோம். லட்சக்கணக்கான புத்தகங்களுக்கு நடுவில் தமிழகஅரசு அனுப்பியதாகக் குறிப்பிட்ட ஒரு லட்சம் புத்தகங்களையும் பார்த்து மகிழ்ந்தோம். அதற்கு தமிழகஅரசுக்கு நன்றியினைத் தெரிவித்தோம். உள்ளே நூலகரிடம் கேட்டுக் கணினியில் தேடிப்பார்த்தால் எந்தப் புத்தகம், யார் எழுதிய புத்தகம் உள்ளது என்று தேடிப்பார்க்கலாம். அதுபோலஅவர் தேடிப்பார்த்து ‘பர்த்ருஹரி சுபாஷிதம்’ புத்தகம் உள்ளதென தெரிவித்ததும் அத்தனை மகிழ்ச்சி. ஆனால் அதற்குள் தோழி வாலண்டினா ஏற்பாடு செய்திருந்த பள்ளியில் உரையாற்றச் செல்லவேண்டியதிருந்ததால் உடனே போகவேண்டியதாகிவிட்டது.
நெடுந்தீவு
யாழ்ப்பாணத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புங்குடுதீவுக்கு பேருந்தில் பயணம் செய்தோம். கடந்துவரும் பாதையில் தெரிந்த கட்டடங்களையும் பள்ளிகளையும் கோயில்களையும் தேவாலயங்களையும் பார்த்தபடி புங்குடுதீவுக்கு வந்து சேர்ந்தோம்.
புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளைப்பார்த்தவாறு நெடுந்தீவு நோக்கிச்செல்ல ஆயத்தமானோம்.
தனிநாயகம் அடிகள் பிறந்த தீவு இது. தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியவர் பிறந்த தீவுக்குச் செல்லும் மகிழ்ச்சி எங்களுக்கு. யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களுடன் வரலாற்றுப்பதிவுகளை செய்யவிருந்ததால் அவருடைய வழிகாட்டுதலில் இந்தப் பயணம் தொடர்ந்தது. கண்முன்னே விரிந்திருந்த நீரில் மிதந்த படகில் ஏறினோம். படகினுள்ளே இருக்கையில் அமரும்போது குமுதினி என்று எழுதியிருந்ததைப்பார்த்து, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு தாழ்ந்தகுரலில் ரகசியம் போலப் பேசிக்கொண்டோம்.
இந்த இலங்கைப் பயணமே இந்தக் குமுதினி படகில் ஏறுவதற்காகவே வந்தோமோ என்று நினைக்கும்வகையில், இத்தனை நாட்கள் ஓய்வில்லாது பள்ளி,கல்லூரிகளில் உரையாற்றியும், மகிழ்வுடன் வரலாற்றுப்பதிவுகள் செய்துமகிழ்ந்ததையும் மறந்து, சற்றுநேரம் ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்தோம்.
15.05.1985 ஆம் நாள் தமிழர் சரித்திரத்தில் துயரம் தோய்ந்த நாளாகும். குமுதினிப்படகு துயரவரலாற்றில் இடம்பெற நிகழ்ந்த இரத்தம் தோய்ந்த நிகழ்வுமாகும். நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு நெடுந்தீவின் மாவலித் துறையிலிருந்து குமுதினிப் படகில் பயணித்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட முப்பத்திமூன்று பேருக்கும் மேலான மக்களை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தனர்.
உயிர்தப்பித்த, இந்நிகழ்வைக் கண்டவர்களின் கூற்றுப்படி, படகில் ஏறிய இலங்கைக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள் அத்தனை மக்களையும் படகின் முன்பகுதிக்கு அனுப்பி ஒவ்வொருவரையும் தங்களுடைய பெயரையும் வயதையும் முகவரியையும் சொல்லச்சொல்லி தாங்கள் எங்கு போகிறார்கள் என்பதையும் சத்தமாகச் சொல்லவைத்தனர். பிறகு ஒவ்வொருவராக பின்பகுதிக்கு வரவைத்து குத்தியும் வெட்டியும் கொன்றனர். உயிருடன் தப்பிக்கக் கடலில் குதித்தவர்களையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். முப்பத்துமூன்று பேர் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர் என்றும் சொல்கிறார்கள்.
இந்தப் படகில்தான் பயணம் செய்கிறோம் என்னும் நினைவு பலதரப் பட்ட உணர்வலைகளை எழுப்பியது. அந்தப் பெயர் குமுதினி என்னும் எழுத்து தெரியும்படி புகைப்படம் எடுத்துக்கொண்டபோது எங்களால் சிரிக்க முடியவில்லை. நினைவுக்காக மட்டுமாக எடுத்துக்கொண்டோம்.
டெல்ஃப்ட்தீவு என்றழைக்கப்படும் நெடுந்தீவில் இறங்கியதும்,வண்டி அமர்த்திக்கொண்டு சென்றோம். நெடுந்தீவு புராதன வரலாற்றுச்செய்திகள், வெடியரசன் கோட்டை, இலங்கைக்கு கண்ணகி வழிபாடு வந்த வரலாறு, கட்டுக்கரை அகழ்வாய்வு செய்திகள் ஆகியவற்றை சுபாஷிணி, மலர்விழி, அகிலா பதிவுசெய்தனர். புகைப்படப்பதிவு மட்டும் செய்தேன்.
தோழி தர்மசீலி பிறந்த, பூட்டியிருந்த அவருடைய பூர்வீகவீட்டையும், அவருடைய தோழிகளையும் பார்த்துவந்தோம். தீவு முழுவதும் கல்சுவர்கள் பவளம், சுண்ணாம்புக் கல்லைக்கொண்டே கட்டப்பட்டிருந்தன. முழுக்க பனைமரங்கள் நிறைந்துள்ளன. சந்தித்த மக்கள் அனைவரும் அன்புடனும் ஆர்வத்துடனும் வரவேற்று உபசரித்தனர். அனைவரிடமும் குமுதினி படகில் வந்ததைத் தெரிவித்ததும், அவர்கள் சொன்னவையே மேலே எழுதியவை. ஆனால், காணொளியாக தாங்கள் பகிர்வதை பதிவுசெய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
புறாக்கூடு, ஒல்லாந்தர்காலத்து டச்சுவைத்தியசாலையைப் பார்த்துவிட்டு மதியஉணவுக்காக தோழி தர்மசீலியின் உறவினர் திரு.கணபதி அவர்களின் வீட்டிற்குச்சென்றோம். அவருடைய மனைவியும், தாயும், மகளும் அளித்த உபசரிப்பு மறக்கமுடியாதது. நெடுந்தீவில் உணவு கிடைக்காதென்பதால் கையிலேயே உணவு எடுத்துச்செல்லவேண்டும். அல்லது இதுபோல உணவுக்கு வேறு ஏற்பாடு செய்யகொள்ளவேண்டும்.
பனைமரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்த அழகிய எளிமையானவீடு. சைவ உணவும் அசைவ உணவாக ஒடியல் கூழும் தயாரித்திருந்தனர். வெளியில் மரங்களின் நிழலில் நாய்கள், பூனைகள், காகங்களுக்கு நடுவில் மிகச்சுவை நிறைந்த ஒடியல் கூழ் குடிக்கச் சிறந்த இடமாக அமைந்தது.
காயவைத்த பனங்கிழங்கை அரைத்தெடுத்த ஒடியல்மாவை வைத்துசெய்யும் ஒடியல்கூழ் செய்முறையே அவ்வளவு சுவையானது. செய்முறையைத் தனிப் பதிவாகச் சொல்லலாம். அரிசி, பலாக்கொட்டை, பயிற்றங்காய், மீன்தலை, மீன்துண்டுகள், இறால், நெத்திலி கருவாடு, கீரை, ஒடியல்மாவு, புளி, உப்பு கலந்த இந்தக் கூழைச் சூடாகக் குடிக்கவேண்டும். பனையோலைப்பிளாவில்தான் ஊற்றிக் குடிக்கவேண்டும்.
மதிய உணவு முடிந்ததும், குதிரை லாய வரலாற்றைப் பதிவு செய்யச் சென்றோம். புகைப்படப்பதிவும் காணொளிப்பதிவும் செய்திட கேள்விகளை நான் கேட்கக்கேட்க,பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் சற்றும் ஓய்வின்றி அனைத்து வரலாற்றுப் பதிவுகளுக்கும் பதிலளித்து ஒத்துழைப்பு அளித்தார்.
ஒல்லாந்தர் ஆட்சியில் படை நடவடிக்கைகளுக்கும், நிர்வாகத் தேவைகளுக்கும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டதால், குதிரைகளின் தேவைகள் அதிகமாயின. சுமார் 300 மீட்டர் நீளத்திலும் 50 மீட்டர் அகலத்திலும்அமைக்கப்பட்ட லாயம், பல குதிரைகளைப் பராமரிக்கக்கூடிய இடவசதி கொண்டதாகக் காணப்படுகிறது. ஒல்லாந்தர் ஆட்சியின்போது நெடுந்தீவு எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக இருந்தது என்பதை இதன்மூலம் அறியலாம்.
அடுத்த இராஜபாளையத்தில் மட்டுமே நான் பார்த்திருந்த பொந்தப்புளி மரத்தையும் அங்கே பார்த்தோம். கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அரேபிய வியாபாரிகள் இங்கு ஏழாம் நூற்றாண்டளவில் இம்மரத்தை இங்குகொண்டு வந்ததாகத் தெரிகிறது.
மாலையில் அவசர அவசரமாகப் பதிவுகளை முடித்துவிட்டு வருவதற்கு முன்பே, துறையிலிருந்து படகுகள் திரும்பும் நேரம் கடந்துவிட்டதால், எங்கள் கண்முன்னேயே படகு கிளம்பிச்சென்றதைப் பார்த்தபடி நின்றோம். தோணியில் திரும்ப வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. இருவர் தோணியைச் செலுத்த நாங்கள் அனைவரும் அருகருகே அமர்ந்து அந்தக்கடல் நடுவில் பயணித்தபோது, விவரிக்க முடியாத உணர்வெழுச்சி. திரும்பினால் ஊர் திரும்புவோம். இல்லையேல் அனைவரும் ஜலசமாதியே. குமுதினிப்படகில் மடிந்தவர்களின் குருதியின் உப்பைக் கடல் தன்னுள் கொண்டிருந்தது.
தோணிப்படகு ஒரு பக்கமாகத் திரும்புகையில் கையால் நீரைத் தொடமுடிந்தது. இந்தப்பக்கம் சூரியனின் அஸ்தமன அழகு அள்ளி இறைத்த அத்தனை வண்ணங்களுடன். அந்தப்பக்கம் கடலின் நிறம் நீலமுமின்றி பச்சையாகவுமின்றி ஒரு அழகிய நிறம். தூரத்தில் தெரிந்த பல தீவுகள். அந்த அரை மணிநேரமும் ஒரு ஆன்மீகப் பயணமாகத் தோன்றியது. தேர்ந்த படகோட்டிகள் அவ்வளவு பத்திரமாகக் கரை சேர்த்தனர். யாழ்ப்பாணம் திரும்பினோம்.
இலங்கை ராணுவம் நெடுந்தீவை ஆக்கிரமித்த பிறகு பெரும்பான்மை மக்கள் யாழ்குடாநாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ புலம்பெயர்ந்து விட்டார்கள். இன்று இங்கு பொருளாதாரவசதி குறைந்த தமிழ் மீனவ சமூகத்தைச் சார்ந்த 2500 இருந்து 3000 மக்களே சிரமங்களுக்கிடையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு அடிப்படைக்கல்வி,மருத்துவ வசதிகூட இல்லை.
சென்ற முறை இலங்கைப் பயணத்தில் சந்தித்த மலையகத்தமிழ் மக்களும், இந்த நெடுந்தீவுமக்களும் மற்ற இலங்கைத் தமிழ்மக்களிடையே புறக்கணிக்கப்பட்டே இருக்கிறார்கள் என்பதை இந்தப்பயணம் மீண்டும் வலிமையாக நினைவூட்டியது.
படைப்பாளர்
மதுமிதா
மதுமிதா என்னும் பெயரில் எழுதிவரும் கவிதாயினி மதுமிதா ராஜபாளையத்தில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி.
எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். தமிழில் பல நூல்கள் படைத்துள்ள இவரின் தாய்மொழி, தெலுங்கு. ஹிந்தி பிரவீன்உத்தரார்த் வரையும், சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பும் படித்துள்ளார். முப்பதுக்கும் அதிக நூல்களை உருவாக்கியுள்ளார். இருபதுக்கும் அதிக விருதுகளை வென்றிருக்கிறார்.